பாகிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன

பாகிஸ்தானில், மதநிந்தனைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்த கிறிஸ்தவப் பெண்ணை விடுதலை செய்வதற்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் (01), போராட்டங்கள் தொடர்ந்தன. கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், வீதிகளை மறித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர்.ஆசியா பிபி என அழைக்கப்படும் ஆசியா நொரீன் என்ற குறித்த பெண்ணுக்கு, மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, ஏற்கெனவே 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமில்லையெனத் தெரிவித்து, நேற்று முன்தினம் (31) அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும், அவர் விடுதலை செய்யப்படக் கூடாது என்று, ஆரம்பத்திலிருந்தே போராடி வந்த கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், அவரின் விடுதலையைத் தொடர்ந்து, வீதிகளை மறித்து, தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியிலும் கிழக்கு நகரமான லாகூரிலும், முக்கியமான 10 வீதிகளை மறித்து, போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கராச்சியிலும் லாகூரிலும் மாத்திரமல்லாது, தலைநகர் இஸ்லாமாபாத்திலும், தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

ஆசியா பிபி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உதவ முயன்ற இரண்டு அரசியல்வாதிகள் கொலை செய்யப்பட்டு, கொலைகளில் ஈடுபட்டவர்கள் கதாநாயகர்களாகக் கருதப்படும் பாகிஸ்தானில், ஆசியா பிபியின் விடுதலை, கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளமையை, இப்போராட்டங்கள் காட்டுகின்றன.