“வெறுங்கையுடன் நிற்கிறேன்”

(Karunakaran Sivarasa)

“அளவெட்டி மல்லாகம் ப.நோ.கூ. சங்கத்தின்ர தலைவராக இருந்த ஜெகநாதனும் மகனும் கரண்ட் அடிச்சு பலியாகீட்டினம. இண்டைக்குக் காலமைதான் சம்பவம் நடந்திருக்கு” என்று சொல்லி, அந்தச் செய்தியை வாசித்தார் கே.கே என்று நான் எப்போதும் அன்பாக அழைக்கும் ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் .கிருஸ்ணகுமாரின் குரல் தளம்பியது. அது ஒரு சகோதரனின் இழப்பினால் உண்டான சோகத்தின் தவிப்பு. தத்தளிப்பு.

காலையில் ஜெகநாதன், தங்கள் வீட்டுத் தொலைக்காட்சிக்கான கேபிள் இணைப்பைச் சரிபார்க்கும்போது மின்சாரம் தாக்கியதாகச் செய்தி கூறியது. கேபிள் இணைப்புச் செய்கின்றவர்கள், இணைப்பு வயரை அலட்சியமாக வீசியதால், அந்த வயர் உயர் மின்னழுத்த மின்னிணைப்பில் தொடுக்கப்பட்டிருந்திருக்கிறது. இதைத் தெரியாமல் ஜெகநாதன் அந்த வயரைத் தொட்டிருக்கிறார். அப்படியே அவரை மின்சாரம் தாக்கியது. தந்தையைக் காப்பாற்றுவதற்காக மகன் முயன்றிருக்கிறார். மகனையும் தாக்கியது. அடுத்த மகன் ஓடிவந்து இருவரையும் காப்பாற்ற முயன்றிருக்கிறார். அதில் அவருக்கும் காயம் என்றது இன்னொரு சேதி.

உடல் தளர்ந்து அப்படியே நிலத்தில் இருந்து விட்டேன்.

ஜெகநாதனையும் அவருடைய குடும்பத்தையும் அறிந்தவர்கள் தாங்கிக் கொள்ளவே முடியாத துயரச் சேதி.

ஜெகநாதனை நான் சந்தித்தது 1997 இல். அப்போது நாங்கள் சத்ஜெய என்ற இராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து அக்கராயனில் இருந்தோம். ஜெகநாதனும் யாழ்ப்பாண இடப்பெயர்வில் குடும்பத்தோடு கிளிநொச்சிக்கு வந்து, பிறகு அங்கிருந்து அக்கராயனுக்கு இடம்பெயர்ந்திருந்தார். வன்னிக்கு வந்ததோடு அவர் செய்த ரெலிகொம் நிறுவன வேலை இடைநின்று விட்டது. கூடவே அவர் பொறுப்பு வகித்த கட்டைவேலி – நெல்லியடி ப.நோ.கூ.சங்கத்தலைவர் பதவியும் இல்லாமல் போனது.

ஆனாலும் அவருக்கிருந்த கூட்டுறவுச் சங்கம் பற்றிய அனுபவத்தினாலும் ஈடுபாட்டினாலும் அளவெட்டி, மல்லாகம் ப.நோ.கூ. சங்கத்துக்கான தலைமைப் பொறுப்புக் கிடைத்தது. அப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருந்த பல சங்கங்களுக்கு வன்னியிலும் இன்னொரு நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது. இதன்படி அளவெட்டி, மல்லாகம் கூட்டுறவுச் சங்கத்தலைவராக இருந்த ஜெகநாதன், அந்தச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் தருமராஜாவுடன் அறிமுகமானர்.

தருமராஜாவுக்கும் ஜெகநாதனுக்கும் வாசிப்பில் ஈடுபாடு. இருவருமே புத்தகப் பிரியர்கள். அதனால் என்னிடம் புத்கங்களை இரவல் வாங்குவதற்காக வருவார்கள். அவர்களிடமுள்ள புத்தகங்களை நான் வாங்கிப் படிப்பேன். பெரும்பாலும் மாலை வேளையில் மூவருமாக இலக்கியம், அரசியல், மக்களின் வாழ்க்கை, அவரவருடைய குடும்பங்களின் நிலை பற்றி எல்லாம் பேசுவோம். அப்பொழுது காலச்சுவடு இதழ்கள் இருந்தாற் போலக் கிடைக்கும். அதைப் பகிர்ந்து கொள்வோம். ஜெயமோகனும் சில காலம் தொடர்ச்சியாக எனக்குப் புத்தகங்களை அனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றையும் இருவரும் எடுத்துச் செல்வார்கள். படிக்கிற புத்தகங்களைப் பற்றி விவாதிப்போம்.

