எங்களுக்கு இல்லை முடக்கம்

நாட்டை மட்டுமா, தனது குடும்பத்தைச் சுமக்கும் சுமை தாங்கியாகவும், குழந்தைகளின் எதிர்காலத்தைத் தொலைநோக்கோடு கொண்டு செல்வதில் பெண்ணின் பங்கும் அளப்பரியது.
பெண் நினைத்தால் எதையும் சாதிப்பாள் என்று கூறுவதில் தவறில்லை. பெண்ணின் வைராக்கியம் என்பது ஆணை விட வலியது. உடல் ரீதியாக ஆண் வலியவன் என்றால், உள ரீதியில் வலியவள் பெண் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தான் குடும்பத் தலைவர் அது கணவனாக இருக்கலாம். தகப்பனாக இருக்கலாம். அவர்களை இழக்கும் அந்தக் குடும்பங்களைத் தலைமைத்துவம் ஏற்று வழி நடத்துவதில் பெண்ணுக்கு நிகர் பெண் தான். பொதுவாகச் சொல்வார்கள். ஆண் இல்லாத குடும்பத்தை வழிநடத்தலாம். ஆனால் பெண்ணொருவரின் துணையின்றி குடும்பத்தைக் கொண்டு செல்வது முடியாத காரியம் என்று. இது கண்கூடாகக் காணும் யதார்த்தம்.

காப்பிய நாயகிகளாகவும் பெண்பாற் புலவர்களாகவும் வீரமங்கைகளாகவும் இலக்கிய நாயகிகளாகவும் போற்றப்பட்ட பெண்களே இன்று பாரதி கண்ட புதுமைப் பெண்களாக மிளிர்கின்றனர்.

முற்காலத்தில் வீட்டுப் ‘படி’ தாண்ட விடாத பெண், இன்று விண்ணில் கொடி நாட்டுகிறாள். பெண்ணுக்கே உரிய மனோ தைரியம், விடாமுயற்சி, சாதிக்கின்ற வல்லமை என்பன அவளின் அடையாளமாகின்றன.

இன்று பல துறைகளிலும் பெண்கள் மேலோங்கியிருந்தாலும் வீட்டுக்குள் வந்தால் அவள் கணவனுக்கு அடங்கிய பெண்ணாகவும் குழந்தைகளுக்குச் சிறந்த தாயாகவும் மாறிவிடுகிறாள். இது இயல்பாகவே பெண்களிடம் இருக்கும் குணம். இத்தகைய குணத்தினால்தான், முழு உலகமே முடங்கியிருக்கும் இன்றைய கொரோனா காலகட்டத்திலும்கூடத் தான் மட்டும் முடங்காமல், எவ்வித ஓய்வையும் எடுக்காமல் வழமையான கடமைகளையும் விட அதிகம் உழைக்கின்றாள்.
இன்று உலகமே முடங்கிப்போயுள்ளது. கண்ணுக்குத் தெரியாத வைரஸ் முழு உலகையும் முடக்கி வைத்து, உலகம் இதுவரை கண்டிராத விடுமுறையை அனைவருக்கும் வழங்கியிருந்தாலும், பெண்களுக்கு மட்டும் கொரோனா விடுமுறை இல்லையென்றே கூறுவதை விட வேறு எவ்வாறு கூற முடியும்?

குறிப்பாகப் பெண்களுக்கான நெருக்கடி நிலையே இது. பாவம், கொரோனா கூடப் பெண் இனத்துக்கு இரக்கம் காட்ட மறந்து விட்டது போல. இந்தக் கொரோனா விடுமுறையானது நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்களை அதிகளவில் பாதித்துள்ளது. தொழிலுக்குச் செல்லும் பெண்ணாயின், ‘ஐயோ எனது குடும்பத்துடன் ஒரு பொழுதையேனும் கழிக்க முடியவில்லையே’ என்ற அங்கலாய்ப்புக்கு எல்லாம் ஒரே வாரத்தில், ‘ஐயோ சாமி… இந்தக் கொரோனா முடக்கம் எப்போது சரியாகும்’ என்று அலற வைக்குமளவுக்குப் பெண்களுக்குப் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது இந்தக் கொரோனா விடுமுறை.

