மலின அரசியல் வேண்டாம்!

இலங்கையில், புதிய அரசியலமைப்பினை உருவாக்குவது தொடர்பில் மக்களின் கருத்தறியும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் பிரதேசங்களில் குறிப்பாக, வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் இந்த கருத்தறிதல் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்தே இக் கருத்தறியும் அமர்வுகளில் மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சற்று அப்பால் சென்று, தமிழீழம் வேண்டும்- மாவீரர்களை அவர்களின் நினைவிடங்களில் நினைவுகூர அனுமதிக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு கருத்துக்களை கூறுமாறு கருத்தறியும் அமர்வுகளுக்குச் சென்ற மக்களை சில அரசியல்வாதிகள் தூண்டியதாகவும் தெரியவருகின்றது.

தமிழ் பிரதேசங்களில் நடைபெற்ற இந்த கருத்தறியும் அமர்வுகளில் மக்களால் எவ்வாறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன என்பது தொடர்பில் தமிழ் ஊடகங்கள் அடுத்தடுத்து பல செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தன. ஆனால், சிங்களப் பகுதிகளில் சிங்கள பொதுமக்கள் எவ்வாறான கருத்துக்களை கூறினார்கள் என்பது குறித்து பெரியளவில் ஊடகங்களில் வெளிவரவில்லை. இது ஒருபுறமிருக்க, உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமையும்? மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் அந்த அரசியலமைப்பு தயாரிக்கப்படுமா? அல்லது அரசியலமைப்பு தொடர்பான விடயங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டனவா?

உருவாகும் இந்த அரசியலமைப்பிற்கு சிங்கள கடும்போக்களார்கள் மத்தியில் எதிர்ப்புகள் தோன்றியுள்ள நிலையில் அதனை ஜனநாயகப்படுத்தும் விதத்தில் மக்கள் மத்தியில் இந்த கருத்தறியும் செயற்பாடு நடைபெறுகின்றதா? போன்ற கோள்விகள் எழுகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியல் யாப்பில் இல்லை என்றும், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில அதிகாரப் பரவாலாக்கல் முறைகள் உட்புகுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் கூறியுள்ளதான தகவலும் வெளியாகியுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடி, அந்த விடயங்களை புதிய யாப்பில் இணைத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரா.சம்பந்தனிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதிலிருந்து, ஒரு உத்தேச யாப்பு உருவாக்கப்பட்டுவிட்டதென்பதை புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இந்தியாவின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளமையினையும் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரப் பகிர்வு முறைமை புதிய அரசியல் யாப்பில் சேர்க்கப்பட வேண்டும் என இந்தியா அழுத்தம் பிரயோகித்ததாகவும் தெரியவருகின்றது. அது மட்டுமன்றி, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இந்திய பிராந்தியத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பேணப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதியிடம் டெல்லி வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, புதிய அரசியலமைப்பில் இந்தியாவின் தலையீடு, அல்லது செல்வாக்கு இருக்கும். அதனை தட்டிக்கழிக்க முடியாத நிலைமை இலங்கை அரசாங்கத்திற்கும் உள்ளது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைவதென்பது இலங்கைக்கும் அதிக சிக்கிலை ஏற்படுத்தாது. அத்துடன், இந்திய மாநிலங்களுக்குள்ள அதிகாரங்களுக்கு அப்பால் இலங்கையில் தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் அமைந்து விடக்கூடாது என்பது இந்தியாவின் நீண்டகால நோக்கமாகவுள்ளது என்பதையும் நாமறிவோம். அமெரிக்காவோ அதனைச் சார்ந்துள்ள மேற்கு நாடுகளோ இந்த விடயத்தில் இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டிற்கு மாறாகச் செல்லாது என்பதையும் நாம் புரிந்து கொண்டேயிருக்கின்றோம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே தமிழர்கள் தங்கள் அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இன்னமும் உணரச்சிப் பேச்சுக்களை மேடைகளில் முழங்குவதிலும், சாதாரண மக்களின் உணர்ச்சிகளை கிளறிவிட்டு, அவர்களுக்கு உருவேற்றி விடுவதும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களும், அவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளும் வெளியிடும் கருத்துக்கள் அதிக கவனத்தைப் பெறுகின்ற காலகட்டம் இது. சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் கடுமையாக பரப்புரை செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கு சாதகமான நிலைமைகளை தமிழ் மக்களே உருவாக்கிக் கொடுக்கக் கூடாது. தமிழ் மக்கள் கேட்பது நியாயமாதுதான் என்கின்ற கருத்தை சிங்கள மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இது மிக முக்கிமானது. ஆட்சி மாற்றத்தின் பின்னர், கடந்த காலத்திலிருந்த இறுக்கமான நிலைமைகள் தளர்வடைந்துள்ள சூழ்நிலையில், சிங்கள பொதுமக்களுடன் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்று இன்னமும் தமிழர் தரப்பால் ஏற்படுத்தப்படவில்லை.

இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முக்கியமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டுள்ள, ஏற்றுக் கொள்கின்ற அனைத்து சிங்களவர்களுடனும் நாம் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று அவர் கூறுகின்றார். “தென்னிலங்கை இனவாதிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது, தென்னிலங்கையில் உள்ள சிங்கள இனவாதிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய கூடாது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸ போன்றவர்களுடைய செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் நாம் செயற்பட கூடாது” என அவர் குறிப்பிடுகின்றார்.

“நாட்டிலே ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டு நாடு சரியான திசையிலே பயணிப்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அமைத்திருக்கின்ற தேசிய அரசாங்கம் எடுத்திருக்கின்றது. இந்த இரு பிரதான கட்சிகளும் முன்னர் சென்ற திசையை விட்டு மாறி வேறு திசையில் பயணிக்க எத்தனிக்கின்ற போது அதனைத் தடுப்பதற்கான பல முயற்சிகள் நடைபெறுவதனைக் காணக் கூடியதாக இருக்கின்றது. நாமும் அதற்கு துணைபோகும் வகையில் நடக்கக் கூடாது” என்றும் அவர் கூறுகின்றார். “எங்களுடைய சொற்கள் அல்லது பேச்சுக்கள் அதிலும், வீரப் பேச்சுக்கள் வீணாக சிங்கள மக்களுக்கு சந்தேகத்தை எழுப்புவதான செயற்பாடாக இருக்கக் கூடாது. நாங்கள் சொல்வதனைச் சொல்ல வேண்டும்.

எங்களுடைய நிலைப்பாட்டினை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், அதனைச் சொல்கின்ற அல்லது அதனைக் கையாள்கின்ற முறை மிகவும் நிதானமாக இருக்க வேண்டும். ஏனெனில், எங்களுடைய சொற்களை வைத்தே மகிந்த தரப்பினர் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டுவதற்கு நாங்களே காரணமாக இருக்கக் கூடாது” என்றும் அவர் குறிப்பிடுகின்றார். சுமந்திரனது இக்கருத்துக்கள் மிக யதார்த்தமானதே. தெற்கில் தோல்வியடைந்தவர்கள் எவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் பேசி, அந்த மக்களைக் குழப்பி, ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் செயற்படுகின்றார்களோ அதே போல்,

தமிழர்கள் மத்தியிலும் தோல்வியடைந்தவர்கள் நிலைமைளை சரியாக கையாள்வது பற்றி சிந்திக்காமல் உள்ளுக்குள் தங்கள் எதிரிகளாக கருதுபவர்களை எதிர்ப்பதற்காக அவர்கள் சொல்லும் நியாயமான யதார்த்தமான கருத்துக்களையும் துரோகத்தனமானதாக தமிழ் மக்கள் மத்தியில் சித்தரிப்பதை காண்கின்றோம். கருத்துக்கள் நியாயமானதா இல்லையா என்பதையே நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரையும் அறுவைசிகிச்சை செய்து பரிசோதிக்க முற்பட்டால் இங்கு எவருமே புனிதர்களாகப் போவதில்லை.

– விஸ்வா –