காலி முகத்திடல் முற்றுகை: செவிசாய்க்காத அரசாங்கம்

ஆனால், பொருளாதார வீழ்ச்சியைப் போலவே, மக்கள் போராட்டத்தையும் அரசாங்கம் குறைமதிப்பீடு செய்திருக்கின்றது. அதனால், பக்குவமற்ற விதத்தில் நிலைமைகளைக் கையாள்வதை, வெளிப்படையாகவே காணக் கூடியதாகவுள்ளது.

பொருளாதாரம் ‘வங்குரோத்து’ நிலைக்கு வரும் வரைக்கும், அதில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தடுப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கவில்லை. மாறாக, இன்று வரைக்கும் நாணயத்தாள்களை அச்சிடுதல் போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் கைங்கரியங்களிலேயே ஈடுபட்டுள்ளது. அதே பாணியிலேயே, அரசுக்கு எதிரான வெகுஜனப் போரட்ட‍ங்களையும் அரசாங்கத்தின் தலைமைகள் கையாளப் பார்க்கின்றன.

எல்லா மட்டத்திலும் உள்ள படித்த, சாதாரண மக்கள் எல்லோரும் வீதிக்கு இறங்கி, பல நாள்களாகப் போராடி வருகின்ற சூழலிலும் கூட, இந்தத் தலையிடிக்கு நிரந்தர மருந்தைத் தேடுவதை விடுத்து, தலையணையை மாற்றுகின்ற வேலைகளைச் செய்து, வழக்கம் போல காலத்தை கடத்தலாம் என ராஜபக்‌ஷவினர் நினைக்கின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இரு கோணங்களில் பார்க்க வேண்டியுள்ளது.

முதலாவது, கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னராக, உலகளவில் ஏற்பட்ட பொருளாதார இடர்பாடு, ரஷ்யா – உக்ரேன் யுத்தத்துக்குப் பிறகு, உலக சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில், கோட்டாபய அரசாங்கத்தின் தீர்மானங்கள், இலங்கை நெருக்கடியை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளன.

இரண்டாவதாக, இலங்கை விவகாரத்தை புவிசார் அரசியல் நகர்வுகளின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியுள்ளது. சீனா, இந்தியா, அமெரிக்கா என்ற மூன்று பலம்வாய்ந்த நாடுகள் இலங்கை பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்துகின்றன. அதுமட்டுமன்றி, இலங்கை என்ற வளம்மிகு நாட்டின் வளங்களை, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கனவு காண்கின்றன.

அந்த வகையில், இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி என்பது நூறு சதவீதம் இயற்கையான, தற்செயலான காரணிகளின் வழிவந்ததா என்ற சந்தேகம் நோக்கர்களுக்கு ஏற்பட்டுள்ளது, ஆனாலும், இந்த நெருக்கடிகளை, ஆட்சியாளர்களான ராஜபக்‌ஷர்கள் சரிவரக் கையாளத் தவறியிருக்கின்றார்கள் என்ற கோணத்தில், ஒட்டுமொத்த மக்கள் வெறுப்பும் அவர்கள் மீது குவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கும் அரசியல் குழப்பங்களுக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. எது எப்படியிருப்பினும், இன்றைய நெருக்கடியின் மூல காரணங்கள் என்ன என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு. நிகழ்கால பொருளாதார, வாழ்வாதார பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டிய பாரிய பொறுப்பு, ராஜபக்‌ஷ அரசாங்கத்துக்கும் அதனை ஒழுங்குபடுத்த வேண்டிய தார்மிகப் பொறுப்பு எதிர்க்கட்சிக்கும் உள்ளது.

ஆனால், அரசாங்கம் மக்கள் போராட்டத்தின் காரணமாக உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, வெளியில் மிக தைரியமாக, பலமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்கான அணுமுறைகளைக் கையாள்கின்றது. பிரதான எதிர்க்கட்சியும் ஏனைய எதிரணிகளும் கூட, இது விடயத்தில் நம்பிக்கை தரும் நகர்வுகளைச் செய்யவில்லை.

ஆட்சியைப் புரட்டுவதற்கு இப்போது ஒன்றுமில்லை. ஏனெனில் ஆட்சியே கிட்டத்தட்ட அந்த நிலையில்தான் உள்ளது. இந்தத் தருணத்திலாவது ஆட்சி அதிகாரத்தை சஜித் பிரேமதாஸவோ, ரணில் விக்கிரமசிங்கவோ, மைத்திரியோ, அநுரகுமாரவோ கையிலெடுக்கும் விரைவான காய்நகர்த்தல்களை மேற்கொள்ளவில்லை.

அதேபோல், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று, இடைக்கால அரசாங்கம் ஒன்றில் இணைந்து கொள்ளவும் இல்லை. மறுபுறத்தில், சுயாதீனமாகச் செயற்படப் போவதாக கூறிய சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கும் என்று நம்புவதற்கும் இல்லை.

ஆக மொத்தத்தில், எல்லாப் பக்கத்திலும் உள்ள அரசியல்வாதிகள் மக்களைக் கைவிட்டுள்ளனர். ஆட்சியாளர்களால், அரசியல்வாதிகளால் தோற்றுவிக்கப்பட்ட இத்தனை நெருக்கடிகளும் பிரச்சினைகளும் இன்று மக்களின் தலையில் கட்டப்பட்டு உள்ளன. மக்கள்தான் வீதிக்கு இறங்கி, எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த மக்கள் போராட்டங்கள், இலங்கை சூழலில் என்றுமில்லாத பல மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கின்றன. இதில் முதலாவது விடயம், ‘இலங்கையர்’ என்ற ஒற்றுமையாகும். அதாவது, சிங்களவர், முஸ்லிம், தமிழர் மட்டுமன்றி வேடுவர்களும் தமது இன, மத பேதங்களை மறந்து நாட்டுக்காக முன்னே வந்துள்ளனர்.

