செக் ரிப்பப்ளிக்

செக் ரிப்பப்ளிக் – கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. ஜெர்மனி, போலந்து, சுலோவாக்கியா, ஆஸ்திரியா என நான்கு நாடுகளுக்கு நடுவே அமைந்திருக்கும் நாடு இது.

கடந்த பல நூற்றாண்டுகளில் பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்த நாடு. தற்சமயம் பார்லிமெண்ட் ஜனநாயகத்தைப் பேணும் நாடு. நட்டின் தலைநகரம் ப்ராக். ஆரம்பக் காலத்தில் கெல்ட் மக்கள் இங்குப் பரவலாக வாழ்ந்தார்கள் எனத் தகவல்கள் கிடைக்கின்றன. கிபி.5ம் நூற்றாண்டு வாக்கில் பொகேமிய அரசு நிறுவப்பட்டு இப்பகுதி முழுமையும் அதன் ஆட்சி பரவத் தொடங்கியது. இந்த பொகேமிய மன்னர்களில் 4ம் சார்ல்ஸ் மிகப் புகழ் பெற்றவர். இவரே ப்ராக் நகரைச் சிறந்ததொரு தலைநகராக உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர். இவரது நினைவாக இருக்கும் சார்ல்ஸ் பாலம் அற்புதக் கலைப்படைப்பு.

வரலாற்று ரீதியில் பல மாற்றங்களைச் செக் சந்தித்திருக்கின்றது. ரோமன் கத்தோலிக்க ஆளுமையில் லத்தீன் மொழியில் மட்டுமே அனைத்தும் என்ற நிலைய மாற்ற யான் ஹுஸ் (1369 – 1415) தலைமையிலான புரட்சி மேற்கொள்ளப்பட்டு முந்தைய ஜெர்மானிய ஆளுமையிலிருந்து விடுபட்டு, செக் மொழி, நாட்டுப் பற்று என தனி நாடு என்ற சிந்தனை உருவாகத் தொடங்கியது. 1618ம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சி மிக முக்கியமானது. 30 ஆண்டு போராட்டம் என அழைக்கப்படும் இது ஆஸ்திரிய ஆளுமைக்குள் செக் வருவதற்கு ஏதுவாக அமைந்தது. முதலாம் உலகப்போர் காலம் வரை செக் தனி சுதந்திர நாடாக அமைய வாய்ப்பு அமையவில்லை. பலம்பொருந்திய ஆஸ்திரிய-ஹங்கேரிய ஆட்சியிலிருந்து முதலாம் உலகப்போரின் இறுதியிலேயே செக் வெளியேற முடிந்தது. 1918ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி செக் நாடு செக்கஸ்லோவாக்கிய என்ற பெயரில் இன்றைய சுலோவாக்கியா நாட்டையும் இணைத்த வகையில் தனி நாடாகச் சுதந்திரம் பெற்றது. ஆனால் 2ம் உலகப் போரில் ஜெர்மானிய படைகள் ஊடுறுவி கைப்பற்றியதால், செக்கஸ்லோவாக்கியா, நாசி ஜெர்மானிய படையின் ஆளுமைக்குட்பட்ட நிலையில் போர் கால இறுதி வரை இருந்தது.

போருக்குப் பின்னர் நிகழ்ந்த தேர்தலில் கம்யூனிய அரசியல் கட்சி அதிகப்பெரும்பாண்மையில் வெற்றி பெற, அதன் தொடர்ச்சியாக ஏறக்குறைய 42 ஆண்டுகள் கம்யூனிச ஆட்சியில் இருந்து, பின்னர் 1989ம் ஆண்டில் போர் அற்ற அமைதியான வகையில் கம்யூனிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 1991ம் ஆண்டு செக் – சுலோவாக்கிய என இரு நாடுகளாகப் பிரிந்து தனித்தனி ஆட்சியில் என தற்சமயம் இரு வேறு நாடுகளாக இவை உள்ளன.

செக் நாட்டில் பார்க்க வேண்டிய மிகப் பெரிய இரண்டு நகரங்கள் என்றால் ப்ராக். பில்சன் ஆகியவற்றைச் சொல்லலாம். செக் நாட்டின் கட்டிடக் கலை உலகப் பிரசித்தி பெற்ற வகையில் அமைந்திருப்பதைக் காண்போர் மறுக்க முடியாது. சுற்றுப்பயணிகள் பார்த்து மகிழ என ப்ராக் நகரில் இடங்கள் பல உள்ளன. அதில் முக்கியமாகப் பழைய நகர், புதிய நகர், யூதர்கள் பகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஜெர்மனியின் எல்லை நாடாக இருப்பதால் இன்றும் இங்கு ஜெர்மானிய தாக்கம் உள்ளது. பொதுவாக நான் பேசிய பலரும் ஜெர்மன் மொழியில் உரையாடக் கூடியவர்களாகவே இருந்ததைக் கவனித்தேன். ஆங்கிலத்தை விட ஜெர்மானிய மொழி இங்கு அதிகம் புழக்கத்தில் உள்ளது.

அருங்காட்சியகங்கள் தவிர்த்து ஏறக்குறைய எல்லா இடங்களிலும் செக்மொழி பயன்பாடு தான் புழக்கத்தில் உள்ளது. யூரோ பயன்பாடு அதிகாரப்பூர்வமாக இல்லாவிடினும் பரவலாக யூரோ பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களைக் காண முடிகின்றது. உள்ளூர் செக் க்ரோன் என்பது தான் இங்கே உள் நாட்டில் புழக்கத்தில் உள்ள பணம்.

ஜெர்மானிய மக்களை விட ஒரு சில விசயங்களில் வேறுபாட்டை செக் மக்களிடம் காண முடிகின்றது. உதாரணமாக சாலையில் நடப்போருக்கு முக்கியத்துவம் தராமல் வாகனங்கள் செல்கின்றன. இது போன்ற நிலையை ஜெர்மனியில் காண முடியாது. ஜெர்மனியில் பார்க்கும் போது, நடக்கின்ற பொது மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாகனங்கள் நின்று செல்லும்.

உணவின் விலைகள் ஜெர்மனியை விட சற்று குறைவே. இங்கே யூதர்கள் வசிப்பதற்கென்று ஒரு தனிப்பகுதி இருக்கின்றது. இங்கே கடைகள்,வழிபாட்டு மையங்கள், மக்கள் கூடும் மையங்கள், என அனைத்தும் யூத மக்கள் மட்டுமே என்ற வகையில் அமைந்துள்ளது.

தற்சமயம் செக் நாட்டின் மக்கள் தொகையில் 80% மக்கள் மதம் அற்றவர்கள். 3% மக்கள் ஜுடா என்ற சிந்தனையைப் பின்பற்றுபவர்கள். ஏனையோர் கத்தோலிக்க, ப்ராட்டஸ்டண்ட் கிறித்துவ சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற விபரத்தைப் பயண வழிகாட்டி ஒருவர் குறிப்பிட அறிந்து கொண்டேன்.

அழகான தூய்மையான நகரம் ப்ராக். இதன் தனிச் சிறப்பு இங்குள்ள 311 அருங்காட்சியகங்களும் கட்டிடங்களும் என்றால் அது மிகையல்ல!
-சுபா