சிலோன் விஜயேந்திரன்

திருவல்லிகேணியில் கெல்லட் ஸ்கூல் எதிரில் என் அறைக் கதவு தட்டிவிட்டு அமைதியாக நின்றிருந்த அந்த மனிதரை பார்த்ததும் துக்கி்வாரிப் போட்டது எனக்கு. தோள்பட்டையில் புரளும் ப்ரவுன் கலர் முடி, ஆஜானுபாகு தோற்றம், முரட்டு ஷூக்கள் என்று திகில் கிளப்பினார். அவர் நடிகர் சிலோன் விஜயேந்திரன்.
’வணக்கம் தோழரே .உள்ள வரலாமா’ கனிவான அவரது குரல் அவரை பற்றிய என் எண்ணத்தை மாற வைத்தது. ‘வாங்க தோழர்’ நிங்க மு.மேத்தாகிட்ட இருகறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.’ என்று எனக்கு அறிமுகமானார். பேச்சில் ஈழத்தின் வாசம் அதிகமிருக்கும். அப்போதிருந்து நல்ல நண்பரானார்.


அடிக்கடி அறைக்கு வருவார் வாங்க டீ சாப்பிடலாம் என்று உரிமையோடு கூப்பிடுவார். அநேக நேரங்களில் நானே பணம் கொடுக்க வேண்டியிருக்கும் அபூர்வமாக அவர் கொடுப்பார். அவர் எழுதிய புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்து ‘தோழரே இதை வெச்சிக்கிட்டு நூறு ரூபா தாங்க’ என்பார் என்கிட்ட இருக்கும் சொற்ப பணத்தை கொடுத்து வாங்கிக்குவேன்.
நிரந்த வருமாணம் இல்லாதது, குடும்பு உறுப்பினர்களை சந்திக்க சிலோன் போக முடியாதது, தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாதது போன்ற பல்வேறு சிரமங்களில் இருந்தார் எப்போதும் முகத்தில் ஒரு சோகம் குடியிருக்கும்.

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்தவருக்கு அவருடைய தோற்றம் சண்டைக் கலைஞராக நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது.
ரஜினி, கமல் உட்பட பலருடன் நடித்தவர். குறிப்பாக சண்டைக்காட்சியில் மட்டுமே வருவார். ஈஸ்ட்மெண்ட் கலர் கௌபாய் படங்களில் இவரை குதிரைகளில் அதிகமாக பார்த்திருக்கலாம். சிலோன் விஜயேந்திரன் என்று டைட்டிலில் இவர் பெயர் இருக்கும். சண்டை காட்சிகளில் குதிரையேற்றம், பல அடி உயர உயரத்திலிருந்து குதிப்பது, கற்பழிப்பது, கொடூர கொலைகளை செய்வது என்று படத்தில் பயமுறுத்துவர்..

ஆனால் அவர் முரட்டுத்தனமான தோற்றமே தவிர மெல்லிய மனம் கொண்டவர். தமிழ் நுல்களை படித்து புலமைபெற்றவர். இலக்கியங்கள் பற்றி பசியே மறந்து போகும்படியாக சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருப்பார்.
பாரதியார் நினைவு இல்லத்தின் மாடியில் செய்தி தொடர்புத் துறைக்கு சொந்தமான ஒரு நூலகம் இருந்தது.. அந்த நூலகத்துக்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. எப்போதும் அமைதியாக இருக்கும். எங்களுக்கு ஒரு நாளின் பல மணிநேரங்கள் .அங்கேயே கழியும். மிகவும் பழைமையான பதிப்புக்கள் அங்கு இருந்தது. அந்த நூலகம் பின்னர் பழைய கலைவாணர் அரங்கத்தின் பின்புறம் மாற்றப்பட்டது. பிறகு அங்கிருந்து அகறப்பட்டது. இப்போது அந்த அபூர்வ புத்தகங்கள் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை.
.ரத்னா கபே பக்கத்திலிருந்த ஒரு அழுக்கடைந்த பழைய மேசனில் தங்கியிருந்தார். நான்காவது மாடியில் அவரது அறை இருக்கும். ஓரிரு முறை அவரது அறைக்கு போயிருக்கிறேன்.

மேன்சனில் கீழ் பகுதியில் மண்ணெண்ணை பேரல் பேரலாக வைக்கப்பட்டிருக்கும். அங்கேயே மண்ணெண்ணை வேறு வேறு பேரல்களுக்கு மாற்றிக்கொண்டிருப்பார்கள்
கும்மிருட்டில் படிகளே தெரியாது. மாடர்ன் தியேட்டர் படங்களை நினவுபடுத்தும் இடமாக அது இருந்தது.
அறை முழுக்க ஆங்கில படங்களின் வீடியோ கேசட்டுகளும், அபூர்வமான தமிழ் இலக்கிய புத்தகங்களும் இருக்கும். அதையெல்லம் என்கிட்ட காட்டுவார்.

