மேற்கு வங்கத் தேர்தல் முடிவு சொல்லும் செய்தி என்ன?

மேற்கு வங்க அரசியலை 2026 சட்டமன்றத் தேர்தல் புரட்டிப் போட்டிருக்கின்றது. 2011-இல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய திரிணமூல் காங்கிரஸின் தலைவர் மம்தா பானர்ஜி, இத்தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கின்றார்.

சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் வலுவாகக் காணப்பட்டனர். அதனால், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கு வேரூன்றத் திணறிக்கொண்டிருந்தன.

இத்தகையதொரு சூழலிலேயே, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட மம்தா பானர்ஜி, 1997-இல் புதியதாக ‘திரிணமூல் காங்கிரஸ்’ கட்சியை ஆரம்பித்தார். ஆனாலும், மேற்கு வங்க அரசியலில் அவர் தலையெடுக்கத் திணறினார். 1980-களிலிருந்தே மேற்கு வங்கத்தில் காலூன்றுவதற்கு பாஜக தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தது. அந்தச் சூழலில், “எதிரிக்கு எதிரி நண்பன்” என்னும் கோட்பாடு அவர்களுக்குக் கைகொடுத்தது.

பாஜகவுக்கு மேற்கு வங்கத்தில் ஒரு முகம் தேவைப்பட்டது; மம்தா பானர்ஜிக்குக் கூடவருவதற்கு ஒரு கூட்டாளி தேவைப்பட்டார். மம்தா பானர்ஜியுடன் கூட்டணி அமைத்தபோது, பாஜகவுக்குக் கைமேல் பலன் கிடைத்தது. 1999-இல் அக்கட்சி கவனிக்கத்தக்க தேர்தல் வெற்றியைப் பெற்றது.

அதுவே, மேற்கு வங்கத்தில் பாஜக காலூன்ற மம்தா பானர்ஜி வழங்கிய துரும்பாகியது. அதன்பின்னரான கால்நூற்றாண்டில், “துரும்பைத் தூணாக்கும்” வல்லமை கொண்ட பாஜக தனித்தே வளர்ச்சியடைந்துவிட்டது. அதுவே, 2026-இல் ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்த’ கதையாகிவிட்டது. மம்தா பானர்ஜியைத் தோற்கடித்து, பாஜக இப்போது ஆட்சிப்பீடமேறியுள்ளது. இதனால், மம்தா பானர்ஜி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளார்.

மாயாவதி, ஜெயலலிதா என்ற வரிசையில் இந்தியாவின் பெண் அரசியல் ஆளுமைகளில் மம்தா பானர்ஜியும் ஒருவராவார். 2007-இல் இடம்பெற்ற நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டமே, மம்தா பானர்ஜி அரசியலின் மைல்கல்லாகும். கிழக்கு இந்தியாவில் பத்து கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட மாநிலம் மேற்கு வங்கமாகும். அங்கே 1977-இல் ஆரம்பமாகிய இடதுசாரிகளின் ஆட்சி எஃகு கோட்டையாக வலுவடைந்திருந்தது.

அத்தகைய சூழலிலேயே, ‘மா, மாட்டி, மனுஷ்’ (தாய், தாய்மண், மக்கள்) என்னும் முழக்கத்துடன், 2011 சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியை மம்தா பானர்ஜி தோற்கடித்தார். அதனூடாக, சாத்தியமற்றது என்று பரவலாகக் கருதப்பட்ட ஒரு விடயத்தைச் சாத்தியமாக்கினார். வெற்றிகரமான பிராந்தியக் கட்சியின் தலைவராகவும், தேசத்தின் வலிமையான எதிர்க்கட்சி அரசியல்வாதியாகவும் அவர் வளர்ச்சியடைந்தார்.

ஆனாலும், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி, மதரீதியாக வாக்குகள் பிரிந்தமை மற்றும் வாக்காளர் பட்டியலைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் போன்றவற்றின் வலுவான கலவை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியைத் தோற்கடித்தது. இருப்பினும், மம்தா பானர்ஜியின் கட்சியை வாக்காளர்கள் முற்றிலுமாக நிராகரித்ததாகச் சொல்லிவிட முடியாது. பாஜகவுடன் ஒப்பிடும்போது, சுமார் 30 லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்றார்.

