‘மெல்ல’ வரும் கபளீகரம்

(Menaka Mookandi)

நிகழ்காலத்தில், நாம் வாழும் இந்த நொடி, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டுவருகிறது. காலமும் இடைவெளியும், நகரம், கிராமம் என்றில்லாமல், மாற்றங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களால், எமது நாட்டுக்குள்ளேயே இரண்டு உலகங்களைக் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது எனலாம். ஆனால் துரதி​ர்ஷ்டவசமாக, அவ்விரு உலகங்களில் ஒன்றை, மகிழ்வுடன் கண்ணோக்க முடியாது. காரணம், அந்த உலகத்தில், வறுமை, வேதனை, பசி, பட்டினியென, பல்வேறு பிரச்சினைகளுடன் வாழும் மக்களைத் தான் காணக்கிட்டும். மறுபுறம், வானுயர்ந்த கட்டடங்கள், எண்ணிலடங்காத வாகனங்கள், கஷ்டமென்பதே தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களைக் காணலாம். இவ்விரு உலகங்களுக்கும் இடையிலான இடைவெளியை, எவராலும் அடைக்க முடியாதளவுக்குப் பரந்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமைக்கு மத்தியில், இலங்கை மற்றுமொரு பாரிய இனப்பரம்பல் மாற்றத்தைக் கண்டு வருகின்றதென்பதைப் பற்றித்தான், இங்கு நான் விவரிக்க முனைகிறேன். வடக்கில், பிரதானமாக முல்லைத்தீவு மாவட்டத்தில், மாகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, ​முல்லைத்தீவில் நேற்று முன்தினம், மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று நடத்தப்பட்ட​தென்பதை அனைவரும் அறிவர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு நடத்திய இந்தப் பேரணியின் போது, வடக்குக்கான மகாவலித் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமென, ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கப்பட்டதோடு, குறித்த அபிவிருத்தித் திட்டத்தால், முல்லைத்தீவின் கொக்கிளாய் உட்பட 34 தமிழ்க் கிராமங்கள் பறிபோகக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறான பிரச்சினையானது, வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவில் மாத்திரமன்றி, வடக்கின் ஏனைய பிரதேசங்களிலும் மேலதிகமாக கிழக்கு மாகாணத்திலும் எதிர்நோக்கப்படுகிறது. தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மற்றும் முஸ்லிம் குடியேற்றங்கள், முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் மற்றும் சிங்களக் குடியேற்றங்களென, அன்றாடம் இவ்வாறான குடியேற்றப் பிரச்சினைகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்பிரச்சினையால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், இவ்வாறான பிரச்சினைகளுக்​கே உரிய மாகாணங்களாகவும் அனைவராலும் அறியப்படும் அளவுக்கு, மாற்றுக் குடியேற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆனால், இவ்வாறான குடியேற்றங்கள் மற்றும் இனப் பரம்பல்கள், அவ்விரு மாகாணங்களில் மாத்திரம் இடம்பெற்று வருவதில்லை என்பதே உண்மை. எங்களது நாட்டைப் பொறுத்தவரையில், தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களென, நாங்கள் எங்களுக்குள்ளேயே இடங்களை மாற்றிக் குடியேற்றங்களை மேற்கொள்வது உள்வீட்டுப் பிரச்சினையாகவே பார்க்கப்படும். ஆனால், நாட்டுக்கு வெளியிலிருந்து வந்து, எமது நாட்டில் குடியேறி, நான்கு இனத்தவர்களுக்கு மேலதிகமாக ஐந்தாவதாகவோ அல்லது ஆறாவதாகவோ ஓரினம் பரவலடைவதென்றால், அது எமது மொத்த நாடும் எதிர்நோக்கும் பிரச்சினையில்லையா?

இன்று எமது நாட்டின் பிரதான நகரமான கொழும்புக்குள் கா​லடி எடுத்து வைத்தால், எமது நாட்டுக்கே உரித்தான தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களைப் பார்க்கக் கிடைப்பதை விட, சீனர்கள், கொரியர்கள், மியான்மார் நாட்டினரையே அதிகமாகப் பார்க்கக் கிடைக்கின்றது. கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவோர், அலுவலகப் பணிகளில் பங்காற்றுவோரென மாத்திரமில்லாமல், கொழும்பிலுள்ள பிரபல சர்வதேசப் பாடசாலைகளுக்குச் சென்று பார்த்தால், அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் 75 சதவீதமானவர்களாக, சீனர்கள் மற்றும் கொரியர்களாகவே காணப்படுகின்றனர். இது தான், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள் கொண்டுவந்திருக்கும் பாரிய மாற்றமாகும்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பணியாற்றுவதற்காக, 6,338 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 3,329 வெற்றிடங்கள், மத்திய அரசினால் நிரப்பப்பட வேண்டியுள்ளதாகவும் ஏனைய 3,009 வெற்றிடங்களை, மாகாண அரசு நிரப்பவேண்டி உள்ளதாகவும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய தகைமை, வடக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு இல்லாமையால், வெளி மாவட்டங்களிலிருந்து பணியாளர்களை வரவழைத்து, அவ்வெற்றிடங்களை நிரப்பவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், உரிய தகைமையுள்ளவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதால், உரிய மாவட்டங்களுக்குள்ளேயே அவ்வேலைவாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, வேலைவாய்ப்பற்றுள்ள இளைஞர் – யுவதிகளுக்கு வழங்க, வெற்றிடங்கள் இல்லையென்றும், ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்கக்கூடிய சில அரச நிறுவனங்களில், மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், இலங்கையிலுள்ள தனியார் நிறுவனங்களில், பாரியளவு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் வெளிநாடுகளுக்குச் சென்று உழைப்பதிலும் பார்க்க, இவ்வாறான நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் பணியாற்ற முடியுமென்றும் கூறியிருந்த அமைச்சர், இருப்பினும் எமது நாட்டு இளைஞர், யுவதிகள், இங்கு ​பணியாற்றுவதைக் கௌரவக் குறைவாகக் கருதுவதாகவும், வேலைவாய்ப்பை வழங்க முன்வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்​ைமயில் பலர் இல்லையென்றும், இதனால், சீனா, இந்தியா, மியான்மார் போன்ற நாடுகளிலிருந்து வரவழைத்து வேலைவாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அமைச்சரது இந்தக் கருத்துத் தொடர்பில் அவதானிக்குமிடத்து, அதில் உண்மையில்லை என்று கூறிவிட முடியாது. காரணம், வடக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால், அங்கு காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, போதியளவு இளைஞர் – யுவதிகள் இல்லையென்றில்லை. இருப்பினும், அங்கு வேலைவாய்ப்பற்றுள்ளவர்களில் பலருக்கு, முதலமைச்சர் கூறியதைப் போன்று தகைமையில்லை அல்லது தகைமையிருந்தும், தன்மானம் மற்றும் கௌரவப் பிரச்சினையால், சில தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்பதே உண்மை.

