ஜெனீவாவில் என்ன கிடைக்கப் போகிறது?

ஆனால், இப்போது அரசாங்கம் அந்த நோக்கத்தைக் கைவிட்டுள்ளது. ‘இணக்கப் பிரேரணை’ என்றால், இரு சாராரும் இணக்கப்பாட்டுடன் முன் வைக்கும் பிரேரணை என்பதேயாகும்.

நல்லாட்சி அரசாங்கம், இணை அனுசரணை வழங்கியதன் மூலம், இணக்கப்பாட்டுடன் பிரேரணையொன்றை முன்வைப்பதே நடந்தது.எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் கொள்கைகளின் படி, இணை அனுசரணையோ இணக்கப் பிரேரணையோ சாத்தியமில்லை.

போர்க் காலத்தில், அரச படைகளும் புலிகளும் இழைத்த போர் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் பற்றி, சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக் கூற வைப்பதே, மனித உரிமைகள் பேரவையின் நோக்கமாகும். ஆனால், அந்தப் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதே, அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைப்பாடு ஒன்று, இருக்க முடியாது. எனவே, இணை அனுசரணையோ இணக்கப் பிரேரணையோ, தற்போதைய நிலையில் சாத்தியமாகாது.

எனவே, இலங்கை விடயத்துடன் சம்பந்தப்பட்ட மையக் குழு என்றழைக்கப்படும் பிரிட்டன், ஜேர்மனி, கனடா, மொன்டினிக்ரோ, வட மசிடோனியா ஆகிய நாடுகள், இலங்கையின் இணக்கமோ ஒப்புதலோ இன்றி, இலங்கை விடயத்தில் ஒரு பிரேரணையைப் பேரவையில் முன்வைக்க இருக்கின்றன.

இதற்கு முன்னர், கடந்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சல் பச்சலே, இலங்கை தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கையை, இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதால், இந்தப் பிரேரணையையும் அரசாங்கம் நிராகரிக்கும் என எதிர்பார்க்க முடியும்.

இதற்கு முன்னர், 2009, 2012, 2013, 2014, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில், இலங்கை தொடர்பாக, மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அவற்றில், இலங்கை முன்வந்து சமர்ப்பித்த 2009 ஆம் ஆண்டு பிரேரனையையும் 2015, 2017, 2019ஆம் ஆண்களில் இலங்கை இணை அனுசரணை வழங்கிய மூன்று பிரேரணைகளையும் தவிர்ந்த ஏனைய பிரேரணைகளை, இலங்கை அரசாங்கம் நிராகரித்தது.

இதற்காக, அரசாங்கம் முன்வைக்கும் காரணங்களில் சில நியாயமாக இருந்த போதிலும், அதனால், நாடு எந்தவொரு நன்மையையும் அடையவில்லை. “ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைகள் மூலமும், மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகள் மூலமும், குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே குற்றஞ்சாட்டப்படுகின்றன. அக் குற்றச்சாட்டுகளால், அந்நாடுகளின் இறைமை பாதிக்கப்படுகிறது” என அரசாங்கம் கூறுகிறது.

உலகில் பல நாடுகளைப் பொறுத்தவரை, அது உண்மையே! 2012ஆம் ஆண்டு, இலங்கை விடயத்தில், அமெரிக்கா முதலாவது பிரேரணையை முன்வைத்த போது, பாலஸ்தீன மக்களின் மனித உரிமைகளை, இஸ்‌ரேல் மீறுவது தொடர்பான ஒரு பிரேரணை முன்வைக்கப்பட்டபோது அமெரிக்கா, அந்தப் பிரேரணையை எதிர்த்தது.

பாலஸ்தீன மக்களை, இஸ்‌ரேல் மனிதர்களாக மதிப்பதில்லை. அவர்களது வீடுகள், அடிக்கடி புல்டோஸர்கள் மூலம் இடிக்கப்படுகின்றன. 1880இல் பாலஸ்தீன பிரதேசத்தில், இரண்டு சதவீதமாக இருந்த யூதர்கள், இப்போது பெரும்பான்மையினராக இருப்பதும், 60 இலட்சத்துக்கும் மேற்பட் பாலஸ்தீன அகதிகள், உலகமெங்கும் சிதறி வாழ்வதும், பாரிய மனித உரிமை நெருக்கடி ஒன்றையே எடுத்துரைக்கிறது. எனவே, மேற்கத்தேய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பற்றானது, பக்கச்சார்பானது என்பது உண்மையே.

ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசைன், தமது நாட்டிலேயே ‘ஷியா’ மதப் பிரிவைச் சேர்ந்த மக்கள் மீது, இரசாயன ஆயுதங்களைப் பாவித்து, 5,000 பேரைக் கொன்று, 10,000 பேரை காயப்படுத்திய போது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், அதை எதிர்த்து எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மேற்கத்திய நாடுகள், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையை, தமது அரசியல் பொருளாதார நோக்கங்களுக்காகப் பாவிக்கின்றன என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றதல்ல. தமது அரசியல், பொருளாதார நலன்களை சதாம் எதிர்க்காத காலத்தில், ‘ஷியா’ படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்த அந்நாடுகள், சதாம் ஹூசைன் தமது பொருளாதார நலன்களுக்குச் சவால் விடுத்த போது, ஈராக்கைத் தகர்த்து நாசமாக்கின.

