சரியான மாற்றுத் தலமை தேவை….!

(சாகரன்)

தற்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலமை தோற்றுப் போகும், தோற்றுப் போன உசுப்பேத்தும் அரசியலை நடாத்துகின்றதா? அல்லது இராஜதந்திர அரசியலை நடாத்துகின்றதா?. இதில் விக்னேஸ்வரன், சம்மந்தன் இருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகவே பார்க்க முடியும். இதில் ஒருவர் தமிழரசுக் கட்சியினர், மற்றவர் தமிழ் மக்கள் பேரவையினர் என்று பிரித்து பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு மாற்றீடாக ஒரு சரியான மாற்றுத் தலமையை ஏற்படுத்த ஏன் முடியவில்லை. அவ்வாறு ஏற்படுத்தும் இடத்து தலமைப் பொறுப்புக்களை ஏற்று நடத்த யார் யார் எம்மிடையே இருக்கின்றனர். இதற்கு எவ்வாறு செயற்படலாம் என்ற விவாதக் களத்தை திறந்துவைக்கின்றேன் ஆரோக்கியமான கருத்துக்களைப் பரிமாறுவோம்.

முதலாவதாக தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கத்தில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஐக்கிய முன்னணி இல்லை. இதில் இணைந்திருப்பவர்கள் கடந்த கால தமது அரசியல் செயற்பாட்டில் கிடைக்காத பாராளுமன்ற மாகாணசபை கதிரைகளை பெறுவதற்காக மட்டும் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டே கூட்டமைப்பு. இதில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என்பதுவம் மக்கள் நலன் என்பதுவும் சிறிதளவும் இல்லாத விடயம் ஆகிவிட்டது. பாராளுமன்றக் கதிரைகளை பிடிப்பதுவும் ஒரு தேவையாக இருக்கும் இடத்தில் இவ்வாறான கூட்டுத் தேவை என வாதிடலாம். உண்மை.

ஆனால் அது பாராளுமன்ற வெற்றியுடன் மட்டும் நின்று விட்டு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மக்களின் நலன்களை முற்றாக புறம் தள்ளியதாக இருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதில் பதவிகளைத் தக்கவைக்க நடைபெறும் கூட்டும் தமக்குள் உடைவுமே இங்கு பிரதான அரசியலாக காணப்படுகின்றது. இவர்களைக் கடந்து மறுபுறத்தில் நிற்பவர்களை அரசயின் கை கூலிகள் அல்லது இந்தியாவின் கை கூலிகள் என்று நிராகரிகச் செய்யும் செயற்பாட்டு வசைபாடல்கள் அதிகம் இருப்பதைக் காண முடிகின்றது. இவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடு நகர்வுகள் இதற்கு வாய்பாக அமைந்திருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. இங்கு இலங்கை அரசுடன் உறவாடுதல் இந்திய அரசின் அனுசரணைப் பெறுதல் என்பது ஒரு தரப்பினரால் செய்யப்படும் போது அது இராஜதந்திரமாகவும் மறுபக்கத்தால் செய்யப்படும் போது துரோகமாகவும் மக்களுக்கு சித்தரிகப்படுவதும் இதில் மக்களும் குழப்பம் அடைந்திருப்பதும் யதார்த்தமான நிலமை.

இவ்வாறான நிலமையில் பாராளுமன்ற வெற்றிக்கான கூட்டு என்பதைவிட மக்களின் அரசியல் தீர்விற்கான சமுதாயவிடுதலைக்கான உண்மையான ஐக்கிய முன்னணி ஒன்று பல தரப்பினராலும் இணைந்து உருவாக்கப்படவேண்டும். இதில் நிச்சயமாக நானும் இணைந்து வேலை செய்வேன். ஆயுதம் ஏந்தி போரிடப் புறப்பட்ட அமைப்புக்களில் பன்முகத்தன்மையையும் ஜனநாயக மறுப்பையும் தமது இயகத்தின் கொள்கைகளாக கொண்டு செயற்பட்டவர்கள் புலிகள் மட்மே இவர்கள் மட்டுமே மக்களின் விடுதலைக்கு எதிரானவர்கள் ஏனைய ஆயுத விடுதலை அமைப்புக்கள் நடைமுறைரீதியிலான தவறுகளை விட்டிருக்கின்றன. ஆனால் பன்முகப்படுதப்பட்ட தன்மையை ஏற்றவரகள் ஜனநாய மறுப்பை தமது கொள்ளையாக கொள்ளாதவரகள்.

