முள்ளுள்ள புதர்களின் மத்தியில் –அத்தியாயம் 4

‘ போம்ப நவே அம்ப கெனாவ’ ( குண்டு அல்ல மாம்பழம் கொண்டு வந்தனான்) என்று நான் கூறி முடிக்கும் முன்னரே சமயலறையை நோக்கிப்பறந்தார் என் நண்பர். அங்கு பணிபுரியும் பலரும் என்னைக்கண்டவுடன் சுகதுக்கங்களை விசாரித்து வன்னி நிலவரங்களை கேட்டறிந்தனர் இவர்கள் பலவகைப்படுவர் யார் உண்மையிலேயை சமாதனத்தை விரும்புகிறார்கள் என்பதைக்கண்டறிவது கடினம் பொதுவாக புலிகளைத்திட்டினால் தப்பித்துக்கொள்ளளாமென்பது வடகிழக்கிலிருந்து வரும் பலரது அபிப்பிராயம். ஆனாலும் சிங்களவர்கள் முட்டாள்கள் அல்லர்.

வெளிநாட்டுப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் பொழுது அவர்கள் எப்பொழுதும் தந்களுடன் இலங்கையின் வரைபடத்தை வைத்திருப்பது வழமை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசம் சூனியப்பிரதேசம் இவற்றிக்கிடைப்பட்பட்ட தூரம் போக்குவரத்துப்பாதைகள் என்பனவற்றை அறிய அதிக ஆவலக இருப்பார்கள். அவர்களுடன் கதைத்துவிட்டு வெளியில் வரும்பொழுது நாங்கள் என்ன கதைத்தோம் என்பதை அறிய பலர் முண்டியடித்துக்கொண்டு வருவார்கள். இவர்களை சமாளிப்புத பெரும்பாடாகிவிடும்.

‘மச்சாங் we must do something to the poor people, they must be suffering a lot’ ‘ என்றார் ஒருவர் பிளேன் டி யை உறிஞ்சிக்குடித்தபடியே. ‘யெஸ் மச்சாங் பவ் நேத அற மினுசு'(பாவம் அந்த மனிதர்கள்) என அவருடன் உடன்பட்டார் இன்னுமொரு ஊழியர் கல்குலேட்டரில் கணக்குப் பார்த்தவாறே. இவர்களது மனிதாபிமானமும் கரிசனையும் என்னை வெகுவாகக்கவர்ந்தது. பின்னர்தான் அறிந்தேன் அவர்களிலொருவர் பெர்ச்சசிங் ஒபிசர் என்று. மற்றயவர் அவரது உதவியாளர். அநேகர் என்னுடன் அன்பாகவும் நட்புடனும் பழகினார்கள். ஒருசிலர் இரவில் தண்ணியடிக்கவும் அழைத்தார்கள்.மறுநாள் நடைபெற இருக்கும் கிறிக்கட் மட்ச் பார்க்கப்போகலாமென ஒருவர் விடாப்பிடியாக நின்றார்.

வன்னியிலிருந்து வந்த எனக்கு இவையெல்லாம் உற்சாகம் தருவதாகவே இருந்தது. நானும் கொழும்பிலிருக்கும் நாட்களை எவ்வாறு கழிக்கலாமென்று எனக்குள் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் பொழுது ஓபீஸ் எங்கும் ஒரே பரபரப்பு எல்லோரும் அங்குமிங்குமாக அவசரமாக தங்களுக்குள் எதோ குசுகுசுத்தவாறு நடந்து திரிந்து கொண்டிருந்தனர். எல்லோரிடமும் ஏதோ ஒருவித பதட்டம் தென்பட்டது. காலையில் அன்போடு பழகியவர்களில் சிலர் முகம்கொடுத்து கதைக்கவே தயங்கினர் .சிலர் என்னை ஒருவித சந்தேகத்துடன் பார்தனர். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அப்பொழது எமது வெளிநாட்டு வதிவிடப்பிரதிநிதி என்னை தனது அறைக்குள் அழைத்து விடயத்தைக் கூறினார். கொழும்பில் பாரிய குண்டொன்று வெடித்து பலர் இறந்து விட்டதானவும் எங்கும் பதட்டம் நிலவுவதாகம் என்னை அவதானமாக இருக்கும்படியும் கண்டபடி திரிய வேண்டாமென்றும் அறிவுரை கூறினார். நான் அவரது அறையைவிட்டு வரும்பொழது ‘மச்சாங் நீ ஒண்டுக்கும் பயப்படாதை இண்டைக்கு நீ என்ட வீட்டிற்கு வா தண்ணி அடித்து சாப்பிட்டு படுப்பம் நாளைக்கு எல்லாம் சரியாப்போடும்’ என்றார்

இதுவரை பெரிதாக அலட்டிக்கொள்ளாத சிங்கள நண்பர். அன்றைய இரவு அவரின் வீட்டில் நிம்மதியாகக்கழிந்தது.

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் -அத்தியாயம் 5

‘மாத்தையா என்ட கிவ்வா’ (ஜயா வரட்டாம்) என்ற குரல் கேட்டு முக்கால் மணிநேரமாக வவுனியா வாகன தொடரணி சோதனை முகாமிற்கருகாமையிலிருந்த மரநிழலின் கீழ் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். துப்பாக்கியுடன் இராணுவச்சிப்பாய் எதுவித உணர்ச்சிகழுமின்றி என்னைப்பார்தவாறு நின்றிருந்தான். எனக்கு நெஞ்சு திக்கென்றது. இராணுவச்சிப்பாய் என்னுடன் கதைத்தது சுற்றியிருந்த பலரின் கவனத்தை எனது பக்கம் திருப்பியது.

