70களில் சபிக்கப்பட்ட சிறிமாவின் தன்னிறைவுப் பொருளாதார முயற்சி!

இலங்கையின் வரலாற்றில் பொருளாதார தன்னிறைவுக்காக அதிகபட்ச முயற்சியைச் செய்த அரசாங்கமாக 1970ஆம் ஆண்டு ஆட்சியமைத்த சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஆட்சியைக் குறிப்படலாம். சிறிமாவின் சுதந்திரக்கட்சி, இடதுசாரிக்கட்சிகளின் கூட்டு முன்னணி என்பது 1960 ஆம் ஆண்டு சிறிமா முதற் தடவையாக ஆட்சியமைத்தபோதும் இருந்த அதே இடதுசாரிக் கூட்டு தான். அதுபோல 1960ஆம் ஆண்டு அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம்.பெரேரா தான் 1970 அரசாங்கத்திலும் நிதி அமைச்சராக இருந்தார்.

பொருளாதாரமே அனைத்தினதும் அடித்தளம் என்கிற அடிப்படையைக் கொண்டவை இடதுசாரிக் கட்சிகள். கியூபப் புரட்சி நடந்து முடிந்தம் சேகுவேரா தனக்கு நிதி அமைச்சைத் தாருங்கள் என்று கூறி அந்த கியூபப் புரட்சியின் வெற்றிக்கு அர்த்தம் சேர்க்கும் முகமாக ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்கள் அந்த நாட்டின் செழிப்புக்கும், தன்னிறைவுக்கும் வழிவகுத்ததை மறந்திருக்க மாட்டோம். 

இலங்கையிலும் ஆளும் கூட்டணியில் இடதுசாரிக் கட்சிகள் பொருளாதார மாற்றத்தைத் தான் பிரதான பொறுப்பாக ஆக்கிக்கொண்டார்கள். 1960, 1970 அரசாங்கங்களில் அப்படித்தான் என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக ஆனார். 1960 அரசாங்கத்தில் ஐந்து தடவைகள் நிதி அமைச்சர்கள் மாற்றப்பட்டனர். அந்த ஐவரில் டீ.பி.இலங்கரத்னவைத் தவிர மற்ற ஐவரும் இடதுசாரிப் பின்னணியைக் கொண்டவர்கள். இறுதியாகத் தான் என்.எம்பெரேரா நிதி அமைச்சராக ஆனார். அந்த ஆட்சி நிறைவுற சில மாதங்களே இருக்கும் நிலையில் தான் அவர் அப்பதவியை வகித்தார். ஆனால் 1970 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் போது பெரிய மாற்றங்களை செய்வதற்கான ஆதரவு சிறிமாவிடம் இருந்தும் அமைச்சரவையிடம் இருந்தும் கிடைத்தது. 

1970 அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் 1972 இல் இலங்கை பிரித்தானியாவின் டொமினியன் தன்மையிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது மட்டுமன்றி அது சோஷலிச ஜனநாயக குடியரசாக பெயர் மாற்றப்பட்டது. பிரித்தானியர் கால அரசியலமைப்பும் அகற்றப்பட்டு புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது. ஜே.ஆர் ஜெயவர்தன 1978இல் மூன்றில் பெரும்பான்மையோடு அந்த அரசியலமைப்பை மாற்றியபோதும் ‘இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு’ என்பதை மட்டும் மாற்ற முடியவில்லை என்றால் அதற்கு 1972இல் போடப்பட்ட அத்திவாரம் முக்கியமானது. அதுவே இன்றும் தொடர்கிறது.


