கொரனா: சமூகப் பொறுப்புடன் செயற்படும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி

(Sdpt Srilanka)
சமீபகால உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத பாரிய மனித அழிவை நோக்கி மனிதகுலம் முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. உலகம் முழுவதிலுமுள்ள தலை சிறந்த விஞ்ஞானிகளும் மருத்துவ சமூகமும் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் இதற்கான தடுப்பூசி தயாரிக்கவும் இரவுபகலாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பாவனைக்கு வர குறைந்தது 18 மாதங்களாவது செல்லும். இந்த இடை வெளியில் பல்லாயிரக்கணக்கான மரணங்கள் உலகம் முழுவதும் சம்பவிக்கும் என்பது நிச்சயம் என துறை சார் உலக வல்லுநர்கள் எதிர்வு கூறுகின்றனர். இப்பேரழிவின் தாக்கத்தை தணிப்பதற்கு எம்மிடமுள்ள ஒரே ஆயுதம், எம்மையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்கான கடமைகளில் நாம் ஒவொருவரும் சிரத்தையுடன் ஈடுபடுதலே. சுகாதார திணைக்களம், கொரோனா தொடர்பான அரச அறிவித்தல்கள், மற்றும் சமூக அக்கறை கொண்ட வைத்தியர்களின் ஆலோசனைகளையும் அறிவுறுத்துததல்களையும் சிரத்தையுடன் செயற்படுத்துங்கள். எம்மையும் பாதுகாத்து சமூகத்தையும் பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வை பரந்து பட் ட மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு இது தொடர்பான நடைமுறை விபரங்களையும் உண்மை தகவல்களையும் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்வோம். வருமுன் காப்போம்-

SDPT

இதை யோசித்துப் பாருங்கள்…

நாளைக்கு உங்கள் அம்மாவுக்கு காய்ச்சலும் , இருமலும் வருகிறது. அள்ளி எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போகிறீர்கள்.
வாசலில் வைத்தே, “வார்ட்டெல்லாம் மூடியாச்சி , நோயாளிய வீட்ட கொண்டு போங்க” என்கிறார்கள்.
உடனே பக்கத்திலிருக்கும் பிரைவேட் வைத்தியசாலைக்கு போனால், அங்கு போனகிழமையே போர்ட் வைத்து விட்டார்கள் – ” காய்ச்சல், இருமலுடன் வரும் அனைத்து நோயாளிகளும் அரச ஆஸ்பத்திரிக்கு மட்டுமே செல்லவும்- நிர்வாகம்”.

அம்மா சோர்ந்து கொண்டிருக்கிறார்.
மூச்சிரைப்பு அதிகமாகிறது..!
நீரிழிவு நோயாளி வேறு…

என்ன செய்யப்போகிறீர்கள்?…

பேஸ்புக்கில் இந்த கேடுகெட்ட வைத்தியர்களை கிழித்து போஸ்ட் போடலாம் என்றால், அதுவும் முடியாது, ஏனெனில் நிலைமைக்கு காரணமே நீங்கள் தான்!

இது வெறும் கதையல்ல, இன்னும் சில நாட்களில் நடக்கக்கூடிய நிஜம்.

ஒரு நோயாளியின் அதிகூடிய நம்பிக்கையே தனக்கு மருந்து தர ஒரு வைத்தியசாலை இருக்கிறது, மருத்துவ ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பது தான்…
அது இல்லையென்றாகும் போது….????


நான் வேலை செய்யும் ராகம போதனா வைத்தியசாலைக்கு ஒரு நோயாளி வருகிறார்.
முறைப்பாடு – நெஞ்சு நோவு.
ECG எடுத்தால் சில மாற்றங்கள் தெரிய, வார்ட்டுக்கு அனுப்பப்படுகிறார்.
அடுத்த நாள் வார்ட் ரவுண்டில் வைத்து , இருமல் மூன்று நான்கு நாட்களாக இருக்கிறது என்று சொல்ல, உடல் வெப்பநிலையை பார்த்தால் காய்ச்சலும் இருக்கிறது.
உடனே அவரது பயணங்கள் தொடர்பாக கேட்ட போது, ஒரு இடமும் போகவில்லை என்று கூலாக சொல்லிவிட்டார்.
எனினும் வைத்தியர் சந்தேகத்துடன், அவரது வீட்டில் விசாரித்தபோது, அண்மையில் இத்தாலியில் இருந்து வந்தவர் என்று தெரிகிறது.
அடித்துப் பிடித்து கொரோனா பரிசோதனை செய்தால் பொசிட்டிவ்….!!

