இந்தியாவின் எதிர்வினை மிகையானதா? கொரோனா தொற்று இதுவரை ஐரோப்பிய மற்றும் சீன பாதையில் செல்லவில்லை..

இந்த பகுதியில், தேவதாசன் இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று குறித்த தரவுகளை ஆராய்ந்து கொரோனாவிற்கான எதிர்வினை மிகையானதாக இருக்கலாம் என வாதிடுகிறார். கிடைக்கப்பெற்ற தகவல்களின் பின்னணியில் நான்கு பொதுவான கேள்விகளுக்கு அவர் விளக்கமளிக்கிறார்.

கொரோனா தொற்று இந்தியாவில் லட்சக்கணக்கானோரை பாதிக்குமா?

சீனாவின் வுஹான் மற்றும் இத்தாலியில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்த இரு இடங்களிலும் அது மிக வேகமாக பரவியது என்றாலும், பிற நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தற்போது அதே வேகத்தில் பரவவில்லை.

மார்ச் 3 வரை இந்தியாவில் கோவிட் -19 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களாக வுஹானிலிருந்து கேரளா திரும்பிய மாணவர்கள் மூன்று பேர் மட்டுமே இருந்தனர். அதன் பிறகு கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கைக் அதிரகரித்தாலும் மார்ச் 31 மாலை 4 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 1,251 ஆகவே உள்ளது.

மற்ற ஐரோப்பிய நாடுகளுடனோ அல்லது சீனாவுடனோ இதை ஒப்பிடுகையில் அங்கு இந்த எண்ணிக்கை 10,000ஐ தாண்டிவிட்டது என கீழே உள்ள விளக்கப்படம் காட்டுகிறது.

கோவிட் -19 பாதிப்பை கொண்ட 195 நாடுகளில், உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா 41 வது இடத்தில் உள்ளது. பொதுவாக தொற்றுநோய்களின் போது மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் தான் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் இருக்கும். இந்தியா உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற போதும் குறைவான பாதிப்புகளோடு இருப்பதை எவ்வாறு விளங்குவது?

மக்கள்தொகை அடிப்படையில் எண்ணிக்கையை தரப்படுத்தினால், இந்தியாவின் எண்ணிக்கை மற்ற நாடுகளை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை விட 500 முதல் 2000 மடங்கு குறைவாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதற்கு போதிய சோதனையின்மை மற்றும் கணக்கை மறைப்பு தான் காரணமா ?

கோவிட் -19 க்கு போதுமான நபர்களை அரசாங்கம் சோதிக்கவில்லை என்று பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தொற்றியயல் கருத்துக்களின்படி ஒரு நோய்த்தொற்றின் போது முகவர் நிறுவப்பட்டபின், புதிய அறிகுறி நோயாளிகளை சோதிக்க தேவையில்லை. பாதிப்பு சந்தேகிக்கப்படும் நபருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட நபருக்கும் வழங்கப்படும் சிகிச்சையில் எந்த வித்தியாசமும் இல்லாததால் அந்த சோதனை நேரத்த்தையும் பொருளையும் வீணாக்குவதற்கு நிகரானது.

இந்த கட்டத்தில், காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள எவரையும் ஒரு கோவிட் -19 நோயாளியாகக் கருதி, அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும். நோயாளி மற்றும் அவருடன் தொடர்பு கொண்டவர்களின் உடல்நிலையை (வெப்பநிலை, சுவாச வீதம், சோர்வு) உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும், அதில் ஏதேனும் சரிவு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்து இருந்தால் மட்டுமே அவர்களை கோவிட் -19 க்கு பரிசோதிக்கப்படக்கூடிய ஒரு மருத்துவமனைக்கு மாற்றி நோயறிதலை உறுதிப்படுத்த வேண்டும். இந்த திட்டமிடுதல் படுக்கைகளையும், சுகாதார ஊழியர்களின் நேரத்தையும் மிச்சப்படுத்துவதுடன் 80% நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு வெளியே வைத்திருக்கும்.

எனவே தீவிர நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சோதனையை மேற்கொள்ளும் அரசின் முடிவு சரியானது. இதன் நோக்கம் அதிக நிகழ்வுகளை கண்டறிவது அல்ல மாறாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதாகும்.

கூடவே மேலுமொரு கேள்வி எழுகிறது: கோவிட் -19 பாதிப்பிற்குள்ளான எண்களை இந்தியா உண்மையில் குறைவாக காட்டுகிறது எனில் சோதனை செய்யப்படாத ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கே இருந்தால், அவர்கள் ஏன் ஏற்கனவே மருத்துவமனைகளில் அனுமதியாகவில்லை? இந்தியாவில் நோய்த்தொற்று பரவத் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. இப்போது நிலவும் பீதியைக் கருத்தில் கொண்டால் நோயாளிகள் வீடுகளில் உட்கார்ந்திருக்க சாத்தியமில்லை. இப்போது ஒரு வாரத்திற்கும் மேலாக ஊரடங்கினால் சுகாதார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, இதனால் நோயாளிகள் மருத்துவமனைகளை அடைந்திருக்க வாய்ப்பு உள்ளது, அவை குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் எளிதாக கண்கணிக்க முடியும்.

