புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 6)

கொட்டடியைச் சேர்ந்த கிளி: இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மூன்று ஆண் குழந்தைகளுக்கும் தாயாவார். இவரது கணவர் ஒரு பஸ் சாரதி. அதிகம் குடிப்பவர். இவர் இந்திய சமாதானப் படையினரால் கொல்லப்பட்டார். கிளியின் மூத்த சகோதரியின் மகன் ஈபிஆர்எல்எவ் அங்கத்தவர். இவர் கிளியின் வீட்டுக்கு வருவது தான் கிளி கைது செய்யப்பட்டதற்கான காரணம்.

கந்தர்மடத்தைச் சேர்ந்த அரியமலர்: இவர் ஓர் தேனீர்க்கடைச் சொந்தக்காரர். இவரின் இரண்டு பெண் பிள்ளைகள் சாந்தி, சுதா ஆகியோர் சுமார் 20 வயது மதிக்கத்தக்கவர்கள். இந்திய சமாதானப் படை இருந்த காலத்தில் ஓர் பிரச்சனை சம்பந்தமாக ஈபிஆர்எல்எல் தலையீட்டை அரியமலர் நாடினார். ஈபிஆர்எல்எவ் ஜ சேர்ந்த தோமஸ் என்பவருடன் கதைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார்.

யாழ் வைத்தியசாலையில் வேலை செய்த தாதி ஒருவர்: இவருக்கு ஒரு மகளும் ஒரு வயதில் மகனும் இருந்தனர். மகளுடன் இவர் சிறைக்கு 1990 மார்ச்சில் கொண்டு செல்லப்பட்டார். இவரது மகள் பின்னர் கணவரான நடராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இவரது சகோதரன் ஈபிஆர்எல்எவ் இல் இருந்த காரணத்தால் இவர் கைது செய்யப்பட்டார். இவரது வீட்டிலிருந்து டிவி, டெக் மற்றும் மின்சார உபகரணங்கள் ஈபிஆர்எல்எவ் சொத்துக்களென காரணம் காட்டப்பட்டு சித்திரவதையாளர்களால் அபகரிக்கப்பட்டன. இவரை சப்பாத்துக் கால்களால் மிதித்து சித்திரவதை செய்தனர். இவரை சுவரில் மோதினர். பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

உடுவிலைச் சேர்ந்த ஓர் வயோதிப ஆசிரியை: இவர் ஓர் இந்தியரை மணந்திருந்தார். இவரது கணவரின் சகோதரன் இந்திய இராணுவத்தினருடன் வந்திருந்தார். தான் ஒரு மத்தியதர குடும்பத்தை சேர்ந்த படியால் தன்னுடன் புலிகள் கொஞ்சம் தாராளமாக நடந்து கொள்வர் எனக் காவலில் வைத்திருந்த ஆரம்ப காலங்களில் நம்பினார். ஆனால் அவரும் அதே சித்திரவதைகளுக்கு ஆளானார்.

கேடி என்ற ஈஎன்டிஎல்எவ் உறுப்பினரின் மனைவியும் முருகண்டி கோவில் முதலியாரின் மகளுமான ஜெயந்தினி: இவர் புலிகளால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளானார்.

ஈபிஆர்எல்எவ் தலைவர்களில் ஒருவரான சர்மாவின் மனைவியான பப்பி: இவரும் புலிகளின் சித்திரவதைக்கு ஆளானார். இவர்கள் இருவரும் இந்தியாவுக்குச் செல்லும்போது கைது செய்யப்பட்டார்கள்.

கைதிகள் விடுதலை செய்யப்டும் போது அவர்களது பெரும்பாலான சொத்துக்கள்- நகை, பணம் போன்றவை – திருட்டுப்போன சொத்துக்கள் எனக் குற்றஞ் சாட்டப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

(தொடரும்…..)