புஸ்பராணியின் போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்

இந்த அஞ்சலிப்பதிவுக்கு எனது கருத்தாக கீழே உள்ளதை அவரது பதிவில் பின்னூட்டமாக போடுவதற்காக எழுதியதை நீண்ட பதில் பின்னூட்டத்தில் இட முடியாதபடியால் (more than 8000 characters) எனது மதிலில் பதிவிடுகிறேன் . முதலில் அவரது பதிவை (இந்த கட்டுரையின் இறுதியில் இதனை இணைத்துள்ளேன்) படித்த பின்னர் எனது பதிவை படிப்பதே தொடர்ச்சியான ஒழுங்காக இருக்கும்.

நண்பர் விஜய் பாஸ்கரன் , புஷ்பராணி அவர்களுக்கு அஞ்சலி என்ற தலைப்பில் நீங்கள் அவர்மேல் வைத்திருக்கும் விமர்சனத்தை படித்த பொழுது, இந்த விமர்சனம் அவர் உயிரோடு இருந்த பொழுது வைத்திருக்க வேண்டியது என எனக்குப்பட்டது . அப்பொழுதுதான் அவர் உங்கள் விமர்சனத்துக்கான தனது பதிலையும் தெரிவித்திருக்க கூடும்.

ஆனால் இப்பொழுது நீங்கள் வைத்திருப்பது முறையானது அல்ல என்பது மாத்திரமல்ல , இதற்கான பதிலை அவர் இனிமேல் கூறமுடியாது என்பது தெரிந்திருந்தும் விமர்சனத்தை வைத்திருக்கிறீர்கள்.

இருந்தும் 50 வருடங்களுக்கு மேலான அவருடனான எங்கள் குடும்பத்தின் நட்பின் நிமித்தம் அவரது அரசியல் வாழ்வையும் எனது தமைக்கையார் கல்யாணியோடு அவருக்கு இருந்த உறவின் மற்றும் எனது தாயார் குலம் அக்கா என்று தெரியப்பட்ட எனது தாயாரோடும் இருந்த அரசியல் நெருக்கத்தினூடாக உங்கள் சில கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

எந்தவொரு போராட்ட வரலாற்றுக்கும் ஒரு பரிணாமம் உண்டு. எழுந்தமானமாக எவரும் அப்பழுக்கற்ற முழுமையான அரசியல்வாதியாக திடீரென சமூகத்தில் தோன்றுவதில்லை. சமூகமே அரசியல் செயற்பாட்டாளர்களை போராளிகளை தன்னிடத்தேயிருந்து உருவாக்குகிறது. அந்த சமூகத்தின் போராளியாகவே புஷ்பராஜா அவர்களும் அவரது தமக்கையார் புஷ்பராணி அவர்களும் சிங்களப்பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக அமைப்பு சார்ந்து தங்கள் எதிர்ப்பையும் தெரிவிக்க துணிந்தார்கள்.

அவர்கள் வந்த சமூகப்பின்னணியில் நீங்கள் குறிப்பிட்ட சாதீய பிரச்சனை என்பது அங்கும் இருந்தது. தான் சந்தித்த சாதீய ரீதியான பிரச்சனைகளை புஷ்பராணி அவர்கள் நிறையவே பதிவு செய்திருக்கிறார். தனது புத்தகமான அகாலத்திலும் சொல்லியிருக்கிறார்.

நிச்சாமம், கட்டுவன், கீரிமலை மாவிட்டபுரம் இளவாலை போன்ற இடங்களில் இருந்தமாதிரியான அளவில் பெரிதான சாதீய அடக்கு முறையும் அதன் பலத்த எதிர்ப்பின் நிமித்தமான வன்முறைகளும் நடந்த ஓரிடமாக மயிலிட்டி இருக்கவில்லை. சாதீய பாகுபாட்டின் எதிர்ப்பை தாம் எப்படி காட்டிக்கொண்டோம் என்பதையும் இருவரும், புஷ்பராஜா அவர்கள் தனது ‘’ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’’ என்ற புத்தகத்திலும், புஷ்பராணி அவர்கள் தனது ‘’அகாலம் ‘’ புத்தகத்திலும் பதிவிட்டுள்ளார்கள்.

அதனை தயவு செய்து படியுங்கள். ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளாமல் விமர்சிக்க புறப்பட கூடாது. அது நுனிப்புல் மேய்வதாகிவிடும்.