முதலாவது வளைகுடாப் போரின் போது, போர் முனையில் சரணடைந்த 9,000 ஈராக்கியப் படைவீர்களை, பதுங்கு குழிகளிலேயே உயிரோடு, அமெரிக்க படைகள் புதைத்தன. முதலாவது வளைகுடாப் போரை அடுத்து, மேற்கத்திய நாடுகள், ஈராக் மீது விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக, 500,000க்கும் மேற்பட்ட ஈராக்கிய சிறுவர்கள், போஷாக்கின்மையால் உயிரிழந்தனர். எங்கே மனித உரிமைகள்?ஆனால், அதனால் இலங்கையில் மனித உரிமைகளை மீற, அரச படைகளுக்கோ புலிகளுக்கோ ஏனைய குழுக்களுக்கோ உரிமை கிடைத்துவிடுவதில்லை.

அதேவேளை, மேற்கத்தைய நாடுகளுக்கு, மனித உரிமைகள் மீறப்படுவதை எதிர்ப்பதற்குத் தார்மிக உரிமை இருக்கிறதோ இல்லையோ, அந்நாடுகள் அவற்றைப் பார்த்துக் கொண்டு, இருக்கப் போவதுமில்லை. பெரிதாக இல்லாவிட்டாலும், அந்நாடுகள் எதையாவது செய்கின்றன. எனவே, தார்மிக உரிமையைப் பற்றிப் பேசி, தப்பித்துக் கொள்ள எந்த நாட்டுக்கும் முடியாது.

இலங்கை, தமக்கு எதிரான பிரேரணைகளை நிராகரிப்பதாக வீராப்புப் பேசினாலும், மனித உரிமைகள் பேரவையின் நெருக்குதல் காரணமாக, இலங்கை அரசாங்கம் நடைமுறையில் அவற்றை முழுமையாக நிராகரிப்பதில்லை. உதாரணமாக, 2012 ஆம் ஆண்டு, மேற்கத்திய நாடுகள், இலங்கை தொடர்பாக முன்வைத்த முதலாவது பிரேரணையை நிராகரித்த அரசாங்கம், அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டதைப் போல், மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தின் போது, இலங்கையின் மனித உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பான செயற்றிட்டமொன்றைச் சமர்ப்பித்தது.

“போரின் போது, எவரும் காணாமல் போகவில்லை” என, 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ,‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்குக் கூறினாலும், அதே ஆண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, காணாமற்போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழுவை நியமித்தார். அந்தக் குழுவுக்கு, 19,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்தன. மேலும், வெளிநாட்டு நெருக்குவாரம் அதிகரிக்கவே அவர், பரணகம ஆணைக்குழுவுக்கு வெளிநாட்டு ஆலோசகர்களை நியமித்தார். நெருக்குவாரம் மேலும் அதிகரிக்கவே, அதே ஆண்டு போரின் போது, சாதாரண மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்வதற்காக, பரணகம ஆணைக்குழுவுக்கு இரண்டாவது ஆணையை வழங்கினார். இவை அனைத்தும், பிரேரணைகளின் தாக்கங்கள் ஆகும்.

2015, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளுக்கு, முன்னைய அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையை, கோட்டாபய அரசாங்கம் வாபஸ் பெற்றது. ஆனால், 2015ஆம் ஆண்டு பிரேரணை மூலம் நிறுவப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் (Office of Reperation) ஆகியவற்றைத் தொடர்ந்தும் நடத்துவதாகவும், மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்தது.

2012 ஆம் ஆண்டு முதல், இலங்கை விடயத்தில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் அனைத்துப் பிரேரணைகளின் மூலமும், சர்வதேச சமூகம், ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையே, பிரதானமாக வலியுறுத்தி வருகிறது. ஏனெனில், மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என, அந்தப் பிரிந்துரைகள் மூலம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த LLRC உள்ளிட்ட முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து, நிறைவேற்றப்படாத பரிந்துரைகளை அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய நிறைவேற்றுவது எவ்வாறு என, அரசாங்கத்துக்குப் பரிந்துரைப்பதற்காக, புதிய ஆணைக்குழுவொன்றை நியமிப்பதாகவும் கடந்த வருடம் இலங்கை மனித உரிமைகள் பேரவையிடம் வாக்குறுதி அளித்தது. இப்போது ஜனாதிபதி கோட்டாபய, அதை நியமித்து இருக்கிறார். அவ்வாறாயின், பிரேரணைகளை நிராகரித்தல் என்பதன் அர்த்தம் என்ன?

மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீதான தமது பிடியைப் படிப்படியாக இறுக்கி வருவதாகத் தெரிகிறது. ஆனால், இம்முறையும் தமது பொறுப்புகளை நிறைவேற்ற, இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் அவகாசம் வழங்கப்படலாம்?

மேற்கத்திய நாடுகள், மனித உரிமைகள் விடயத்தில், ஏனைய நாடுகள் தொடர்பாக, மூன்று விதமாக நடந்து கொள்கின்றன. இஸ்‌ரேல் போன்ற சில நாடுகளுக்கு எதிராக, அந்நாடுகள் எவ்வித நடவடிக்கையையும் எடுக்க விடுவதில்லை. லிபியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக உடனடியாகப் படைப் பலத்தைப் பாவித்து, கடும் நடவடிக்கைகளை எடுத்தன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிராக, மிருதுவான எச்சரிக்கையை விடுத்துக் கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பின்னால் வல்லரசுகளின் பொருளாதார நலன்களே இருக்கின்றன. மனித உரிமைகள் பேரவை போன்ற நிறுவனங்களும் வல்லரசுகளின் கைகளில் பொம்மைகள்தான்.