1981 யூன் யாழ்ப்பாணச் சம்பவங்கள் வெளியுலகிற்குப் போன விதம்!

யாழ் நகரில் அரசின் கைக்கூலிகள் நடத்திய அட்டூழியங்கள் பற்றி குடாநாட்டுக்கு வெளியே எவருக்கும் தகவல்கள் தெரிந்திருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் இப்பொழுது உள்ளது போன்ற நவீன தொடர்பூடகங்கள் இல்லாததால் இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட மற்றையப் பிரதேசங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான செயல்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் ஏதும் இருக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் அப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருந்த இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்கும் இடையிலான இயக்கத்தின் (மேர்ஜ்) சில முக்கியஸ்தர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களும் (அவர்களின் பெயரைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்காது) இணைந்து யாழ் நகரில் நடைபெற்ற சம்பவங்கள் சம்பந்தமாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும், முடியுமானால் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கும் ஒரு அறிக்கையை அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

அதன் பிரகாரம் ஆங்கிலத்தில் ஒரு அறிக்கையைத் தயார் செய்தனர். (நான்கு பக்கங்கள் என ஞாபகம் – யாரிடமாவது அது இருக்குமாயின் அதைப் பகிரங்கப்படுத்தினால் நன்று) அடுத்ததாக அதை அச்சிட வேண்டும். குறைந்தது ஆயிரம் பிரதிகளாவது அச்சிட வேண்டும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இருந்த இடதுசாரிக் கட்சி ஒன்றுக்குச் சொந்தமான அச்சகம் ஒன்றை அணுகினர். ஏற்கெனவே அந்த அச்சகம் பல்வேறு இயக்கங்களின் பத்திரிகைகளையும் இதர வெளியீடுகளையும் அச்சிட்டுக் கொண்டிருந்தது.

அந்த அச்சகத்தினர் மேற்படி அறிக்கையை அச்சிட்டுத்தர ஒப்புக் கொண்டனர். விடயம் மிக இகசியமாக இருக்க வேண்டுமென்பதற்காக அச்சகத்தின் நிர்வாகிக்கும், அங்கு வேலை செய்த பிரதான ஊழியர் ஒருவருக்கும் மட்டும் தகவல் தெரிந்திருந்தது.

யாழ் நகரில் கடைகள் எல்லாம் பூட்டப்பட்டு இருந்ததால் அச்சகத்தைத் திறந்து வேலை செய்வது சிக்கலானது. அதுமாத்திரமின்றி, அந்த அச்சகத்துக்கு முன்னாலிருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பதில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர். எனவே அவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது.
இன்னொரு பிரச்சினையும் இருந்தது. அந்த அச்சகத்தில் இருந்த எழுத்துகளை மட்டும் பயன்படுத்தினால் சில வேளைகளில் அந்த அறிக்கை அம்பலத்துக்கு வந்தால் பிரச்சினைகள் வரலாம். அதற்காக அச்சகத்தினர் ஒரு உபாயம் செய்தனர். அதாவது தமக்குத் தெரிந்த நாலைந்து அச்சகங்களில் வெவ்வேறு அளவுகளிலானதும், வெவ்வேறு வடிவங்களினாலானதுமான எழுத்துக்களை எடுத்து வந்து அறிக்கையை அச்சுக்கோர்த்து முடித்தனர். பூட்டிய அச்சகத்துக்குள் இவையெல்லாம் செய்து முடிக்கப்பட்டன. ஆனால் அச்சிடும் போது ஒலி வெளியே கேட்பதை தடுக்க முடியாது.

அச்சிட்ட தினத்தன்று அச்சக ஊழியர் அச்சிடும் வேலையில் ஈடுபட்டிருக்க, நிர்வாகி ஒரு கதவை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு முன்பக்கத்தில் அமர்ந்திருந்தார். இதை அவதானித்த முன்னால் காவல் கடமையில் இருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் அச்சகத்துக்கு வந்து எட்டிப் பார்த்தார். அவர் சில வேளைகளில் வரக்கூடும் என எதிர்பார்ப்பு இருந்ததால், ஆரியகுளம் சந்தியிலிருந்த நாகவிகாரைக்கு முன்னர் சிங்களத்தில் அச்சிட்டுக் கொடுத்த பற்றுச்சீட்டு ஒன்றின் மாதிரி மேசையில் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் அச்சக ஊழியருக்கு நன்கு சிங்களம் பேச வருமென்றபடியால் அவரும் உடன் வந்து அந்தச் சிப்பாயுடன் சந்தோசமாக உரையாடினார். அதன் பின்னர் அந்தச் சிப்பாய் உள்ளே வந்து எதையும் ஆராய்ந்து பார்க்காமல் அச்சக விறாந்தையில் உலாவியபடி இருந்தார்.

அறிக்கை அச்சிட்டு முடிந்ததும் பார்சல் செய்யப்பட்டு கூரை சீலிங்குக்குள் மறைத்து வைக்கப்பட்டது. சற்று நேரத்தில் மண்டைதீவுக்கருகில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கிளையொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான – அதன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த – பச்சை நிற ஜீப் வண்டி ஒன்றில் வந்து இறங்கினார். அவரிடம் பார்சல் கையளிக்கப்பட்டது. அத்துடன் அச்சகத்தினரின் பணி முடிந்தது. அவர்கள் “அப்பாடா” என நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அந்த ஜீப் வண்டியில் வந்தவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபடி அந்தப் பார்சலை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்திருந்த முக்கியமான மத நிறுவனம் ஒன்றின் தலைமைக் காரியாலயத்தில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் அந்த அறிக்கையின் பிரதிகள் ‘எப்படியோ’ கொழும்பு போய்ச் சேர்ந்துவிட்டது. அது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்த சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டும் விட்டது.

துணிகரமாக அந்த அறிக்கையை தனது அலுவலக வாகனத்தில் வந்து எடுத்துச் சென்றவர் வேறு யாருமல்ல. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குகமூர்த்தி என்பவரே அவர். அவர் பின்னர் பிரேமதாச ஆட்சிக் காலத்தில் கொழும்பிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் காரியாலயத்தில் வேலை செய்யும் போது ‘இனந்தெரியாதவர்களால்’ கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுவிட்டார்.

அன்று அந்த கடமையைத் துணிகரமாகச் செய்த குகமூர்த்தி போன்றவர்களின் அத்தகைய பணிகள் பலருக்கும் தெரியாமலே போய்விட்டது. அதனால் அப்படியானவர்களின் பெயர் வரலாற்றில் இடம் பெறாமலே போய்விட்டமை தூரதிஸ்டவசமானது.