நெஞ்சில் உரமும்! நேர்மை திறனும்! கொண்ட நீதிமான்!

நீண்டகாலம் நான் காத்திருந்த, எதிர்பார்த்த நீதியின் குரலின் காட்சி பார்த்து பூரித்து போனேன். என் பள்ளிநாள் நினைவுகளை இரைமீட்ட செய்த பதிவு அது. மானிப்பாய் இந்து கல்லூரி, மற்றும் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆண்பாலர், பெண்பாலர் என இருபாலருக்குமான தனித்தனி கல்லூரிகளின், ஆரம்ப மற்றும் முடிவுறும் நேரங்கள் ஒன்றாக இருந்த வேளையில், மதில்களின் மறைவில், குறுக்கு ஒழுங்கைகளில், கிடுகுவேலிகளின் காவலில், மாணவ மணிகளின் பாடகொப்பிகளில் புகும், காதல் கடித பரிமாற்ரங்கள் பரிணாம வளர்ச்சி கண்டு, ஓடிப்போகும் நாளும் குறிக்கப்படும் சம்பவங்கள் சில அரங்கேறிய காலம் அது. தாம் பெற்று, பெயர்வைத்து, வளர்த்து படிக்க அனுப்பிய மகள் ஓடிப்போன வேதனையை,, மகளிர் கல்லூரி அதிபர் மிஸ் ஆறுமுகத்திடம் பெற்றவர் முறையிட, அவரும் அதிரடியாக வேட்டிகட்டிய ஆண் கல்லூரி அதிபர் திருவாளர் முத்துவேலுபிள்ளையிடம் முறையிட, முப்பது நிமிடத்திற்கு முன்பாக ஆண் கல்லூரி மூடப்படும் முடிவு எடுக்கப்பட்டது.

அப்படி செய்தால் ஆண் கல்லூரி மாணவர்கள் வீடு சென்றபின், அவர்கள் எய்யும் மன்மத அம்புகள், பெண் கல்லூரி மகளிர்கள் மேல் பாய்வதை தவிர்க்கலாம் என்ற திட்டத்தில் இருந்து தாம் தப்பிக்க, எம் காதல் இளவரசர்கள் கணபதிபிள்ளை கடை சந்தியில், தலையாட்டி உணவகத்தில், சக்குன் தேநீர்சாலையில், சுதுமலை அம்மன்கோவில் போகும் தாவடி மானிப்பாய் முடக்கில், தவமாய் தவமிருந்து, ஒற்றை காலில் பாசுபத அஸ்திரம் சிவனிடம் வேண்டி தவம் இருந்த அருச்சுனன் போல், காத்திருக்கும் தகவல் அறிந்த மிஸ் ஆறுமுகம், மீண்டும் திரு முத்துவேலர் வேட்டியை உருவாமல் எடுத்த முடிவு, பெண்கள் கல்லூரியை முதலில் மூடல். இந்த முடிவால் கணைபட்ட புறாக்கள் போல திசை மாறிப்போகாமல் பெண் புறாக்கள் நேரத்துடன் வீடுவந்து சேரும் நிலை உருவாக்கப்பட்டது. அன்று கல்லூரி அதிபர்கள் மாணவர்களை தம் மகனாய் மகளாய் பார்த்ததால் அவர்கள் நன்மை கருதி எடுத்த சரியான முடிவு அது.

அன்றைய சமூக கட்டமைப்பை சாதியத்தை தவிர்த்து பார்த்தால், எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை இன்று அறுபது வயதை கடந்த எவரும், இனிதே நினைவு மீட்ட முடியும். தொழில் பிரிப்பின் சாதியம் அறுபதுகளின் பின் சற்று நிலைகுலைய தொடங்கிய, ஐம்பத்து ஆறுகளின் பின் பிறந்த நான், என்னை விட வயதில் மூத்தவரை, அண்ணை எனவே அழைப்பேன். எங்கள் வீட்டு மாமரங்களை குத்தகை எடுக்கும் பாலன், எங்கள் வீட்டு வளவின் சுற்று வேலி அடைக்கும் கந்தன், எனக்கு அண்ணன் ஆகினர்.. ஆனால் எனது பெத்தாச்சி அவர்களைப்பற்றி பேச்சு வரும்போது அவர்களின் சாதிய பெயர் சொல்லியே விழிப்பார். மரம் ஏறல், வேலிஅடைத்தல் வெறுமனே தொழில் பிரிவே. இருந்தும் அவை ஏனோ சாதிய சாயத்தில் தோய்ந்தது, தம்மை எதிலும் முன்னிலைப் படுத்தும் பிராமணியத்தின் புனைகதைகளால் உருவானது என்பது, இன்றுவரை பலருக்கு தெரியாத/புரியாத ஒன்று. அன்று பார்ப்பனியத்தின் மூர்க்கத்தால் ஒதுக்கப்பட்டு, இளவயதில் பலியான மகாகவி பாரதி தான் அதற்கு சரியான சாட்சி.

