கல்முனை வடக்கு பற்றிய தவறான கருதுகோள்கள்! (சொல்லத் துணிந்தேன்—72)

மற்றையது, ‘கல்முனைப் பட்டினம் என்பது 1897ஆம் ஆண்டு அன்றைய வெள்ளைக்கார அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி (Gazette No: 5459-Feb/19,1897) வடக்கு எல்லை நற்பத்துமுனை (தற்போது நற்பிட்டிமுனை) இல் இருந்து கடற்கரை வரை ஆகும். அந்த எல்லைதான் தாளவட்டுவான் என அழைக்கப்படுகிறது. அதாவது பாண்டிருப்பின் தென்புற எல்லை. தெற்கு எல்லை- சாய்ந்தமருது கிராமமாகவும், அதாவது தற்போது சாஹிரா கல்லூரி வீதி, மேற்கு எல்லை-நற்பிட்டிமுனை, கிழக்கெல்லை கடலாகும்’ என்பது.

இவற்றில் முதலாவது கூற்றில் அதாவது சாணக்கியன் உட்படத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கல்முனையின் வரலாறு தெரியாது என்பதில் உண்மையுள்ளதுதான்.

இரண்டாவதாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1897இல் வெளியிடப்பெற்ற வர்த்தமானி அறிவித்தலை மேற்கோள் காட்டி “கல்முனை” என்பது தாளவட்டுவானுக்கும் சாஹிராக் கல்லூரி வீதிக்கும் இடைப்பட்டது என்று காட்ட முற்படுவதுதவறானதாகும். இது உண்மையை மறைக்கும் தந்திரோபாயமான சோடிப்பு ஆகும். கல்முனையின் உண்மையான வரலாற்று வெளிச்சத்தில் இதனை ஆராயலாம்.

நகர்ப்புறத்தையும் உள்ளடக்கிய கல்முனைக் கிராமம் வேறு. அதன் அயல் கிராமமான கல்முனைக்குடிக் கிராமம் வேறு. கல்முனைக் கிராமம் நூறுவீதம் தமிழர்களைக் கொண்டதாயும் ‘குறிச்சிகள்’ என அழைக்கப்பெற்ற மூன்று கிராமத் தலைவர் பிரிவுகளை (Village Headman’s Division) உள்ளடக்கியும் இருந்தது. கல்முனை நகர்ப்புறம் கல்முனை இரண்டாம் குறிச்சிக்குள் அடங்கியிருந்தது. கல்முனையின் அயல் கிராமமான கல்முனைக்குடிக் கிராமம் முஸ்லிம்களை அதி பெரும்பான்மையாகக் கொண்டதாயும் ஐந்து குறிச்சிகளைக் கொண்டதாயுமிருந்தது.

முன்பு நூறுவீதம் தமிழர்களைக் கொண்டிருந்ததும் மூன்று குறிச்சிகளை (கல்முனை முதலாம், இரண்டாம், மூன்றாம் குறிச்சிகள்) உள்ளடக்கியுமிருந்ததுமான கல்முனைக் கிராமத்தை அதன் அயல் கிராமமான முஸ்லிம்களை அதி பெரும்பான்மையாகக் கொண்ட ஐந்து குறிச்சிகளை (கல்முனைக்குடி முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் குறிச்சிகள்) உள்ளடக்கியிருந்த கல்முனைக்குடிக் கிராமத்துடன் இணைத்துத்தான் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1892ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தின் கீழ் 1897ஆம் ஆண்டின் 5459 இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தல் மூலம் ‘கல்முனை’ என்ற பெயரில் ‘சுகாதார நலனோம்பு சபை’ (Sanitary Board) உருவாக்கப்பெற்றது.

இதுவே பின்னர் 1946ஆம் ஆண்டின் மூன்றாம் இலக்கப் பட்டின சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ்ப் பட்டின சபை உருவாக்கப்பட்ட போது அதாவது கல்முனையையும் கல்முனைக்குடியையும் இணைத்து ‘கல்முனை’ என்ற பெயரில் அமைந்த ‘Sanitary Board’ கல்முனை என்ற அதேபெயரில் பட்டின சபையாக மாற்றம் அடைந்தபோது, கல்முனைக்குத் தெற்கே ஐந்து குறிச்சிகளைக் கொண்டிருந்த முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமமான கல்முனைக்குடியை மூன்று குறிச்சிகளைக் கொண்டதும் 100% தமிழர்களைக் கொண்டதுமான கல்முனையுடன் இணைத்துக் கல்முனைத் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக ஏழு வட்டாரங்களைக் கொண்டதாகவும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வருமாறும் ( தமிழ்ப் பெரும்பான்மை வட்டாரங்கள்-02, முஸ்லிம் பெரும்பான்மை வட்டாரங்கள்-05) ‘கல்முனை’ என்ற பெயரில் புதிய பட்டின சபையாக ‘கல்முனைப் பட்டின சபை’ 1947இல் நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

