வெருகல் கலாசாரம்

வெருகல் ஒரு சிறப்பு மிகு கலாசாரத்தின் சங்கமம் கொட்டியாரத்தின் பெருமையயை பறை சாற்றும் உறவுகளின் சந்திப்பாய் தடம் பதித்த ஒரு பண்பாட்டு படர்ச்சி. திருகோணமலைத் தமிழகமும் மட்டக்களப்பு தமிழகமும் இணைந்த ஒரு தேசத்தார் கோயிலின் வளக்காறாய் நீண்டிருக்கும் தொல் மரபு இங்கு புதைந்து கிடக்கிறது.


வெருகல் கழிமுகம் நம் தொல் தமிழர்களின் அடையாளங்கள் நிறந்த பகுதி முது மக்கள் தாழிகளும் அடையாளச் சின்னங்களுமாய் வரலாற்றை சொல்லித்தரும் மூலங்கள்.
குன்றுகளில் குடைந்திருக்கும் தொல் தமிழ் எழுத்துக்களிலான கல்வெட்டுகள்.பழமை மிகு கோயில்களின் அழிபாடுகளுடன் ஈழத் தமிழர்களின் தொன்ம வரலாற்றை கண்டறிய பதிவுகளாய் நம் கண்முன் விரிந்து கிடக்கும் ஆதாரங்கள்.
மாவலியாள் தன் மடி சிரித்து மகிழ்ந்து உலாவும் கடலுடன் சங்கமித்து களி கொள்ளும் காட்சிகளின் நீசியாய் நொங்கும் நுரையுமாய் பொங்கி பிரவாகித்து ஓடும் அழகு.
இந்த பின்னணியில் வெருகல் சித்திர வேலாயுதர் கோயிலும் அதனையடியொற்றி காலம் காலமாய் தொடரும் கலாசார மரபு திருவிழா காலங்களில் நம்மை சுகானுபத்துனுள் கொண்டு செல்லும் .
சுமார் நாப்பது வருடங்களுக்கு முன் எங்கு திரும்பினாலும் கூடார வண்டில்களின் கூட்டம் திருவிழாவின் கடைசி மூன்று நாளும் நிறைந்திருக்கும்.கூடார வண்டில்கள் சிறு வீடுகளாய் மாறியிருக்கும் காலை மாலை என்னேரமும் சாப்பாடும் சந்தோசமும்.மாவலியாற்றில் குளிப்பதும் கோயிலுக்குள் சாமி கும்பிடலும் நண்பர்களுடன் விளாங்காய் நாவல்ப் பழம் ஆய்தலும் ஆற்றை தாண்டி தாமரைக் காய் ஆய்தலும் சூழ இருக்கும் சோழன் சேனைகளில் சோழன் வாங்கி சுடுதலுமாய் மகிழ்வின் பொழுதுகளாய் கழியும் நாட்கள்.இரவானதும் திருவிழா எத்தனை சந்தோசம் அது இன்றும் நம் மண்ணில் தொடர்கிறது.
திருமலையிலிருந்து கால் நடையாக வருவோர்.வாகனங்களில் வந்து குவிவோர்.கொட்டியாரத்தின் அனைத்து ஊர்களிலிருந்தும் சாரி சாரியாய் அணி வகுத்து வரும் சலங்கை சத்தம் எங்கும் நிறைய அழகுறு காளை மாடுகள் பூட்டிய வண்டில்கள்.
வெருகல் குளக்கோட்டு மன்னனும் ஆடகசெளந்தரியும் சந்தித்த இடம் வன்னிபங்களின் ஆட்சியில் ஒரு மையமாக விளங்கிய இடம் இராஜசிங்க ராஜாக்கள் வழிபட்டு கொடையும் நிவந்தமும் அளித்த ஆலையம்.
என்றும் நம் பண்பாட்டின் உறைவிடம் அது.

(Bala Sugumar)