தெளிவாகத் தெரியும் வடக்கு கிழக்கின் தலைமைத்துவ வெற்றிடம்

(கருணாகரன்)
தமிழர்களுடைய ஒட்டுமொத்தக் கவனமும் இன்று கொழும்பு அரசியலிலேயே குவிந்திருக்கிறது. இதுவரையிலும் படுதீவிரமாக இருந்த வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணம், தமிழீழம், சமஸ்டி, சுயாட்சி போன்றவற்றைப் பற்றிய கதையாடல்களையே காணவில்லை. விக்கினேஸ்வரன், அனந்தி, இவர்கள் பரபரப்பாக ஆரம்பித்த புதிய கட்சிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, சுரேஸ் பிரேமச்சந்திரனின் நிலைப்பாடுகள் பற்றியெல்லாம் கதைப்பாரே இல்லை. இந்தத் தரப்புகளின் அரசியல் பற்றிய பேச்சுகளும் ஒடுங்கி விட்டன.

மட்டுமல்ல, காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினை, நில மீட்பு, சிங்கள விரிவாக்கம், தமிழ்ப்பகுதிகளில் விகாரைகள் முளைத்தல், சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் விடுதலை, மீனவர் விவகாரங்கள், மரபுரிமை மீறல் எதைப் பற்றியும் யாரும் கதைப்பதாகவே இல்லை.

எல்லாவற்றையும் “கொழும்பு அரசியல் சுனாமி” அடித்துச் சென்றுள்ளது.

இனி, இந்தச் சுனாமி அலைகள் அடங்கத்தான் மீண்டும் வடக்குக் கிழக்கு மற்றும் தமிழ் அரசியலைப் பற்றிய கவனம் மேலெழும்.

ஆனால், அதற்குள் வடக்குக் கிழக்கு மற்றும் தமிழ் அரசியல் நிலவரங்களிலும் சிறிய அளவில் அல்லது சற்றுக் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுவிடக் கூடும். கொழும்பின் அரசியல் விளைவுகள் ஒட்டுமொத்தமாக இலங்கைத்தீவில் உண்டாக்கும் அதிர்வலை இது.

இதனால் கூட்டமைப்பின் தொடர்ச்சியான தடுமாற்றங்கள், ஏனைய கட்சிகளின் குழப்பங்கள் மற்றும் இழுபறிகள் போன்றனவெல்லாம் வடக்குக் கிழக்கு தமிழ் அரசியலில் மாற்றங்களை உண்டாக்கக் கூடியன. இதில் கணிசமான செல்வாக்கை கொழும்பு அரசியல் முடிவுகள் உண்டாக்கும்.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் தவிர்க்க முடியாமல் பாராளுமன்றத் தேர்தலை நோக்கித் தள்ளினால் அது மேலும் புதிய பல அதிரடிகளைத் தமிழ்த்தரப்பிலும் உண்டாக்கும். அதாவது தமிழ்த்தரப்பிலும் ஒரு குட்டிச் சுனாமி ஒன்று அடிக்கக்கூடும்.

ஆகவே வடக்குக் கிழக்கு அரசியலின் தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய, அதில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய அளவுக்கு கொழும்பு அரசியல் (மத்திய அரசியல்) உள்ளது என்பது நிரூபணமாகிறது.

இது தமிழீழம், தனிநாடு, சுயாட்சி போன்றவற்றைப் பற்றிய வேறான சிந்தனையில் கவனத்திற்குரிய ஒன்று.

இதிலிருந்து, இந்த யதார்த்தத்திலிருந்துதான் நாம் தமிழ்த்தரப்பின் அரசியலைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்.

ஆனால், கொழும்புக் குழப்பங்களையிட்டு எத்தகைய தீர்மானங்களை எடுப்பது என்று தெரியாத நிலையில் தமிழர் தரப்பில் பல கட்சிகளும் தலைமைகளும் உள்ளன. பெரும்பாலான கட்சிகளும் தலைமைகளும் உத்தியோகபூர்வமாக இதைக்குறித்து எந்த அபிப்பிராயங்களையும் சொல்லவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்னைக்குறித்து வெளிவந்த செய்திகளுக்கு ஒரு விளக்கத்தை மட்டும் அளித்தது. சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் ஒரு அறிக்கை விட்டிருந்தார். இதற்கு மேல் எதையும் இதுவரையில் காணவில்லை.