மேன்சனிலிருந்து நடந்தே மவுண்ட் ரோடு தேவநேய பாவாணர் அரங்கத்தில் நடக்கும் இலக்கிய விழாக்களுக்கு அடிக்கடி போவோம் அரங்கத்தின் வெளியே போடப்பட்டிருக்கும் புத்தகங்களின் ஆசிரியர்கள் யார் என்பதையெல்லாம் சொல்லுவார்.. சாலையோரம் இருக்கும் கடையில் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்புவோம்.
சில நேரங்களில் அவரை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து நண்பர்களிடம் நான் அறையில் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடச் சொல்லுவேன்.அவர் பரிதாபமாக நடந்து போகும் காட்சியை பார்த்துட்டு மனசு கேட்காமல் நானே போய் கூட்டிட்டு வருவேன்.இருக்கும் பணத்தை வைத்து சாம்பார் சாதம், புளியோதரை சாப்பிடுவோம். ‘நன்றி தோழரே’ என்றபடி ஒரு சிகரெட்டை இழுத்துக்கொண்டே போய் விடுவார்.
ஒரு நாள் உற்சாகமாக அவரை பார்த்தேன். மறக்கப்பட்ட கவிஞர்களும் ’மறக்க முடியாத பாடல்களும் என்ற தலைப்பில்’ ஒரு புத்தகத்தை எழுதி முடித்திருந்தார். அதை புத்தகமாக்க பணம் இல்லாமல் பல நாள் என்னிடம் சொல்லியிருக்க்றார்.

அன்று ஊர்வசி சோப்பு கம்பெனியின் உரிமையாளர் செல்வராஜ் அவருக்கு ஒரு தொகை கொடுத்து புத்தகத்தை பதிப்பிட வைத்திருந்தார். அந்த புத்தகம் அரிய தகவல்களை கொண்டது. ஒரே ஒரு ஹிட் பாடல் எழுதிவிட்டு காணாமல் போன கவிஞர்களை கண்டு பிடித்து எழுதியிருந்தார். ரொம்[பவும் அபூர்வ தகவல்கள் அதில் இருந்தது. எனக்கும் ஒரு புத்தகம் கொடுத்தார். வழகத்திற்கு மாறாக அவர் முகத்தில் சந்தோஷம் ஒரு சிகரெட்டை இழுத்துக் கொண்டே ‘சிறிலங்கா போகபோறேன் நண்பா..உறவுகளை பார்க்கணும். இந்த வாரத்துல கெதியா புறப்படவேணும்.” என்று ஒரு பெரூமூச்சுடன் புகையை இழுத்து விட்டார்.
மறுநாள் நான் உறவினர் வீட்டுக்கு பல்லாவரம் சென்று விட்டு மதியம் மூன்று மணிக்கு திரும்பினேன். பஸ் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் போன போது ஏரியா முழுக்க கூட்டம் இரண்டு தீயணைப்பு வண்டிகள் ரத்னா கபே முன் நின்றிருந்தன. புகை மூட்டம் பரவிக்கிடந்தது.

இறங்கிப்போய் பார்த்து அதிர்ந்து போனேன். சிலோன் விஜயேந்திரன் தங்கியிருந்த பழைய மேன்சனில் தீ பிடித்து எரிந்திருந்தது. தண்ணீரை பீச்சி அடித்துக்கொண்டீருந்தனர். அங்கு இருந்த எனக்கு தெரிந்த நபரிடம் இவரை பற்றி விசாரித்தேன்.
யாரோ புதிதாக மேன்சனுக்கு வந்த ஒருவர் சிகரெட் பிடித்து விட்டு சாம்பலை தட்டி விட அந்த நெருப்பு கீழே மண்ணென்னை மாற்றிக் கொண்டிருந்த இடத்தில் விழுந்து பேரல்கள் வெடித்து சிதறியிருக்கிறது. மள மளவென நெருப்பு கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியிருக்கிறது. இதில் நான்காவது மாடியில் இருந்து என்ன செய்வதென்று தெரியாமல் பதறியிருக்கிறார் விஜயேந்திரன் கடைசியில் அவருக்கு

கைகொடுத்திருக்கிறது ஸ்டண்ட் கலை. துணிச்சலாக அங்கிருந்து குதித்து விட்டார். அவர் குதித்து கீழே வரவும் இன்னொரு பேரல் வெடித்து உருண்டு வரவும் சரியாக இருந்திருக்கிறது. தீயின் உக்கிரத்தின் நடுவில் மாட்டிக்கொண்டு அலறியிருக்கிறார். ஒரு வழியாக வெளியே வந்த அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். நான் போய் பார்த்த போது தீக்காய பிரிவில் ப்ளாஸ்டிக் சீட்டில் அலறியபடி கை கால்கள் முழுதும் வெந்த நிலையில் அலறிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ’நண்பா.. நண்பா முடியலியே வலிக்குதே அவரது கதறல் கலங்க வைத்தது. கண்களில் ஈரம் பரவ கையறு நிலையில் நின்றிருந்தேன்மறுநாள் ஒரு நபர் என் அறைக்கு ஓடி வந்து ‘சார் உங்க ப்ரண்ட் செத்துப் போயிட்டாரு சார்’ என்றார். அன்றைக்கு முழுவதும் அறையை விட்டு வெளியே வரவில்லை.
வாழ்ந்த ஊரை விட்டு சொந்த பந்தங்களை பிரிந்து பிழைப்புத்தேடி . ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியுர்களில் வாழ்கிறவர்களுக்கு கடைசி காலம் இப்படி இருக்ககூடாது

நேற்று சைக்கிள் பயணத்தின் போது திருவல்லிக்கேணியை தாண்டும் போது மனம் முழுக்க சிலோன் விஜயேந்திரன் .பரவிக்கிடந்தார்.