அவருக்கு 2.6 கோடி வாக்குகள் கிடைத்தன; அந்த வகையில், 40 விழுக்காடு வாக்குகளை அவர் தக்க வைத்துக்கொண்டார். மாநில சட்டப்பேரவையில் 80 உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர்; டெல்லியில் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அதனால், ஆட்சியதிகாரத்தை இழந்த பின்னரும்கூட மம்தா பானர்ஜி சக்தி வாய்ந்த அரசியல் கட்சித் தலைவராகவே தோற்றமளித்தார்.

ஆனால், கண்ணிமைக்கும் வேகத்தில் காட்சிகள் மாற்றமடைய ஆரம்பித்தன. மிகப்பெரிய அதிர்ச்சி சட்டப்பேரவையிலேயே தொடங்கியது. எதிர்க்கட்சித் தலைவர் வேட்பாளராகச் சட்டோபாத்யாவை கட்சி முன்னிறுத்தியது. அதற்கு எதிராக 58 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரண்டு, சட்டப்பேரவைக் கட்சியைக் கைப்பற்றினர். அதன்பின்னர், அதிருப்தியாளர் குழுவிலிருந்து ரிதப்ரதா பானர்ஜி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அஃது மாநில அளவிலான ஒரு கிளர்ச்சியாகவே ஆரம்பத்தில் தெரிந்தது. ஆனால், டெல்லிப் பாராளுமன்றத்தில் அது எதிரொலிக்க அதிக காலம் தேவையிருக்கவில்லை. மொத்தமுள்ள 28 பாராளுமன்ற உறுப்பினர்களில், 20 அதிருப்தியாளர்கள் பாஜக தரப்புடன் கைகோர்த்துக்கொண்டனர். அவர்கள் வெளிப்படையாக பாஜகவில் இணையவில்லை; மாறாக, ‘இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி’ என்னும் ஒரு “லெட்டர் பேட்” (Letter pad) கட்சியில் இணைந்துகொண்டனர்.

அதனூடாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். சட்டரீதியான தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே இத்தகைய வியூகத்தைக் கையாண்டுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், ஒரு கட்சியின் பாராளுமன்றக் குழுவில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் பிரிந்து சென்றால், அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது என்று இந்தியக் கட்சித்தாவல் தடைச் சட்டம் சொல்கிறது.

ஒருபுறம் சட்டமன்ற உறுப்பினர்களின் கிளர்ச்சியும், பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவலும் நடைபெறுகின்றன. மறுபுறத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளில் கட்சிக்காரர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதனால், கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடுகின்றன; அதன்மூலம் கட்சிக் கட்டமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. ஏன் இந்த நிலை என்ற கேள்வி எழுகின்றது? தற்போதைய காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி அசுர பலத்துடன் காணப்படுகிறது.

அதனால், மம்தா பானர்ஜி தரப்பு திணறடிக்கப்படுவதாகவும் சொல்லலாம். ஆனால், அதுமட்டுமே காரணமல்ல. திரிணமூல் காங்கிரஸ் சித்தாந்த ரீதியாக வளர்ச்சியடையவில்லை; மாறாக, மம்தா பானர்ஜியின் ஆளுமை அடையாளத்தினாலும் ஆட்சி அதிகாரத்தினாலுமே வளர்ச்சியடைந்திருக்கிறது. அதனாலேயே, அது அப்பளம் போன்று எளிதில் நொறுங்குகிறது. ஒற்றை நபரின் அடையாளத்தை மட்டுமே முன்வைத்து வளருகின்ற எந்தவொரு அமைப்புக்கும் இத்தகைய நெருக்கடி ஏற்படும் என்பதே, மேற்கு வங்கத் தேர்தல் முடிவு சொல்லும் செய்தியாகும்.

Leave a Reply