ஈற்று….

தமிழ் நாட்டில் சிரட்டை “கொட்டாங்கச்சி” என வழங்கும்.”கஞ்சிக்கு வழியிலார் அதன் காரணமும் அறிகிலார் ” என்றொரு வர்க்க உணர்வுக் கவிதை வரியுண்டு.

வறுமை ஓர் அவமானம். தரித்திரப் பிணைப்பு.அந்த அனுபவ உத்தரிப்பில் அவமானத்தில் வந்தமைந்த எதுவும் மீள நினைத்துப் பார்க்கக் கசப்பானதாகிவிடும் .”சிரட்டை காவிகள் ” என்பது இன்னொரு யாழ் வழக்கு.

ஒருபோதும் சிரட்டை ஒரு இனத்தின் குறியீடாக மாறமுடியாது, மாறவும் கூடாது. ஆனால் இன்று ஆக்கப்பட்டிருக்கிறது.சுகபோகங்களிற் திளைக்கும் வக்கிர மனத் தொகுப்பு தம் குற்ற உணர்ச்சியை மறைக்க “சிரட்டையையும் கஞ்சியையும்” இன்று தம் போலிமை உணர்வுக் காட்சியீடாகப் பொது வெளியில் முன் வைக்கின்றது.

முள்ளிவாய்க்கால் காலத்தில் அன்றேற்பட்ட இந்த இழிதகு சிரட்டைக் கஞ்சி நிலைக்கு எவர் பொறுப்பு ? நிச்சயமாகப் புலிகள்தாம். அரசு மக்கள் பட்டினி நிலையைக் கருத்திற்கெடுத்துச் செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் பட்டினிச் சாவுகளிற்கெதிரான என் ஜி ஓ மற்றும் இதர மக்கள் நலன்சார் அமைப்புகளின் அனுசரனையில், சர்வதேச அழுத்தங்களின் பேரில் உணவுப் பொருட்களைக் கப்பல்மூலம் வழங்க முன்வந்தது. அரசாங்க அதிபர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அவற்றைப் பொறுப்பேற்றனர்.

அப் பொருட்களெல்லாம் வந்த கையோடு புலிகளின் பங்கர் வீடுகளில் செவ்வனே கொண்டுபோய் அடுக்கிவைக்கப்பட்டுப் புழுப்பிடித்து, புதைக்கப்பட்டதும் எரித்தழிக்கப்பட்டதும் வரலாற்றுச் சான்றுகள். ஒரேயொரு புலியாள் கூட பட்டினியால் இறந்ததென்றோ சிரட்டைக் கஞ்சி குடித்து நாட்கடத்தியதென்றோ பதிவுகளில் இல்லை.

மாறாக அவர்கள் செய்ததெல்லாம் என்ன ? எல்லாவற்றையும் தமக்கானதாக மட்டும் பதுக்கினார்கள்.தங்க நகைகள் , பணம் இப்படியாக.தன் பிள்ளைக்கு ஒரு நேரப் பால் இல்லையென 35000 ரூபாவிற்கு தன் நகையை ‘ஒருவருக்கு ‘விற்ற தாயை நான் அறிவேன்.

ஒருபக்கம் மக்களை வெளியேறவிடாமல் சுட்டுத் தடுத்து நிறுத்தினார்கள் ,. மறுபக்கம் தம்மிடமிருந்த பெரும் பொற்குவைகளையும் களஞ்சியங்களையும் காக்கத் துவக்குகளோடு காவலிருந்தார்கள். மக்கள் அவற்றைக் கொள்ளையடித்துச் சாப்பிட்டுவிடுவார்கள் என்ற ஞானம்தான்.மாறாக இறுதி நாட்களிற்கூட ஆடம்பர வதிவிடங்களும் நீச்சல் தடாகமும் மருத்துவ ஒழுங்கமைப்பும் கொண்டு எல்லாவற்றையும் தமக்கானதாக , தமக்கானதாக மட்டுமே ஆக்கிவைத்துக்கொண்டிருந்தார்கள் .

எல்லாவற்றையும் அழித்துவிட்டுச் சரணடைவதிலும் அவர்களே முதன்மையாக இருந்தார்கள்.இந்தச் சிரட்டைக் கஞ்சிக்கு ஏதும் பொருள் கோடல் இருக்குமெனில் அது புலிகளால் விளைந்த அவலம் மட்டுமே என்பதாகப் பொருள் விடியும். இப்போது இச் சிரட்டைக் கஞ்சியை அனுதாபத்திற்குரிய ஒரு நிரந்தரக் குறியீடாக்கப் பெரும் பொருட் செலவில் காட்சி அரங்குகளை அமைக்கின்றார்கள்.

இப் பணத் திரளின் ஒரு சிறு பகுதி போதும் , எஞ்சிய ஒரு தொகுதி முன்னாட் போராளிகள் முடமாகிச் சிரட்டையும் கஞ்சியும் பிச்சை ஏற்புமாய் இன்றும் அவல வாழ்வு பெறும் நிலையை மாற்ற.அது இவர்களால் முடியாது. ஏனெனில் அடுத்தவர் அனுதாபத்தில் உயிர் தரித்து வாழும் அற்ப ஜீவிகள் இவர்கள். இது தொடரும்.

( படம் : வெங்காயத் தலையன் இடியப்பம், நந்திக்கடல் இறால் பொரியல், கருவேப்பமிலைச் சம்பல் திரளிச்சொதி இவற்றை தன் காலை உணவாக கொட் பிளேற்றில் தயார் செய்யும் காட்சி. ,என்றால் மக்களின் சாபம் குடும்பத்தோடு அழிக்காமல் வேறென்ன செய்திருக்கும் ?

Leave a Reply