தோழர், அய்யா நல்லகண்ணு

(தோழர்.சி.மகேந்திரன்)
தோழர், அய்யா நல்லகண்ணு அவர்கள் 94 வயதில் அடியெடுத்து வைக்கிறார் டிசம்பர் 26ல். சென்ற நூற்றாண்டில் முக்கால் பகுதியை நிறைவு செய்து, இந்த நூற்றாண்டின் முன் பகுதியையும் விரைந்து, கடந்து, வந்திருக்கிறார். காந்தியடிகளை நேரில் பார்த்தவர்கள்,
இந்திய சுதந்திர போராட்ட எழுச்சியை கண்ணால் கண்டவர்கள், இந்தியா ஒரு சமத்துவ நாடாக மாறவேண்டும் என்பதற்காக போராடி கொடிய சித்திரவதையை சந்தித்து, ஆயுள் தண்டனை பெற்று, 9ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து விடுதலைப் பெற்றவர் யாராவது உண்டென்றால் அது தோழர் ஒருவராக தான் இருக்க முடியும்.தன்னுடைய 14 வயதில் தொடங்கிய அரசியல் வாழ்வு. யுத்த எதிர்ப்பில் 1939 ஆண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து, அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். ஒரு வசதி மிகுந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.இவருடைய சகோதரர் சுங்கத்துறை துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த பின்னணியில் உள்ள ஒருவர் அரசியலில் வந்து, எளிய மக்களின் ஒருவராக வாழ்ந்து, அதையே தனது முழுவாழ்க்கையாக மாற்றிக் கொண்டது தான் அவரது தனிச்சிறப்பு.
தனது 89-வது வயதில் தான் இவர் இயற்கை வள பாதுகாப்பு போராட்டங்களில் முழுமையாக ஈடுபட்டார். தாமிரபரணி தமிழகத்தினுடைய தனித்துவம் மிகுந்த ஒரு நதியாகும். மணல் அள்ளும் கொடுமையால்,
நதி அழிவை நோக்கி சென்று கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் தோழரே நேரடியாக பங்கேற்று வாதிட்டு ஆற்று மணல் அள்ளுவதை தடுத்தார். புகழூர் பகுதியில் காவிரியில் மணல் அள்ளுவது மிக அதிகமாக நடைபெற்ற போது, அதை தடுக்க போராட்டத்திலும் அவர் நேரில் களமிறங்கினார். வாழ்க்கையை ஒரு போராட்டமாகவே மாற்றிக்கொண்டு, நம் கண்முன்னால் வாழும் மக்கள் சேவகனாக, போராட்டக்காராக, ஒரு உண்மையான புரட்சிக்காரராக தோழர் அய்யா நல்லகண்ணு அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார், என்ற செய்தியை அவருடைய பிறந்தநாளில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.