கிழக்கிலும் ஏறக்குறைய இதே நிலைமைதான். கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் பஸீர் சேகுதாவூத் போன்றோர் கொழும்பு அரசியல் சூழலில் சிறுபான்மைச் சமூகத்தலைமைகள் செயற்படவேண்டிய அவதானங்களையும் பொறுப்புகளையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதை விட தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகள் அமைப்புகள், பல்கலைக்கழக சமூகத்தினர், மதபீடங்கள் போன்றவை எல்லாம் திகைப்பில் உறைந்து போயிருக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலையே ஒரு மந்தார நிலையே காணப்படுகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த்தேசிய அரசியல் உணர்வோடு செயற்படும் தங்கராஜா தவரூபன் என்பவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயத்தை இங்கே நாம் கவனிப்பது அவசியம். அவர் கூறுகிறார், “ஒரு இலங்கையனாக யோசித்தால் அழகிய வளமுள்ள இலங்கை நாடு வெளிநாடுகளால் கையாளப்படுவதும் ஊழல்வாதிகளால் தங்கள் நலனுக்காக சிதைக்கப்படுவதும் வேதனையாகத்தான் உள்ளது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. நான் இலங்கை குடிமகனாக மதிக்கப்படுகின்றேனா? நான் சார்ந்த இனத்திற்கு சம அந்தஸ்து தேசியக்கொடியில் இருக்கின்றதா? எனது மாகாணம் சுதந்திரமாக தொழிற்பட அனுமதிக்கப்படுகின்றதா? எம் பிராந்தியங்கள் திட்டமிட்ட குடியேற்றங்கள் கையகப்படுத்தல்கள் ஊடாக துண்டாடப்படாமல் இருக்கின்றதா? என்சார்ந்த மக்கள் அழுத்தங்கள் இன்றி பாரபட்சங்கள் இன்றி , இராணுவ முகாம்கள் இன்றி தம் சொந்தக்காணிகளில் நிம்மதியாக வாழ முடிகின்றதா? இன வேறுபாடின்றி சமனான நீதி கிடைக்கின்றதா? சகல உரிமைகளையும் கொண்டவனாக மற்ற இன மக்களுடன் ஒப்பிடுகையில் ஒரே மாதிரியாக உணர முடிகின்றதா? எல்லா அபிவிருத்தி திட்டங்களும் பொதுமொழியில் இருக்கிறதா அல்லது எனது மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றதா?

இல்லை என்பதால் எக்கேடும் கெட்டு போகட்டும் யாராவது ஆளட்டும் என்று பேசாதிருக்க விரும்புகின்றேன் . சுயநலமாக தமிழ்த்தேசிய அரசியலை பேசுகின்றேன். நிகழ்வுகளின் அவதானிப்பாளனாக இருக்கின்றேன்.வெறுமனே செய்தி விமர்சகனாகவும் எழுந்தமானத்துக்கு தெற்கு அரசியல் பற்றி எதிர்வு கூறுபவனாகவும் இருக்கின்றேன். நான் சிங்கள காலணித்துவ ஆட்சியின் கீழ் இருப்பதாக உணர்வதாலேயே இந்த நிலமை.தூரநோக்கின்றி வெளிநாடு வரட்டும் என்றும் இருக்கின்றேன்” என.

ஏறக்குறைய இதுவே தமிழ் முஸ்லிம் மக்களிற் பெரும்பாலானவர்களின் மனநிலை. ஆனாலும் அவர்களுக்குள்ளே தாம் இலங்கையர்கள் என்ற ஓரெண்ணம் தற்போது மேலோங்கியிருக்கிறது. இது தமிழர்கள், முஸ்லிம்கள், வடக்குக் கிழக்கைச் சேர்ந்தவர்கள், தமிழ்த்தேசியத்தினர், முஸ்லிம் தேசியத்தினர் என்ற அடையாளங்களுக்கு அப்பால் விளைந்திருக்கும் ஒரு உணர்வு நிலை. ஒரு பிரச்சினை. ஒரு மாற்றம்.

இதை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டியவைகள் தலைமைகளே. ஆனால், அவை பேசாதிருக்கின்றன.

தெளிவான அரசியல் பார்வையும் உறுதி மிக்க தலைமைப் பண்பும் இல்லாமையே இதற்கெல்லாம் காரணமாகும். இன்று வடக்குக் கிழக்கில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடம் இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. நெருக்கடிகளின்போது செயற்படும் விதத்திலே ஒரு சிறந்த தலைமைத்துவத்தை அடையாளம் காண முடியும்.

இங்கோ நெருக்கடியைக் கண்டால் ஒழித்துக் கொள்ளும் தலைகளையே நாம் காணக் கூடியதாகவுள்ளது. அதாவது நெருக்கடியின்போது காணாமல் போகும் தலைமைகள். இல்லையென்றால், விக்கினேஸ்வரன், அனந்தி உள்ளிட்டவர்கள் இன்றைய நிலையைக் குறித்து பொறுப்பாகச் சொல்லியிருக்க வேணும். செயற்பட வேண்டும்.

