வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 02: இத்தாலியில் மீண்டும் முசோலினி ஆட்சி

உலகளாவிய ஆளும் வர்க்கங்கள் வணிகத்துக்கு நல்லதாக இருக்கும் வரை, அவற்றை அனுமதிக்கத் தயாராக இருப்பதாகவே, அரசுகளின் நடத்தைகள் காட்டுகின்றன. முசோலினி அதிகாரத்தைக் கைப்பற்றிய நூற்றாண்டு ஆண்டில், இத்தாலியில் அவரின் அபிமானியான ஜியோர்ஜியா மெலோனிக்கு, இத்தாலியில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இத்தாலியில் முதன்முதலாக அதிவலது ஆட்சி, கடந்த மாதம் அரங்கேறியது. இது வலுவான செய்தியொன்றைச் சொல்கிறது. 

முசோலியின் எழுச்சியை சாத்தியமாக்கிய காரணிகளே, இன்றும் அதேவகைப்பட்ட ஆட்சியாளர்கள் பதவியில் அமர்வதை சாத்தியமாக்கி உள்ளன. 1919இல் இந்த இயக்கம், பிற்போக்கு அரசியலின் புதிய வடிவமாக இருந்தது. ஆளும் வர்க்கம் மற்றும் அரசின் பிரிவுகளை நம்புவதற்குப் பதிலாக, முசோலினி முதலாளித்துவ ஒழுங்கைப் பாதுகாக்க ஒரு வெகுஜன மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். 

பாசிசத்தின் வழி, அரசியல் வன்முறையாகும். அதன் இறுதி நோக்கம், தொழிலாளர் வர்க்கத்தை அடித்து நொறுக்குவது; அதன் அமைப்புகளை அழிப்பதும் முதலாளிகள் ஜனநாயக இயந்திரத்தின் உதவியுடன் தங்களை ஆளவும், ஆதிக்கம் செலுத்தவும் முடியாமல் இருக்கும் போது, அரசியல் சுதந்திரங்களை முடக்குவதுமாகும். 

இந்த நோக்கத்துக்காக சமூகத்தின் பல்வேறு அதிருப்தி அடுக்குகளை முசோலினி ஒன்றிணைத்தார். கசப்பான போர்; கடினமான வீரர்கள், அரசியல் வன்முறையில் மகிழ்ந்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் மற்றும் விரக்தியடைந்த நீண்ட கால வேலையில்லாதவர்கள் போன்றோரின் விருப்புக்குரிய மாற்றுத்தெரிவானார் முசோலினி! 

இந்தக் களநிலைவரமே, முசோலினி ஆட்சிப்பீடமேறவும் தனது பாசிச நடைமுறைகளை எதுவித எதிர்ப்பும் இன்றி நடைமுறைப்படுத்தவும் இத்தாலியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லவும் வழிசெய்தது. 

இன்றைய உலகளாவிய நிலைவரத்தை உற்று நோக்கினால், அதன் சாயல் தெரிவதைத் தவிர்க்கவியலாது. 1919 ஏப்ரலில், இடதுசாரிகள் மீது, பாசிஸ்டுகள் தங்கள் முதல் பெரிய தாக்குதலைத் தொடங்கினர். சோசலிச தினசரி செய்தித்தாள் ‘முன்னோக்கி’யின் தலைமையகத்தை எரித்தனர். பாசிசக் கும்பல் மூன்று சோசலிஸ்டுகளைக் கொன்றாலும் பொலிஸார் ஒதுங்கி நின்றனர். 

தொழிற்றுறை அதிகளவில் இருந்த வடக்கு இத்தாலியின் பெருநகர அதிகார மையங்களில், தொழிலாளர் இயக்கத்தை எதிர்கொள்ள பாசிஸ்டுகள் தயங்கினர். அதற்குப் பதிலாக அவர்கள், தங்கள் தளத்தைக் கிராமப்புறங்களில் கட்டமைத்தனர், அங்கு நில உரிமையாளர்கள் விவசாய அமைப்புகளை பயமுறுத்துவதற்காக அவர்களை வேலைக்கு அமர்த்தினர்.

1920 செப்டெம்பரில், வடக்கு இத்தாலியில் அரை மில்லியன் ஆயுதமேந்திய தொழிலாளர்கள், தங்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்தபோது, போராட்ட அலை அதன் உச்சத்தை எட்டியது. பல தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளை அபகரித்து, ஒரு சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கான இறுதிப் போராட்டமாக இதைப் பார்த்தனர். 