நீங்களும் போராளி இயக்கத்தில் இருந்து வந்தவர் என்றே நினைக்கிறேன். அந்த இயக்கங்கள் என்ன சித்தாந்தத்திலும் தம்மை இணைத்து போராடிய பொழுதும் அந்த இயக்கங்களுக்குள்ளும் ஆதிக்க சாதி மனோநிலையில் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள். அப்படி இருக்கையில் இலங்கை தமிழரசுக்கட்சியும் இலங்கை காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து தமிழர் விடுதலை கூட்டணி என்ற அமைப்பை 1971 இல் உருவாக்கிய பொழுது அந்த கட்சிக்குள்ளும் மிகப்பழமைவாத ஆதிக்க சாதி மனோநிலையில் பலர் இருந்தார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கும் பின்னால் வந்த இயக்கங்களுக்கும் இந்த விடயத்தில் வித்தியாசம் இருக்கவில்லை.

இவ்வாறான சூழலிலேயே பேரினவாத எதிர்ப்பாக பல இளைஞர் யுவதிகள் 70 களின் ஆரம்பத்தில் உருவானார்கள். அவர்களை அமைப்பு ரீதியாக ஒருமுகப்படுத்தியது முதலில் தமிழ் மாணவர் பேரவை. அவர்களில் பலர் தமிழர் விடுதலை கூட்டணியோடும் தொடர்பிலிருந்தபடியால் சத்தியசீலன் லண்டனுக்கு புலம்பெயர்ந்ததோடு மாணவர் பேரவையின் பலர், இளைஞர் பேரவையாக தம்மை விடுதலை கூட்டணியோடு இணைத்துக்கொண்டார்கள்.

அக்காலத்தில் புஷ்பராணி மாவிட்டபுர கோவில் கதைவடைப்புக்காக என்ன செய்தார் போர்க்குரல் கொடுத்தாரா என்று கேட்டிருந்தீர்கள். 1973இல் மாவிட்டபுர கோவிலுக்கு முன்பாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையில் அமைந்த உண்ணாவிரத போராட்டத்தில் புஷ்பராணி குடும்பம் உட்பட பல இளைஞர் யுவதிகள் பங்குகொண்டார்கள்.

நீங்கள் தமிழர் விடுதலை கூட்டணியின் மேல் உள்ள காழ்ப்பில் அவர்களோடு அக்காலத்தில் இணைந்து தம்மாலியன்ற எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டவர்களையும் சாடுவது முறையல்ல. சாதிய எதிர்ப்பு தீண்டாமை இயக்கங்கள் 60 களில் நடத்திய போராட்டங்களின்போது 70களில் புறப்பட்ட இளைஞர்கள் எல்லோரும் சிறுவர்கள்.

தீண்டாமை ஒழிப்பு இயக்கம் 60 களில் ஒருசில இடங்களிலேயே தமது எதிர்ப்பையும் போராட்டத்தையும் பெரும்பாலும் நடாத்தினார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சாதீய அடக்குமுறை என்பது எங்கும் வியாபித்திருந்ததொன்று. அளவில் சின்னது பெரியதாக இருந்தனவேயொழிய ஆங்காங்கே இலைமறை காய்களாக பலர் எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறார்கள்.

இரு சமூகங்களுக்கிடையில் நடைபெற்ற பெரிய வன்முறை சாதீய போர் என்பது இலங்கையில் யாழ் குருநகரில், 1972 இல் நடந்த பிரச்சனையே. இயக்கங்கள் துப்பாக்கி வெடிகுண்டு பாவிப்பதற்கு முன்னரே குருநகர் சாதிப்பிரச்சனையில் அவைகள் தாராளமாக பாவிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஊரடங்கு சட்டம் போடப்பட்டு அப்பிரச்சனை அந்த இரு சமூகங்களில் இருந்தவர்களாலேயே முடிவுக்கும் கொண்டுவரப்பட்டது.

இதை நான் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம், எந்த சிறுபான்மை சாதீய பிரச்சனைகளிலும் நீங்கள் தீண்டாமை ஒழிப்பு இயக்கக்காரர்களையே புகழ்ந்து பேசுவதுண்டு. தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஆற்றிய பங்கினை யாரும் மறுப்பதற்கில்லை.

ஆனால் மற்றவர்களின் எதிர்ப்பு போராட்டத்தினையும் அவர்களையும் பலர் அங்கீகாரம் கொடுக்க தவறிவிடுகிறார்கள். காரணம் வரலாறு தெரியாமல் இருப்பதும் ஒன்று. புஷ்பராணி போன்றவர்களுக்கும் அந்தவகையில் பங்குண்டு.

