தமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு? குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்!!

கனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். இளவயதுத் திருமணம், சுண்ணத்துக் கல்யாணம் என்கிற சடங்குகளை இலக்குவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தொலைபேசி கொட்லைன் தொடர்பான அறிவித்தலை விடுத்த குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாந்தர் அவர்கள் “கனேடியர்கள் தங்களின் கலாச்சார வலுக்களிற்காக துணிந்து செயற்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த தொலைபேசி கொட்லைன் தமிழர்களிற்கு பெரிய தலையிடியைக் கொண்டு வந்துள்ளது. தமிழர்கள் தங்களர் மூதாதையர் செய்து வந்த மதச்சடங்கான பூப்புனித நீராட்டு விழாவினை கொண்டாடுவது இப்போது சிக்கலிற்குள்ளாகியுள்ளதா என்ற குழப்பத்தில் பலரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த விழா ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் நடைபெறும் ஒரு சமய சம்பிரதாயமாக இருந்தாலும், இது குறித்த தெளிவற்ற நிலை மற்றைய இனத்தவர்களிடையே இருப்பதால் அவர்கள் இந்த பெண் குழந்தைகளைப் தாங்கள் பாதுகாப்பதாக எண்ணி பொலிசாருக்கு அறிவிக்கக்கூடிய நிலை தோன்றியுள்ளது.

குறிப்பாக இவ்வாறான பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாமல் தவிர்க்கும் போது ஆசிரியர்களே வீடுகளிற்கு தொலைபேசி அழைத்து பிள்ளைகளை ஒரு வாரம், இரு வாரம் என வீட்டில் நிறுத்தாமல் அடுத்தடுத்த நாளே பாடசாலைக்கு அனுப்புமாறு நிர்ப்பந்திக்கிற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.

அத்தோடு ஏன் அந்தச் சிறுமியை மணப்பெண் போன்ற கோலத்தில் அல ங்கரிக்கிறீர்கள் என்ற கேள்வியை வேற்றினத்தவர்கள் பலரும் கேட்டிருக்கின்றனர். பல்லக்கில் தூக்குதல், ஊஞ்சலில் வைத்து ஆட்டுதல், கேக் வெட்டுதல் என்ற பலதும் அவர்களை குழப்பிப் போட்டுள்ளது.

பூப்புனித நீராட்டு விழா கொண்டாடுவதற்கான அடிப்படைக் காரணங்கள் முன்னைய காலங்களில் இரண்டிருந்தன. முதலாவதாக நூற்றாண்டிற்கு முன்பு ஒருவர் வாழும் காலம் 50 வயதாகவோ அல்லது 55 வயதாகவோ இருந்தது. எனவே இப் பெண்பிள்ளைகளின் அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா, அப்பம்மா போன்றவர்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு முன்பே இறந்து விடக்கூடிய சூழ்நிலை இருந்ததால்,

அந்தப் பெண் பிள்ளையை மணக் கோல உடையில் மங்களகரமாக தாங்கள் பார்த்து மகிழ்வதற்காகவும், இரண்டாவதாக தங்கள் வீட்டிலுள்ள பெண் வயதிற்கு வந்து விட்டால் இன்னமும் எட்டு ஒன்பது ஆண்டுகளில் அவளிற்கு மணமகன் பார்க்க வேண்டும் என்பதை ஊருக்கு அறிவிப்பதாகவும் இருந்தது.

இப்போதும் பூப்புனித விழா மேற்படி இருகாரணங்களும் இல்லாமல் உற்றார், உறவினர் பெற்றோரின் ஒன்றுகூடலிற்காகவும், அந்தப் பெண்பிள்ளையை சிறுமி என்ற நிலையிலிருந்து இளவயது பெண்பிள்ளைகள் சமுதாயத்தில் இணைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆதிகாலத்திலோ அல்லது இப்போதோ இந்த விழாவிற்கு எந்தவித தப்பான அர்த்தமும் கற்பிக்க முடியாது. ஆனால் அயலவருக்கும், அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவருக்கும், அல்லது விழா மண்டபங்களில் வேலை செய்யும் வேற்றினத்தவருக்கும் ஏன் இதனைச் செய்கின்றோம் என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Puberty

அதுபோலவே நீங்கள் உங்கள் கணணி, தொலைபேசி ஊடக அனுப்பும் செய்திகளும், பேஸ்புக், ருவிட்டர், இன்ஸ்ராகிராம், வட்சாப், வைபர், ஸ்கைப் ஊடக கதைப்பவை, பரிமாறுபவை என்பன இப்போதுள்ள என்ற C51 சட்டத்தின் பிரகாரம் உங்களிற்குத் தெரியாமலே கண்காணிக்க முடியும்.

தமிழர்கள் குறிப்பாகப் பயன்படுத்தும் “இப்ப வந்தனென்டா கொண்டு விட்டுடுவன்” , “அவனைக் கொல்லவேணும்” “ஒரு ஆள் இப்ப என்னட்டை அடி வேண்டிச் சாகப் போறார் (அல்லது போறா) ” என்ற வார்த்தைகளிற்கு உண்மையான அர்த்தம் ஏதுமில்லை. ஆனால் அவற்றை உளவுபார்ப்பவர்கள் மொழி பெயர்த்தால் மேற்படி நபர் கொலைக் குற்றச்சாட்டில் உள்ளே செல்லும் அபாயமும் உள்ளது.

கனடா பழைய கனடாவாக இல்லை. கண்சவேட்டிவ் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டங்களில் பாரிய தளர்வுகளைத் தாங்கள் ஏற்படுத்தப்படுத்துவோம் என அறிவித்துள்ளன.
(Canadamirror)