“மலையமாருதம்” ஓய்ந்து போனது!

ஒரு நல்ல நண்பரை, தன் சமூகத்தின் மீது அளவிலா அன்பு கொண்ட, மானுட விடுதலை மீது தீராத காதல்கொண்ட, சமூ ஆர்வலர் லோறன்ஸ் தனது மூச்சை நிறுத்திக்கொண்ட செய்தி முகநூலில் பரவிக்கிடக்கிறது.

80களின் இறுதிப் பகுதியில் என் சகோதரி கார்த்தியாயினிக்கு தலவாக்கலை மகாவித்தியாலயத்தில் பணி நியமனம் கிடைத்த போது அவரை அந்தப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றதில் இருந்து மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர்களுடனான உறவும் ஆரம்பமானது.

மலையகமும் தலவாக்கலையும் நமக்கு மிகவும் பரீட்சயமான பிரதேசங்கள். நம் தந்தையும் தாயும் ஆசிரியர்களாக மலையகத்தில் பணிபுரிந்த போது நாமும் நம் ஆரம்ப கல்வியை அங்கேயே கற்றிருந்தோம்.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் நம் குடும்ப நண்பர், தந்தையின் மாணவர். தலவாக்கலை மகாவித்தியாலைய அதிபரும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவரான வீ.ரி தர்மலிங்கம், முன்னணியின் முக்கியஸ்த்தர் பி.ஏ காதருடன், அ. லோறன்சும் நமது நெருங்கிய நண்பர்கள்.

பின்னாளில் 90களில் நான் பணியாற்றிய சரிநிகர் பத்திரிகையிலும் வி.ரி.தர்மலிங்கம், பி.ஏ. காதர், அ. லோறன்ஸ் ஆகியோர் மலையகம் குறித்த தொடர்களை எழுதிவந்தனர். இவர்களின் தொடர்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்த போது மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனும் தனது செவ்விகளையும், அனுபவங்களையும் சரிநிகரில் பகிர்ந்து வந்தார்.

நான் வெள்ளவத்தையில் கார்த்தகேயன் பிரின்டர்ஸ் வைத்திருந்த போது மலையக மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள், உள்ளிட்ட அச்சு வேலைகளை கார்த்திகேயன் அச்சகத்திலேயே மேற்கொண்டார்கள். அப்போதும் லோறன்ஸ் அச்சுவேலைகளை கவனிப்பதற்கு என்னிடம் வருவார்.

பின்னர் 2000 ஆண்டுகளில் நான் பணியா்றிய வானொலியில் லோறன்சுடன் நேர்காணலை நடத்தியிருக்கிறேன். தவிரவும் மலையக மக்கள் முன்னணியின் செய்திகள், அறிக்கைகளை என்னுடன் பரிமாறியிருக்கிறார்.

பிந்துனுவெவ கொலைகளின் போது மலையகத்தில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு நானும் நான் பணியாற்றிய வானொலியும் காரணமென ஹற்றன் காவல் நிலையத்தில் ஒரு முறைப்பட்டை இ.தொ.க கொடுத்த போது என்னை மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர் எனவும் சந்திரசேகரனின் நெருங்கிய நண்பர் எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

அப்போதெல்லாம் லோறன்ஸ், சந்திரசேகரன், காதர், விஜயகுமார், அத்துகோரள உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக என்னுடன் உறவைப் பேணிவந்தார்கள்.

நான் லண்டனுக்கு புலம்பெயர்ந்த பின்பும் லோறன்சுடன் பலதடவைகள் உரையாடியிருக்கிறேன். கடந்த ஒருவருடத்திற்கு முன்பும் நீண்ட நேரம் உரையாடிய ஞாபகம் வருகிறது. ஆடம்பரமில்லாத அவையடக்கம் உள்ள அமைதியான மனிதர் லோறன்ஸ்.

நான் நினைக்கிறேன் பின்னாளில் மலையக அரசியல் கட்சிகளோடு பத்தோடு பதினொன்றாக மலையக மக்கள் முன்னணி மாறியிருந்தாலும், மலையக பாரம்பரிய அரசியலில் இருந்து ஒரு புதிய மாற்றத்திற்கான ஒளியாய் 90களில் பிரகாசிக்கத் தொடங்கிய ஆரம்பத்தின் மூலவர்களில், கருத்துருவாக்கிகளில் லோறன்ஸ் மிக முக்கியமானவர்.

இவர் குறித்து வெளிவந்த குறிபொன்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
கல்லூரி காலத்திலேயே தோழர் என்.சண்முகதாசன் தலைமையில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்டு இயங்கியவர்.

70களில் கருத்து முரண்பாடு காரணமாக சண்முகதாசனிடம் இருந்து பிரிந்து தோழர் காமினியப்பா கௌரிகாந்தன் (அண்மையில் இந்தியாவில் மரணித்தவர்) தலைமையில் இயங்கிய கீளைக்காற்று இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு 1974 ஆம் ஆண்டு அரசியல் காரணங்களுக்காக சிறை சென்றவர்.

77 ஆம் ஆண்டு யாழ் .வீரசிங்க மண்டபத்தில் நடந்த இலங்கை ஆசிரியர் சங்க மாநாட்டில் பி. ஏ. காதரோடும் கௌரிகாந்தனுடனும் இணைந்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் மழையக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தனியான தேசிய இனங்கள் என்ற கருத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் காதரோடு இணைந்து செயல்பட்டவர்.
காதர், தர்மலிங்கம் ஆகியோரோடு மலையக வெகுஜன இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்களின் முக்கிய உறுப்பினர்களாகவும் செயல்பட்டவர்.

80களில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இளைஞர் சேவை அலுவலராக இணைந்து நுவரெலியா மாவட்ட இளைஞர் சேவை அலுவலராக கிட்டத்தட்ட 15 வருடங்கள் அரசாங்க சேவையிலும் கடமையாற்றியவர்.

80 களில், மலையாக வெகுஜன இயக்கத்தின் வெளியீடான விடிவு என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார் யுவிடெப் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் (மலையக தொழிலாளர் தகவல் அபிவிருத்தி நிறுவனம்) அதன் தலைவராகவும் பிரதான இணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

1989 ஆம் ஆண்டிலிருந்து மலையக மக்கள் முன்னணியில் இணைந்து செயல்படுவதோடு அதன் ஸ்தாபக உறுப்பினர்களின் ஒருவராகவும் அக்கட்சியின் உப தலைவராக இருந்த தர்மலிங்கம் காலமாகியதன் பின்னலட அவரின் இடத்திற்கு உப தலைவராக நியமிக்கப்பட்டதோடு பின்பு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாகவும் மறைகின்ற பொழுது மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகவும் செயல்பட்டவர்.