போய் வாருங்கள் தோழர் சீவரத்தினம் அவர்களே!

(Maniam Shanmugam)

ஆனைக்கோட்டை பொன்னையா ஒழுங்கையைச் சேர்ந்த தோழர் அ.சீவரத்தினம் அவர்கள் இன்றைய தினம் (ஒக்ரோபர் 25) தமது 79ஆவது வயதில் இயற்கை எய்திய துயரச் செய்தி கிடைத்துள்ளது. தனது இறுதி மூச்சுவரை மார்க்சிய தத்துவத்தின்பால் பற்ருறுதியுடன் வாழ்ந்த தோழர்களில் குறிப்பிடக்கூடிய தோழர்களில் ஒருவர் அவர்.
எனக்கும் அவருக்குமான தோழமை மிக ஆழமானதும், சுமார் 55 ஆண்டுகள் பழமையானதுமாகும்.

1966ஆம் ஆண்டில் நான் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தில் இணைந்து முழுநேரமாகப் பணியாற்றுவதற்காக கிளிநொச்சிக்குச் சென்றபோது, தோழர் சீவரத்தினத்தின் அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது அவர் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசாங்க காணி அலுவலகத்தில் ஒரு எழுதுவினைஞராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். காணி அலுவலகத்துக்குச் சொந்தமான ஒரு விடுதி வீட்டில் தனது மனைவியுடனும், ஒரே கைக்குழந்தை மகனான துஸ்யந்தனுடனும் தங்கியிருந்தார்.

கிளிநொச்சியில் கட்சி வேலைகளில் ஈடுடிட்டிருந்த எம்முடன் தொடர்பு கிடைத்ததும் அடிக்கடி எம்மை அழைத்து தனது வீட்டில் வைத்து அரசியல் கலந்துரையாடல்கள் நடத்துவதும், அதில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு வழங்குவதும் அவரது வழமையாக இருந்தது. அவரது செயற்பாடுகளுக்கு அவரது துணைவியார் எப்பொழுதும் புன்னகையுடன் மனப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியதை என் போன்றவர்கள் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். (அவரைப்போல கிளிநொச்சியில் நில அளவையாளராகப் பணி புரிந்த புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற தோழர் தனபாலசிங்கமும் செயற்பட்டார் என்பதை இந்த இடத்தில் நினைவுகூருவது அவசியமாகும்)

தோழர் சீவரத்தினம் கட்சிப் பணிகளுக்கு வழங்கிய பங்களிப்பு பன்முகப்பட்டதாகும். அந்தக் காலத்தில் கிளிநொச்சியில் கட்சி மற்றும் விவசாய சங்க பிரசுரங்களை வெளியிடுவதற்கு எமக்கு அச்சக வசதிகளோ, பண வசதியோ இல்லாமல் இருந்த சூழ்நிலையில் அவர் தனது காணி அலுவலகத்தில் உள்ள தமிழ் தட்டச்சு இயந்திரத்தில் எமது அறிக்கைகளை தானே தமிழில் தட்டச்சு செய்து, பின்னர் அதை ‘றோணியோ’ மெசினில் அச்சிட்டுத் தந்து உதவியிருக்கிறார். இது அன்றைய சூழ்நிலையில் மிகவும் அர்ப்பணிப்புள்ள துணிகரமான செயல்.

அது மாத்திரமின்றி, நெருக்கடியான நேரங்களில் பொலிஸ் கெடுபிடிகளிலிருந்து சில தோழர்களைப் பாதுகாத்தும் உதவியிருக்கிறார்.
அன்றைய ஐ.தே.க அரசுக்கு எதிரான அரசாங்க ஊழியர்களின் பொது வேலைநிறுத்தத்தின் போது, அந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வதற்காக தோழர் சீவரத்தினம் தான் முக்கிய பங்கு வகித்த அரசாங்க லிகிதர் சேவைச் சங்கத்தின் ஊடாக அரும் பணியாற்றியிருக்கிறார். இப்படி பல பணிகளை கட்சிக்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் ஆற்றியிருக்கிறார்.

1991இல் புலிகள் என்னைப் பிடித்துச் சென்று தமது வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் சித்திரவதை செய்து விடுவித்த பின்னர் என்னை வந்து பார்த்ததுடன், ‘உவங்கடை ஆட்டம் கன நளைக்கு இருக்காது’ எனத் தெம்பூட்டியும் வைத்தார். அதுமாத்திரமின்றி ‘வானவில் படிப்பு வட்டம்’ என்ற பெயரில் என் போன்ற பலரையும் சேர்த்து ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஒவ்வொரு பௌர்ணமி தினமும் தனது ஆனைக்கோட்டை இல்லத்தில் கருத்தரங்குகளையும் நடத்தி வந்தார். (அதன் நினைவாக அந்த வானவில் என்ற பெயரையே நாம் கனடாவில் இருந்து வெளியிடும் எமது மாதப் பத்திரிகைக்கும் பின்னர் சூட்டினோம். இறுதிவரை அதன் அச்சுப் பிரதியொன்றை மாதம் தவறாமல் பெற்று வாசித்தும் வந்தார்)

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மிகவும் நேசித்த துணைவியார் காலமானபோது மிகவும் மனமுடைந்து போனார். ஆனாலும் மக்கள் பணிகளின் மூலம் அந்தத் துயரத்தை தேற்றிக் கொண்டார்.
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியும், அதிலிருந்து பிரிந்து உருவான மார்க்சிய – லெனினிய கம்யூனிஸ்ட் கட்சியும் செயலிழந்து போன பின்னர், பிற்காலத்தில் அவர் வேறு சில இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியதாக அறிந்தேன்.

ஆனால் எது எப்படியிருப்பினும் தோழர் சீவரத்தினம் தான் வரித்துக்கொண்ட மார்க்சியக் கொள்கைகளிலிருந்து இறுதிவரை தடம் புரளாமலே வாழ்ந்து வந்தார் என்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமைக்கும், ஆத்ம திருப்திக்கும் உரிய விடயமாகும்.
அத்தகைய ஒரு மகத்தான தோழரின் மறையையொட்டி எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், எமது செங்கொடியைத் தாழ்த்தி புரட்சிகர அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.