இதைத் தொடர்ந்து அக்கராயனில் சிறிய அளவில் வாசகர் சந்திப்புகளையும் புத்தக வெளியீடுகளையும் தேர்ந்த திரைப்படங்களைக் காட்சிப்படுத்துவதையும் நண்பர்கள் சிலராக இணைந்து செய்தோம். இதற்குரிய அனுசரணைகளை நாங்கள் கேட்கும்போதெல்லாம் ஜெகநாதனும் தருமராஜாவும் தங்களுடைய சங்கத்தின் மூலமாகச் செய்தனர். முக்கியமாகச் சினிமாக் காட்சிகளுக்கு. இவர்கள் இருவருடைய ஆதரவினால் சத்யஜித் ரே, அகிரா குரோசோவா, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், மகேந்திரன், பாலுமகேந்திரா மற்றும் மலையாள, வங்க, ஈரானியப் படங்கள் எனப் பல படங்களைத்திரையிட்டோம்.

மட்டுமல்ல, ஒவ்வொரு நிகழ்வையும் தானே முன்னின்று செய்வார் ஜெகநாதன். ஆனால், மேடைக்கொ அரங்குக்கோ வர மாட்டார். “வேலைகளைச் செய்வதே என்னுடைய பொறுப்பு. மற்றதெல்லாம் உங்கடை பொறுப்பு” என்று சொல்லி அமைதியாகச் சிரித்துப் பின்னகர்ந்து கொள்வார். நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் சென்ற பிறகும் அவர் அங்கே நின்று அந்த இடங்களைத் துப்புரவு செய்து மீள் ஒழுங்குக்குக் கொண்டு வந்த பிறகே வீட்டுக்குச் செல்வார்.

இதை விட ஜெகநாதனுடைய இரண்டு மகன்மாரும் எங்களுடைய இரண்டு மகன்களும் ஒரே வகுப்பில் படித்தார்கள். இதெல்லாம் எங்கள் இரண்டு குடும்பத்தையும் நெருக்கமாக்கின. குடும்ப நண்பர்களாக நெருக்கமாக அக்கராயனில் இருந்தோம். 2002 க்குப் பிறகு உருவாகிய புதிய அரசியல் சூழலில் (ரணில் – பிரபாகரன் உடன்படிக்கையினால் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக் காலத்தில்) ஜெகநாதன் குடும்பத்தோடு தன்னுடைய ஊரான கரவெட்டி – கரணவாய்க்குச் சென்றார். நாங்கள் கிளிநொச்சிக்கு பெயர்ந்தோம். ஆனாலும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்வோம்.

2006 க்குப் பிறகான நிலைமைகள் ஜெகநாதனைப் பற்றி நாங்களும் எங்களைப் பற்றி அவரும் கவலைப்படுவதாக இருந்தது. எப்படியோ இரண்டு குடும்பங்களும் மறுபடியும் 2009 ஒக்டோபரில் சந்தித்தோம். அப்பொழுது ஜெகநாதன் மறுபடியும் ரெலிகொம்மில் வேலைக்கு முயன்று கொண்டிருப்பதாகச் சொன்னார். கூடவே யாழ்ப்பாண நகரத்தில் தொலைபேசிக் கடை ஒன்றையும் ஆரம்பித்திருந்தார். அவர் ஏற்கனவே வேலை பார்த்த துறை என்பதால், அவருக்குத் தொலைபேசிக் கடை வாய்ப்பாக இருந்தது.

யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் போதெல்லாம் அவருடைய – வானகம் – கடைக்குச் செல்லாமல் திரும்பியதில்லை. நான் மட்டுமல்ல, கிளிநொச்சியிலும் அக்கராயனிலும் முன்பு இருந்த அத்தனை நண்பர்களும் அவருடைய கடைக்குச் சென்று அவரைச் சந்தித்தே திரும்புவார்கள். அவருடைய கடையில் பல மாதங்களாக எழுத்தாளர் (மயன் /2 ) சு.மகேந்திரனைச் சந்தித்திருக்கிறேன். ஜெகநாதனும் மயன் /2 உம் அங்கும் வலு நெருக்கமாகவே இருந்தனர். யாழ்ப்பாணம், வடமராட்சி போன்ற இடங்களில் நடக்கின்ற முக்கியமான சந்திப்புகள், புத்தக வெளியீடுகளுக்கெல்லாம் வருவார் ஜெகநாதன்.