அறுபதுகளின் பின் எம்மண்ணில் எழுந்த சமதத்துவ எழுச்சி, சாதியத்தின் பிடரியில் அறைந்ததை, மாவிட்டபுர கோயில் பிரவேசம் முதல், இளைஞர் பேரவையால் சமபந்திபோசனம், உட்பட முடிதிருத்தும் நிலையங்கள்வரை நீடித்து, பின் ஈழ விடுதலை போரில் இணைந்தவர் தம்முள் தோழமை கொண்ட நிகழ்வால், முற்றும் அழிந்துவிடும் என மூச்சுவிடும் நிலையில், அது முள்ளிவாய்க்கால் மௌனிப்பால், மீண்டும் மூர்க்கம் கொண்டு இன்று முருங்கைமரம் ஏறுகிறது. இதற்கு சமாந்திரமாக மதத்திற்கும் மதம் பிடித்து, அது அண்மையில் உடுவில் மகளிர் கல்லூரியில், பல அசிங்கங்களை அரங்கேற செய்தது. தென் இந்திய திருச்சபை மற்றும் அமெரிக்கன் மிசனரி இழுபறி, மாணவிகளை போராடசெய்து, அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு, மல்லாகம் நீதிபதி தலையிட்டு, பின் அவர்களை ஜனாதிபதி காலில் விழுந்து அழவைத்த செயல், மேல் நீதிமன்ற நீதிமான் இளஞ்செழியனை சினமுற செய்ததை, அவரின் யாழ் கம்பன் கழக விழா பேச்சினில் கேட்க முடிந்தது.

எப்போதும் தம்மை பாதிக்கும் விடயங்களை மூடிமறைக்கும், பேடித்தனம் கொண்ட பெருந்தகைகள் பலரும் நிறைந்த சபையில் தன் நெஞ்சில் கொண்ட உரத்துடன், நேர்மையான விமர்சனத்துடன், நடந்த அசிங்கத்தை விமர்சித்து, இது போன்ற செயல்கள் இனியும் இடம்பெறாது தடுக்கப்பட வேண்டும், இல்லை என்றால் சட்டம் தன் கடமையை செய்யும், என சங்கநாதம் செய்தவர் செயல் எனக்கு, ஒரு காலத்தில் புகழ்பூத்த அதிபர்களான திருவாளர்கள் ஹண்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் சுப்ரமணியம், பூரணம்பிள்ளை, ஜெயரட்ணம், ஆனந்தராஜா, என நீண்டு செல்லும் அதிபர்கள் பட்டியலில் அவர்கள் தலைமைத்துவ காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கல்வி ஒழுக்கம், கட்டுப்பாடு, மேம்பாடு, மாணவர் மீதான கரிசனை என்பன மீண்டும் எம்மண்ணில் தோன்றும் என்ற நம்பிக்கையை தருகிறது. யாழ் மண்ணின் பெருமையே கல்வி தான் என்பதை, அன்று பறைசாற்றிய நிலை மீண்டும் வரவேண்டும். ஒரு காலத்தில் தென்னிலங்கை மாணவர்கள் கூட யாழில் கல்விகற்று, பாராளுமன்ற சபாநாயகராக கூட பெரும் பதவிகள் வகித்ததை நினைவில் கொள்வோம். இன்று மனு நீதி சோழன் போல் செயல்படும் நீதிமான் இளஞ்செழியனின் வேண்டுகோளை அனைவரும் சிந்தையில் கொண்டு செயப்பட்டால் மட்டுமே, சீரழிந்து கொண்டிருக்கும் யாழின் கல்விநிலையை சீர்செய்ய முடியும்.

(ராம்)