1972 பொருளாதார சீர்திருத்தக் காலத்தில் உயர் தட்டு வர்க்கத்திலிருந்து சாமான்யர்கள் வரை இடைக்கால நெருக்கடிகளை அனுபவிப்பார்கள் என்பதை அரசும் அறிந்திருந்தது. மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நீண்ட கால பொருளாதார விளைவைத் தரப்போகும் அந்த சீர்திருத்தத்தை மக்களால் வரவேற்க முடியவில்லை. ‘தற்காலிக நெருக்கடிகளை’ அது தற்காலிகம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் திண்டாடினார்கள். பீதியுற்றார்கள். அதன் விளைவு அரசு கடும் மக்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டது. முதலாளித்துவ சார்பு ஐக்கிய தேசியக் கட்சியும் இதனை நன்றாக பயன்படுத்திக்கொண்டு வரலாறு காணாத வெற்றியை தமதாக்கிக் கொண்டதுடன், வரலாறு காணாத தோல்வியை சுதந்திரக் கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஏற்படுத்தியது.

தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தேர்ந்த இடதுசாரித் தலைவரான நிதி அமைச்சர் என்.எம். பெரேரா பல திட்டங்களை சிறிமாவின் அந்த ஆட்சி காலத்தில் கொண்டுவந்தார். பண வீக்கம் குறைந்தது. வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியமான பல பொருட்கள் இறக்குமதி செய்வதுகூட தடை செய்யப்பட்டது.

அவசியமான மருந்துகள், எரிபொருள் போன்ற சில பொருட்களைத் தவிர ஏனைய அனைத்தின் மீதும் இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன. வருவாய் சமநிலையைப் பேணுவதற்காக சொத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேவேளை இலங்கையில் இருந்து ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டன.

இந்த காலப்பகுதியில் உணவுத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி அனைவருக்கும் சமமாக கிடைக்கச் செய்வதற்காக கூட்டறவுச் சங்கங்களும், கூப்பன் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக உணவு, உடை போன்றவற்றுக்கு இந்தக் கூப்பன் முறை பயன்படுத்தப்பட்டது. சுதந்திரக் கல்வி, மருத்துவம் என்பவை இடையூறின்றி கிடைக்கச் செய்வதற்காக அவை தேசியமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.

தொழிற்சாலைகளை ஏற்படுத்தி விரிவுபடுத்துவதன் மூலம் தொழிற்சாலைகள் பல ஆரம்பிக்கப்பட்டன. கந்தளாய், செவனகல சீனித் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டன. காங்கேசன்துறையை விட புத்தளம், காலி ஆகிய இடங்களில் சீமெந்துச் தொழிற்சாலைகள் மேலதிகமாக ஆரம்பிக்கப்பட்டன. களனி ரயர் கூட்டுத்தாபனத்திலிருந்து இந்தியாவுக்கு ரயர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வாழைச்சேனை காகித தொழிற்சாலை தேசியமயமாக்கப்பட்டது. துள் டெக்ஸ், வே டெக்ஸ், டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.

அரச கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்டது. தனியார் தொழிற்துறைகள் பல அரசமயப்படுத்தப்பட்டன. உதாரணத்துக்கு 1970இல் கனியவள நிலக்கரி சுரங்கத் தொழில், 1977இல் பெருந்தோட்டங்கள் போன்றன இவ்வாறு அரசமயப்படுத்தப்பட்டன. மலையகத்தில் பல தோட்டங்கள் வெளிநாட்டவர்கள் வசம் இருந்தன. அவற்றை அரசு சுவீகரித்து மக்கள் மயப்படுத்தியது. பெருந்தோட்டங்களை நிர்வகிப்பதற்காக அரச பெருந்தோட்ட கூட்டுத்தானமும் அமைக்கப்பட்டது. 1973இல் இவ்வாறு பத்து கூட்டுத்தாபனங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

வெளிநாட்டு நிறுவனங்களின் வசம் இருந்த தனியார் பாடசாலைகள், கல்லூரிகள் அத்தனையும் கூட அரசாங்கம் சுவீகரித்துக்கொண்டது. அப்பாடசாலைகள் அரச பாடசாலைகள் ஆகின.

1971ஆம் ஆண்டு கொடுவரப்பட்ட, நிறுவனங்களை கையகப்படுத்தும் சட்டத்துக்கு ஊடாக 1971-1976 காலப்பகுதிக்குள் 24 தனியார் நிறுவனங்களை அரசு சுவீகரித்துக்கொண்டது.