இனவாதம் என்பது, அரசியல் தரப்பினரால் காலத்துக் காலம் உருவேற்றப்பட்ட ஒரு ‘பேய்’ என்பதையும் அடிப்படைவாதம், பயங்கரவாதம் என்பதெல்லாம் ‘பிச்சைக்காரனின் புண்ணைப் போல’ கையாளப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பாக சிங்கள மக்கள் இப்போது விளங்கிக் கொண்டுள்ளனர்.

இந்தக் காரணங்களைச் சொல்லி, ஆட்சியாளர்கள் மக்களைப் பிரித்து ஆண்டதன் விளைவுதான் இது என்பதை எல்லா இன மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு, இன்றைய பொருளாதார நெருக்கடி ஒரு களத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இது ஒரு முக்கிய மாறுதல் ஆகும்.

அடுத்ததாக, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை நோக்கி, நேரிடையாகவே கேள்வி கேட்கும் துணிச்சலும் ஆற்றலும் இலங்கை மக்களுக்கு வந்திருக்கின்றது. எம்.பிக்கள், அரசியல்வாதிகள் செய்வதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்த காலம் மலையேறி இருக்கின்றது. இப்போது ஜனாதிபதியைக் கூட அவரது அலுவலக வாசலுக்குச் சென்று, தட்டிக் கேட்கும் முக்கியமான மாற்றமொன்று ஏற்பட்டிருக்கின்றது.

இது, ராஜபக்‌ஷர்கள் மட்டுமன்றி, ஏனைய எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட எதிர்பார்த்திராத ஒன்றாகும். இந்த மாற்றம், இனி வரும் ஆட்சியாளர்களும் தவறு செய்ய முன்னர் ஒரு கணம் யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் எனலாம்.

இவையெல்லாவற்றையும் விட, மிகவும் அமைதியாகவும் நாகரிகமான முறையிலும் ஜனநாயக வழிமுறைகளின் ஊடாகவும் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு முன்மாதிரி ஆர்ப்பாட்ட கலாசாரத்தை, காலி முகத்திடல் முற்றுகை ஆரம்பித்து வைத்திருக்கின்றது.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போடப்பட்டுள்ள தடுப்பு வேலியில் ஏறி நிற்கின்ற இளைஞர்களுக்கும் அங்குள்ள பல்லாயிரக்கணக்கான போராட்டக் காரர்களுக்கும், அந்தத் தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு உள்ளே போவது பெரிய விடயமல்ல; ஆனால், அதனை அவர்கள் செய்யவில்லை.

ஏனெனில், சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டுமென அவர்கள் நினைக்கின்றார்கள். வன்முறையற்ற வழிமுறைகளில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என எண்ணுகின்றார்கள். இந்த நாட்டு மக்களுக்காக, தாம் முன்வைக்கின்ற கோரிக்கை, அங்குள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் காதில் விழும்; அவர்கள் நல்ல பதிலை வழங்குவார்கள் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அரசாங்கம் இதன் தார்ப்பரியத்தை புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. காலி முகத்திடலில் நிற்பவர்கள், நாடெங்கும் சிறியளவில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் பிரதிநிதிகள் என்பதை அறிந்து, ஆட்சியாளர்கள் மக்களின் குரலுக்கு செவிசாய்த்ததாகத் தெரியவில்லை.

மாறாக, வழக்கமாக அணுகுமுறைகளின் ஊடாக, ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு சில சிறுபிள்ளைத்தனமான நகர்வுகளைச் செய்வதையே காண முடிகின்றது. ஒருவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையைக் கையில் எடுத்திருந்தால், அது எப்போதோ நடந்திருக்கும். அல்லது, சர்வதேச நாணய நிதியம் போன்ற உலக அமைப்புகளின் உதவி, இந்த நேரத்தில் தேவை இல்லாதிருந்தாலும் அதைச் செய்திருப்பார்கள்.

எது எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினையை சமாளிக்க, தீர்வுகள் என்ற பெயரில் தலையணைகளை மாற்றி, மக்களைப் பேய்க்காட்டிவிட்டு, காலத்தை இழுத்தடிக்கவே அரசாங்கம் முனைகின்றது. இதன் ஓர் அங்கமாகவே நேற்றைய அமைச்சரவை நியமனமும் இடம்பெற்றுள்ளது.

இதைவிட, இடைக்கால அரசாங்கம் அமைக்க, எதிரணியில் உள்ளவர்கள் ஓடோடி வரவில்லை என்பதும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நல்ல சாட்டாகியுள்ளது.
இத்தனை விமர்சனமும், அவமானங்களும் ஏற்பட்டு, ராஜபக்‌ஷர்களின் ‘இமேஜ்’ உலகில் சிதைந்து கொண்டிருக்கின்ற போதும், இவர்கள் திருந்தவும் இல்லை; தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவும் இல்லை. ஒரு தவறை சரிப்படுத்த, இன்னும் பல தவறுகளை செய்கின்ற பாணியிலான போக்கானது, ஒருநாளும் நல்ல பெறுபேறுகளைத் தந்ததில்லை என்பதே உலக அனுபவமாகும்.