பயிரை மேய்ந்த வேலிகள்..(22)

(பயிற்சி முகாம்களில் இருந்து தப்பி ஓட முயன்ற மாணவர்கள்.)

ஜூலை 26, 2006 அன்று எழிலன் தலைமையிலான புலிகளின் குழு ஒன்று மாவிலாறு நீர்ப்பாசன கால்வாயை மூடியதன் காரணமாகவே 4வது ஈழப்போர் தொடங்கியது . சர்வதேச கண்காணிப்பு குழுக்கள் இருந்த காலப் பகுதியில் , பலத்த இழுபறிக்கு பின்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் ஆகஸ்ட் 08, 2006ல் மாவிலாற்றை அரசாங்கம் மீண்டும் திறந்ததன் மூலம் சிறிய மோதலாக வெடித்த போரானது , ஆகஸ்ட் 11,2006 மாலை 5.12க்கு வடக்கே முகமாலை இராணுவ முன்னரங்க நிலைகள் மீது புலிகளின் தாக்குதலுடன் பெரும் சமராக வெடித்தது.

மறுநாள் ஆகஸ்ட்12, 2006ல் (இன்றைக்கு சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு) வடக்கின பிரதான போக்கு வரத்து சாலையான கண்டியாழ்ப்பாணம் A9 நெடுஞ்சாலை ஓமந்தையில் மூடப்பட்டதுடன் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியாவடக்கு, மன்னார்மாந்தை ஆகிய பகுதிகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டது.

இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தின் ஏனை பகுதிகளுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதன் விளைவாக , புலிகள் , புலிகளின் கொடுமைகளை நேரடியாகவே மக்கள் மீது கட்டவிழ்த்து விடத் தொடங்கியிருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அவர்கள் நடாத்திய , மக்கள் மீதான கொடுமைகள் இப்போது புதிய பரிமானத்தை அடைந்திருந்தது.

மாவிலாற்றில் தலைவர் பெயரை சொல்லி போரை தொடக்கி வைத்த எழிலன் , கிளிநொச்சி மாவட்ட கட்டாய ஆட்சேர்ப்பு குழுவில் முக்கிய பங்கெடுக்க தொடங்கியிருந்தார். கட்டாய ஆட்சேப்பில் பிடித்து கொண்டு செல்லப்பட்டு ஆயுத பயிற்சியை முடித்தவர்கள் புலிகளாக்கப்பட்டு போர்க்களங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் , அவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் காட்டப்பட்டனர். இதனை ஒரு பெரும் விழாவாகவே புலிகள் கொண்டாடினர். பெற்றோர் சந்திப்பு என்கின்ற பெயரில் பிடித்து செல்லப்படுபவர்களின் கடைசி ஆசையை நிரைவேற்றுகின்ற , இந்த நிகழ்வில் எழிலன் மறக்காமல் தோன்றினார். இதன் போது தமது தலைவர் மீதான பக்தியை அவர் வெளிக்காட்ட ஒரு போதும் தவறியதில்லை.

இளம் ஆண்களையும் , பெண்களையும் கட்டாயமாக கதறக்கதற கடத்திச் செல்வதிலும், மக்கள் சந்திப்பிலும் எழிலன் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த அதேவேளை, இவர்களால் முதலுதவி மற்றும் தலைமைத்துவ பயிற்சி என்று அழைத்துச் செல்லப்பட்ட , கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவர்கள் போருக்காக தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். மாணவர்களை , முழு நேர புலியாக மாற்றி , அவர்களின் போர் படையணிகளுடன் இணைத்து , போர்க்களங்களுக்கு அனுப்பிவிட இப்போது புலிகள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

மாணவர்களுக்கான பயிற்சி என்பதால் அவர்கள் போர்க்களங்களுக்கு அனுப்பபட மாட்டார்கள் என நம்பி பரீட்சை எழுதிய மாணவர்களையும் , சில அதிபர்கள் , அவர்கள் வீடுகளில் எதிர் நோக்கிய கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து காப்பாற்றும் நோக்கில் , இந்த மாணவர்களுடன் சேர்த்து புலிகளின் பயிற்சிக்கு அனுப்பி வைத்திருந்தனர். புலிகளின் தீவிர ஆதரவாளர்களான அதிபர்பகளும் , ஆசிரியர்களும் , இவர்களையும் புலிகள் இயக்கத்தில் சேர்க்கும் நோக்கில் தந்திரமாக இவர்கள் வீடுகளுக்கு சென்று , அந்த மாணவர்களையும் , பெற்றோர்களையும் ஏமாற்றி , இந்த மாணவர்களுடன் சேர்த்து பயிற்சிக்கு அனுப்பிவைத்திருந்தனர்.