இந்தியாவில் பெரும்பாலான நோய்களின் எண்ணிக்கையை குறைவாக பதிவு செய்வது உண்மைதான் என்றாலும், சில மாநிலங்கள் நோய் கண்காணிப்பில் சிறப்பாக செயல்படுகின்றன: அதிக கோவிட் -19 எண்ணிக்கைகள் பதிவாகிருக்கும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய இரண்டும் ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள். இந்த இரண்டு மாநிலங்களிலும் புதிய தொற்றோ அல்லது இறப்போ விடுபட சாத்தியமில்லை. மருத்துவமனைகளில் சுவாச நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானால் அது ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமலிருக்கவும் வாய்ப்பில்லை. மேலும் இதுபோன்ற தகவல்களை இந்தியா போன்ற ஒரு நாட்டில் மறைத்து வைப்பது கடினம். எனில் சோதிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படும் அந்த நோயாளிகள் எங்கே? ஒருவேளை அவர்கள் இல்லாமல் கூட இருக்கலாம்.

இந்தியாவில் தொற்றுநோய் கட்டுப்பாடில்லாமல் பரவுமா?

“லட்சகணக்கானவர்களுக்கு பரவிவிடும்” என்பது தான் அச்சத்திற்கான காரணம். இருப்பினும், மார்ச் 3 ஆம் தேதி முதல் கோவிட் -19 நோயினை உறுதிப்படுத்திய நாடுகளை ஒப்பிடுகையில், இரண்டு வெவ்வேறு பண்புகளை உடைய நாடுகளை கீழுள்ள அட்டவணையில் காணலாம்.

ஐரோப்பிய நாடுகளில் (சிவப்பு கோடுகள்) தொற்று அதிவேக பாதையில் பரவியுள்ளது. இதற்கு நேர்மாறாக, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் (நீல கோடுகள்) அமைந்துள்ள நாடுகளும், இந்தியாவும் (அடர்த்தியான பச்சை கோடு) ஒரு நேர்கோட்டுப் பாதையைக் கொண்டுள்ளன. மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிடும்போது இந்த வேறுபாடு மேலும் தெளிவாக புலப்படுகிறது .

மேலே குறிப்பிடபட்டுள்ள வரைபடம் தொற்று தொடங்கி எத்தனை நாட்கள் என்பதை குறிக்கிறது இதிலும் இந்தியா மற்ற நாடுகளிலிருந்து மிகவும் வித்தியாசமான பண்பினை கொண்டிருப்பது மீண்டும் ஒரு முறை தெளிவாகிறது. இந்தியாவில் கோவிட் -19 எண்ணிக்கை 1.45 என்கிற விகிதத்தில் அதிகரித்து வருகிறது, இது இத்தாலியில் 198 விகிதமாகும்.

பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தற்போது ஒரு அதிவேக தொற்றை எதிர்கொள்ளவில்லை. இதனால் மற்றொரு கேள்வி எழுகிறது: ஐரோப்பிய நாடுகளை போலில்லாமல் இந்தியாவில் தொற்று வேறு விதத்தில் பரவுமா?

கொரோனா வைரஸ் இந்தியாவில் லட்சக்கணக்கானோரை கொல்லுமா?

ஊடகங்களில் பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படும் 3% -5% இறப்பு விகிதத்தால் பலர் அச்சமடைகின்றனர். இந்த எண்ணிக்கையை உன்னிப்பாக கவனித்தால் மார்ச் 27 நிலவரப்படி, இந்தியாவில் சராசரி இறப்பு விகிதம் 4.5% ஆகும்.

இருப்பினும் இது போன்ற சூழலில் சராசரி என்பது சரியான கணக்கீடாக அமையாது. எடுத்துக்காட்டாக, தான்சானியாவில், மூன்று கோவிட் -19 நோயாளிகளில் ஒருவர் இறந்தார், எனவே இறப்பு விகிதம் 33% ஆகும். கோவிட் -19 பாதிப்பு குறைவாக உள்ள பிற நாடுகளிலும் இதேபோன்று இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதால் அது அதிக சராசரிக்கு பங்களிக்கிறது.

மறுபுறம் மீடியன் கணக்கீடு இது போன்ற மதிப்புகளால் பாதிக்கப்படுவதில்லை மேலும் அதன் மூலம் இறப்பு விகிதத்தின் 50 வது சதவீதத்தை கண்டறிய இயலும். இந்த கணக்கீட்டின் படி இந்தியாவுக்கான இறப்பு விகிதம் 0.4 ஆக குறைகிறது, இது கிட்டத்தட்ட பத்து மடங்கு குறைவு. 195 நாடுகளின் தரவுகளின் படி 95% நாடுகளில் 0 முதல் 0.8 வரை மட்டுமே இறப்பு விகிதம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பரிசோதிக்கப்படாத அறிகுறியற்ற நோயாளிகளை கணக்கீட்டில் சேர்த்தால் இந்த இறப்பு விகிதம் மேலும் குறையும். எனினும் அது குறித்த எந்த புள்ளிவிவரங்களும் இல்லாததால் எந்தவொரு முடிவுக்கும் வருவது சரியானதல்ல.

