போருக்கு பிந்திய யாழ். மாவட்டத்தில் இராணுவத்தால்      இந்து ஆலயம் எதுவும் சீரழிக்கப்படவே இல்லை

– கட்டளை தளபதி தர்ஷன அடித்து கூறுகிறார் –

2009 ஆம் ஆண்டுக்கு பிந்திய வருடங்களில் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டு கால பகுதியில் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் காரணமாக இந்து ஆலயங்களுக்கு ஏதேனும் சேதாரங்கள், பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்குமானால் அவற்றை இராணுவத்தின் செலவிலேயே நிவர்த்தி செய்து தருவார்கள் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இவர் நேற்று திங்கட்கிழமை காலை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க பிரதிநிதிகளும் விசேட அழைப்பின் பெயரில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்கள் பலவும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் காரணமாக சீரழிந்து காணப்படுகின்றன என்று தமிழ் பத்திரிகைகள் பலவற்றிலும் கடந்த வாரம் வெளிவந்த செய்திகள் தொடர்பாக கருத்துகள் கூறியபோது மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தவை வருமாறு:-
யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று இடங்களில் மாத்திரம் பௌத்த விகாரைகள் காணப்படுகின்றன. அதாவது நாவற்குழி, நாகவிகாரை, நயினாதீவு ஆகியவற்றை தவிர வேறு இடங்களில் யாழ். மாவட்டத்தில் விகாரைகள் கிடையாது. மற்றப்படி படை தரப்பினர் நிலை கொண்டு உள்ள இடங்களில் அவர்கள் வழிபடுவதற்காகவே சிறிய வழிபாட்டு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டம் பௌத்தமயப்படுத்தப்பட்டு வருகின்றது என்கிற குற்றச்சாட்டில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது.
சிங்கள பௌத்தர்கள் அதிகம் வாழ்கின்ற தென்னிலங்கையில் பௌத்த விகாரைகளை காட்டிலும் இந்து ஆலயங்களே அதிகம் உள்ளன. மேலும் அங்கு உள்ள இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகள் மேற்கொள்பவர்களில் கணிசமான தொகையினர் சிங்கள பௌத்தர்களே ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகை தருகின்ற சிங்கள பௌத்தர்கள் இங்கு உள்ள இந்து ஆலயங்களுக்கு தரிசனம் மேற்கொண்டு வழிபடுகின்றமையும் வழக்கமான விடயம் ஆகும்.
நிலைமைகள் இவ்வாறு இருக்க இராணுவத்தினரால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன, சீரழிக்கப்படுகின்றன போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை ஆகும். சில அரசியல்வாதிகள் அவர்களுடைய சுய இலாப அரசியல் ஆதாயங்களுக்காக அபாண்டங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கத்தை கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் இராணுவம் சம்பந்தப்பட்ட செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றபோது இராணுவ தரப்பினரையும் தொடர்பு கொண்டு செய்திகளின் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவது உகந்ததாக மாத்திரம் அன்றி உயர் தொழில் பண்புக்கு உரித்தான அம்சமாகவும் இருக்கும்.
எது எப்படி இருந்தாலும் இராணுவத்தினர் இந்து கடவுள்கள் மீது பய பக்தியும், இறை அச்சமும் உடையவர்கள். எனவே 2009 ஆம் ஆண்டுக்கு பிந்திய அமைதி சூழலில் இந்து ஆலயங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு, அழிக்கப்படுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் கிடையாது என்று நான் திட்டவட்டமாக விசுவாசிக்கின்றபோதிலும் அவ்வாறு இந்து ஆலயங்கள் அண்மைய வருடங்களில் இராணுவத்தினரால் யாழ்ப்பாண மாவட்டத்தில் அழிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டு உள்ளன என்று ஆதரபூர்வமாக எனக்கு முறையிடுகின்ற பட்சத்தில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பேன் என்பதை உறுதிமொழியாக இவ்விடத்தில் கூறி வைக்கின்றேன். மேலும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்க கூடிய இராணுவ தரப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் நிச்சயம் எடுப்பேன். அவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தான் என்று கண்டு கொள்ளப்படுகின்ற பட்சத்தில் அவர்கள் இராணுவத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். அதே நேரத்தில் குறிப்பிட்ட ஆலயங்கள் இராணுவத்தின் செலவிலேயே மீள கட்டியமைத்து கொடுக்கப்படும்.  யாழ். மாவட்டத்தில் உள்ள வசதி அற்ற, வருமானம் குறைந்த 100 ஆலயங்களுக்கு உதவி செய்கின்ற வேலை திட்டம் ஒன்றை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் முன்னெடுத்து வருகின்றது என்பதையும் இத்தருணத்தில் நினைவுபடுத்துகின்றென்.