போன வருசம் ஒரு நாள் இரவு தொலைபேசியில் அழைத்தார் ஜெகநாதன். தான் மறுபடியும் கட்டைவேலி – நெல்லியடிச் சங்கத்தின் இயக்குநர் சபையில் இருக்கிறேன். அங்கே உள்ள நூலகத்தை மறுபடியும் இயக்குவதைப்பற்றி யோசிக்கிறோம். உங்களால் இதற்குப் பங்களிக்க முடியுமா? என்று கேட்டார். ஏற்கனவே அந்தச் சங்கத்தின் தலைவராக இருந்த சிதம்பரப்பிள்ளை தொடக்கிச் சிறப்பாக நடத்திய காரியம் அது. அதைத் தான் தொடர விரும்புவதாகச் சொன்னார்.

நல்ல விசயம். ஆனால், அதற்கு அங்கே – உங்கள் இடத்தில் – கரவெட்டி, கரணவாய் பிரதேசத்திலேயே பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள் என்று இராகவன், குப்பிளான் ஐ.சண்முகன், கருணைரவி, தானா விஷ்ணு, யோ.கர்ணன், செ. யோகராசா, ச. முருகானந்தன், நா. யோகேந்திரநாதன், இராஜேஸ்கண்ணா, தெணியான், கலாமணி, யாத்திரீகன், துவாரகன் போன்றோருடைய பெயர் விவரங்களையும் கொடுத்திருந்தேன்.

சில நாட்கள் கழித்து மறுபடியும் அழைத்து இன்னொரு புதிய சேதியைச் சொன்னார் ஜெகநாதன். தங்களுடைய சங்கத்தின் மூலமாக ஒரு புத்தகக் காட்சியை – விற்பனையோடு செய்யப் போவதாக. அதற்கும் என்னுடைய ஆலோசனையும் உதவியும் தேவை என்றார். நான் மேற்படி நண்பர்களைப் பற்றிச் சொல்லி, அவர்களோடு தொடர்பு கொள்ளுமாறு சொன்னேன்.

அவர் கூறிய மாதிரியே நெல்லியடி மத்திய கல்லூரியில் ஒரு புத்தக் காட்சிக்கும் விற்பனைக்குமான ஏற்பாட்டைச் செய்து அதைத் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார். ஈழத்தில் பதிப்புத் துறையிலும் வெளியீட்டுத் துறையிலும் ஈடுபடுகின்ற அத்தனைபேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த நிகழ்வில் எழுத்தாளர் தெணியானுடன் கரவெட்டிப் பிரதேச செயலர், வடமராட்சிக் கல்விப் பணிப்பாளர், வரணிப்பொது மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நானும் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் பற்றியும் கட்டைவேலி – நெல்லியடிச் சங்கத்தின் பண்பாட்டுப் பெறுமதியைப் பற்றியும் பேசினேன்.

புத்தகக் காட்சிக்கு என்னிடம் புத்தகங்களையும் வாங்கியிருந்தார் ஜெகநாதன். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு அந்தக் காட்சிக்கு பெரிய ஆதரவு கிட்டியிருக்கவில்லை. ஏறக்குறைய 20 லட்சம் ரூபாய்க்கு மேலான பெறுமதியில் தங்களுடைய சங்கத்தில் புத்தகங்கள் உண்டு என்றார் ஜெகநாதன். இந்தக் காட்சியும் விற்பனையும் சற்று ஊக்கமாக அமைந்திருந்தால், ஈழத்துப் படைப்பாளிகளின் புத்தகங்களை மறுபடியும் (சிதம்பரப்பிள்ளையின் காலத்தில் நடந்ததைப்போல) வாங்கலாம் என்று சொல்லிக் கவலைப்பட்டார்.