வார்ட்டில் முழுதாக ஒன்றரை நாட்கள் இருந்திருக்கிறார்.!!

வார்ட்டின் மருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மற்ற நோயாளிகள், அவர்களை பார்க்க வந்தவர்கள், கூட இருந்தவர்கள்…
All are exposed..!!

வார்ட் மூடப்படப்போகிறது!
அனைத்து ஊழியர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படப்போகிறார்கள்!!
நோயாளிகள் அனைவரும் isolation unit க்கோ, வேறு பொருத்தமான வார்ட்டுகளுக்கோ மாற்றப்படப் போகிறார்கள்.

நிற்க, இப்போது குறித்த வார்ட்டின் மருத்துவ ஊழியர்கள், அங்கிருந்த நோயாளிகளை பார்க்க வந்தவர்கள் கடந்த ஒரு நாளில் எங்கெங்கே யார் யாருடன் புழங்கியிருப்பார்கள்? அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய வயதான பெற்றோரின் நிலை என்ன?

நான் போனபதிவில் குறிப்பிட்ட community outbreak என்னும் நிலைமைக்கு ராகம மற்றும் சுற்றுப்புற பகுதிகள் வந்து விட்டன.

கடை எல்லாம் பூட்டி விட்டார்கள்.
ஊபர் ஈட்சில் சாப்பாடு சொன்னால், ஓர்டர் எடுத்து வந்தவர் கொஞ்ச நேரத்துக்கு முதல் கோல் பண்ணி ‘ வர முடியாமல் இருக்கிறது, மன்னிக்கவும், ஓர்டரை கான்சல் பண்ணுங்கள் ” என்கிறார்..!

பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நாளைதான் வைத்தியசாலையின் நிலைப்பாடு என்ன என்று தெரியவரும்.


அந்த நோயாளி வந்த உடனேயே தான் இத்தாலியில் இருந்து வந்தவர் என்றோ , அல்லது தனக்கு இருமல் மூன்று நாட்களாக இருந்தது சொல்லியிருந்தால், உடனே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கும்.

ஒன்றை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.
வந்திருப்பது கொள்ளை நோய்.
நம்மை மட்டும் காப்பாற்றினால் போதும் என்ற சுயநல சிந்தனை பேராபத்தாக தான் முடியும்.
உங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்கோ, நீங்கள் வாடிக்கையாக போகும் கடைக்காரருக்கோ, உங்கள் குழந்தையின் ஆசிரியருக்கோ, நீங்கள் வந்த பேரூந்தில் உங்கள் அருகில் நின்று இருமியவருக்கோ, ஏன் உங்கள் வீட்டுக்கு மதியம் வந்த பிச்சைக்காரருக்கோ கொரோனா இருந்தால் கூட, அது உங்களுக்கு வந்த மாதிரித்தான்!

ஊர் ஒன்று கூடித்தான் எதிர்க்கவேண்டும்.

வெளிப்படையாக இருங்கள்.
வெளிநாடுகளில் இருந்து வந்து வீடுகளில் இருப்பவர்கள் தயவு செய்து பொலிசில் பதிவு செய்யுங்கள்.
நோய் அறிகுறிகளை சரியாக கூறுங்கள்.
உங்கள் பயணம் தொடர்பான விபரங்களை மறைக்காதீர்கள்!

ஊரை அழிக்கும் இந்த உறுபிணியை ஒன்று கூடி எதிர்ப்போம்!

Dr. P. Sajeethan
Registrar / Medicine
CNTH- Ragama.