தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்

(க. அகரன்)

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஒரு சில தேர்தல்களே அமைந்துள்ளன.

இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது, கடந்த காலங்களில் இத்தனை புரட்சிமிக்கதாக எவராலும் பார்க்கப்படவில்லை. எனினும் இம்முறை தேர்தல், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததான ஒரு தோற்றப்பாடு வெளிக்கொணரப்பட்டிருந்தது.

இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே, தமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக நாடிபிடித்துப் பார்க்கும் களமாக இதனைப் பரீட்சித்திருந்தனர். தமது வாக்கு வங்கியில் அதீத நம்பிக்கை கொண்டு, மக்கள் செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்காத பல கட்சிகளுக்கு, மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டிய தேர்தலாகவும், இதனைக் கொள்ளலாம்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற கருத்தியலோடு வலம்வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, கணிசமானளவு வீழ்ச்சி இம்முறை ஏற்பட்டுள்ளது. வடக்கில் பூநகரியையும் கிழக்கில் ஒரு சபையையும் தவிர, வேறெந்தச் சபையையும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு, கூட்டமைப்புத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்களில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட வேறு பல கட்சிகளின் வசம் செல்லும் நிலையை அல்லது வேறு கட்சிகளின் இணைவுடன் ஆட்சியை அமைக்க வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளமையானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டில், ஸ்திரமற்ற நிலையை எடுத்தியம்புவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.

கடந்த பத்திகளில் குறிப்பிட்டதைப் போன்று, வெறும் கட்சி அரசியலுக்கு அப்பால், தமிழர்களின் அரசியல் இருப்பு என்பதைச் சிந்திக்காத போது தேசியக் கட்சிகள், வடக்கிலும் கிழக்கிலும் காலூன்றும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அந்நிலை தோற்றம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ் அரசியல் தலைமைகளில் ஏற்பட்ட முரண்பாடான நிலை, மக்களால் நிராகரிக்கப்பட்ட பல கட்சிகளுக்கு இன்று மீளெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சி சபைகளில் வட்டார ரீதியாக வெல்லப்பட்ட உறுப்பினர்கள், தமது வட்டாரங்களில் மேற்கொள்ளும் பணிகளின் நிமித்தம், எதிர்வரும் காலங்களில் மாகாண சபையிலும் தாக்கங்களைக் காணக்கூடியதாக இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் 8ஆம் மாதத்துடன் ஆட்சி நிறைவுக்கு வரும் வடமாகாண சபையில், தேசியக் கட்சிகள் அதிக பிரசன்னத்தைக் காட்டும் என்பது யதார்த்தம். தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில், தென்பகுதியில் மேற்கொள்ளும் பாரிய வேலைத்திட்டத்தில் ஓரிரண்டையே, வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளும் போது, அதற்கு மக்கள் ஆதரவு இம்முறை கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர்கள் எதிர்வரும் காலங்களில் அதிகளவு வேலைத்திட்டங்களைத் தமது உறுப்பினர்கள் ஊடாக மேற்கொள்ள எத்தனிப்பர். எனவே அதன் தாக்கம், இனிவரும் தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளுக்குத் தெரியவரும் போது, வாய்பிளந்து வேடிக்கை பார்ப்பதில் அர்த்தமின்றிப் போய்விடும்.

கடந்த முறை வட மாகாணசபைத் தேர்தலில் 30 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது சிதறுண்டு போயுள்ளமையால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில் ஆட்சியமைப்பதில் கூட பெரும் இழுபறி நிலை ஏற்படலாம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, தமிழரசுக் கட்சியைத் தமது வழிக்கு கொண்டுவருவதற்கு முனைகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தலைமை மாற்றம் ஏற்படும் பட்சத்திலேயே, தாம் கூட்டுச்சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வருவோம் என, தமது தரப்பு நிலைப்பாட்டை வைத்துள்ளனர்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ள தமிழரசுக் கட்சி, அதற்கு உடன்பட்டு தலைமை மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, தமது செல்வாக்கை இழக்க விரும்பாது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக, தமிழரசுக் கட்சியின் சின்னமே காணப்படுகின்றது. இந்தப் பின்னணியில், உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரங்களை அமைப்பதில், தமிழரசுக் கட்சிக்குத் தொடர்ச்சியான சிக்கல் நிலை ஏற்படும்.

