பெண்களின் சட்ட உரிமைகள் செயல்வடிவத்தில் உருப்பெற அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள்! இளையோர் சக்தி அமைப்பு வேண்டுகோள்.

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவதில் அக்கறை செலுத்துமளவு பெண்களினுடைய உரிமைகளுக்கான செயல்வடிவத்தை பெற்றுக் கொடுப்பதில் கருசனைகாட்டப்படுவதில்லை என இளையோர் சக்தி அமைப்பின் தேசிய அமைப்பாளர் தவராசா தர்ஸன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அனுப்பிவைத்துள்ள சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் போரின் வடுக்களை சுமந்து அவற்றிலிருந்து மீண்டு எழுவதற்காக ஒவ்வொரு பெண்களும் தன்னை தயார்படுத்தி வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தின் உள்ளிருந்தே முன்னெடுக்கப்படுவது மிகுந்த கவலையளித்து வருகிறது.


நாட்டின் சட்டங்கள் இறுக்கமாக இருந்தபோதும் அதனை செயற்படுத்துவதில் சில தளர்வுகள் காணப்படுவதே இத்தகைய நிலைக்கு பிரதான காரணமாக அமைகிறது. களத்தில் அரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு கிராமங்களிலும் பாரிய திட்டங்களை மனிதவளங்களை ஈடுபடுத்தி முன்னெடுத்த போதிலும் அவை பாரியளவு வெற்றியை எட்டுவதில் சில நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன.
இதனால் பாலியல் வன்முறை குடும்பவன்முறை பாலியல் துஸ்பிரயோகம் பாகுபாடு காட்டப்படல் ஒடுக்கப்படுதல் போன்ற துன்பியலான சம்பவங்களை தினமும் குறித்த தொகையினர் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக பெண்கள் தங்கள் வாழ்க்கைக்காலத்தில் அதிகளவான காலத்தை அச்சஉணர்வுடன் வாழ்வதுடன் அவற்றைக்கடந்தே தமது சாதனைகளை நிகழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.
ஒரு பெண்ணானவள் பிறந்தது முதல் கொண்டு வளர்ப்புமுறை பழக்கவழக்கங்கள் நடத்தைகள் உணர்ச்சி வெளிப்பாடுகள் குடும்பகடமைகள் சமயகடமைகள் போன்றவற்றால் வேறுபடுத்தப்படுவதுடன் அவளோடு மிக இறுக்கமாக கலாசாரகயிறு பிணைக்கப்பட்டிருப்பதும் சமூகத்தின் ஆபத்துக்களை அவளால் புரிந்துகொள்வதில் சில சிரமங்கள் காணப்படுகின்றன. இதனால் பல பெண்கள் தங்களுக்கான ஒரு வட்டத்தை இட்டே வாழ்ந்து கொள்வதில் கருசனைகாட்டி வருகின்றனர் இதனால் பெண்களின் வன்முறைக்கு எதிராக போராடக்கூடிய மனோபாவம் அற்றவர்களாக இருப்பதுடன் சில சமயம் ஆபத்துக்களின் போது தன்னை எவ்வாறு முகாமை செய்து கொள்வது என்பதில் தடுமாற்றத்தை சந்தித்தும் கொள்கின்றனர்.
வடக்க கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையும் பெண்கள் தமது வாழும் நாட்களில் அச்சுறுத்தல்களை தாண்டியே வாழவேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.இத்தகைய அச்சுறுத்தல்கள் தனது நண்பனால் அயலவரால் சகஉத்தியோகத்தரால் சில சமயம் குடும்பநெருங்கிய உறவினரால் என நீண்டு விடுகிறது.இதற்கு கலாசார மாற்றங்களும் தொழல் நட்ப பாவனைகளும் வகைசொல்லப்பட்டாலும் உண்மையில் சமூகத்திடம் காணப்படுகின்ற மனிதநேயமற்ற தன்மையும் பொறுப்புணர்வற்ற வக்கிர மனோநிலையும் காரணமாக அமைகிறது.
எனினும் சராசரியாக பெண்களின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு துறையிலும் அதிகரித்த வண்ணமேஇருந்து வருகிறது.இதற்கு அவர்களின் குடும்ப ஒத்துழைப்பும் மனோவலிமையும் பிரதானமாக கைகொடுத்து வந்திருக்கிறது.
இந்நிலையை குடும்பம் முதல் கொண்டு சமூகம் வரை புரிந்து கொண்டு பெண்களின் உரிமைகளை செயல்வடிவம் கொடுக்க முன்வருவதன் மூலம் அவர்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும் பல்வேறு சோதனைகளையும் சொல்லொணா துயரங்களையும் தாண்டிய பெறுமதிமிக்க சாதனைகள் தொடர்வதற்கும் அனைத்துதரப்பினரும் முன்வரவேண்டும் என்பதுடன் அனைத்து பெண்களையும் சர்வதேச மகளிர் நாளில்; துணிவுடனும் திறமையுடனும் சமத்துவஉணர்வுடனும் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.