மட்டக்களப்பின் தொன்மை வாய்ந்த கிராமங்களில் ஆலங்குளமும் ஒன்று. ஆரம்ப காலத்தில், பிரதான வீதியிலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த திராய்மடு வனப்பகுதி, குப்புழாக்கொடி வனப்பகுதி, மற்றும் திருக்கொண்டியாமடு ஆகிய இடங்களில் சிறிய இலுக்கு குடிசைகளில் மக்கள் வாழ்ந்தனர். அக்காலத்தில் அவர்களின் பிரதானத் தொழில் தேன் எடுத்தல்தான். காலப்போக்கில், இந்தச் சிற்றூர்கள் ஒன்றிணைந்து ஆலங்குளம் என்று பெயரைப் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே, வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில், புணானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது.
ஆலங்குளம் ஒரு பின்தங்கிய, பூர்வீகக் குடிகள் வாழும் கிராமம். நீண்டகால புறக்கணிப்பு, சூறாவளி, நீண்டகால யுத்தம் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒரு எல்லைப்புறக் கிராமமும் ஆகும். யுத்தத்தின் காரணமாகச் சிதைவடைந்த பல வீடுகள் இன்றும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது அங்குள்ள மக்களின் துயரத்தை உணர்த்துகிறது.
ஆலங்குளத்தைச் சுற்றிலும் குகனேசபுரம், மேவாண்டாகுளம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன.
கிராமத்து மக்கள் பல இடர்களை எதிர்கொண்டபோதும், தங்கள் வழிபாட்டுத் தலங்களான கோயில்களை அமைத்து வாழத் தொடங்கினர். அத்துடன், 1963 ஆம் ஆண்டில் இங்கே ஒரு ஆரம்பப் பாடசாலையும் தொடங்கப்பட்டது. சூறாவழியின் தாக்கம் பல உயிர்களை பலி கொண்டதுடன் வீடுகளையும் இழக்க வேண்டி ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வரும்போது, யுத்தம் வாழ்வை துரத்தத் தொடங்கியது.
1990 ஆம் ஆண்டு மற்றும் மீண்டும் 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த நெருக்கடி, மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் விட்டு இடம்பெயர வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1998 ஆம் ஆண்டில்தான் அவர்கள் மீண்டும் தங்கள் கிராமத்தில் மீள்குடியேற முடிந்தது.
ஆலங்குளம் வளமான பூமியையும், குளங்கள், வயல்களையும் கொண்டிருந்தாலும், மீள்குடியேறிய கிராமத்தவர்களுக்குச் சிறிய அளவிலான காணிகளே கிடைத்துள்ளன. நீர்வளத்தில் உவர்நீர் கலந்திருப்பதால், சிறு காணிக்குள் பயிர்ச் செய்கை மேற்கொள்வதும் கடினமாக உள்ளது.
தற்போது, மக்கள் சிறியளவிலான விவசாயம், மீன் பிடி, கால்நடை வளர்ப்பு, விற்கு வெட்டல் ஆகியவற்றுடன், பெரும்பான்மையாகக் கூலித் தொழிலையே செய்து வருகின்றனர். கிராமத்தை சுற்றிவர பரந்த வயல் நிலங்கள். ஆனால் பிறருக்கு சொந்தமான வயல்களால் இம் மக்கள் வாழ்வு வளம் பெறவிலைல். வயல்களில் திரியும் இயந்திரங்களால் கூலித்தொழிலும் கிடைப்பதில்லை.
வருமானக் குறைவு, கடுமையான வறுமையை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தில் சிறந்த தொழில் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இதன் விளைவாக, வருமானத்துக்காகப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆண்கள் நகரங்களுக்கும் செல்ல வேண்டிய அலைந்துழைக்கும் வாழ்க்கைச் சுமையை உருவாகியுள்ளது.
மீள்குடியேற்றத்தின் போது பலருக்குச் சிறிய காணி, வீடு, மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளன. இருப்பினும், நீடித்த வறுமை, கிடைத்திருக்கும் காணியையும் விற்கும் நிலைக்கு மக்களைத் தள்ளியுள்ளது. அருகே உள்ள வசதி படைத்த சமூகத்தவர்களுக்கு தங்கள் சிறியளவான காணிகளை விற்கும் நிலையையும் ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் சிறிய பாடசாலையாக இருந்த ஆலங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை தற்போது தரம் 09 வரை இயங்கும் பாடசாலையாக வளர்ச்சி கண்டுள்ளது. ஒன்பதாம் வகுப்புக்கு மேல் கல்வி தொடர வாழைச்சேனை நகருக்கு செல்ல வேண்டும். வசதியின்மை, வறுமை மற்றும் சமூகச் சூழல் காரணமாகப் பெரும்பாலான மாணவர்கள் கல்வியை விட்டு விலகி, இளவயதிலேயே தொழிலுக்குச் செல்வது அல்லது திருமணம் செய்துகொள்வது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தற்போது, இந்தப் பாடசாலை தரம் 11 வரை இயங்க அனுமதி பெற்று, தரம் 10 வகுப்பை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தரம் 10 இல் 9 மாணவர்கள் படிக்கின்றனர். பாடசாலையின் மொத்த மாணவர் எண்ணிக்கை 147. ஆனாலும், மிக முக்கியமான கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்கள் இல்லாதது கல்வி முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக உள்ளது. உயர்கல்விக்கு இப்போதும் வாழைச்சேனைக்கு செல்ல வேண்டும். பலர் இடைவிலகி விடுவதும், இளவயது திருமணமும் வழமையான ஒன்றே.
பாடசாலையும் கிராமமும் அடிப்படை வசதிகள் அற்றே இன்றும் உள்ளது. யுத்தத்தில் அழிந்த வீடுகள், அழிந்த நிலையிலே இன்றும் கிடக்கின்றன.
பருவ மழை தொடங்கிய நிலையில் நிலத்தை துப்பரவு செய்து பயிர்ச் செய்கைக்கு தயாராகி வருகின்றார்கள் மக்கள், அதில் கொஞ்சமாவது வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்.
அருகே உள்ள இறால் பண்ணையும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள காகிதத் தொழிற்சாலையும் புதியதாக தொழில்களை தருகின்றன.
ஆலங்குள மக்கள், தமது துயரங்கள் ஒருநாள் தீரும் என்ற நம்பிக்கையுடனும், வாழ்வதற்கான தளராத முயற்சிகளுடனும், அனைத்து இடர்களையும் தாண்டி வாழ்ந்து வருகின்றனர், என்பது நம்பிக்கை தருகிறது.
மக்களுடன் இணைந்து நிற்போம்.
நன்றி
@ விஜயரெட்ண