எனவே, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய கட்சிகள் ஒன்றிணையாத பட்சத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் . அவ்வாறு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

யாழ். மாநகர சபையைப் பொறுத்தவரையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்பின்றி எவரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அக்கட்சியுடன் கொள்கை ரீதியிலான முரண்பாடு காணப்படுவதால், ஒத்திசைந்து ஆட்சி அமைக்க முடியாதுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கு ஒத்திசைந்து மாநகரத்தில் ஆட்சியை அமைக்கும் நிலை காணப்படுகின்ற சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தான் யாருக்கும் ஆதரவு வழங்கத் தயார் என தெரிவித்து, தனது நல்லெண்ண வெளிப்பாட்டைக் காட்டியிருக்கின்றார்.

இவ்வாறான இழுபறி நிலையில், அமையப்போகும் ஆட்சி உசிதமானதாக அமையப்போவதில்லை. ஆட்சி அதிகாரத்தை அமைத்தாலும், உள்ளூராட்சி மன்றத் தலைவர்களாக தெரிவுசெய்யப்படப் போகின்றவர்களின் ஆளுமை, குழு முயற்சி என்பவனவே, ஆட்சியை நீடித்துக் கொண்டு செல்லுமே தவிர, மேதாவித்தனமான செயற்பாடுகளால் எதனையும் சாதிக்க முடியாத நிலையை உருவாக்கும்.

இந்நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் இவ்வாறான நிலை ஏன் தோற்றம் பெற்றது என்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் ஆராய்ந்து பார்த்தல் மிகவும் அவசியமாகும். குறிப்பாக, தேர்தல் அறிவித்தல் விடுக்கப்படுவதற்கு முன்பாகவிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடைமுறைகள், அதன் மீதான நம்பிக்கை என்பவற்றில், தமிழ் மக்களுக்கு பாரிய அதிருப்தி நிலை காணப்பட்டிருந்தது.

அரசியல் தீர்வு விடயமானாலும் சரி, தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயங்கள், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை என்பவற்றில் ஆக்கபூர்வமான செயற்பாட்டை எடுக்கவில்லை என்ற கருத்தியலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கமும், கூட்டமைப்போடு இணைந்திருந்த புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ போன்ற கட்சிகள், கூட்டமைப்புப் பற்றி பொதுவெளியில் பகிரும் கருத்துகள் என்பனவும், தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாகியதோடு, இக்கூட்டின் மீது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலை, தமிழ் மக்களை தமது அரசியல் தொடர்பான மீள்பரிசீலனைக்குக் கொண்டு சென்றிருந்தது. இந்தப் பரீட்சிப்பானது, தமக்கு மாற்றம் அல்லது மாற்றுத் தலைமையின் தேவை தொடர்பில் தேடலை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

எனினும், உருவாக்கம் பெற்ற எந்தத் தலைமைகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விரக்தியை வெளிப்படுத்துவதற்கான மாற்றுத் தலைமையாக இல்லாமையினாலும், அந்தத் தலைமைகள் மீதும் நம்பிக்கையீனங்கள் உள்ளமையினாலும், தேசியக் கட்சிகளைத் தேடவேண்டிய நிலை, தமிழ் மக்களுக்குக் கணிசமாக ஏற்பட்டுள்ளது.