1974 மே மாதாமளவில் சிறு காணி வைத்து உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்காக ‘தென்னை புனர்வாழ்வு நிவாரண முறை’ என்கிற ஒரு திட்டத்தை ஆரம்பித்து இருபது ஏக்கருக்கு குறைவான நிலத்தை வைத்து உற்பத்தி செய்யும் முனைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கி ஊக்குவித்தது. அதுபோல சிறுபோக செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான குறைந்த வட்டிக் கடனையும் அறிமுகப்படுத்தியது.

இரத்தினக்கல் தொழிற்துறையை பலப்படுத்துவதற்காக அரச இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.

டச்சு காலத்துப் பயிரான புகையிலை உற்பத்தியில் தங்கியிருந்த யாழ் விவசாயிகள் மிளகாய், வெங்காயம் முதலானவற்றை பயிரிட்டு வரலாற்றில் முதன் முறையாக இலாபமீட்டினர். யாழ்ப்பாண விவசாயிகளின் செழிப்பான, வளமான காலமாக இன்றும் குறிப்பிடுவதை நாம் கவனித்திருப்போம். இந்தியாவில் இருந்து இறக்குமதியான பம்பாய் வெங்காயம் மிளகாய் போன்றவை நிறுத்தபட்டிருந்தது அல்லது குறைக்க பட்டிருந்தது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி குறைந்ததன் மூலம் பணம் இலங்கையை விட்டுச் செல்வது குறைக்கப்பட்டது. உள் நாட்டுக்குள்கூட ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு சில அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் சென்றடைவது தடுக்கப்பட்டது. உதாரணத்துக்கு வன்னி, மட்டகளப்பில் உற்பத்தியான அரிசி போன்றவை யாழ் குடாவிற்குள் செல்வதுகூட வரையறுக்கப்பட்டதால் அங்கேயே உற்பத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வேலையற்றிருந்த பட்டதாரிகள்கூட தமது பிரதேசங்களில் காடுமண்டிப்போயிருந்த நிலங்களில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள்.

தமிழ் நாட்டிலிருந்து இலங்கை வந்து சேர்ந்து கொண்டிருந்த சினிமாக்கள், சஞ்சிகைகள், ஆடைகள்கூட இறக்குமதிகள் வரையறுக்கப்பட்டன. சிங்களவர்களுக்கு இது பாதிக்கவில்லை. அவர்கள் இந்தியாவை நம்பியிருக்கவில்லை. ஆனால் தமிழர்கள் அதுவரை இதில் தங்கியிருந்தார்கள். இதனால் ஈழத் தமிழர்கள் மத்தியில் சொந்தமாக பல சஞ்சிகைகள் தோன்றின, உள்நாட்டு நெசவு வளர்ந்தன. இது போலத்தான் தமிழில் சுதேசிய திரைப்படங்களை உருவாக்கும் வாய்ப்புகள் திறந்தன.

தமிழ் நாட்டிலிருந்து வெளியான கல்கண்டு, அம்புலிமாமா, ராணி போன்ற பல சஞ்சிகைகள் நிறுத்தப்பட்டதால் உள்நாட்டில் பல இலக்கிய சஞ்சிகைகள் வெளிவர வழிதிறந்தது. கொழும்பில் மெய்கண்டான் அச்சாக நிறுவனம் அம்புலிமாமா பாணியில் ‘நட்சத்திரமாமா’ என்கிற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளியிட்டதாக நினைவு. மல்லிகை ஜீவா இந்தக் காலத்தில் தான் தமது ‘மல்லிகைக்கு’ அதிக மவுசு இருந்ததாகக் கூறுவார்.

அதுபோல இந்த காலத்தில் இந்திய திரைப்படங்களுக்கு இருந்த தடை காரணமாக உள்நாட்டில் பல ஈழத்து திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. ஈழத்துத் திரைப்படங்களின் பொற்காலமாக இக்காலத்தைக் குறிப்பிடலாம். சுதேசிய திரையங்குகளில் ஈழத்துத் திரைப்படங்களுக்கான வாய்ப்பு அதிகரித்தது.