ஆயுதம் தூக்காவிட்டாலும் தூக்குவதற்கான உசுப் பேத்தலையும் ஒவ்வொரு காலத்தில் மக்களின் அரசியல் தீர்வை காட்டிக் கொடுத்தவர்கள் தமிழரசுக் கட்சியினர் மக்கள் இதில் தெளிய வேண்டும். விக்னேஸ்வரன் போன்ற மக்களுடன் எப்போதும் இருக்காத தலைவரகளை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும் அவர்கள் வேணும் என்றால் மக்கள் மன்றங்களில் தமது அரசியல் வேலைகளை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும்.

இனங்களும் தேசிய இனங்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போது தமது உரிமைகளை நிலைநாட்ட போராடவே செய்வர் இது தமிழ் பேசும் மக்கள் விடயத்திலும் நடைபெற்றது. தமிழ் மிதவாதத் தலமைகள் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதாக காங்கிரஸ் இல் இருந்து ஆரம்பித்து தமிழரசுக்கட்சியூடாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வரையும் நடைபெற்றது. தமிழ் மக்களின் விடுதலைக்கு தாம் குரல் கொடுப்பதாக இவர்கள் போட்ட வேஷம் தேர்தல் வெற்றிக்காகவே. ஏன் வட்டுக்கோட்டடையில் இணைந்து? தனிநாட்டுத் தீர்மானம் போட்டதும் இதற்காகவே.

இவர்களின் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் பற்றிய உண்மையற்றதன்மையை உணர்ந்த இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராட புறப்பட்டதும் இது பின்பு புலிகளால் ஏதேச்சேகாரமாக மாற்று இயக்கங்களை அழித்து ஏகபோகமாக வலிந்து எடுக்கப்பட்டதும் இதன் தொடர்சியாக பெரும் அழிவுகளுடன் முள்ளிவாய்காலில் முடிவுற்றதும் வரலாறு.

தமது இறுதிக் காலத்திற்கு அண்மையாக மீண்டும் தாமே நிராகரித்த பாராளுமன்றத்தை தமது பினாமி தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி கையாள முற்பட்டும் புலிகளின் அழிவிற்கு பின்பு தம்மை உருவாக்க காரணமானவர்களின் பெயரை மட்டும் பாவித்து தேர்தல் வெற்றிகளுக்கான பாதையை வகுத்து இன்றுவரை செயற்படும் அதே பழைய தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை தொடருவது யாவரும் நாம் கண்கூடு பார்க்கும் ஒன்று. இதில் நபர்களாகவே அல்லது அமைப்புக்களாகவோ சம்மந்தன் விக்னேஸ்வரன் என்ற பிழவு ஒரு வகையில் பழைய காங்கிரஸ் தமிழரசு கட்சிப் பிளவை ஒத்ததே. இதற்கு மாற்றீடாக ஒரு சரியான ஐக்கிய முன்னணி மக்களுக்கான தலமை உருவாகப்படவேண்டும் என்பதே எம் முன்னால் தற்போது இருக்கும் விடயம்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டல் என்பதற்கு அப்பால் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் இலங்கை மக்களினதும் விடிவிற்காக ஒரு வர்க்கப் புரட்சிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே எமது இறுதி இலக்கு. இதற்காக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டதை பாட்டாளி வர்க்கத்தின் தலமைiயில் முன்னெடுக்க முற்பட்டதே எம்மை போன்றவர்களின் செயற்பாடாகவும் அரசியல் கொள்கையாகவும் இருக்கின்றது. இந்த இடதுசாரித்தலமையை இல்லாமல் செய்வதற்கு மேற்குலகம் கண்டுபிடித்த செயற்பாடுகளே 1986 களின் பின்பு மேலோங்கி நின்றது. இதனை முறியடித்து இடதுசாரிகளின் தலமை மேலெழுந்து வரமுடியவில்லை என்பதுவும் விமர்சனத்திற்குரியது.