இதற்குமப்பால், இன்று கணிசமான வாக்காளர்களாக உருவாகியுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கவர்ச்சி அரசியலின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்களாகவும், தமது வாழ்வியல், தொழில் என்ற தேவையை நிறைவேற்றக்கூடிய அரசியல் தலைமைகளைத் தேடியமையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈ.பி.டி.பி போன்ற கட்சிகள், கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளைக் கொண்டு சாதித்துவிட்டதாகக் கங்கணம் கட்டிக்கொண்டாலும் கூட, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்து சுமார் 11 வருடங்களுக்கு மேலாக, எவ்வித மக்கள் பிரதிநிதிகளையும் கொண்டிராத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது கொள்கையில் தளர்வை ஏற்படுத்தாது பயணித்ததன் விளைவாக, பாரிய மாற்றத்தை, வடக்கில் கண்டுள்ளது.

எனினும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தனது செயற்பாட்டை யாழ். மாவட்டத்துக்குள் மட்டும் மட்டுப்படுத்தியுள்ளமையானது, வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள், தமக்கான ஒட்டுமொத்த தமிழ்த் தலைமையாக அக்கட்சியைக் கணிக்க முடியாத நிலை காணப்படுகின்றமையை, ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

இச்சூழலில், தென் பகுதி அரசியலிலும் பாரிய மாற்றத்தை, மக்கள் காண்பித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, நல்லாட்சி என்ற சொற்பிரயோகத்துடன் நடத்திய ஆட்சிக்கு, தமது பதிலை மக்கள் கொடுத்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவையும் அவரோடு இணைந்தவர்களையும் கள்வர்களாகவும் ஊழல்வாதிகளாகவும் காண்பித்த புதிய அரசாங்கம், அவர்கள் தொடர்பில் எவ்வித ஆக்கபூர்வமான சட்ட நடவடிக்கையையும் எடுக்க முடியாது போனமையானது, மஹிந்த ராஜபக்‌ஷ இன்று மீள் விஸ்பரூபமெடுத்து, அரசியல் களத்தில் மீள் பிரவேசம் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள மக்களின் மனங்களில் மஹிந்த என்ற மனிதர், ஆழமாகப் பதிந்துள்ளதை இத்தேர்தல் பறைசாற்றியுள்ளமையால், அடுத்து வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில், தேசியக் கட்சிகளாக ஐ.தே.கவும் சு.கவும், ஐயங்கொள்ளும் நிலை தோற்றுவித்துள்ளது.

இதற்குமப்பால், மஹிந்த ராஜபக்‌ஷவின் வருகையால் இலங்கை அரசியல் களமே சற்று அரண்டுபோயுள்ளமையானது, தமிழர்களின் எதிர்கால அரசியல் நகர்வுகளிலும் பாரிய பின்னகர்வுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஏனெனில், அரசமைப்பின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை என்ற விடயம், அண்மைய தேர்தலில் கருப்பொருளாகத் தென்னிலங்கையிலும் கையாளப்பட்டபோது, மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட அவரது பிரிவினர், தமிழர்களுக்குத் தனிநாடு போய்விடும் என்ற கருத்தியலை முன்வைத்திருந்தனர்.
எனவே, தம்மைப் பாதிக்கக்கூடிய தீர்வொன்று தமிழர்களுக்குக் கிடைத்துவிடுமா என்ற, சிங்கள மக்கள் மத்தியில் ஓர் ஐயப்பாடு கூட, மஹிந்தவுக்கான ஆதரவுத் தளமாக மாறியிருந்தது.

ஆகவே தமிழ்த் தலைமைகள், வெறுமனே தமது சுயநல அரசியல் தளத்தை விடுத்தும், கட்சி வளர்ச்சிகளைப் புறந்தள்ளி வைத்து விட்டும், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு நோக்கிய பயணத்துக்காக ஒன்றிணைய வேண்டிய தேவையை, காலம் நன்கே சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையும் விடுத்து, இறுமாப்பு அரசியல் மேற்கொள்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் முற்படுவார்களேயானால், எதிர்கால அரசியல் தளம் மீது தமிழர்களுக்கு நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டு, தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் அரசியலில் பிறழ்வுத்தன்மை ஏற்படும் என்பதோடு, நரிகளின் ஊழைச்சத்தமே கேட்கும் தேசமாக காணப்படும் என்பது தான், சாத்தியப்படும் ஒன்றாக இருக்கிறது.