வெள்ளியன்று பதவியேற்ற வியாழனால் கூட்டமைப்புக்கு பிடித்திருக்கும் சனி!

தற்போதைய அரசியல் சூறாவளியை தனது மெகா துரோகத்தின் மூலம் தொடக்கிவைத்த மைத்திரியின் வழியில் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி மட்ட துரோகங்களும் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. இப்படியான சூழ்நிலைகளில் வழக்கமாக முஸ்லிம் தரப்பிலிருந்துதான் கட்சித்தாவல்கள் இடம்பெறும். “தொப்பி பிரட்டி விட்டார்கள்”, “விலைபோய்விட்டார்கள்” என்று ஆங்காங்கே வசைபாடல்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பிக்கும். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நூல் கட்டிவிட்டதுபோல “முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ரணிலின் பக்கம்தான்” என்று ஒரேபிடியாக இருந்துகொண்டிருக்க, தமிழ்த்தரப்பிலிருந்து ‘முதலாவது வீரர்’ தனது சாகசத்தை காண்பித்திருக்கிறார்.பிரதி அமைச்சுப்பதவி ஒன்றை தூக்கி எறிய, பாய்ந்து பிடித்துள்ள வியாழேந்திரனை அழைத்துக்கொண்டுபோய் ISIS தீவிரவாதிகள் கழுத்து வெட்டிக்கொலை செய்வதற்கு முன்னர் படம் எடுத்து வெளியிடுவதுபோல மகிந்தவுக்கும் மைத்திரிக்கும் நடுவில் வைத்து படமெடுத்து ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். “தமிழனை நாங்கள் வளைத்துவிட்டோம்”, “அவர்களின் ஒற்றுமையை நாங்கள் உடைத்துவிட்டோம்” – என்ற ஏளனச்சிரிப்பு மைத்திரியிலும் மகிந்தவிலும் தேனாக வடிய, நடுவில் நாக்கை தொங்கப்போட்ட வண்ணம் நின்றுகொண்டிருக்கிறார் வியாழேந்திரன்.

வியாழேந்திரனின் அரசியல் போக்கு பல மாதங்களாகவே கட்சிக்கு விசுவாசமாக இருக்கவில்லை என்கின்றன கட்சி வட்டாரங்கள். அண்மையில் கொழும்பு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி, வெளிநாட்டு விஜயங்களில் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் சகலதுமே அவர் பாய்வதற்கு தயாராக சண்டிக்கட்டோடுதான் அலைந்துகொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. கட்சிக்கூட்டங்களுக்கு வராமல் தனது எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் கட்சி முடிவுகளுக்கு முரண்டுபிடிப்பவராகவும் அவர் போர்க்கொடி தூக்கிக்கொண்டு நிற்பதை பார்த்து அவ்வப்போது சித்தார்த்தனிடம் சம்பந்தர் நலம் விசாரிப்பது வழக்கம். “ச்சீ….ச்சீ…அவன் எங்கட பெடியன் ஐயா” – என்று சித்தரும் சமாளித்துக்கொள்வார். ஆனால், அவர் கொடுத்து வந்த சேர்டிபிக்கெட் வெள்ளி மாலையோடு காலாவதியாகியிருக்கிறது.

வியாழேந்திரன் தனது கட்சித்தாவலுக்கு என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் கட்சி தாவியதாக சொன்னால், அதைப்போல ஒரு நகைச்சுவை வேறெதுவுமில்லை. ஏனெனில், வியாழேந்திரன் விரும்புவதைப்போல மகிந்த ஆட்சிக்கு வந்தால், கிழக்கில் பிள்ளையான் – கருணாவின் ஆட்சிதான் கொடிகட்டிப்பறக்கும். கருணா இப்போதே “நாளை நமதே” என்று பாடிக்கொண்டு எம்.ஜீ.ஆர் போல வீதியில் திரிகிறார். இந்த சீத்துவத்தில் வியாழேந்திரன் போய் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம். கூடவே, தான் இவ்வளவு காலமும் போட்ட போலித்தேசிய வேஷத்தை உரிந்துவிட்டு தனது வாக்களர்களின் மத்தியில் எந்த முகத்தோடு போய் நிற்கப்போகிறார் என்பதும் அவர் கணக்கும்போட்டு பார்க்கவேண்டிய இன்னொரு விடயம்.

இது இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்க –

கூட்டமைப்பிலுள்ள இன்னொரு பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நடைபெறப்போகும் பிரதமருக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் நடுநிலை வகிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

அதேவேளை, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் சிறிதரன் மற்றும் வன்னி மாவட்ட உறுப்பினர் சார்ள்ஸ் ஆகியோரும்கூட நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் நடுநிலமை வகிக்கப்போவதாக குரல் எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு சம்பந்தர் உரிய வகையில் பதில் கொடுத்திருப்பதாக தெரியவருகிறது.

ஆட்சியை அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்கள் வேட்டையில் மகிந்த தரப்பு தொடர்ந்தும் மும்முரமாக வேலை செய்துகொண்டேயிருக்கிறது. 113 பேரை பையில் போட்டுக்கொண்டுதான் நாடாளுமன்றம் ஏறவேண்டும் என்பதில் ஒட்டுமொத்த ராஜபக்ஷக்களும் இவ்வளவு காலமும் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் இறக்கி வைத்திருப்பதாக தெரிகிறது. 2009 போரில் எத்தனையோ நாடுகளுக்கே தண்ணியைக்காட்டிய – டீல்களின் “பிதாமகன்” – பசில் ராஜபக்ஷவின் கைத்தொலைபேசி பட்டரி உருகி காதுபக்கத்தால் வழிந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லையாம். அவ்வளவுக்கு deal மேல் deal. Double Deal, Triple Deal என்று போய்க்கொண்டிருக்கிறதாம்.

ஆனால், இங்கு நடைபெறும் ஒட்டுமொத்த கட்சிதாவல் படலத்திலும் மிக உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ரணில் தரப்பிலிருந்துதான் மகிந்த தரப்புக்கு கட்சிதாவல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதே தவிர, மகிந்த தரப்பிலிருந்து ஒரு குருவிகூட ரணில் பக்கம் வரவே இல்லை.

“மகிந்த சிந்தனை” தொடர்கிறது.

(ப. தெய்வீகன்)