1974 இறுதிப்பகுதியில் தமிழர் விடுதலைக்கூட்டணியோடு இயங்கிய தமிழ் இளைஞர் பேரவைக்குள் இருந்த பல இளைஞர்கள் குறிப்பாக ஆரம்பகால போராட்ட இளைஞர்களான புஷ்பராஜா, வரதராஜ பெருமாள், பிரான்சிஸ் (கி பி அரவிந்தன்), பத்மநாபா, தவராஜா, சந்திரமோகன், முத்துக்குமார் நித்தியானந்தன், தங்க மகேந்திரன் போன்றோர் வெளியில் வந்து தமிழீழ விடுதலை இயக்கம் (பின்னாளைய TELO அல்ல) என்ற அமைப்பை உருவாக்கியிருந்தனர். அதன் தலைவராக புஷ்பராஜா நியமிக்கப்பட்டார்.

1975 ஆண்டுப்பகுதியில் புஷ்பராஜா, வரதராஜ பெருமாள், நித்தியானந்தன் போன்றோர் துரையப்பா கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்த பொழுது அவ்வியக்கத்தை சந்திரமோகன் தலைமை ஏற்று இருந்த நிலையில்தான், புலோலி வங்கி கொள்ளையினை அவ்வியக்கம் நடாத்தியது.

பின்னர் அதில் சம்பத்தப்பட்டவர்களில் பலரை இலங்கை போலீசார் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் தரப்பில் புஷ்பராணி, கல்யாணி மற்றும் புஷ்பராணியின் தங்கை ஜீவரட்ணராணியும் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வெலிக்கடை பெண்கள் மகசீன் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஈழ விடுதலைப்போராட்டத்தின் சிறை சென்ற முதல் பெண்கள் என்ற வரலாறும் இவருக்குண்டு. புஷ்பராணி அவர்களின் போராட்டம், போராட்ட வாழ்க்கை பற்றிய வெறுப்பே உங்களுக்கு ஏற்பட்டது என்று நீங்கள் எழுதியது மிகவும் வேதனைக்குரியது.

எங்கள் போராட்டத்தில் பலர் வெறும் பார்வையாளர்களாக இருந்து ஒரு சிலர் போராடியதை இலகுவாக வாய்க்கு வந்தபடி விமர்சிப்பதும் எழுதுவது அன்றிலிருந்து இன்றுவரை நடைபெறும் ஒன்று (இங்கு உங்களை நான் குறிப்பிடவில்லை. போராட்டத்துக்கு தொடர்பில்லாதவர்களை குறிப்பிடுகிறேன்).

இதில் பலர் பிற்காலத்தில் சொந்த மக்களினுடைய அழிவுக்கும் வழிவகுத்தனர். போராட்ட காலத்தில் சிங்கள பேரினவாதத்திற்கு முட்டுக்கொடுத்தவர்களில் பலர் சில இயக்கங்களின் பிரமுகர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

புஷ்பராணி அவர்கள், சிறையிலிருந்து வந்த பின்னர் அதன் வடுக்களிலிருந்து வெளிவர சில காலம் ஆயிற்று. அமைப்பு ரீதியாக ஒதுங்கியிருந்த போதும் தனது ஆரம்ப கால தோழர்களோடு அவர் தொடர்பிலேயே இருந்தார்.

இருந்தும் சிங்கள பேரினவாத அரசுகளுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்களில் அவர் தொடர்ந்தும் பங்குபற்றினார். 1978 இலிருந்து ஆரம்பத்தில் இயங்கிய பல இளைஞர்கள் தமது படிப்பு என்றும் வேலை என்றும் அதிகம் செலவிடத்தொடங்கினர்.

புஷ்பராஜா, வரதராஜ பெருமாள், முத்துக்குமார் போன்றோர் அந்த இடைவெளியில் தமது மேற்படிப்பையும் பார்த்துக்கொண்டு போராட்ட இடைவெளியாக அக்காலத்தை பயன்படுத்திக்கொண்டார்கள்.

80 களின் ஆரம்பத்தில் புஷ்பராஜா பிரான்சுக்கு வந்த பின்னர் அவரைத்தொடர்ந்து புஷ்பராணி அவர்களும் பிரான்சுக்கு இடம்பெயர்ந்தார் . பிரான்சுக்கு வந்த பின்னரும் புஷ்பராஜா அவர்கள் தோழர் பத்மநாபாவின் மேல் கொண்ட தோழமையால் அவரோடு இணைந்து ஆரம்ப EPRLF இன் பிரான்ஸ் பொறுப்பாளராக இயங்கினார்.

