பேரிழப்பு!

இலங்கை அரசியலில், இளமைக்காலத்தில் தோழர் என்.சண்முகதாசனுடன் இணைந்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி(சீனசார்பு)யில் செயற்பட்ட லோறன்ஸ பின்னர் ரோஹண விஜேவீரகாலத்து மக்கள் விடுதலை முன்னணி, கீழைக்காற்று இயக்கம் மற்றும் பிற்காலத்தில் அமரர் தோழர் கௌரிகாந்தன், தோழர் பி.ஏ.காதர், தோழர் சரத் அத்துகோரள போன்றோருடன் இணைந்து மக்கள் ஜனநாயகத்துக்கான அமைப்பு (OPD- Organization for People Democracy) எனும் அமைப்பினை ஏற்படுத்தி இலங்கைத் தேசிய இனப்பிரச்சினையில் மிகத்தீர்க்கமானதும் உறுதியானதுமான கொள்கையுடன் செயற்பட்டு வந்தவராவார்.

இவ்வமைப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு, மேற்கு போன்ற சகல பிரதேசங்களிலும் கிராமப்புறம், நகர்ப்புறம், தோட்டப்புறம் என்ற சகல மட்டங்களிலும் உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்படும் மக்களையும் மையப்படுத்தி அவர்களது விடுதலைக்காக இயங்கிய ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பின் மத்தியகுழு உறுப்பினரான தோழர் லோறன்ஸ் அவர்கள் பல்வேறு உழைக்கும் மக்களையும் உள்ளடக்கியதான பல வெகுஜன அமைப்புகளைக் கொண்ட அதன் உத்தியோகபூர்வ ஏடான ‘விடிவு’ பத்திரிகையின் ஆசிரியர்குழுவில் பிரதானமானவராக செயற்பட்டார்.

‘இலங்கையில் இனக்குழுக்களே உள்ளன. (சிங்களவர் உட்பட) இலங்கையில் தேசிய இனங்களே இல்லை’ என்ற வாதங்களை முன்னிறுத்திய பாரம்பரிய இடதுசாரிகள் மத்தியில், அதற்கு மாறாக “இலங்கையில் சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கை முஸ்லிம்கள், மலையகத் தமிழர் என்கின்ற நான்கு தேசிய இனங்கள் உள்ளன” என்ற கொள்கையை முதன்முதலாக முன்வைத்த அமரர் தோழர் கௌரிகாந்தனது கூற்றுக்கு செயல்வடிவம் கொடுத்த, கருத்தியலைப் பிரச்சாரம் செய்த பிரதான தோழர்களில் அமரர் லோறன்ஸும் ஒருவராவார்.

மலையகத்தமிழர் ஒரு தனித் தேசியஇனம் என்கின்ற கருத்தியலுக்கு/ அரசியல் கொள்கைக்கு மேலும் வலுச்சேர்கும் நோக்குடனேயே தோழர் லோறன்ஸ் அவர்கள் அதுவரைகாலமும் இலங்கை இளைஞர் சேவை மன்றத்தில் வகித்துவந்த ‘இளைஞர் சேவை மன்ற அதிகாரி’ என்கின்ற பதவியை ‘இராஜினாமா’ செய்துவிட்டு, திரு. பெ. சந்திரசேகரன் அவர்கள் தலைமையிலான ‘ மலையக மக்கள் முன்னணி’ யில் இணைந்து உபதலைவர், செயலாளர் நாயகம் போன்ற பதவிகளை வகித்து செயற்பட்டுவந்தார்.

தோழர் லோறன்ஸ் அவர்கள் இறக்கும்வரை மலையக மக்களின் விடுதலை, அரசியல்,சமூக உரிமைகள் மற்றும் பற்றாக்குறையான உட்கட்டுமான வசதிகள்பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தார். அவரது சிந்தனைகள் பலவும் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்துள்ளன!

துயர்மிகு அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது!
ஆழ்ந்த இரங்கல்கள்!!
இதய அஞ்சலிகள்!!!

(Sivalingam Arumugam)