பொங்காத பொங்கல்!

மனிதன் அறிவு பெறுவதற்கான அடிப்படை, உற்பத்திக்கான போராட்டம்தான் என்ற விஞ்ஞான முடிவு பொங்கல் தினத்தில் மேலோங்கி நிற்கிறது. மனிதன் பயிர்த்தொழிலில் ஈடுபட்டபொழுது இயற்கையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தான். இயற்கைக்கும் தனக்குமுள்ள உறவைத் தெரிந்துகொண்டான். அதனால் மழை, வெய்யில் போன்ற காலமாற்றங்களிலும், பயிர்த்தொழிலிலும் சூரியன் ஆதிக்கம் செலுத்துவதை மனிதன் அறிந்தபோது, விவசாய உற்பத்தியின் பயனை முதன்முதலில் சூரியனுக்கு ஆகிருதியாக அர்ப்பணித்தான். அதன் மூலம் பகலவன் தனக்காக சேவை செய்ததிற்கு நன்றிக்கடனைச் செலுத்த சூரியப் பொங்கலை நடத்தினான்.

அதைப்போலத்தான் தனது தொழிலுக்குப் பக்கபலமாக நிலத்தைப் பண்படுத்தவும், பயிருக்குப் பசளையாக எரு அளித்தும் உதவிய மாட்டுக்கும் தனது நன்றியைத் தெரிவித்து விழாவெடுத்தான், பட்டிப்பொங்கல் செய்தான்.

உழவுத்தொழிலில் உருவாகி வளர்ந்து இன்று தமிழர் சமுதாயத்தின் பெருவிழாத்தினமாக இருக்கும் பொங்கல் தினம், மனிதனின் அறிவியலின்பாற்பட்ட, உற்பத்திக்கான போராட்டத்தின் நடைமுறையில் எழுந்த தினமாகும். பொங்கல் தினம் உழவர் பெருமக்களின் நன்றிமறவாத் தன்மையையும் பறைசாற்றி நிற்கிறது.

அந்நியர் ஆதிக்கத்தின் பெறுறோக ஈழத்து மக்களின் விவசாய உற்பத்தி சீர்குலைந்ததால் இன்று பொங்கல் தினம் விவசாய மக்களின் உற்பத்திப் பெருவிழாவாக இல்லாது, ‘இரவல் பிடவையில் இது நல்ல கொய்யகம்’ என்ற நிலைக்கு மாறிவிட்டது. அதுவும் அரிசி வெட்டால் அவதியுறும் மக்கள் தமது துன்பச்சுமையை பொங்கலிட வேண்டியுள்ளது. அன்று ‘முக்கனியும் சர்க்கரையும் புதிர் அறுத்த புதுநெல்லும்’ பொங்கலிட்ட நிலைமாறி, ‘சீனத்துப் பச்சை’யில் பொங்கலிட, இந்தியச் சர்க்கரையும் கிடையாது திண்டாட வேண்டியுள்ளது.

இந்த பொங்காத பொங்கலுக்கான எமது தாயகத்தின் அவலநிலையை நாம் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும். உடல் உழைப்பில் சலிக்காத திறமையுள்ள மக்கள் சக்தி இருந்தும், வளம் கொழிக்கும் நிலமிருந்தும், ஆற்றுவளம்மிக்க நாடிருந்தும், நாம் ஏன் அரிசிக்கு ஆலாய்ப் பறக்க வேண்டும். நமது தியாகத்தைச் சூறையாடி, எமது இயற்கையான சுயதேவைப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அந்நியர் எம்மை அடிமைப்படுத்தியதால் ஏற்பட்ட சீர்குலைவை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். எமது நாடு பெயரளவில் சுதந்திரம் பெற்றாலும், நடைமுறையில் அந்நிய ஆதிக்க சுமையால் அவதி உறுகிறது.

அந்நிய ஆதிக்கத்தை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்டி, உள்நாட்டில் பிரபுத்துவப் பிடிப்பைத் தகர்த்தெறிந்து, விவசாய மக்களையும் எமது சொந்த மண்ணையும் எய்தி, நீர் நிலைகளையும் விடுவித்தால் ஒழிய, எமது நாட்டில் பொங்கல் பொங்காது. திரும்பவும் எமது அரசியல் பொருளாதார சுதந்திரத்தையும், நிலத்திற்கு உடையவராக உழவர் மக்களையும் ஆக்காதவரையும், அரசு அவர்களுக்கு வேலைசெய்யும் அரசாக, அவர்களை முதல்நிலையில் நிறுத்தாத அரசாக இல்லாதவரை பொங்கலோ பொங்காது.

‘உழைப்பவர்க்கே உலகம் சொந்தம்’ என்ற உண்மையை, ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற உண்மையை, நடைமுறையிலாக்க நாமனைவரும் முயல்வோமாக!

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை’ செய்யாவிட்டாலும், உழவனையும் தொழிலாளியையும் மதிக்கவும், அவனது சக்தியை அரவணைக்கவும், அவனை முன்னிலையில் நிறுத்திச் செயல்படவும் முயல்வோமாக!
உழைப்பவருக்கே உலகம் சொந்தம்!

உழுபவனுக்கே நிலம் சொந்தம்!!

(இந்தக் கட்டுரை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘வசந்தம்’ என்ற கலை இலக்கிய சஞ்சிகையின் 1967 ஆம் ஆண்டு தை மாத பொங்கல் மலரில் வெளியானதாகும். இந்தக் கட்டுரையை எழுதிய தோழர் வீ.ஏ.கந்தசாமி வடக்கு இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் அயராது உழைத்த முன்னோடிகளில் ஒருவராவ