வன்னியில் பணிபுரியும் பல அரச அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள் வாகன சாரதிகள் என பலர் தொடரணி புறப்படுவதற்க்காக காத்திருந்தனர். ஏதோ தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்த முற்பட்டு பிடிபட்டுவிட்டேன் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். விடலைக்பருவத்தில் சுயஇன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழது கையும் மெய்யுமாக பிடிபட்டது போன்ற உணர்வு என்னை ஆட்கொண்டது.

ஒருமணி நேரத்திற்க்கு முன்னரே சகல பொருட்களும் சோதனையிடப்பட்டு வாகனத்துக்குள் ஏற்றியாகிவிட்டது. ஒரு சில பத்திரிகைகளும் சஞ்சிகைளும் மாத்திரமே என் வசம் இருந்தன. அவற்றையும் எடுத்துக்கொண்டு அந்த இராணுவச்சிப்பாயை பின்தொடர்தேன். ஒர் அறையைக் காட்டி உள்ளே செல்லுமாறு பணிவாக்கூறினான். அவனது பணிவு எனக்கு கொஞ்சம் தென்பைத்தந்தது. அது ஒர் நீண்ட விசாலமான அறை. எனது வரவை எதிர்பார்த்தவர் அங்கிருந்த உயர் அதிகாரி சிரித்தவாறு ‘“ hello come on in” என்றார் சிரித்தவாறே. எனக்கிருந்த பயம் ஓரளவு நீங்கியது. அவர் காட்டிய கதிரையில் அமர்ந்தேன். மேசையில் இரண்டு கோக் போத்தல்கள் இருந்தன. ஒன்றை எனக்கு முன் தள்ளிவிட்டு மற்றையதை அப்படியே அண்ணாந்தபடியே பருகினார். அவரது பாணியை நானும் கொப்பியடித்தேன். நிண்ட நேரம் வெய்யிலில் நிண்ட எனக்கு அது அமிர்தமாக இருந்தது. உடம்பும் மனதும் கொஞ்சம் ரிலக்ஸ் ஆனது.

வாகன தொடரணி இன்று புறப்பட சற்று தாமதமாகுமென பேச்சை ஆரம்பித்த அவர் எனது விபரங்களை மேலோட்டமாக கேட்டறிந்தார். இவ்வளவு பேர் உள்ள இடத்தில் இவர் ஏன் என்னை மாத்திரம் கூப்பிட்டார் என எனக்கு புரியவில்லை. அதை அவர் உணர்ந்தவர் போல் ‘ ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம் நீர் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தது ஒரு இராணுவ வீரனுக்கு சந்தேகத்தை எழுப்பிவிட்டது அவன் உம்மை விசாரிக்க வேண்டுமென என்னிடம் கூறினான். அதுதான் நீர் அப்படி என்ன பெரிசாய் வாசிக்கிறீர் என அறியத்தான் கூப்பிட்டனான்.’ ஏன அழகான ஆங்கிலத்தில் கூறினார். ஒரு நிம்மதிப்பெருமூச்சுடன் என்னிடமிருந்த சகலவற்றையும் அவரிடம் கொடுத்தேன். அதில் இரண்டு மூன்று sportstar ஞாயிறு ஆங்கில பத்திரிகைகள் சில சரிநிகர் துக்ளக் Fredrick Forsyth இன் ஆங்கில நாவல் ஒன்று என்பன இருந்தன. ஒவ்வொன்றையும் மேலோட்டமாக புரட்டிப்பார்த்து விட்டு ஆங்கில பத்திரிகைகளை உடனடியாகவை திருப்பித்தந்தார். பயபக்தியுடன் அவற்றைப்பெற்றுக்கொண்டேன். Fredrick Forsyth இன் ஆங்கில நாவலின் பின்னட்டையிலுள்ள சுருக்கத்தை வாசித்து விட்டு அந்த ஆசிரியரின் வேறு சில நாவல்களை தான் வாசித்ததாகவும் ஆனால் அந்த குறிப்பிட்ட நாவலை தான் வாசிக்கவில்லை என்றார். ‘அப்டியாயின் நீங்கள் இதை வைத்திருங்கோ’ என்றேன் சற்று மனவருத்தத்துடன். ஒரு கணம் யோசித்துவிட்டு ‘ இதை என்னால் கொழும்பில் இலகுவாக வாங்க முடியும் ஆனால் வன்னியில் உம்மால் இதை வாங்முடியாது’ என்று அதை திருப்பித்தந்தார்.

எங்கே அது கை நழுவிப்போய்விடுமோ என்று பயந்த நான் அதை பறிக்காத குறையாக பெற்றுக்கொண்டேன். அதன் பின்; sportstar களை தந்து விளையாட்டுக்களைப்பற்றி கதைக்க ஆரம்பித்தார் அந்தநாட்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அவர் பிரேசில் விசிறி. எனக்கும் கால்பந்தில் அதிக ஆர்வம் இருந்ததால் அந்த போட்டிகள் பற்றி கால் மணி நேரம் கதைத்தோம். இறுதியாக என்னிடமிpருந்த சரிநிகர் துக்ளக் பற்றி துருவித்துருவி கேட்டார். நான் அவற்றில் வெளியான செய்திகள் கட்டுரைகள் குறித்து ஓரளவு விரிவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூற கவனமாக கேட்டுக்கொண்டிருந்த அவர் இறுதியாக ‘இவற்றைக் கொண்டு போக புலிகள் விடுவார்களா’ என ஆச்சரியத்துடன் கேட்டார்.

‘புலிகளின் சோதனைச்சாவடியில் நிற்கும் எல்லோரும் சரியாகத் தமிழ் வாசிக்க மாட்டார்கள்’ என்றேன். சிரித்துக்கொண்டே அவற்றை என்னிடம் தந்தார்
‘ போமஸ் ஸ்துதி மாத்தையா’