முன்னாள் யாழ் மாநகர மேயர் துரையப்பா

அங்கு காத்திருக்கும் போது நாலு மணியளவில் அல்பிரட் துரையப்பாவின் கார், வெள்ளை பேர்ஜோ 304 அல்லது 403 என்று நினைக்கிறேன், போகும்.
பின்னால் உட்கார்ந்திருப்பார்.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக இருந்தவர்.
தமிழ்த்தேசியம் உரு ஏறி ஆடத் தொடங்கிய காலத்தில், சிறிமாவோ தலைமையிலான சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி இல்லை.
மக்கள் வாக்களித்து மேயர் ஆனவர்.

என்னுடைய அப்பா பாடசாலை அதிபராக இருந்து சிறிமாவோ அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க என்று கருதி ஓய்வு வயதைக் குறைத்த போது, 55 வயதில் ஓய்வு பெறுவதை நீடிக்க, துரையப்பாவிடம் சிபார்சுக் கடிதம் வாங்கச் சென்ற போது, எந்த தயக்கமும் இல்லாமல் கடிதம் கொடுத்தவர்.

இத்தனைக்கும் தமிழரசுக் கட்சி 70ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது தமிழரசுக் கட்சிக்காக பிரசாரம் செய்ய எங்கள் ஊருக்கு வந்தவர்களுக்கு அப்பா மதிய உணவு வழங்கியிருந்தார். அப்பா எங்கள் தமிழரசு எம்.பிக்களிடம் உதவிக்குப் போனதாக எனக்கு ஞாபகம் இல்லை.

கதிரவேற்பிள்ளை அப்போது எங்கள் கோப்பாய் எம்.பி.
ஆரம்ப காலங்களில் ஆசிரியர் பதவிகள் சிலவற்றைப் பெற்றுக் கொடுத்ததன்றி, தமிழரசுக் கட்சியினர் தமிழர்களுக்கு வேலை வாய்ப்போ, பொருளாதார அபிவிருத்திக்கான திட்டங்களை முன்னெடுப்பதிலோ அக்கறை செலுத்தியதில்லை.

அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது அவர்களுக்கு இலகுவானதாக இருந்தது.
யாழ்ப்பாண மாநகரசபைப் பகுதி பல்வேறு பட்ட சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட மக்களைக் கொண்டது. இந்த பிரதேசத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரையப்பா செய்த சேவைகள் அளப்பரியன.
அவர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு காரணமாகத் தான் அவர் மாநகரசபைத் தேர்தலில் வெல்ல முடிந்தது.

மாநகரசபையின் சோலைவரிக்கான கடிதங்களை அனுப்புவதற்கு செலவிடப்படும் தபால் கட்டணத்தை கணக்கிட்டு, அந்தப் பணத்தை சம்பளமாகக் கொடுத்து, ஒடுக்கப்பட்ட ஒருவரின் மகனுக்கு அவற்றை வினியோகிக்கும் வேலையை வழங்கியிருந்தார் என்று அப்பா எனக்கு சொல்லியிருந்தார்.

சிறிய வயதில் அப்பா கூட்டிக் கொண்டு போன பெரிய கடை எனப்பட்ட புராதன கால சந்தைப் பகுதியை இடித்துப் புனரமைத்து நவீன சந்தையை உருவாக்கி, மாநகர சபைக்கு பெரும் வருமானம் ஈட்டித் தரும் ஒன்றாக அமைத்திருந்தார். அதிலிருந்த றெக்கோடிங் பார்களில் உள்ள விலையுயர்ந்த ஒலிபெருக்கி சாதனங்களைப் பார்த்து வாயூறியபடியே, அங்கே என்னைப் போல பலரும் பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆஸ்பத்திரி வீதியில் பல்வேறு தமிழ் பெரியார்களுக்கான சிலைகளை மாநகரசபை மூலமாக எழுப்பியிருந்தார்.

ரோம் நகரத்திற்கு விஜயம் செய்து அதைப் பார்வையிட்ட பின்னால், அது போன்ற ஒரு நகரமாக யாழ்;ப்பாணத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர் கூறியதாகக் கூறுவார்கள்.

இப்போது பலரும் புதிதாக பெரும் அக்கறை கொண்டு அஞ்சலி செலுத்தும் யாழ்.நூலகம் அமைக்கப்பட்டதில் அவருக்கும் பெரும் பங்குண்டு.