பெரும்பாலும் பாடசாலை விடுமுறை நாள்களிலேயே பிள்ளைகளைச் சமாளிப்பதில் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு, 2 மாத விடுமுறையைப் பிள்ளைகளுடன் கழிக்க வேண்டும் எனும் போது, பிள்ளைகளின் குறும்புகளையும் சகித்துக்கொண்டு, பொறுத்துக்கொள்ளத் தான் வேண்டும். பாடசாலை, டியுசன் கிளாஸ், அப்பாவுடன் பைக், ஓட்டோ, கார் என்று சுற்றித் திரிந்ததுகளை 2 மாதம் வீட்டு வாசலைக் கூடத் தாண்டவிடாமல் வீட்டுக்குள் பூட்டி வைக்கும் போது, அவர்களின் குறும்புகளும் எல்லையில்லாமல் போயிருக்கும்.

ஒரு பக்கம் குழந்தைகள், மறுபக்கம் கணவன், பெற்றோர் என நான்கு பக்கமும் பம்பரமாய்ச் சுற்றும் பெண், இந்தக் கொரோனா முடக்கத்தில் தனக்காகச் செலவிடும் நேரத்தைத் தன்னையறியாமலே இழந்துள்ளாள். ஆரம்பத்தில் இந்த விடுமுறையை வரமாக நினைத்த பெண்ணுக்கு, பின் இதுவே ‘சாபமோ…’ என எண்ணும் அளவுக்கு இந்த விடுமுறை மீது வெறுப்பு.
கொரோனாவுக்கு முன்பெல்லாம் சாதாரண தொழிலுக்குச் செல்லாத இல்லத்தரசி, காலையில் பிள்ளைகளைப் பாடசாலைக்கும் கணவனைத் தொழிலுக்கும் அனுப்பிவிட்டு, அன்றைய கடமைகளை ஒவ்வொன்றாக முடித்து விட்டு, தனக்குப் பிடித்த மெகா தொடர்களையோ சமையல் நிகழ்ச்சிகளையோ பார்த்துக் கொஞ்சம் ஓய்வெடுப்பாள். ஆனால், இந்த முடக்க காலத்தில் அதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. வீட்டிலுள்ளவர்கள் நள்ளிரவு வரை தொலைக்காட்சியைப் பார்த்துகொண்டிருந்துவிட்டுக் காலை 10 மணிக்கே எழும்புவார்கள். ஆனால், இவளோ வழமைபோல் 5 அல்லது 6 மணிக்கு எழும்பினாலும் செய்வதறியாது அனைவரும் நித்திரையில் இருக்கும் போது, “நாம் என்ன உணவு இன்று சமைக்கலாம். எவ்வாறு ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்தலாம்” என்று சிந்தனையுடன் இருப்பாள்.

வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளின் பாடு இவ்வாறு என்றால், கொரோனா காலத்திலும் அலுவலகத்துக்குச் செல்லும் கட்டாயத்திலோ அல்லது அலுவலகக் கடமைகளை வீட்டிலிருந்து செய்யும் மங்கையர்களின் பாடோ பெரும் திண்டாட்டம்.

முழுநாளும் முழுக்குடும்பமும் ஒரு வீட்டுக்குள் முடங்கிய நிலையில், வழமையான 3 வேளை உணவு 5 வேளையாகவும், 2 நேர தேநீர் நினைக்கும் நேரமெல்லாம், மருந்து இப்படி இன்னோரன்ன விடயங்கள் பலரது விருப்பத்துக்கு அமையத் தேவைப்படுகின்ற சூழ்நிலையில், பெண்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுமா? அல்லது சகித்துக்கொண்டு செவ்வனே இருப்பார்களா? அல்லது அனைத்திலும் சலிப்பு ஏற்படுமா? இதுவே யதார்த்தமா என்று கற்பனை செய்திருக்காத ஒரு மாற்றத்துக்குள் திணிக்கப்பட்டிருப்பது நாம் மட்டுமல்ல. முழு உலகமே என ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தாலும் உண்மைகளை ஒவ்வொரு பெண்களினதும் குறிப்பாக இல்லத்தரசிகளின் கொரோனா கால அனுபவங்களைக் கேட்கும் போது, வலிகள், வேதனைகள், சுகங்களைப் புரிந்துக்கொள்ள முடிகின்றது.