இத்தாலிய ஓட்டோமொபைல் தொழிற்சாலை தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பின்போது, மிகவும் முக்கியமான உரையொன்றை இத்தாலிய மார்க்சியத் தத்துவவாதியான அந்தோனியோ கிராம்சி நிகழ்த்தினார். சில முதலாளிகள், தங்கள் தொழிற்சாலைகளை தொழிலாளர்களிடம் கையளித்தனர். இதன் தீவிரத்தை உணர்ந்த முதலாளிகள், பாசிச இயக்கத்துக்குத் தீவிர ஆதரவையும் கொடுக்கத் தொடங்கினர். 

வசந்த காலத்தில், பிரதம மந்திரி ஜியோவானி ஜியோலிட்டி, பாசிச வேட்பாளர்களை, தேசிய முகாமின் ஒரு பகுதியாக ஆதரித்தார்.  அவர்களில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட உதவினார். முசோலினியின் அமைப்புக்கு பெரிய அளவில் பணம் வர ஆரம்பித்தது.

முதலாளிகளுக்கு பெரும் சவாலாக இருந்த இடதுசாரிகள் மீது, குறிவைத்துப் பழிவாங்கும்படி பாசிஸ்டுகளிடம் முதலாளிகள் கேட்டுக்கொண்டனர். அதேவேளை, இடதுசாரிகள் இருக்கும்வரை தமது அரசியல் அதிகாரம் குறித்த அவா, கனவாகி விடும் என்று அவர்கள் பயந்தார்கள். இதனால் தொடர்ச்சியாக இடதுசாரிகளுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வந்தனர். 

ஆறு மாதங்களில், 119 வர்த்தக சபை கிளைகள், 107 கூட்டுறவு சங்கங்கள், 100 தொழிலாளர் பண்பாட்டு மையங்கள், 28 தொழிற்சங்க கிளைகள் என்பன சூறையாடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட இடதுசாரிப் போராளிகள் கொல்லப்பட்டனர். அரசு விரைவாக அதிகாரத்தை கருஞ்சட்டைக்காரர்களிடம் ஒப்படைத்தது. அவர்கள் ஊர் ஊராக அணிவகுத்துச் செல்லும்போது, ​​இராணுவ ஆயுதக் கிடங்குகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

பாசிசம், அனைத்து முதலாளித்துவ நேச சக்திகளின் எதிர்ப்புரட்சிகரப் போராட்டத்தை உள்ளடக்கியது என்பது இன்னும் தெளிவானது. 
ஆளும் வர்க்கம், பாசிஸ்டுகளை தொழிலாளர் இயக்கத்துக்கு எதிராக ஓர் அடியாகப் பயன்படுத்தி, பின்னர் அவர்களை அரசியலில் இணைக்கலாம் என்று நினைத்தது. முசோலினி மற்ற பழைமைவாத அரசியல்வாதிகளைப் போலவே நடந்து கொள்வார் என்று தாராளவாதிகள் நம்பினர். 

ஆனால், முசோலினியின் திட்டம் அவர் அரசின் மீதான முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதாகவே இருந்தது. சோசலிஸ்டுகள், பிற எதிர்ப்பாளர்கள் மீதான அரசியல் படுகொலைகள் அதிகரித்தன. மூன்று ஆண்டுகளுக்குள், முசோலினி அனைத்து அரசியல் எதிர்ப்புகளையும் தடைசெய்து, தொழிற்சங்கங்களைக் கலைத்து, உலகின் முதல் பாசிச ஆட்சியை ஒருங்கிணைத்தார்.

முசோலியின் கதையிலிருந்து, யாரும் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. உலகளாவிய பொருளாதார மந்த நிலையானது, உழைக்கும் மக்களைப் போராடத் தூண்டியுள்ளது. ஜி-20 மாநாடு தோல்வியில் முடிவடைந்து உள்ளது. 

முதலாளித்துவ நாடுகளால், அதனது சித்தாந்தத்தின் அடிப்படையில், இன்றைய நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது என்பது வெட்ட வெளிச்சமாயுள்ளது. முற்போக்கு இடதுசாரிச் சக்திகளுக்கான ஆதரவு அதிகரிக்கின்றது. ஆனால், இதற்கு எதிர்வினையாக ஆளும்வர்க்கம் தீவிர வலதுசாரிச் சக்திகளுக்கு ஆதரவு வழங்குகின்றது.

