வரைபடங்களும் மனிதர்களும் !

உக்ரைன் இனி ஒருபோதும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரசியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக 2022 பெப்ரவரி வரை புட்டின் அமெரிக்காவிடமும் செலன்ஸ்கியிடமும் கேட்டது “நேட்டோவில் இணையாமல் நடுநிலையாக இருக்க வேண்டும்” என்பதே. இதை மறுத்த செலன்ஸ்கி இன்று எந்த இடத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கிறார்.

நேட்டோவில் நிரந்தரமாக சேர முடியாது என்பது மட்டுமன்றி, உக்ரைன் இராணுவத்தை ஆறு இலட்சத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது, அதி தூர ஏவுகணைகளை உக்ரைன் வைத்திருக்க முடியாது, அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்பனவெல்லாம் ஒப்பந்தத்தினூடு உக்ரைன் வந்து சேர வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நேட்டோவுக்காக உக்ரைன் இழந்தவைகள் இவை மட்டுமல்ல. உக்ரைன் மக்கள் மற்றும் இராணுவம் என பெரும் மனிதப் பேரழிவுகளும், மனித அலைச்சல்களும், உளவியல் நசிவுகளும், கட்டுமான இழப்புகளும் போன்று துயரங்களும் ஆகும்.

இது மட்டுமா. ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட, உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய, டொன்பாஸ் பிரதேசங்களில் 90 வீதத்தை செலன்ஸ்கி ரசியாவிடம் பறிகொடுத்தும் இருக்கிறார். ரசியாவால் கைப்பற்றப்பட்டிருக்கும் இப் பிரதேசங்கள் ரசியாவிடம் உத்தியோகபூர்வமாக இணைக்கப்படுவதற்கான வாசலையும் இந்த ஒப்பந்தம் திறந்துவிட்டிருக்கிறது.

ஆனாலும் இவை தெளிவான வரையறுப்புகளுக்கு உட்படுவதில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் ஒத்த கருத்து இல்லை. மறுபுறத்தில் உக்ரைன் தனது பிரதேசமான டொன்பாஸ் மற்றும் கிரைமியா பிரதேசங்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

2002 பெப்ரவரியில் போர் தொடங்கிய போதும், 2002 ஏப்ரலில் ரசியா உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இஸ்தான்புல்லில் இது நடைபெற்றது. நேட்டோவின் விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக ரசிய பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த “உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும்” என ரசியா உக்ரைனை வலியுறுத்தியதை செலன்ஸ்கி தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி மேசைக்கு வந்தார். அது நடந்திருந்தால் உக்ரைன் இப்படி சின்னாபின்னப்பட்டு இருக்காது. பிரதேசங்களை பறிகொடுத்தும் இருக்காது.

ஆனால் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தையிலிருந்து இடைமறித்து “நாம் இருக்கிறோம் உனக்கு உதவ. நீ நேட்டோவில் சேருவதை யாராலும் தடுக்க முடியாது பேச்சுவார்த்தையிலிருந்து வெளியே வா” என்றெல்லாம் நம்பிக்கை கொடுத்து அல்லது உசுப்பேத்தி பேச்சுவார்த்தையைக் குழப்பியது பொரிஸ் ஜெல்சனின் பிரித்தானியாவும் பைடனின் அமெரிக்காவும்தான்!.

இவர்களே உக்ரைனின் இன்றைய நிலைக்கு மிகப் பெரும் காரணமானவர்கள். இவர்களுக்குப் பின்னால் இழுபட்டுப் போன ஐரோப்பாவானது இப்போ வலையில் சிக்கியுள்ளது. ட்றம்ப் “இது எனது போர் அல்ல. இது பைடன் ஆரம்பித்த போர்… இப்போ உங்களது போர்” என ஐரோப்பாவுக்கு விரல் நீட்டுகிறார்.

இன்னொரு கோணத்தில் இது ஒரு படம் காட்டலாகக் கூட இருக்கலாம். அதை எதிர்காலம் வெளிச்சமிடும்.

தமது பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரும் ஐரோப்பாவானது ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை என்றாவது ஒருநாள் ஏற்று பேசியதுண்டா என்றால், ஒருபோதும் இல்லை. ரசிய எல்லைவரை வந்த ‘நேட்டோ ஜக்கற்’ அணிந்த ஐரோப்பாவானது, தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி உரக்க கத்தும் அதே நேரம், தனது எல்லைக்குள் நின்று தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேச ரசியாவுக்கு இருக்கும் உரிமையை மறுக்கிறது.

பலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பற்றிப் பேசாமல், இஸ்ரேலின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேசிய இழிநிலைதான் ஐரோப்பாவின் இறைமை பற்றிய வியாக்கியானத்துக்கான தகுதியாக இருக்க முடியும்.

தனது பாதுகாப்பு உத்தரவாதத்தை மட்டுமன்றி ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் கவனத்தில் எடுத்து நேர்மையாக பேச்சுவார்த்தை மேசையில் எல்லோருமாக உட்கார்ந்தால் இப் பிரச்சினையை எப்போதோ முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்//

உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல் இது. நீண்ட கட்டுரை. ஆர்வமுள்ளவர்கள் முழு கட்டுரையையும் வாசிக்க பின்னூட்டத்திலுள்ள இணைப்புக்கு செல்லுங்கள்.