80 களின் ஆரம்பத்தில் EPRLF இன் EPIC இனால் நடாத்தப்பட்ட சங்கே முழங்கு நிகழ்ச்சியை தொடர்ந்து சில ஆண்டுகள் புஷ்பராஜாவின் வழிநடத்தலிலேயே செய்திருந்தார்கள்.

இவ்வாறு புஷ்பராணியினதும் புஷ்பராஜாவினதும் போராட்ட வரலாறு ஒரு நீண்டதும் மிகக்காத்திரமானதுமாகும். இவ்வாறே பல இளைஞர் யுவதிகள் இன, சமூக அடக்குமுறைக்கு எதிராக போராடியிருக்கிறார்கள். அவர்கள் பங்களிப்பை யாரும் கொச்சைப்படுத்தலாகாது.

அவரவர் அவரவருக்குரிய இயலுமான பாதையில் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.அவர்களை உயிரோடு இருக்கும்போது விமர்சியுங்கள். அதிலிருந்து அவர்களும் கற்றுக்கொள்ளலாம் அல்லது பதிலளிக்கலாம். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்ல.

ஒருவரின் இறப்பில் அஞ்சலிப்பது என்பது அவரையும் அவரது குடும்பங்களையும் காயப்படுத்துவதொன்றாக அமைந்து விடக்கூடாது.

விஜய பாஸ்கரனின் முக நூல் பதிவு:

புஸ்பராணி சிதம்பரி

ஒரு காலத்தில் பலரால் பேசப்பட்டவர். விடுதலை என்கிற பெயரால் சிறைக்குச் சென்றவர்.தமிழ்த் தேசியம் தமிழர் விடுதலை என்பதில் ஆர்வமாக செயற்பட்ட பெண். இவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவரைப் பற்றி எல்லோரும் வியந்து பாராட்டியபோதும் எனக்கு இவரது போராட்டம் போராட்ட வாழ்க்கை தொடர்பாக ஒருவிதமான வெறுப்பே இருந்தது.

ஒடுக்குமுறைக்கு உட்பட்ட சமூகத்தில் பிறந்து தன் சமூக ஒடுக்கு முறைகளை மறந்து கடந்து தமிழ்த் தேசியத்துக்காக போராட்டம் நடத்தியவர்.இவரது சகோதரன் புஸ்பராசாவும் அவ்வாறே இயங்கினார்.தான் சார்ந்த சமூக ஒடுக்குமுறைகள் தொடர்பாக அக்கறை கொண்டவர்கள் அல்ல. அதற்காக போராடியவர்களும் அல்ல. அவரது அயலில் நடந்த மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் போராட்டம் தொடர்பாக இவர்கள் கவனத்தில் எடுக்கவும் இல்லை. கலந்து கொள்ளவும் இல்லை.

சிறை மீண்டு வந்த புஸ்பராசாவை கூட்டணி தன் அரசியலுக்கு வாக்கு சேகரிக்க பயன்படுத்தியது. ஒரு மேடையில் ஒடுக்கப்பட்ட சமூக விடுதலை தொடர்பாக கேள்வியை எழுப்பியபோது தான் சார்ந்த கட்சி தொடர்பாக பதிலளிக்க முடியாத புஸ்பராசா நானும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என பதிலளித்தார்.

தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் தமிழரசுக்கட்சி மற்றும் செல்வநாயகம் ஒதுங்கி நின்றார்கள். அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் கொச்சைப்படுத்திப் பேசினார். அப்படிப்பட்ட அயோக்கியர்களுக்காக வாக்கு சேகரிக்க சென்றவர் புஸ்பராணி.சாதியைப் பற்றி பின்னாளில் பேசியபோதும் தன்னை தமிழ்த் தேசியவாத சிந்தனைக்குள் ஒழித்தே வாழ்ந்தவர்.

ஆயுதங்கள் அழிவைத் தரும் என்றார். அந்த ஆயுதங்களே எமக்குப் பாதுகாப்பையும் விடுதலைக்கும் உதவியதை புஸ்பராணி அறிய மாட்டார்.தமிழ்த் தேசியம் என்ற வெள்ளாள சிந்தனைக்குள் அகப்பட்டு வெளியே வரமுடியாமல் அவரது வாழ்வு முடிந்துவிட்டது.

என்ன இருந்தாலும் வரலாற்றில் அவருக்கும் ஒரு பக்கம் உண்டு. அந்த வரலாற்றைக்கூட சாதீயம் மூடி மறைத்ததை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் வாழ்வும் ஒரு சரித்திரம்தான்