இதுவே, கொழும்பிலும் நடக்கிறது. கட்டுமானப் பணிகள், சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் சில நிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதற்கு, வேலைவாய்ப்பற்றிருக்கும் இலங்கையின் இளைஞர் – யுவதிகள் விரும்புவதில்லை. இவ்வாறான தொழில்களுக்கு, அதிக சம்பளம் கிடைக்கின்ற போதிலும், தன்மானம் மற்றும் கௌரவப் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்கள் எவரும் இவ்வாறான பணிகளில் ஈடுபட முன்வருவதில்லை. இதனால், இவ்வாறான பணிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள நிறுவனங்களும் அரசாங்கமும், வெளிநாடுகளிலிருந்தேனும் ஊழியர்களை வரவழைத்து, பணிகளை இனிதே நிறைவு​செய்யவே முயல்கின்றது.

இதனால் தான், இன்று கொழும்பு நகரம், வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் அவர்கள், எங்கு சென்றாலும் அவர்கள், எதிலும் அவர்களென, சீனர்களும் கொரியர்களும், மியான்மியர்களுமென, கொழும்பில் முன்னெடுக்கப்படும் பாரிய மற்றும் சிறியரக அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்திலும், அவர்களே நிரம்பியுள்ளனர். இது, வடக்கு, கிழக்கு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கும் வியாபிக்கும் நாள் தொலைவிலில்லை.

இது இவ்வாறிருக்க, மலையகத்தையும் குறிப்பாக தோட்டத் தொழில்களைச் செய்வதிலும், வெகு விரைவில் வெளிநாட்டவர்களை எதிர்ப்பார்க்கலாமென்ற நிலைமையொன்றும், தற்போது உருவாகி வருகின்றது. தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றுவதில், இளைஞர் – யுவதிகள் காண்பித்துவரும் வெறுப்பு, அவர்களை நகரங்கள் நோக்கி நகரச் செய்கின்றது. இதனால், தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றக்கூடிய ஆள்புலம் இல்லாமல் போகின்றது. தற்காலத்திலும், சில தோட்டங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்கித்தான் வருகின்றன.

இதனால், இப்பிரச்சினையை முழுமையாக எதிர்கொள்ளும் போது, அதிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்காக, முன்னைய அரசாங்கத்திலிருந்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் பிரதானமாக, வியட்னாம் நாட்டைச் சேர்ந்தவர்களைத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துவருவதற்குரிய பேச்சுகளும் அடிபட்டுக்கொண்டிருக்கின்றன. இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவுகளோ அல்லது அறிவிப்புகளோ, இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் நோக்கும் போது, மாற்றங்களும் மன எண்ணங்களும், எங்களை எங்கு கொண்டுபோய் சேர்த்துக்கொண்டிருக்கின்றன என்பதை, எம்மால் உணர முடியாதிருந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. எமக்குள்ளே நாம் சண்டையிட்டுக்கொண்டும் போர்க்கொடி ஏந்திக்கொண்டும் இருக்கின்றோமே தவிர, அதிலிருந்து விடுபட்டு, எம்மைச்சூழ என்ன நடந்துகொண்டிருக்கின்றதென்பதை உணர மறந்துவிடுகிறோம்.

மாற்றங்கள், அபிவிருத்திகள் என்பவை எமக்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட, எமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதும் முக்கியம். கொழும்பிலிருந்து தெற்கை நோக்கி, குறிப்பாக காலி, ஹம்பாந்தோட்டை வரை வியாபித்திருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களின் இருப்பு, ஏனைய மாவட்டங்களை நோக்கி நகரும் காலம் வெகு தொலைவிலில்லை. தொழிலற்று, வாழ முடியாத நிலைமையில் சிக்கித் தவிப்பதை விட, கிடைக்கும் தொழிலைத் தற்காலிகமாகவேனும் செய்துவந்தால், இந்த நிலைமை தோன்றுவதற்கோ அல்லது இனியும் வியாபிப்பதற்கோ வாய்ப்பில்லை அல்லவா?

அன்று சுதந்திரம் வேண்டுமென்பதற்காக வெளிநாட்டவர்களை விரட்டியடித்த நாம், இன்று எதற்காக அதே வெளிநாட்டவர்களை வரவழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது குறித்துச் சிந்திக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இனியேனும் விழித்துக்கொள்வோம்; எமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வோம்.

படப்பிடிப்பு: ஷெஹான் குணசேகர