ஆப்கன் எழுப்பும் கேள்விகள்

‘சர்வதேசச் சட்டங்களுக்குப் பற்கள் உண்டு; ஆனால் கடிப்பதில்லை’ என்ற பழமொழி மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிர்வினை ஆற்றிவரும் முந்தைய வடக்குக் கூட்டணியானது, இன்றும் தாலிபான்களுக்குப் பணியாமல் சவால்களைச் சந்தித்துவருகிறது. இந்தச் சூழலில் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் மிகப் பெரிய மனித உரிமை மீறல்களைச் சந்திக்கப்போகிறார்கள் என்ற குரல்கள், உலகின் சக்திமிகுந்த நாடுகளின் காதுகளையோ ஐநா சபையின் வாசல்களையோ எட்டவில்லை என்பது வெட்கக் கேடு.

ஆப்கானிஸ்தானில் அரசு அமையும் முன்பு, அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் பாகிஸ்தான் அரசுக்கு அந்த நாட்டுக்குள்ளிருந்தே கண்டனக் குரல்கள் எழுகின்றன. சீனாவின் முதலீடு ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு என்ற பிரச்சாரத்தை சீனா ஆரம்பித்துவிட்டது. அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறியதையும், தாலிபான்கள் மீண்டும் ஆப்கனை ஆட்சி செய்வதையும் ரஷ்யா தனக்குக் கிடைத்த மறைமுக வெற்றியாகத்தான் பார்க்கிறது.

இப்படி இருக்கும்போது அங்குள்ள பெண்கள், குழந்தைகளின் நிலை; தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு இவற்றையெல்லாம் யார் சிந்தித்துப் பார்க்கப்போகிறார்கள்; அகதிகளாக அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றோரின் எதிர்காலம் என்ன என்பது போன்ற கேள்விகள் நீண்டுகொண்டே செல்கின்றன.

ஆப்கனிலிருந்து வரும் தகவல்கள் உண்மையாக இருக்குமேயானால், பெண்களுக்கும் முந்தைய அரசாங்கத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்களுக்கும் எதிர்காலம் நம்பிக்கைக்குரியதாகத் தெரியவில்லை. பலதரப்பட்ட போராளிக் குழுக்கள் ஒற்றைத் தலைமையின் கீழ் ஆப்கனின் மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் தோள்கொடுப்பார்களா என்பது இன்னொரு கேள்வி.

தாலிபான்கள் தங்களை நேர்மறையாகக் காட்டிக்கொள்வது, அவர்கள் மாறுபட்ட அரசாங்கத்தைத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பைச் சர்வதேசச் சமூகத்திடம் ஏற்படுத்தியிருக்கிறது.. ஆனால் அமெரிக்கா, ஏனைய மேற்கத்திய நாடுகள் போன்றவற்றைச் சேர்ந்த ராணுவத் தளபதிகளும் சர்வதேச வெளியுறவுத் துறை வட்டாரமும் இதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்.

இதற்குக் காரணம், தாலிபான்கள் தலைநகர் காபூலை நெருங்கியவுடன் உலகமே பதற்றத்துடன் ஆப்கனைப் பார்த்தது. அங்குள்ள மக்கள் எப்படியாவது இங்கிருந்து தப்பி ஓடிவிட வேண்டும் என்று எடுத்த முயற்சிகள், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற பதற்ற நிலை நம் கண்ணை விட்டு அகல மறுக்கின்றன.

பொது மன்னிப்புக்கான தாலிபான்களின் அழைப்பு, அமைதிக்கான வெளியுறவுக் கொள்கை இவையெல்லாம் நமக்கு நம்பிக்கை கொடுப்பதாக இருந்தாலும், சொன்ன சொல்லைத் தாலிபான்கள் எப்படிக் காப்பாற்றுவார்கள் என்று தெரியவில்லை.

தங்கள் மண்ணை வேறு எந்த நாட்டுக்கு எதிராகவும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தாலிபான்களின் அறிவிப்பு வரவேற்கக் கூடியதுதான். ஆனால், காஷ்மீர் பற்றிய அவர்களின் கருத்துதான் இந்தியாவுக்கு அச்சமூட்டுகிறது. பாகிஸ்தான், தாலிபான்கள் ஆளும் ஆப்கன், சீனா ஆகியவற்றின் நெருக்கமான நட்புறவு எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கு நிரந்தர அச்சுறுத்தலாகவே அமைந்திருக்கும்.