கல்முனைக் கிராமத்தையும் கல்முனைக்குடிக் கிராமத்தையும் பிரிக்கும் எல்லையாக சுமார் நானூறு வருடங்கள் பழமை வாய்ந்த கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயிலின் எதிர்ப்புறமாகக் கிழக்குக் கடற்கரையை நோக்கிச் செல்லும் ‘தரவைப் பிள்ளையார் கோயில் வீதி’யே விளங்கிற்று. பொது மராமத்து இலாகா (Public Works Department) இனால் நிர்மாணிக்கப் பெற்றிருந்த ‘கல்முனை’ ஊர்ப் பெயர்ப் பலகை முன்பு கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவிலடியில் பிரதான வீதியோரம் இருந்தது. நகர்ப்புறத்தையும் உள்ளடக்கிய கல்முனை ஊர் என்பது தரவைப் பிள்ளையார் கோவிலடியில் இருந்து ஆரம்பித்து வடக்கு நோக்கிக் கல்முனைத் தாளவட்டுவான் சந்திவரை நீண்டிருந்தது. கல்முனைத் தாளவட்டுவான் சந்தியிலிருந்துதான் பாண்டிருப்புக் கிராமம் வடக்கு நோக்கி ஆரம்பிக்கிறது. அதாவது நகர்ப்புறத்தையும் உள்ளடக்கிய கல்முனைக் கிராமத்தின் தெற்கு எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியும் வடக்கு எல்லை தாளவட்டுவான் வீதியும் ஆகும்.

அதேபோல், கல்முனைக்குடிக் கிராமத்தின் வடக்கு எல்லை கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவில் வீதியும் தெற்கு எல்லை சாய்ந்தமருது கல்முனை சாஹிராக் கல்லூரி வீதியுமாகும்.

கல்முனைக்குடியைக் கல்முனையோடு இணைத்து 1897இல் ‘கல்முனை’ என்ற பெயரில் SANITARY BOARD நிறுவப்பட்டது என்பதினாலோ அல்லது பின்னாளில் இது 1947இல் ‘கல்முனை’ என்ற அதே பெயரில் பட்டின சபை ஆக்கப்பட்டது என்பதினாலோ இருவேறு தனித்தனிக் கிராமங்களாக விளங்கிய கல்முனையும் கல்முனைக்குடியும் ‘கல்முனை’ என்ற பெயரில் ஒரே தனிக்கிராமம் ஆகிவிட முடியாது.

தற்போது பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய தனித்தனி ஊர்களை உள்ளடக்கிக் ‘கல்முனை’ என்ற பெயரில் கல்முனை மாநகர சபையும், கல்முனை என்ற அதே பெயரிலேயே கல்முனைத் தேர்தல் தொகுதியும் அமைந்திருக்கின்ற காரணத்தால் முழுக் கல்முனை மாநகரப் பிரதேசமும் முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதி பிரதேசமும் கல்முனை எனும் பெயரில் தனிக் கிராமமாக மாறிவிட முடியுமா?இல்லையே.

இதுவே 1897இல் கல்முனையையும் கல்முனைக் குடியையும் உள்ளடக்கி கல்முனை என்ற பெயரில் உருவான Sanitary Board க்கும், 1947இல் கல்முனை என்ற அதே பெயரில் உருவான பட்டின சபைக்கும் பொருந்தும்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்தில் முஸ்லிம் தரப்பினர் கல்முனை என்பது தெற்கே சாய்ந்தமருது, கல்முனை சாஹிரா கல்லூரி வீதியிலிருந்து ஆரம்பித்து வடக்கே தாளவட்டுவான் வீதி வரையும் உள்ளதாகச் சித்தரித்து அதனையே தங்களது பூர்வீகம் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். இது தந்திரோபாயம் நிறைந்த தவறான வாதமாகும். கல்முனைத் தமிழர்கள் கல்முனைக்குடிக்குள் ஒரு அங்குலமாவது ஊடுருவவும் இல்லை, உரிமை கோரவும் இல்லை. ஆனால் கல்முனைக்குடி எல்லைக்குள் குடியிருந்த தமிழர்கள் வன்முறைகள் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேவேளை முஸ்லிம்கள் கல்முனைக்குள் ஊடுருவி இயற்கை நீதிக்கு மாறாக இன்று கல்முனையைச் சொந்தமாக்க முனைகின்றனர். இதற்குத் தமிழர்தரப்பு உடன்பட முடியாது.

கடந்த பல தசாப்தங்களாக முஸ்லிம்கள் நகர்ப்புறத்தையும் உள்ளடக்கிய கல்முனைக் கிராமத்துக்குள் ஊடுருவியும்கூட கல்முனையில் இன்றும் தமிழர்கள் மூன்றிலிரண்டு பங்கு பெரும்பான்மையாக உள்ளனர் என்பதைப் பின்வரும் அட்டவணை புலப்படுத்தும்.