நேற்று முன்தினமும் நானும் ஜெகநாதனும் அவருடைய தொலைபேசிக் கடையில் (வானகத்தில்) நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். “தமிழ்ச்சமூகம் வரவரச் சுருங்கிக் கொண்டிருக்கு. பொதுச் சிந்தனை நல்லாக் குறைஞ்சிட்டு. ஒருத்தரும் வாசிக்கிறார்களில்லை. யாரோடும் மனம் விட்டு ஒரு விசயத்தைப் பற்றிப் பத்து நிமிசம் கதைக்கேலாத அளவுக்கு நிலைமை மாறீட்டுது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு எவ்வளவு மதிப்பும் மரியாதையும் ஒரு காலமிருந்தது. இப்ப சங்கத்துக்கு வேலைக்கு ஆள் தேடுறதே பெரிய பாடாயிருக்கு. இந்த அரசாங்கம் கூட்டுறவுச் சங்கம் போன்ற பொது அமைப்புகளை இல்லாமற் செய்து கொண்டிருக்கு. ஆனால் எப்போதும் நெருக்கடிக் காலத்தில், இடர்க் காலத்தில் சங்கங்களே உயிர்நாடி. இதை ஆர்தான் புரிஞ்சு கொண்டு நடக்கிறார்கள். இப்ப சங்கம் எண்டால் ஏதோ பகிடியான இடம் என்ற மாதியான ஒரு மனோநிலை உருவாகீட்டுது. இடது சாரிச் சிந்தனையை நாங்கள் வளர்க்கேல்ல எண்டால், அழிஞ்சிடுவம். கொஞ்சம் கொஞ்சமாக இளைய தலைமுறையிடம் இடதுசாரியக் கருத்துகளைப் பற்றி நாங்கள் சொல்லத்தான் வேணும்.. அதின்ரை அரசியல் பெறுமதியைப் பற்றி, அதனுடைய முக்கியத்துவத்தைப் பற்றி ” என்று அரசியல், தமிழ்ச்சமூகத்தின் இன்றைய நிலைமை, கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, வாசிப்பு, புத்தகங்கள், நூலகப் பயன்பாடு என்றெல்லாம் பல விடயங்களைப் பற்றியும் இருவருமாகக் கதைத்தோம்.

“புத்தகங்களை வெளியிடுவதற்கான நல்லதொரு பதிப்புச் சூழலை எப்படியாவது உருவாக்க வேணும். அதைப்பற்றி யோசியுங்கோ” என்பார் எப்போதும். அன்றும் இதைப்பற்றி வலியுறுத்தினார்.

அப்படியே தன்னுடைய குடும்பத்தைப் பற்றியும் சொன்னார்.

மூத்த மகனுக்கு எப்படியும் இன்னும் இரண்டொரு மாதங்களில் வேலை கிடைத்து விடும் என்றார். அதைத் தொடர்ந்து மகனுக்குத் திருமணம் செய்யவேணும். இப்பவே அவனுக்கு முப்பது வயதாகீட்டுது. ஆட்டுக் கிடாய்க்கு வயதேறினால்தான் மதிப்பு. மாப்பிள்ளைக்கு வயதேறினால் அது மதிப்பிறக்கம். வயது கூடினால் பிறகு அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பாதிப்பு. பிள்ளைகளைச் சரிவரப் பாக்கேலாமல் போயிடும்.

மகனுக்குக் கலியாணம் நடக்கிறதுக்கிடையில மகளுக்கு ஏற்பாடு செய்ய வேணும். அவளுக்கும் 24 வயது. வெளிநாட்டு மாப்பிள்ளையில் ஈடுபாடில்லை. உள்ளுரில் ஒரு நிரந்தரத் தொழில் உள்ள நல்ல பெடியன் யாராவது இருந்தால் சொல்லுங்கோ. சில இடங்களில கேட்டு வந்திருக்கு. இப்பவும் ஒரு இடத்தில் இருந்து கேட்டிருக்கிறார்கள். வெளிநாட்டுச் சம்மந்தத்தில் எங்களுக்குப் பெரிய விருப்பமில்லை. பிள்ளைக்கும் எங்களை விட்டுப் போகப் பிடிக்கேல்ல. ஏழாலையில் போராளிகளாக இருந்து சாவடைந்த இரண்டு மாவீரரைக் கொண்ட குடும்பத்துப் பெடியனை மாப்பிள்ளை பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறார்கள். அதைத்தான் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

எனக்குப் பென்சன் பணம் வருகுது. வயல் இருக்கு. அதையும் குடுப்பம். வீடும் வளவும் இருக்கு. அதுவும் மகளுக்குத்தான். வெளியில போறதை விட பிள்ளை, எங்களோட – ஊரோட இருந்தால் சொந்த பந்தம், ஊர் உறவு, கோயில் குளம் எண்டு எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கலாம்! வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டு பிள்ளையை நினைச்சு நாங்களும் எங்களை நினைச்சு அவவும் இருக்கிறது பெரிய தத்தளிப்பு. அதை பிள்ளையும் விரும்பேல்ல என்றார்.

