தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில் மதுவிருந்து தாராளம்

தொண்டைமானாறு அக்கரை பகுதியில், மது பாவனைக்குத் தடை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருப்பினும் இரவு நேரங்களில் மதுவிருந்து தாராளமாக இடம்பெறுவதாக அப்பகுதி மகளிர் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இரவு நேரங்களில், ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வரும் இளஞர்கள் மது அருந்திவிட்டு அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதால், அப்பகுதியில் வாழும் குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

அக்கரை சுற்றுலாக்கடற்கரை இவ்வாண்டு, பிரதேச சபையால் வருடாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. பகல் நேரத்தில் மதுபானம் பாவிப்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அயல் கிராமங்களில் இருந்து வரும் இளைஞர்கள் மதுவிருந்தில் ஈடுபடுவடுவதுடன், போதை தலைக்கேறிய நிலையில் போத்தல்களினை அடித்துடைப்பதுடன், தேவையற்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பெண்களை அழைத்து வரும் செயற்பாடும் இடம்பெற்று வருவதாக அக்கரை மகளிர் சங்கம் தெரிவிக்கின்றது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியுதவியின் கீழ் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் ஊடாக வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த 200 தென்னம்பிள்ளைகள் அழிக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் இளஞர்கள் தென்னம்பிள்ளைகளை இழுத்து எடுத்து பூரான் குத்தி உண்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரதேச சபையின் பொறுப்பற்ற பராமரிப்பே இப்பகுதியில் இவ்வாறான சம்பங்கள் இடம்பெறக் காரணம் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.