இவரைப் போலவே, துரோகி என்று வர்ணிக்கப்பட்ட ஜி.ஜி.பொன்னம்பலம் கைத்தொழில் அமைச்சராக இருந்த போது, பரந்தன் ரசாயனத் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, வாழைச்சேனை காகித ஆலை போன்றவற்றை தமிழ் பிரதேசங்களில் அமைத்து தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருந்தார்.

இதுவரையில் தனிநாடு அமைப்போம் என்று தொடங்கிய தமிழ்த்தேசியத்தின் தமிழரசு தமிழ்ப்பிரதேங்களில் கட்டியெழுப்பியது தந்தை செல்வா நினைவுத்தூபியும் முற்றவெளியில் தமிழாராய்ச்சி மாநாட்டில் இறந்தவர்களுக்கான நினைவுத் தூண்களும் தான்.
அவர்களைப் போட்டுத் தள்ளி வந்து சேர்ந்த புலிகள் கட்டியெழுப்பியது மாவீரர் துயிலும் இல்லங்களும் விடுதலைப் பூங்காங்களும் தான்.

தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களுக்கு எந்த வழியும் பண்ணாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த எந்த திட்டங்களையும் கொண்டிராமல், முழுக்க முழுக்க சிங்கள அரசில் பழி போட்டு, உசுப்பேத்துவது மட்டுமே அரசியல் செய்வதற்கும், யாழ்ப்பாணிகள் அதற்கு இழுபடுவதற்கும் போதுமானதாக இருந்தது.

துரையப்பாவிற்கு இருந்த செல்வாக்கு தமிழரசுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்ததால், அவர் ஒரு துரோகியாக வடிவமைக்கப்பட்டார்.
தமிழாராய்ச்சி மாநாடு மொழியின் வளர்ச்சிக்கானது. அறிஞர்கள் மொழியின் பெருமையையும், அதன் வளர்;ச்சியையும் பேச வேண்டிய ஒரு நிகழ்வை, ஒரு அரசியல் கும்பமேளாவாக்கியது தமிழரசுக் கட்சி.
தனிநாடு என்பது பெரும் கோசமாக இல்லாத காலத்தில், அரச எதிர்ப்பு பகிஷ்கரிப்புகளும் உண்ணாவிரதங்களுமாக இருந்த காலம்.

ஒரு மாநகரத்தின் முதல்வராக இருப்பவரைப் புறக்கணித்து, தமிழ்த் தேசிய அரசியல் தலைமை தமிழாராய்ச்சி மாநாட்டை ஒரு விடுதலைப் பெருவிழாவாக்கி, மூப்புக் கொண்டு முன்நின்றது.
அந்த மாநாட்டிற்கும் அப்பா என்னை அழைத்துச் சென்றிருந்தார்.
விசா மறுக்கப்பட்ட ஜனார்த்தனனை அரசிற்கு சவாலாக கள்ளக்கடத்தல் வழிகளால் வரவைத்து, விலாசம் காட்ட எடுத்த முயற்சிக்கும் தமிழாராய்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
இந்த நிகழ்வில் நடந்த களேபரத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்கா சென்ற அன்னபூர்ணா கப்பலின் பிரதி ஒன்று ஊர்வலத்தில் வந்த போது, மின்கம்பியை அறுத்து அதில் இருவர் இறந்ததாக ஞாபகம்.

இந்த மரணங்களுக்கு வழமை போல, உசுப்பேத்திய பலி கொடுப்பு காரணமாக இல்லாமல், சிறிமா அரசு மேலும், துரையப்பா மேலும் பழி சுமத்தப்பட்டது.

இது இன்று மாவீரருக்கு விளக்கு கொளுத்துவது வரைக்கும் நடைபெறும் யாழ்ப்பாணித் தமிழ் தேசியத்தின் வழமையான போராட்ட வடிவம்.
சட்ட மீறலைச் செய்யும் போராட்டங்களை அப்பாவி மக்களைப் பணயம் வைத்து நடத்துவது, அரசாங்கம் எதையும் செய்யாவிட்டால் அதை போராட்டத்தின் பெருவெற்றியாக கொண்டாடுவது, அப்பாவிகள் பலியாகினால், அதை அரசின் அட்டுழியமாக சித்தரிப்பது.

ஜனார்த்தனனைக் கொண்டு வருவது தமிழ்த் தேசியத்தின் திமிர்த்தனமான நடவடிக்கையே அன்றி, தமிழாராய்ச்சிக்கு சம்பந்தம் இல்லாத விடயம். அங்கு வந்த உரையாற்றிய பேராசிரியர் அறவாணன் எங்கள் பாடசாலையில் வந்து உரை நிகழ்த்தியிருந்தார்.