நாவட்காட்டு காளி மாஸ்டர் போன்று , இந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த புலி பயிற்சியாளர்கள் , தமது ஆதரவு மாணவர்கள் மூலம் இந்த பரீட்சை எழுதிய மாணவர்களை இனம் கண்டு , அவர்களையும் போர் களத்துக்கு செல்வோருக்கான தகடு வழங்குவதற்காக புலிகளின் கட்டைக்காடு 1-9 முகாமுக்கு அனுப்பிவிட்டனர். அன்று இவ்வாறு போனவர்களில் , ஒரு சிலரை தவிர , அனேகமானவர்கள் சண்டைகளில் கொல்லப்பட்டோ , படுகாயமடைந்தோ , நிரந்தர ஊனமுற்றோ போயினர்.

நாவட்காடு காளி மாஸ்டரின் கோபக்கனலில் சிக்கித்தவித்த முல்லைத்தீவு மாணவர்கள் , தாங்கள் போர்களத்துக்கு அனுப்படப் போகும் செய்திய அறிந்து அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்து தப்பித்து வீடுகளுக்கு ஓடிச் செல்லும் வழியை ஆராய்ந்து , அங்கிருந்து தப்பியும் ஓடத்தொடங்கியிருந்தனர்.

வடமுனையில் போர் இப்போது தொடங்கி விட்டதால் , போர் முனைக்கு அருகில் இருந்த புதுக்காட்டு பயிற்சி முகாமில் இருந்த கிளிநொச்சி மாணவிகளும் கூட , போர்களத்துக்கு உடனடியாகவே அனுப்பப்பட்டனர். அச்சத்தில் உறைந்து போன இந்த மாணவிகள் , தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள , மிக பெரிய ஆபத்துக்கும் முகம் கொடுக்க தயாராகினர். முகாம்களில் இருந்த பெண்புலிகளை ஏமாற்றியோ அல்லது அவர்களின் கருணையினாலோ தப்பித்து , வீடுகளுக்கு ஓடத் தொடங்கினர். புலிகள் இயக்கத்தில் சேருமாறு தமிழினியினதும் , அவரது உதவியாளர்களினதும் வற்புறுத்தலில் இருந்து தப்பித்து வீடுகளுக்கு செல்வது இந்த மாணவிகளுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

வட்டக்கச்சி ஆண்கள் பயிற்சி முகாமிலிருந்த , புலிகளின் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கிய கிளிநொச்சி மாணவர்களும் , அங்கிருந்து தப்பித்து வீடுகளுக்கு செல்லத் தொடங்கியிருந்தனர். இந்த பயிற்சி முகாம் , நகருக்கு அண்மையில் சற்று ஒதுக்கு புறமான இடத்தில் இருந்ததால் , ஏனைய மாணவர்களை போன்றில்லாமல் கிளிநொச்சி மாணாவர்களுக்கு , இங்கிருந்து தப்பித்து இலகுவாக வீடுகளுக்கு செல்லக்கூடியதாக இருந்தது.

ஆனால் வள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமில் மாட்டிக்கொண்ட முல்லைத்தீவு மாணவிகள் , தப்பிப்பதற்கான சந்தர்ப்பம் மிக குறைவாகவே இருந்தது. ஒரு சிலர் மாத்திரமே தப்பித்து சென்று கொண்டிருந்தனர். ஆகஸ்ட்09, 2006ல் தங்கள் வீடுகளை விட்டு பள்ளி தோழிகளுடன் குறித்த பயிற்சி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட , போர் பயிற்சி வழங்கப்பட்டுக் கொண்டிருந்த முல்லைத்தீவு மாணவிகள் இன்னும் இரண்டு நாட்களில் தாங்கள் , தசைத் துண்டுகளாக பிய்த்து எறியப்படப் போகின்றோம் என்பதை அறியாமல் அங்கிருந்து தப்பித்து செல்வதற்கான வழியை தேடி இரவு பகலாக அலைந்து கொண்டிருந்தனர். இந்த பிள்ளைகளின் பெற்றோரோ , தமது பிள்ளைகளின் கொல்லப்பட்ட உடல்கள்தான் அடுத்த இரண்டு நாட்களில் வீடுகளுக்கு வரபோகிறது என்பதை அறியாமல் , அவர்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தொடரும்

(Rajh Selvapathi)