உபாலி விஜேவர்தன போன்ற சுதேசிய தொழிற்துறையாளர்கள் எழுச்சி பெற்றது சிறிமா காலத்தில் தான். யுனிக், கெண்டோஸ், மெஸ்டா பியட், டெல்டா போன்ற இலங்கை பிராண்டுகளை வெளிநாடுகளுக்கு கொண்டு போக காரணமாக இருந்தார்.

துவரம் பருப்பு, பாசிப்பயறு போன்றவை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்டு தன்னிறைவை எட்டிக்கொண்டிருந்தன. தீக்குச்சியிலிருந்து மோட்டார் இயந்திரம் வரை இலங்கையில் உற்பத்தி செய்யும் நிலை மாறியது.

இலங்கையில் மகாவலித் திட்டத்தை ஆரம்பித்ததும் சிறிமா தான். அது நிகழ்ந்தது 1960ஆம் ஆண்டு அவர் ஆட்சிக்கு வந்தபோது. ஆனால் 1970 அரசாங்கத்தின் போதுதான் அதன் பூரண பலனை நாடு அனுபவித்தது. மகாவலித் திட்டம் மட்டும் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் இலங்கையின் விவசாயம் கண்டிருக்கக் கூடிய பாரதூரமான விளைவை எண்ணிப் பாருங்கள். விவசாயிகள் மட்டுமல்ல அதன் பின்னர் மின்சார உற்பத்திக்கும் மகாவலித் திட்டம் முக்கிய பங்காற்றியது. 

நீண்ட காலமாக இலங்கையிக்கு எண்ணையை இறக்குமதி செய்து மொத்த எரிபொருள் துறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தவர்கள் மொபில் (MOBIL) கெல்டெக்ஸ் (CALTEX) ஷெல் (SHELL) எஸ்ஸோ  (ESSO) போன்ற பல்தேசிய நிறுவனங்கள் தான். இலங்கையின் பெட்ரோல் நிலையங்கள் இந்த நிறுவனங்களின் பெயர்களில் தான் இயங்கின.

ஒபெக் நிறுவனம் தோற்றம் பெறும்வரை உலக எண்ணெய் சந்தையை கையகப்படுத்தி வைத்திருந்தவர்கள் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தான். அவர்களிடம் தான் எண்ணெயின் ஏகபோகம் இருந்தது. கொல்வின் ஆர்.டி. சில்வா நிதி அமைச்சராக இருந்த போது எண்ணையை இனி சோவியத் யூனியன், எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து பெறுவதன் மூலம் இந்த ஏகபோகத்தையும், விலை அதிகரிப்பையும் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று சிறிமாவிடம் முன்மொழிந்திருந்தார். உள்ளூரில் இருந்த எண்ணெய் இறக்குமதிக் கம்பனிகளை அழைத்து இனி சோவியத் யூனியன், எகிப்து என்பவற்றிடம் இருந்து கொள்வனவு செய்யும்படி கோரியதற்கு அந்த நிறுவனங்கள் ‘எமது கொள்கலன்களில்’ சிகப்பு எண்ணையை விநியோகிக்க முடியாது என்று மறுத்திருந்தனர். அப்படி செய்யாவிட்டால் அந்த நிறுவனங்களை அரசு சுவீகரித்துக்கொள்ளும் என்று சிறிமா எச்சரித்தது மட்டுமன்றி அதற்கான சட்ட ரீதியான ஒழுங்குகளையும் செய்து முடித்தார். சகல எண்ணெய் கம்பனிகளுக்கும் நட்டஈட்டுத் தொகையை வழங்கும்படி கட்டளை இட்டார்.

அதில் ஒரு அமெரிக்க நிறுவனம் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து. அதுமட்டுமன்றி அமெரிக்காவும் இலங்கைக்கு வழங்கி வந்த உதவிகளை நிறுத்தப்போவதாக மிரட்டியது. அன்றைய அமெரிக்க தூதுவர் திருமதி வில்ஸ் நேரடியாக சிறிமாவுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அப்படி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, இலங்கைக்கான உதவிகளை நிறுத்தியதாக அமேரிக்கா அறிவித்தது. அமெரிக்காவுடன் இருந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் இரத்துச் செய்தது. இலங்கைக்கு வழங்கி வந்த புலமைப் பரிசில்களைக்கூட நிறுத்தியது அமெரிக்கா.