இருப்பினும் புரிதலுக்காக மக்கள் தொகை அடிப்படையிலான இறப்பு விகிதங்களைப் பார்ப்பது அவசியம். வுஹான் அமைந்துள்ள ஹூபே மாகாணம் 5.85 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளது, இது இந்தியாவிலுள்ள நடுத்தர அளவிலான எந்த மாநிலங்களுடனும் ஒப்பிடத்தக்கது. இந்த மாகாணத்தில் மொத்தம் 3,295 கோவிட் -19 இறப்புகள் காணப்பட்டன, அதாவது ஒரு லட்சம் மக்களுக்கு ஐந்து நபர்கள். கோவிட் -19 தொற்று இல்லாவிட்டாலும் ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு இந்திய மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 420,000 இறப்புகளைக் கண்டிருக்கும். அதாவது மாரடைப்பு, பக்கவாதம், சாலை விபத்துக்கள், நிமோனியா மற்றும் புற்றுநோயால் ஒவ்வொரு நாளும் 1,150 இறப்புகள். இந்தியாவின் தற்போதைய இறப்பு விகிதத்தில் கோவிட் -19 தொடர்பான இறப்புகள் இந்த வழக்கமான இறப்புகளில் 1% க்கும் குறைவாக இருக்கும்.

இத்தாலியில் இதே அளவிலான மக்கள்தொகையில் இறப்பு 27,000 ஆக உள்ளது – வுஹானை விட ஒன்பது மடங்கு அதிகம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலான இறப்புகள் 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடையே நிகழ்ந்துள்ளது. இத்தாலிய மக்களில் 23% வயதானவர்கள் என்பதால் இத்தாலியில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. மறுபுறம் 65 வயதிற்கும மேற்பட்ட மக்கள்தொகையில் 6.3% மட்டுமே உள்ள இந்தியாவில் இந்த அளவிலான இறப்பைக் காண வாய்ப்பில்லை.

மேலும் சில கேள்விகள்

இத்தாலியிலும் வுஹானிலும் ஏற்பட்டுள்ள இறப்புகளால் இந்தியர்கள் பீதி அடைந்துள்ளனர். ஆனால் இந்தியா இத்தாலி அல்ல, சீனாவும் அல்ல: நமது மரபியல், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் மிகவும் வேறுபட்டவை.

இந்தியாவில் பெரிய மக்கள் தொகை, பெருங்கூட்டம், தரமற்ற சுகாதார நிலை மற்றும் பொதுமக்களின் பொறுப்பற்ற அணுகுமுறை இருந்தபோதிலும் பல்வேறு வல்லுநர்கள் கணித்ததை போல் கோவிட் -19 எண்ணிக்கை அதிவேக வளர்ச்சியை அடையவில்லையெனில் அதற்கு கீழே குறிப்பிட்டதை மட்டுமே சாத்தியக் கூறுகளாக நாம் யூகிக்க முடியும்:

தொடர்ந்த தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதலால் தொற்று பெரும்பாலும் குடும்ப நபர்களுக்குள்ளாகவே கட்டுப்படுத்தப்பட்டு சமூக பரவலை தடுத்திருக்கிறது.

வூஹான் மற்றும் ஐரோப்பாவை போல வைரஸ் வேகமாக பரவ இந்தியாவில் வானிலை உகந்ததல்ல. மேலும் ஏற்கனவேநிலவும் சுகாதாரமற்ற நிலைமைகளால் இந்தியர்களுக்கு உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

சார்ஸ்-கோவி 2 க்கு ஏதிரான ANTIBODY இருக்கிறதா என்று பரவலான மக்களிடையே பரிசோதனை செய்வதன் மூலம் இந்த கருதுகோள்களை உறுதிப்படுத்த முடியும். இதற்கான திட்டங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கனவே அறிவித்துள்ளது.

அடிப்படையில் இதுவரை கிடைத்த தரவுகளின்படி வல்லுநர்கள் கணித்ததைப் போல் புதிய கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் லட்சகணக்கான மக்களை பாதிக்கவில்லை. பெரும்பாலானோர் சிறு இருமல் மற்றும் காய்ச்சலுடன் பெரும்பாதிப்புகள் இல்லாமல் குணமடைந்திருக்க கூடும். சிலர் இறக்க நேரிடும் எனினும் அந்த எண்ணிக்கை கணிக்கப்பட்ட அளவிற்கு பெரியதாக இருக்காது.

சில ஆய்வுகள் அதிக பாதிப்பை கணித்திருந்தாலும் அவை அனுமானங்களின் அடிப்படையிலானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக மேலே குறிப்பிடப்பட்ட முடிவுகள் தற்போதைய வைரஸ் பரவல் குறித்த தரவுகளிலிருந்து பெறப்பட்டது. அவை சரியானதாக இருக்குமென நம்புகிறேன்.

– டாக்டர் என். தேவதாசன்

தமிழில்: சர்ஜுன்

https://scroll.in/pulse/957883/did-india-overreact-covid-19-outbreak-isnt-following-the-trajectory-of-europe-and-china-so-far