உதாரணமாக, இலங்கையை எடுத்துக்கொள்வோம். இன்றைய நிலையில், அரசுக்கு மிகவும் சவாலாக இருப்பது முற்போக்கு இடதுசாரி சக்திகளாகும். அவர்களே அனைத்தையும் கேள்வி கேட்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் பற்றி வினவுகிறார்கள். வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். இது ஆளும் வர்க்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கிறது. 

இதை ஆளும்வர்க்கம், மூன்று வழிகளில் எதிர்கொள்கின்றது. முதலாவது, கட்டற்ற அரச வன்முறையைக் கட்டவிழ்க்கின்றது. இதன்மூலம் அச்சவுணர்வை உருவாக்க முனைகிறது.  

இரண்டாவது, ஆய்வாளர்கள், கருத்துருவாக்குனர்கள், வீதிகளில் போராடுவதால் தீர்வு கிடைக்காது என்று தொடர்ந்து எழுதுகிறார்கள். அதன்மூலம் மக்கள் போராட்டங்களை மதிப்பிறக்கம் செய்கிறார்கள். 
மூன்றாவது, தீவிரவலதுசாரிகளை அரசாங்கம் தன்னுள் உள்ளீர்த்துக் கொள்கிறது. அதன்மூலம் தான் செய்ய நினைப்பதை அவர்களின் மூலம் செய்கிறது.   

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெனிட்டோ முசோலினியின் பாசிசக் கட்சியில் இருந்து வந்த ஒரு கட்சியின் தலைமையிலான கடுமையான வலதுசாரிக் கூட்டணியை இத்தாலி தேர்ந்தெடுத்துள்ளது. கட்சியின் தலைவரான ஜியோர்ஜியா மெலோனி, இத்தாலியின் முதல் பெண் பிரதம மந்திரியாகவும், ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியத்தை உலுக்கி வரும் ஒருவராகவும் உள்ளார். அவர் வெளிப்படையாகவே தன்னை முசோலினியின் வழித்தோன்றல் என்று அறிவித்தவர். ஐரோப்பா முழுவதும் பாசிச வேர்களைக் கொண்ட கட்சிகள் வெற்றி பெற்று வரும் நேரத்தில், அவரது வெற்றி மிகவும் முக்கியமானது. 

இவரது கட்சி ‘இத்தாலியின் சகோதரர்கள்’ என்று அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இது ஒரு சிறிய கட்சியாக இருந்தது. அது இரண்டு சிறிய வலதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணியில் இணைந்து, ஒரு வலதுசாரி, கடுமையான வலதுசாரிக் கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கட்சி தீவிர கருத்துகளுக்கு பெயர் பெற்றது. ஆனால், இம்முறை தேர்தல் பிரசாரத்தின் போது, ​​அது மிகவும் மிதமான ஒன்றாக மாறிவிட்டதைப் போன்று தோற்றம் காட்டியது. அதனால் வாக்காளர்கள் கடந்த காலத்தை பார்க்கவில்லை. அதன் கடந்த காலம் பாசிச வேர்களைக் கொண்டுள்ளது. 

இத்தாலியப் பிரதமராகியுள்ள ஜியோர்ஜியா மெலோனி இளமைப் பருவத்தில், முசோலினி ஆதரவாளர்களால் நிறுவப்பட்ட இயக்கத்தின் இளைஞர் குழுவில் சேர்ந்தார். கடந்த காலத்தில், அவர் அரசியல் பேரணிகளில் இருந்தபோது, ​​புலம்பெயர்ந்தவர்களைத் தடுக்க, ஆபிரிக்கா மீது கடற்படை முற்றுகையை நடத்தக் கோரினார். குடியேற்றவாசிகள் ஐரோப்பாவைக் கைப்பற்றப் போகிறார்கள் என்று அச்சுறுத்தினார். 

தேர்தல் பிரசாரத்தின் போது ​​அவர், வலிமையான, ஆனால் நியாயமான ‘இத்தாலிய தாய்’ என்ற மற்றொரு முகத்தை வழங்கினார். தனது வெற்றியுரையில், இத்தாலியை ஒன்றிணைக்க முயலப் போவதாக சூளுரைத்தார். இந்த மிதவாதத்துக்குத் திரும்புவதானது வலதுசாரி ஜனரஞ்சகவாதம் புத்திசாலித்தனமாகி வருவதற்கான அறிகுறியாகும்.