சோவியத், எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து சில காலம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுக்கொண்டிருந்து. அதன் பின்னர் 1969 ஓகஸ்டில் ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையின் தேசிய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இன்று, இலங்கையின் எண்ணெய் ஏகபோகம் இந்திய நிறுவனமான IOC நிறுவனத்திடம் பறிபோய் சில வருடங்கள் ஆகின்றன. இன்று முழுவதுமாக பறிபோகும் நிலைமை உருவாகி இருப்பதை பல பொருளியல் வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். எப்போதும் எண்ணெய், எரிசக்தி, வலு என்பன அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையையே நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட முடியும் என்கிற ஒரு விளக்கம் உண்டு.

சிறிமாவின் ஆட்சியில் 1964ஆம் ஆண்டு அவ்வாறான மொத்தம் 13 கம்பனிகளை நாட்டை விட்டுத் துரத்தினார் சிறிமா.

நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு அளவுக்கதிகமான நிலங்களைக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து நிலங்கள் அரசால் சுவீகரிக்கப்பட்டு, நிலமற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டன. உள்நாட்டு விவசாயிகள், வளம் கொழிக்க வளர்ந்தெழுந்தார்கள்

சிறிமா என்கிற இரும்புப் பெண்ணின் அரசாங்கத்திடம் இருந்த தூர நோக்கு அதன் பின்னர் வந்த எந்த அரசாங்கத்திடமும் இருந்ததில்லை என்று உறுதியாக கூறமுடியும். அதன் பின் வந்த அனைத்து தலைவர்களும் நாட்டை விற்றோ, அல்லது அடைவுவைத்தோ அவரவர் அரசாங்க காலத்தை அலங்காரமாக காட்டி, அவர்கள் வேண்டிய கடன்களை அடுத்த அரசாங்கத்திடம் சுமத்திவிட்டு ஓடுவதும், புதிய அரசாங்கம் மேலும் நாட்டை ‘ஏலம்’ போட்டு விற்றுவிட்டு மேலும் மேலும் புதிய கடன்களுடன் அடுத்த அரசாங்கத்திடம் சுமத்தி விட்டு கடப்பதுமாக தொடர்ந்ததன் விளைவு தான்… இன்றைய ‘இலங்கையின் திவால் நிலை’.

கடனைக் கட்ட கடன் வாங்குவது போய், கடனைக் கட்ட கந்துவட்டிக்கு கடன் வாங்கி நாசப்படுத்தும் அளவுக்கு இன்று கொண்டு போனவர்களின் கணக்கு என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதற்காக, பழைய பணத்தாள்கள் செல்லுபடியற்றதென அறிவித்தார் ணினி அமைச்சர் என்.எம்.பெரேரா. அதேவேளை மக்களிடம் உள்ள பணத்தை பெற்றுக்கொண்டு புதிய பணத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு (Demonetization) நடவடிக்கையின் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளப்பணம் அத்தனையும் செல்லுபடியற்றதாகின. 

கறுப்புப் பணத்தை வெளியே எடுக்கவும், இந்தப் பொருளாதார முறை குறித்து மக்களுக்கு போதிய விளக்கம் இருக்கவில்லை. நாட்டில் நிலவிய உணவுத் தட்டுப்பாடு, வரிசையில் நிற்றல், கூப்பன் முறை போன்ற கடும் வழிமுறைகளால் மக்களின் அதிருப்தியும், வெறுப்பும் அரசின் மீது திரும்பியது.

கிழங்கு, சீனிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு என்பன அடிப்படை உணவாகின. இன்றும் அக்காலத்தை வெறுக்கும் பலரை நாம் காண முடியும்.