இதை மக்கள் தங்களுடைய மனதில் குறித்து நினைவுகளில் பதிவேற்றம் செய்து கொள்வது அவசியம். பிறகு அதைத் தேர்தற் சந்தப்பங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாகாணசபை இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் எத்தனையோ அதிரடிகளைச் செய்து கொண்டிருந்த வடக்கின் அரசியல் பிரபலங்கள் எல்லாம் இப்பொழுது எங்கே? இவர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி மக்களிடம் எழுந்திருக்கிறது.

இதைப்பற்றி அறிவதற்காகப் பலரோடு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முற்பட்டால், அவர்கள் தொடர்பெல்லைக்கு வெளியே நிற்பதாகப் பதில் வருகிறது. சிலர் அழைப்பைத் துண்டிக்கிறார்கள். மாகாண சபைக்காலத்தில் புரட்சிகரச் சக்திகளாக இருந்தவர்கள் எப்படி இரண்டு வாரத்துக்குள் இப்படியானார்கள்?

இதைவிட கொழும்பு நிலைவரம் தொடர்பாக வடக்குக் கிழக்கு மக்களின் நிலைப்பாடு என்ன? எதிர்வினைகள் என்ன?

“தமிழ்த் தேசிய அரசியல் நோக்கு” நிலையில் கொழும்பு குழம்பிப் பிரச்சினைப்பட்டுப் பலவினமாகியிருப்பதே தமிழ்த்தரப்புக்கு வாய்ப்பாகும். (கொழும்பு பலவீனப்பட்டால் நாடே பலவீனமாகி விடும் என்ற யதார்த்தம் ஒருபுறமிருக்கட்டும்). ஆகவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தமிழருக்குச் சாதமான அரசியல் முன்னெடுப்புகளை முன்னெடுப்பதே இன்று அவசியமாகும்.

இதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. ஆனால், கூட்டமைப்பு அதற்கான திறனோடு அந்தப் பாத்திரத்தை வகிப்பதாகத் தெரியவில்லை. அது தடுமாற்றங்களின் மத்தியில் குழப்பத்தோடுள்ளது. இந்த நிலை கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும்.

கூட்டமைப்பிலிருந்து முதலாவது ஆள் புதிய அரசாங்கத்தோடு இணைந்திருக்கிறார். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அரசாங்கத்தோடு இணைந்து பிரதியமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்தளவுக்கு இல்லையென்றாலும் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

கடந்த சில மாதங்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் வியாழேந்திரனுக்குமிடையில் வலுவான முரண்பாடுகளும் இடைவெளியும் நிலவியது.

இதைச் சீர்படுத்துவதைப் பற்றி கூட்டமைப்பின் தலைமை சிந்திக்கவில்லை. பகிரங்கமாகவே இந்த இடைவெளி தென்பட்டபோதும் கூட இதைக்குறித்து அக்கறைப்படாதிருந்தது கூட்டமைப்பின் தலைமையும் வியாழேந்திரனைப் பிரதிநிதியாக கூட்டமைப்பில் இணைத்திருந்த புளொட்டும்.

இப்பொழுது இந்தச் சூழலில் வியாழேந்திரன் எடுத்திருக்கும் நிலைப்பாடு கூட்டமைப்பிற்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளது. ஆனால் இது கிழக்கின் மறுக்க முடியாத யதார்த்தத்தோடும் சம்மந்தப்பட்டது என்கின்றனர் கிழக்கைச் சேர்ந்த செயற்பாட்டியக்கங்களைச் சேர்ந்தவர்களில் ஒருசாரார்.

இல்லை இது எதிர்காலத்தில் வியாழேந்திரனுடைய அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று கூறுகின்றனர் இன்னொரு தரப்பினர்.

ஆனால், வரலாற்றுப்போக்கில் இதை ஒத்ததாக ஏற்கனவே பலர் வடக்குக் கிழக்கிலும் மாறி, அரசோடு இணைந்திருக்கிறார்கள். முன்னர் தமிழரசுக் கட்சியிலும் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் முக்கிய தலைவராக இருந்த செல்லையா இராசதுரை, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தங்கேஸ்வரி, பியசேன, கிஸோர் என ஒரு பட்டியலைச் சொல்ல முடியும்.

ஆகவே இதொன்றும் புதிதல்ல.

எதிர்காலத்தில் இதுவும் நடக்கும். இன்னும் நடக்கும்.

அரசியல் நாகரீகத்தைத் தலைமைகள் கைவிடும்போது இவ்வாறான நிலைமையோ உடைவுகள், திசை திரும்புதல்களோ ஏற்படுவது வழமை.

இதை பிரதேச ரீதியாகவோ வேறு விதங்களில் தரம் தாழ்த்தியோ பேச முற்படுவது அழகல்ல.

இப்போது தேவையாக இருப்பது ஒளிமிக்க தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைமையும் அவற்றின் தீர்மானங்களுமே.

வடக்குக் கிழக்கின் அடையாள அரசியல் இதிலிருந்தே எழுச்சியடையும்.