அரசு அமைப்பதற்கான தாலிபான்களின் முயற்சிக்குப் புதிய சவால்கள் அவர்களுக்குள்ளிருந்தே எழுந்துள்ளதன் வெளிப்பாடுதான், அவர்கள் புதிய அரசை அமைப்பதற்குக் காலதாமதமாவது. அவர்களுடைய ஆட்சியமைக்கும் முயற்சிக்கு இந்தியா உடனடியாக வாழ்த்துத் தெரிவிக்காவிட்டாலும், ரஷ்யாவின் துணையுடன் இந்தியா, தாலிபான்களுடன் தொடர்பில் இருந்தமையால், கத்தார் தலைநகர் டோஹாவில் அவர்களுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த வழி ஏற்பட்டது. இதில் என்னென்ன பேசப்பட்டன, என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதெல்லாம் பொதுவெளியில் அறிவிக்கப்படாவிட்டாலும் பேச்சுவார்த்தை நடந்ததை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

ஆக, வெளியுறவுத் துறையில் நெறிமுறைகளைப் பின்பற்றும்விதத்தில் கொள்கை வகுப்பது அல்லது நெறிமுறைகளைப் பின்பற்றுவது என்பது சவாலானது என்பதை இதன் மூலம் அனைவரும் உணர வேண்டும். இந்தியாவின் அணுகுமுறை எந்த அளவுக்கு நன்மை தரும் என்பதில் ஐயப்பாடு ஏற்படுகிறது.

காரணம், தாலிபான்களுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடாவிட்டாலும் ஆப்கனின் சமூக முன்னேற்றம், உள்கட்டமைப்பு வளர்ச்சி போன்றவற்றுக்கு நாம் பெரிய பங்களிப்பு செய்துள்ளோம் என்பதை ஆப்கன் மக்கள் தெளிவாக நினைவுகூர்கின்றனர். முக்கியமாக பள்ளி, கல்லூரிக் கட்டிடங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள், நீர்வள மேம்பாட்டுக்கான இந்திய-ஆப்கானிஸ்தான் நட்புறவு அணை என்று நம்முடைய பங்களிப்பின் பட்டியல் சற்று நீளமானது.

ஆக, யார் ஆப்கனுக்குள் சென்றாலும் இந்தியாவின் முத்திரையானது ஆப்கனின் வளர்ச்சியில் இருப்பதைக் காண முடியும். ஆகவே, ஆப்கனில் இந்தியர்கள் பாதுகாப்பாக வாழ்வது, அவர்களைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுவருவது, அங்கு நாம் செய்துகொண்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளைப் பாதுகாத்து, அதன் மூலம் ஆப்கன் சமூகத்தின் வளர்ச்சியைத் தொடர்வது ஆகிய நோக்கில் ஆப்கனுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தை பலப்பட வேண்டும்.

இதன் மூலம் தாலிபான்கள் எவ்வகையான உத்தரவாதத்தைத் தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவைச் சுற்றிவளைக்க சீனா மேற்கொள்ளும் நெடுங்கால முயற்சியான ‘முத்து மாலை’க்கு (String of Pearls) ஆப்கானிஸ்தானைத் துணைக்கு அழைக்க சீனாவின் முதலீடு தயாராக இருக்கிறது என்பதை நமது வெளியுறவுத் துறை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் தயக்கம் நமக்குப் புரிகிறது. சர்வதேச அரசியலில் அமைதியை ஏற்படுத்தவும் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் இந்தியாவின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, பல கோணங்களில் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதுதான் நல்லது.

ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலை சீராகும் வரை காத்திருக்கும் அணுகுமுறையை இந்தியா பின்பற்றுமேயானால், அங்குள்ள அரசியல் களத்தில் பாகிஸ்தானும் சீனாவும் நன்றாகக் காலூன்றிவிடும். பின்பு, நமக்கு அங்கு வேலை இல்லை என்ற நிலை பெரும் ஆபத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடியது.

இன்னொரு பாகிஸ்தானாக ஆப்கானிஸ்தான் மாற்றப்படுமேயானால், ஆபத்து இந்தியாவுக்குத்தான் அதிகம். ஜனநாயக நாடுகள் தங்களுக்கிடையில் போர் செய்யத் தயங்கும் என்பது ஜனநாயக சமாதானக் கோட்பாடு. ஆனால், இந்தியாவைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிப்பதுகூடக் குற்றமாகக் கருதப்படும் நிலையில், நம் பாதுகாப்புக்கு முன் நிற்கும் சவால்களை உன்னிப்பாகக் கவனித்து, வரும்முன் காத்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

(சி.ஆன்றணி விஜிலியஸ்)