கூடவே, தான் கடையோடு மட்டுமில்லாமல் சிறிய அளவில் ஊர்க்கோழிகளை வளர்ப்பதாகவும் இரண்டு ஆடுகளைப் பராமரிப்பதாகவும் சொன்னார். காலையில் ஆட்டுக்குக் குழை வெட்டி வந்து கட்டிப்போட்டுத்தான் கடைக்கு வருகிறேன். எலுமிச்சை, சிறிய அளவில் வீட்டுத் தோட்டம் என வீட்டுத் தேவைக்கானதையெல்லாம் செய்து கொண்டிருப்பதையும் கூறினார்.

உண்மையே. ஓயாத அலையே அவர். வன்னி இடப்பெயர்வுகளினால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜெகநாதன். ஒரு தடவை இதைப்பற்றிக் கதைக்கும்போது மெல்லிய கவலையோடு சொன்னார், “நாங்கள் வன்னிக்குப் போயிற்று ஊருக்கு வந்தால், ஊரில அவனவன் எங்கேயோ போட்டான். வீடும் வளவும் சொத்தும் காசும் வசதியும் எண்டு நாங்கள் எட்டியும் தொட முடியாத அளவுக்கு எல்லாரும் சொத்துச் சேர்த்து வசதியாகிட்டார்கள்” என்று.

ஆனால், இதையிட்டு அவர் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. இந்தப் பின்னடைவிலிருந்து மீண்டெழுவதற்காகத் தன்னால் முடிந்தளவுக்கு முயற்சிகளைச் செய்து கொண்டேயிருந்தார். நல்லதோர் உழைப்பாளி. நல்ல முயற்சியாளர். அதே வேளை பொது விடயங்களிலும் அதே கரிசனை. இந்தச் சமனிலை ஆச்சரியமூட்டும் ஒன்று.

எப்பொழுதும் எதைப்பற்றியும் விரிவாகக் கதைக்கக் கூடிய ஆளுமை ஜெகநாதன்
அந்தளவுக்குப் பல்துறை ஈடுபாடும் அவற்றில் அறிவும் உள்ளவர். எப்போதும் பொது நன்மைகளைக் குறித்தே சிந்தித்துப் பழகியவர். எளிமையும் அன்புடன் நட்பைப் பகிர்வதும் ஜெகநாதனின் அடையாளங்கள். யாரிடத்திலும் பிரதி உபகாரங்களை எதிர்பார்ப்பதில்லை அவர். அவர் சினந்து நான் கண்டதில்லை. மெல்லிய குரலில் மிகத் தீவிரமாகக் கதைப்பார். உரையாடும்போது நெகிழ்வும் கனிவும் மிளரும். வசீகரமான குரல்.

எந்த நெருக்கடியிலும் மனங் கோணாமல் நண்பர்களோடு உரையாடுவார். இவ்வளவுக்கும் அவருடைய தொழில் பின்னாளில் வணிகம். வாடிக்கையாளர்களையும் முகம் சுழிக்க வைக்காமல் நண்பர்களையும் புறக்கணிக்காமல் சமநிலையாக நடத்தும் வித்தை ஒரு கலையே.
இன்றைய நாட்களில் இப்படியானவர்கள் ரொம்பக் குறைவு. காலம் நமக்களித்த பரிசு ஜெகநாதன் என்று எப்போதும் நினைப்பேன்.

அந்தப் பரிசை காலமே இப்படிச் சடுதியாகத் தட்டிப் பறித்திருக்கக் கூடாது.

தாங்க முடியவில்லை. எதனாலும் ஆற முடியாத துயரம் இது.

எப்படி அந்த முகத்தைப் பார்ப்பது? எப்படி இந்த இழப்பை ஈடு செய்வது? என்று தெரியவில்லை.

ஜெகநாதனையும் இழந்தோம்.

இப்பொழுது வெறுங்கையுடன் நிற்கிறேன்.