அந்த நேரம் நான் தீவிரவாசகனாக இருந்த தமிழரசுக் கட்சி நடத்திய கோவை மகேசனை ஆசிரியராகக் கொண்ட சுதந்திரனும், அந்தனிசில் நடத்திய தீப்பொறியும் துரையப்பா பற்றி எழுதிய அவதூறுகள் பல.
அதில் அநுரா பண்டாரநாயக்க வந்த போது, அவருக்கு துரையப்பா பெண் சப்ளை செய்தார் என்று வழமையான யாழ்ப்பாண பாணியில் அவதூறுகள் பரப்பப்பட்டன.

அப்போது சிறுவனாக இருந்த எனக்கு இப்போதும் ஞாபகம். எங்கள் பஸ் போகும் வழியில் உள்ள வீடு ஒன்றைக் காட்டி, சென்.ஜோன்ஸ் மாணவரும், தற்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாகவும் உள்ள எங்கள் ஊர் ஒருவர், அந்த வீட்டுப் பெண் தான் அந்த வதந்தியில் சம்பந்தப்பட்டவர் என்று இன்னொருவருக்கு சொல்லிக் கொண்டிருந்ததை நான் காதை எறிந்து விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, எனக்கு பன்னிரண்டு வயது இருக்கலாம்.

இப்படியான அவதூறுகள் இந்த யாழ்ப்பாணிச் சமூகத்தில் எந்த கூச்சமும் இல்லாமல் நடத்தப்படும் என்பது, பின்னர் முள்ளிவாய்க்காலில் நொந்து கெட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்த மக்களை, முகாம்களில் விபசாரம் நடக்கிறது என்று எதிரிக்கு சகுனம் பிழைக்க தங்கள் மூக்கையே அறுக்கும் போது தெரிய வந்தது.

தாங்கள் தூக்கிக் கொண்டாடியவர்கள் மீதே அவதூறுகளை வீசுகிறவர்கள், துரோகி என்பவர்கள் மீது அதே அவதூறுகளைச் செய்வதில் என்ன ஆச்சரியம்?

யாழ்ப்பாணித் தமிழ்த்தேசியத்தைக் கவனிப்பீர்களாயின் சுதந்திரக்கட்சி தான் அதற்கு எப்போதும் வில்லனாக இருக்கும், ஐ.தே.கட்சியோடு படுப்பதற்கு யாழ்ப்பாணத் தேசியம் எப்போதும் தயாராக இருக்கும் என்பது தெரிய வரும்.

ஐ.தே.கட்சி அமைப்பாளர் என்று வவுனியா புலேந்திரன் கொல்லப்பட்டது தவிர்ந்து வேறு யாரும் கொல்லப்பட்ட ஞாபகம் இல்லை.
ஆனால், சுதந்திரகட்சி அமைப்பாளர்கள் மிச்சம் விடாமல் கொல்லப்பட்டனர்.

மண்ணெண்ணெய் மகேஸ்வரனை முதன் முதலாக நான் அறிந்து கொண்டது, பல்கலைக்கழகத்தில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வில் தன் பிள்ளையோடு வந்து, கையெழுத்திட்ட போது.

என்ன கொடுமையடா? புலிகள் காலத்திலேயே ஒருவர் ஐ.தே.க அமைப்பாளராக யாழ்ப்பாணத்தில் உலாவுகிறார் என்று நான் தலையைச் சொறிய வேண்டியிருந்தது.

இப்படி துரையப்பா பிரதான துரோகியாக சித்தரிக்கப்பட்டு, துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லை என்று பகிரங்கமாகவே மேடைகளில் உசுப்பேத்தும் அளவுக்கு தமிழ்த் தேசியம் விசர் பிடித்து அலைந்தது.
தளபதி அமிர்தலிங்கம் தலைமையில், தற்போது இந்தியாவில் உள்ள உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உட்பட்ட தமிழரசுக் கட்சியினர் இந்தக் கொலைவெறியை மக்களின் மனதில் ஊட்டிக் கொண்டே இருந்தனர்.
தமிழரசின் பொங்குதமிழ்ப் பேச்சுக்களின் உசுப்பேத்தலில பிரபாகரன் போன்ற கல்வி அறிவற்றவர்களும் எடுபட்டுப் போனதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

அதற்குள் குரங்கின் கைப் பூமாலை மாதிரி, துப்பாக்கி வேறு!
துரையப்பாவின் அரசியல் பற்றியோ, அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்த சேவைகள் பற்றியோ, யாழ்ப்பாணத்தில் கட்டியெழுப்பியவை பற்றியோ பிரபாகரன் அறிந்திருக்கும் அளவுக்கு அறிவுடையவராக இருந்ததில்லை. அவர் கற்றுக் கொண்ட அரசியல் இந்த உசுப்பேத்தல் மேடைப் பேச்சு அரசியல் மட்டுமே. பிரபாகரன் வாசித்து அரசியலைக் கற்றார் என்பது படக்கதை எழுத ஜாலியாகத் தான் இருக்கும்.

அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழரசுக் கட்சியினர் இந்த துப்பாக்கி தாங்கிகளுடன் நெருக்கமான உறவைப் பேணிக் கொண்டது ஆச்சரியப்பட வேண்டியது. கல்வி, கேள்விகளில் நிறைந்து விளங்கிய அமிர்தலிங்கம் போன்றார், பிரபாகரன் போன்றோரின் கையில் துப்பாக்கி இருப்பது குறித்த ஆபத்தை உணர்ந்து கொள்ளாதிருந்ததற்கான காரணம், தங்களுக்கு விசுவாசமான அடியாட்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையைக் கடந்து வேறு எதுவாக இருந்திருக்கும்?

நேரடியாக இல்லாவிட்டாலும், துரையப்பா போன்றோரைக் கொல்வதற்கான சூசகமான அறிவுறுத்தல்களைக் கூட வழங்கியிருக்க முடியும்.

துரையப்பாவைச் சுட்ட பிரபாகரன், தமிழரசுத் தலைவர் யாரோ வீட்டிற்கு வந்ததாகவும் அவரின் மனைவி அவருக்கு தேனீர் வழங்கினார் என்றும் கதைகள் வந்தன.

ஒரு விசுவாசமான அடியாள் கட்டளையை நிறைவேற்றி, எஜமானனின் பாராட்டுதலைப் பெறுவதற்கு வந்தது போல!
துரையப்பாவின் மரணம் துரோகியின் மரணமாக தமிழ் தேசிய மனதில் இறுக்கமாகப் பதியப்பட்டிருக்கிறது.

துரையப்பாவின் சகோதரர்களின் பிள்ளைகள் கனடாவில் உள்ளார்கள். அதில் ஒருவர் கனடிய நகரம் ஒன்றில் பொலிஸ் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்ற போது, இத்தனை வருடங்களின் பின்னரும் கொலை வெறி அடங்காத தமிழ்த்தேசியர்கள் அவரை, துரையப்பா என்ற துரோகியின் மகனாக நினைத்து கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

துரையப்பாவின் சகோதரி கனடாவில் இன்றும் உள்ளார். என் குடும்பத்தினர் அவருடைய பிள்ளைகளாகவே இன்றும் கருதப்படுகிறோம். போகும் போதெல்லாம் சொந்த தாயை அணைத்து முத்தமிடுவது போலவே நாங்கள் எல்லாரும் அவரை முத்தமிடுவோம்.

காலம் எப்படியெல்லாம் மாறும்?
அமிர்தலிங்கம் துரோகி ஆக்கப்பட்டு, அவரை வன்னிக்கு அழைத்து விசாரணை செய்து சித்திரவதை செய்து கொல்லத் திட்டமிட்டு, அவர்களோடு நட்புப் பாராட்டி நடித்து, பேச்சுவார்த்தை நடத்த மாவை வன்னி சென்ற கதையை ஆனந்தசங்கரியிடம் கேட்டுப் பார்க்கலாம். சங்கரியருக்கு தெரியாமல், இரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள். புலிகளைப் பற்றி தெரிந்ததாலோ என்னவோ, அமிர்தலிங்கம் போகாமல் தவிர்த்துக் கொள்ள, கொழும்பில் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை தான்.
அவரோடு யோகேஸ்வரனும் கொல்லப்பட்டார்.
யோகேஸ்வரனின் மனைவியும் யாழ்.மேயராக இருந்து புலிகளால் கொல்லப்பட்டார்.

மேயராக இருந்த துரையப்பா தமிழ் தேசியத்தால் துரோகியாக்கப்பட்டு கொல்லப்பட்டாலும், அவரது இறுதி ஊர்வலத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, அவரால் பயன்பெற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கண்ணீர் விட்டபடியே பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

அதே தமிழ் மக்களை தனக்கு மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி அழிவுக்கு தள்ளிய பிரபாகரன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்து, மண்டை பிளந்து கொல்லப்பட்டார்,

விளக்கு கொளுத்தக் கூட ஒருவர் கூட இல்லாமல்!