மட்டக்களப்பில் பாடசாலைக் காணியை அத்து மீறி கையடக்க முயற்சி

மட்டக்களப்பு மாவட்டம் முறவாவோடை கிராமத்தில் தமிழ்ப்பாடசாலை ஒன்றிற்கு சொந்தமான காணியை சில தனிநபர்கள், அரசியல் கட்சிகள் சிலவற்றின் அனுசரனையுடன் அத்துமீறி , சட்டவிரோதமாக அபகரிக்கும் முயர்சியை கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள் ஒன்று திரண்டு தடுத்திருக்கிறார்கள்.
தமிழ்மக்களுக்காக பாடுபடுவோம் என்று தேர்தல்காலங்களில் முழக்கமிட்டு மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல்வாதிகள் வளவாதிருக்க இளைஞர்கள் ஒன்று திரண்டு இதனை சாதித்திருக்கிறார்கள். அவ் இளைஞர்களுக்கு, என் அன்பு தம்பிகளுக்கு பாராட்டுகள் . வாழ்த்துக்கள்.

பாடசாலை காணி அத்துமீறிய அபகரிப்பு, குடியேற்றம் போன்றவற்றை எந்த இனத்தை சேர்ந்தவர் செய்தாலும் அதனை தடுக்க வேண்டும் என்பதில் அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இப்போராட்டத்தின் பின்னரான, மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் நேற்றயை நடவடிக்கையால சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமை காப்பாற்றப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலை காணி அபகரிப்பு பிரச்சனையில் ஒரு இனத்துக்கு சார்பான கூறுகள் தென்பட்டாலும், இவ்வகையான போராட்டங்களில் சட்டத்தின் மாட்சிமையை உறுதிப்படுத்துவதற்கான கோஷங்களையே உரத்து கூறி அதற்கு இன மத அரசியல் வேறுபாடுகளை கடந்து எல்லோருடைய ஆதரவையும் பெற்று சாதிப்பதே சரியான வழிமுறையாகும். மாறாக ஒரு இனத்துக்கு எதிரானதாகவோ அல்லது ஆதரவானதாகவோ நடைமுறைபடுத்துவது தொடர்ந்தும் இனகுரோதங்களை வளர்த்து மக்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கும்.மக்கள் சொத்தை கொள்ளையடிப்பவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள், தம்மையும், தமது சட்டவிரோத நடவடிக்கைகளையும் பாதுகாக்க, இனம், மதம் என்ற போர்வையில் ஒழிந்து கொள்வார்கள். இவர்களையிட்டு நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பு தமிழ் இளைஞர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின் வெற்றியை அப்பிபிலிபட்டிய சுமணத்தின தேர்ர் தனது வெற்றியாக உரிமை கோருவதையும் அதனை என் தம்பிகள் சிலர் சிலாகிப்பதையும், சுமணரத்தின தேர்ர் மாறிவிட்டார், தமிழர்களுக்கு ஆதரவாக தற்போது உள்ளார் என கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு அரச கடமையை செய்ய முற்பட்ட தமிழ் கிராமசேவையாளரை தடுத்ததோடு அவரை பறதமிழ என்று திட்டிய சுமணரத்தின தேர்ர் அன்றைய தனது செயலுக்கு பகீரங்க மன்னிப்பு கேட்காதவரை அவரிடம் தமிழர்கள் சார்பில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை என்னால் ஏற்கமுடியாதுள்ளது. இன்று அவரை சிலாகிக்கும் என் அன்பு தம்பிகள் இவ்விடயத்தில் அவரை பொது மன்னிப்பு கேட்க வையுங்கள். எல்லோரிடமும் இணங்கி போவது அவசியம்தான் அதேநேரம் எமது சுயமரியாதை காப்பாற்றப்படுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிடில் அவர்கள் எம் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள். நாமும் வேறுவழியில்லை எம்மை நாமே சமாதான படுத்தி கொண்டு அவர்கள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஆடிக் கொண்டிரும்போம்.

இங்குதான் Assimilation க்குள் எம்மை அறியாமலே நாம் உட்படுவோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே எமது நிலைப்பாடு அவரை போன்றவர்களுக்கு தெளிவாக உரைக்கப்பட்ட வேண்டும்.
சட்டத்தின் மாட்சிமையை உறுதிப்படுதுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர்கள் நடாத்திய போராட்டத்துக்கு ஆதரவளித்த சுமணரத்தின தேர்ருக்கு எனது நன்றியை தெரிவிப்பதோடு அவர் தொடர்பான எனது விமர்சனத்தையும் அவரிடம் தெரிவித்து விடுங்கள்.
மேலும் இப் போராட்டம் வெற்றிபெற உதவிய அரசு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சந்தர்பம் சூழ்நிலைகளால், இப்போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், சட்டத்தின் மாட்சிமை காப்பாற்றப்பட வேண்டும் என கூறி தார்மீக ஆதரவளித்த என் மூத்த சகோதரன் SLM HANIFA மற்றும் அவரது நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்புத் தம்பிகளே எம் இனத்தின், இலங்கையின்
எதிர்காலம் உங்களை போன்றவர்களின் கையில்தான் இருக்கிறது . நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளும், உங்களை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளும் மிகுந்த அவதானத்துடன், தொலை நோக்குடனும், பின்விளைவுகளை கவனத்தில் எடுத்தும் செய்யப்பட வேண்டியவை. எனது கருத்தை நீங்கள் எல்லோரும் அப்படியே ஏற்கவேண்டும் என்று நான் எதிர்பார்கவில்லை, ஆனால் பரந்து பட்ட மனித இனத்தின் பால் உள்ள அக்கறையின் நிமித்தம் எனது கருத்து சொல்லும் உரிமையை மறுக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

(Valavan)