வரைவுக்கு கருத்துக்களை வழங்க பேரவை அழைப்பு?!

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங்களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றதும், இதில் மக்கள் மிகவும் உட்சாகத்துடன் பங்குபற்றுவதும் மிகவும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் புலம்பெயர்ந்துள்ள எங்கள் உறவுகளின் வகிபங்கு மிகவும் அவசியமானது.

எனவே, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத் திட்ட முன்வரைபு தொடர்பில், புலம்பெயர் தமிழ் உறவுகள் தங்களின் கருத்துக்களை தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்பு ரீதியாகவோ பதிவு செய்து கொள்ள முடியும். தீர்வுத்திட்ட முன்வரைபை www.tamilpeoplescouncil.org என்ற தமிழ் மக்கள் பேரவையின் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும். மிக விரைவில் தீர்வுத்திட்ட முன் மொழிவு முழுமையாகத் தயாரிக்கின்ற பணி ஆரம்பிக்கப்படவுள்ளதால், எதிர்வரும் 31 மார்ச் 2016 ஆம் திகதிக்கு முன்னதாக புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களையும் அ பிப்பிராயங்களையும் politicalsub@tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 0094 75 6993211என்ற இலக்கத் தொலைபேசி ஊடாகவோ அனுப்பி வைக்க முடியும்.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவை மக்கள் நலன் சார்ந்த பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதால், இவ்வேலைத் திட்டங்களில் புலம்பெயர் உறவுகளை பங்கேற்குமாறும் தமிழ் மக்கள் பேரவை வேண்டி நிற்கின்றது. புலம்பெயர் மக்கள் எமது நடவடிக்கைகளை உட‌னுக்குடன் அறிவதற்கும், தமது கருத்துக்களை வெளிப்படுத்தவும் எமது இணையத்தளத்தினூடாக அல்லது www.facebook.com/groups/tamilpeoplescouncil என்ற முகநூல் குழுவில் இணைவதன் மூலம் மிகவும் நேர்த்தியாக செயற்பட முடியும். தமிழ் மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ‌ முகநூல் விபரங்கள் எமது இணையத்தளத்தின் ´தொடர்பு´ பக்கத்திலும் தீர்வுத்திட்ட மக்கள் மயப்படுத்தல் விபரங்கள் ´தீர்வுத்திட்ட வரைபு பக்கத்திலும் அறிந்து கொள்ளலாம்.