இன்றைய ராஜபக்ஸ சகோதரர்களின் ஆட்சியிலும் அதே நிலை உருவாகியிருக்கிறது. ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் தலைகீழ் வித்தியாசங்கள் உள்ளன. அன்று நாடு எவரிடமும் கையேந்தாது தன்னிறைவோடும், வளமான வருமானத்தோடும் வாழ்வதற்கான பொருளாதாராக கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான குறிப்பிட்ட கால திட்டத்துக்காக கஷ்டங்களை பொறுத்துக் கொள்ள கோரப்பட்டது. ஆனால் இன்று, அடுத்தடுத்த சந்ததியினரின் எதிர்காலத்தையும் சேர்த்து விற்று, மொத்தமாக நாட்டை தாரைவார்த்துக்கொண்டே மக்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையை மீண்டும் சோஷலிச பொருளாதாரத்திலிருந்து மீட்டு முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்துக்குள் இழுத்து விடவேண்டும் என்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய தரப்பு எல்லாமே 1977ஆம் ஆண்டு தேர்தலை உன்னிப்பாக கவனித்தது மட்டுமன்றி, இடதுசாரி கூட்டு அரசாங்கமான சிறிமா அரசாங்கத்தை எப்படியும் கவிழ்த்து தமது செல்லப்பிள்ளையான ஜே.ஆரை பதவியில் அமர்த்த முழு வேலையையும் செய்தன. அதன் விளைவு தான், 1977ஆம் ஆண்டு சிறிமா அரசாங்கத்தின் படு தோல்வியும் ஜே.ஆரின் வரலாறு காணாத வெற்றியையும். 

இத்தேர்தலில் ஐ.தே.க மொத்தம் 168 ஆசனங்களில் 140ஐ பெற்று 83 வீத அதி பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டது. 147 தொகுதிகளில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெறும் 8 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது. எதிர்க்கட்சியாகும் தகுதியைக்கூட இழந்தது.

ஜே.ஆர். திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி, அந்நிய முதலீடுகளை தாராளமாக அனுமதித்தார். உள்ளூர் வளங்களையும், உள்ளூர் உழைப்பையும் சுரண்டுவதற்கு தாராளமாக அனுமதித்தார். மீண்டும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வேகமாக சரியத் தொடங்கின.

பல அரச நிறுவனங்களை மீண்டும் வெளிநாடுகளுக்கு விற்கும் பணிகள் அவரால்த்தான் தொடங்கப்பட்டன. தேசிய வளங்கள், சொத்துக்கள், உற்பத்திகள் எல்லாமே அரச கட்டுப்பாட்டிலிருந்து தளர்த்தி தனியார்களுக்கு விற்றுத் தீர்க்கும் திட்டம் ஜே.ஆரால் தான் மீண்டும் தொடங்கப்பட்டன.

திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகமாகி இந்த 45 வருட வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபா 4285% வீதத்தால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதன்படி ஜனவரி 1, 1977இல் அமெரிக்க டொலர் மாற்று வீதம் 7.27 இலங்கை ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது 2022 மார்ச் மாதம் அது 300 ரூபாவைத் தாண்டியிருக்கிறது. அதாவது 1977இல் ஜே.ஆர். இலங்கையின் அரச தலைமையை ஏற்ற போது 1000 ரூபாவின் பெறுமதியானது, 2022 மார்ச் 26 திகதியன்று பெறுமதி 42,850 ரூபாவுக்கு சமம்.

சிறிமா ஒரு இரும்புப் பெண்ணாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டார். அதே போல, இந்த முயற்சிகளின் பெறுபேற்றை அனுபவிக்குமுன் ஆட்சி மாறியதால், திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகின. மக்களால் வெறுக்கப்படும் சிறிமா ஆனார். படுதோல்வியை தழுவினார். ஆனால் அத்தோல்வியை இன்று மக்கள் அனுபவிக்கின்றனர்.

அன்று இன்னும் சில ஆண்டுகள் பொறுமை காத்திருந்தால், இலங்கை தன்னிறைவுக்கு உதாரணமான நாடாக உலகில் பேசப்பட்டிருக்கும். பாரிய ஸ்திரத்தன்மையான பொருளாதார மாற்றம் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்தன