கல்முனையின் (முதலாம் இரண்டாம், மூன்றாம் குறிச்சிகளின்) தற்போதைய குடிப்பரம்பல்

*உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமான கிராம சேவகர் பிரிவுகள்.

கடந்த காலங்களில் கல்முனையை நன்கு திட்டமிட்டு முஸ்லீம் அரசியல்வாதிகள் முஸ்லீம் மயப்படுத்தியும் கூட கல்முனையில் தமிழர்கள் இன்றும் பெரும்பான்மையாகவே உள்ளனர் என்பதை மேற்குறிப்பிட்ட அட்டவணை வெளிப்படுத்துகின்றது. இந்த யதார்த்தம் முஸ்லிம் தரப்பினால் மூடிமறைக்கப்பட்டு வருகிறது.

முன்பு கல்முனைக்குடியானது கல்முனையுடன் சேர்ந்து கல்முனை என்ற பெயரில் தனிக் கிராமமாக இருந்திருந்தால் கல்முனைக்குடியின் ஐந்து குறிச்சிகளும் கல்முனையின் மூன்று குறிச்சிகளுடன் தொடராக வருமாறு கல்முனை-4ஆம் குறிச்சி, கல்முனை-5ஆம் குறிச்சி, கல்முனை-6ஆம் குறிச்சி, கல்முனை-7ஆம் குறிச்சி, கல்முனை-8ஆம் குறிச்சி என்றல்லவா இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் கல்முனைக்குடியின் ஐந்து குறிச்சிகளும் தனியாக கல்முனைக்குடி முதலாம் குறிச்சி, கல்முனைக்குடி இரண்டாம் குறிச்சி, கல்முனைக்குடி மூன்றாம் குறிச்சி, கல்முனைக்குடி நான்காம் குறிச்சி, கல்முனைக்குடி ஐந்தாம் குறிச்சி என்றே இருந்துள்ளது. இந்தப் பெயரிடல் முறைமை கல்முனையும், கல்முனைக்குடியும் இருவேறு தனித்தனிக் கிராமங்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

எனவே, முஸ்லிம் அன்பர் வை.எல்.எஸ்.ஹமீட் இன் முகநூல் பதிவில் இரண்டாம் விடயமான 1897ஆம் ஆண்டில் வர்த்தமானி அறிவித்தலை மேற்கோள்காட்டிக் கல்முனையைக் கல்முனைக்குடிக்குள் தந்திரமாக உள்ளடக்கிக் கல்முனையின் தெற்கு எல்லையாகக் கல்முனைக்குடியின் தெற்கு எல்லையான சாய்ந்தமருது கிராமத்தை அதாவது தற்போதைய கல்முனை சாஹிராக் கல்லூரி வீதியைச் சித்தரிக்க, இதனை மறுதலையாகக் கூறப்போனால் கல்முனைக்குடியைக் கல்முனைக்குள் தந்திரமாக உள்ளடக்கி கல்முனைக்குடியின் வடக்கு எல்லையாகக் கல்முனையின் வடக்கு எல்லையான தாளவட்டுவான் வீதியைக் காட்ட முற்படுவது அப்பட்டமான பொய்யாகி விடுகிறது.

கல்முனைக்குடி என்பது வடக்கே கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதிக்கும் தெற்கே சாய்ந்தமருது, கல்முனை சாஹிராக் கல்லூரி வீதிக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இப்பகுதி கல்முனைத் தெற்குப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டதாகும். அதேபோல், நகர்ப்புறத்தையும் உள்ளடக்கிய கல்முனை என்னும் பழந்தமிழ் ஊர் தெற்கே கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதிக்கும் வடக்கே தாளவட்டுவான் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இப்பகுதி தரமுயர்த்தப்பட இருக்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் ஆள்புலத்திற்கு உட்பட்டதாகும்.

கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதிக்குத் தெற்கே உள்ள பகுதி கல்முனை தெற்கு என்பதிலும் வடக்கே உள்ள பகுதி கல்முனை வடக்கு என்பதிலும் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்போம். இந்த அடிப்படையில்தான் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்திற்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.

தங்கள் கட்சி அரசியல் நலன்களுக்காக முஸ்லீம் அரசியல்வாதிகள் முகங்கோணாவண்ணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) தன்னிச்சையாய் திரைமறைவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் வழமைபோல் அரசியல் கொடுக்கல் வாங்கல்களை வைத்துக்கொண்டு சில விட்டுக்கொடுப்புகளுக்குச் சம்மதிக்கக்கூடும். இதுவிடயத்தில் கல்முனைத் தமிழர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்தக் கிழக்குமாகாணத் தமிழர்களும் கண்ணுக்குள் வெண்ணெய் விட்டு அவதானித்துக்கொண்டு மிகக்கவனமாக இவ்விவகாரத்தைக் கையாளவேண்டும். ஏனெனில், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பண்ணமுடியாது. கல்முனைத் தமிழர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை (தமிழரசுக் கட்சி) முழுமையாக நம்பி மீண்டும் மீண்டும் ஏமாறக்கூடாது.
Share