இத்தனை அழிவிற்கு பின்பும் 13ல் தானா தீர்வு ?

(மாதவன் சஞ்சயன்)

இந்தக் கேள்வியை கேட்பவர்கள் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும். வாய் வீரம் பேசுபவர்களும், விதாண்ட வாதம் புரிபவர்களும், இனப் பிரச்சனையை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும், நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை கூறி மக்களை பலிக்கடா ஆக்கி நடைபவனி, கையெழுத்து வேட்டை என நடத்தி தம்மை பிரபலப்படுத்தி, அதில் கலந்து கொண்டவரை, ஜெயக்குமாரி போல் சிறைக்கும் பருவமடையாத அவர் மகளை சிறுவர் காப்பகத்துக்கு அனுப்புபவர்களும் ஆடும் நாடகம் தெரியவரும்.

அமெரிக்காவை கொண்டு இறுதி யுத்த மீறல் செய்தவர்களை தூக்கு மேடை கொண்டு செல்ல முற்பட்டவர்கள் தாமும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கவில்லை. நீண்ட எதிர்பார்க்கையின் பின் அமெரிக்க நீதி இருதரப்பையும் முடிச்சு போட்டு ஐநா மனித உரிமை பேரவை தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. அடித்தவனும் அடிவாங்கியவனும் ஒரே கொட்டடியில் கட்டப்பட்டு உன்னால் நான் கேட்டேன் என்னால் நீ கெட்டாய் என அவரவர் விட்ட தவறை அவர்களே திருத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் தாம் யுத்த காலத்தில் செய்தவை வெளிவராமல் இருக்கவே இந்த ஏற்பாடு.

நீதிமான் அமெரிக்கா தண்டனையை விட, தவறுகளை களைந்து நிவாரணம் வழங்கி மீண்டும் தவறுகள் ஏற்படாத நிலைக்குள் வரும் ஏற்பாடு தான் இது என்கிறது. நாம் ஏற்கனவே வகுத்த தீர்வை (13 ) முழுமைப்படுத்தி சிறப்புடன் வாழ்வீர் என போதிக்கிறது இந்தியா. சமஸ்டி கேட்டவர்கள் 13ல் தீர்வு என்பதுபற்றி ஏன் எதுவும் கூறவில்லை என, கூட்டமைப்பை சீண்டுகிறார் வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர். 1970 பிற்பகுதியில் புலோலி வங்கி நகை வழக்குடன் கொழும்பில் ஒதுங்கி உக்கிரம் அடைந்த 1983 போராட்டம் முதல் 1990 வரை எந்த பங்களிப்பும் செய்யாத அவரின் நையான்டித் தனத்தை புறம் தள்ளி 13 ஐ பார்ப்போம்.

இந்தியாவை மீறி எந்த செயலையும் எமது பிராந்தியத்தில் எவரும் செய்ய முடியாது என்பது அண்மைக்காலம் வரை நாம் கற்றுக் கொண்ட பாடம். சம்மந்தருக்கும் சுமந்திரனுக்கும் ஏற்கனவே இந்தியா பாடம் நடத்திவிட்டது. நல்ல மாணவர் பரீட்சையில் சித்தி எய்தவே விடும்புவர். எம்மவர் விடயத்தில் முடிவெடுக்கும் டெல்லி தனது மாநிலங்களின் சூழலை, குறிப்பாக தமிழ் நாட்டு சூழலை மனதில் கொள்ளும். பிரிந்து செல்லும் கோரிக்கைகள் இந்தியாவை கூறு போடக் கூடாது என்ற விதி ஸ்ரீலங்காவுக்கும் பொருந்தும். 13ன் பூரணத்துவம் தான் சகல ரோக நிவாரணி என்பது இந்தியக் கணக்கு. அந்த பழைய மொந்தையை மாற்றி புதியன புகுத்தல் ரணில் கணக்கு.

அண்மைக்காலமாக யாழில் பிரசன்னமாகி இருக்கும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதல்வருக்கு தெரியும் 13ல் உள்ள நிறை குறை. ஆரம்பத்தில் பிரேமதாசா அரசுடனும் பின் ராஜீவ் காந்தியுடனும் அதை எவ்வாறு முழுமைப் படுத்தலாம் என்ற வரைவுளை முன்வைத்த அவர், அதிகார பரவலாக்கல் எந்த அளவுக்கு அமைய வேண்டும் என்ற வரைபை அன்றே இரண்டு அரசுக்கும் கொடுத்தவர். அந்த விடயத்தில் அண்ணன் அமிர் தன் பங்களிப்பை செய்ய முற்பட்ட போது தான் புலிகள் அவரையும் கொன்று வடக்கு கிழக்கு மாகாண சபையையும் முடக்கினர். அதை பயன் படுத்தி பிரேமதாசா பகிரப்பட்ட அதிகாரங்களையும் மீளப்பெற்றார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் இந்திய நலன் கருதி போடப்பட்டதாக கூறுபவர்கள் அதில் எம் நலன் சார்ந்த விடயங்களும் உள்ளடக்கபட்டதை மறுக்க முடியாது. வடக்கும் கிழக்கும் வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேசம் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை மறுக்க முடியுமா ? நிரந்த இணைப்புக்கு கிழக்கில் வாக்கெடுப்பு என்றவிடயம் கசப்பாக இருந்த போதும் அப்போதைய சூழ் நிலை எமக்கு சாதகமாக இருந்தது. அன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவு இன்று போல் மோசமாக இருக்கவில்லை. காத்தன்குடி, ஏறாவூர் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் படுகொலை செய்யப்பட வில்லை. வீரமுனை போன்ற பல தமிழ் கிராமங்கள் சூறையாடப் படவில்லை

பண்டா செல்வா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களான காணி, பொலிஸ், தமிழ் மொழி பாவனை என பல விடயங்கள் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப் பட்டிருந்தன. அவற்றை அரசியல் சாசனத்தில் உட்படுத்தும் வேளையில் தான் பிரபாகரன் யுத்தத்தை தொடங்கினார். கட்டாயத்தின் பேரில் ஒப்பந்தம் போட்ட ஜே ஆர், சுதந்திரமாக 13ஐ நிறைவேற்றினார். எம்மவர் எவருடனும் கலக்காமல் தான் நினைத்ததை செய்யும் சந்தர்ப்பத்தை ஜே ஆர் பயன்படுத்த எம்மவரே உதவி விட்டு இந்தியா ஏமாற்றிவிட்டது என புலம்ப தொடங்கினர். பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய வடக்கு கிழக்கு முதல்வரும், பாராளுமன்றத்தில் அதற்காக வாதிட்ட அமிர் அண்ணாவும், எதையும் சாதிக்க முடியாமல் போனது அதனால் தான். சாதித்திக்க விட்டிருந்தால் அதன் முழு வடிவம் சம்ஸ்டிதான்.
– தொடரும் –