இந்த நிலையில், பலதரப்பட்ட பெண்களின் மனநிலைகள் வருமாறு:

திருமதி சசிகலா (இல்லத்தரசி)
2 பிள்ளைகளின் தாயான இவர், கடமைகளுக்கச் செல்லாத இல்லத்தரசியான இவர், பெரிதும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால், கணவனின் தொழிலும் கேள்விக்குறியாகியுள்ளதால், மனஅழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார். காரணம், வீட்டில் பிள்ளைகளின் டியுசன் கட்டணங்கள், நீர், மின்சாரம், வீட்டு வாடகை உள்ளிட்ட இதர கட்டணங்கள் செலுத்துவது இவர் தான் .பொதுவாக ஒவ்வொரு வீடுகளிலும் யார்யாருக்கு என்ன கட்டணங்கள், எப்போது செலுத்துவது என்ற தகவல்கள் அந்த வீட்டிலுள்ள பெண்களுக்கே தெரியும்.

ஏன், கட்டணங்களைச் செலுத்துவது கூட இந்த இல்லதரசிகளாகத் தான் இருக்கும். எனவே தான், கொரோனாவால் பொருளாதார சிக்கலுக்கு முழுக் குடும்பமே உள்ளானாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது இல்லத்தரசிகள். எனவே, இவ்வாறானதொரு பாதிப்பைத் தான் எதிர்நோக்கியுள்ள அதேவேளை, தனது கடமைகளில் தனது கணவரின் பங்களிப்பும் கிடைப்பது மகிழ்ச்சியே எனச் சசிகலா தெரிவித்தார்.

திருமதி திவ்யா (அலுவலகம் செல்லும் குடும்பப் பெண்)
நாடு, வீடு என பல இடங்களிலும் பல்வேறு மாற்றங்களை கொரோனா ஏற்படுத்தியுள்ளதென்றார். குறிப்பாக 2 பாலர் பாடசாலைகளுக்குச் செல்லும் தனது குழந்தைகளின் குழப்பங்கள், கொரோனா காலத்தில் அதிகரித்திருந்தாலும் அவர்களை வெளியில் எங்கும் அழைத்துச் செல்லாமல், தொடர்மாடி மனைகளில் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருப்பதால் மற்றையவர்களை விடக் குழந்தைகளே அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். பெரியவர்கள், பெண்கள் போல் குழந்தைகளுக்கு எதையும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் இன்மையால், குழந்தைகளின் மனஉளைச்சல் வீட்டில் குழப்படிகளாக மாறும் போது, பெண்களுக்குக் கோபம் தலைக்கேறுவது இயல்பே. எனினும் வளர்ந்து பக்குவப்பட்ட நாம் தான், அதனைச் சமாளிக்க வேண்டுமென்ற வித்தியாசமான கருத்தை முன்வைத்தார்.

திருமதி ஸ்ரீசங்கர் (ஆசிரியை)
இந்தக் கொரேனா காலப் பணிகள் அதிகமாகியுள்ளன என்றார். வீட்டுக்கு வெளியே செய்த வேலைகளை வீட்டிலிருந்து மன அழுத்தத்துடன் செய்வதாகவும், வைத்தியரை ஒரு தரம் நாடும் அளவுக்கு மனஅழுத்தம் கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், தனது 2 பிள்ளைகள் கூட வெளியே செல்லாமல் மன அழுத்தத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். வீட்டு வேலைகளையும் செய்து, இணையம் மூலம் கற்றல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, வெளியே சென்று சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியாமல், தொடர்ச்சியாக அலைபேசியைப் பார்ப்பதால் தலைவலி, கண் வருத்தம் போன்ற நோய்களுடன் பாரிய மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதென்றார்.

நிர்மலா (இல்லத்தரசி)
2 பிள்ளைகளின் தாயும் இருதய நோயாளியுமான இவர், கொரோனா விடுமுறையில் பிள்ளைகளுடன் இருப்பது பிள்ளைகளைப் புரிந்துகொள்ள வழிசெய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வார்களாயின் அதிகாலையில் எழும்புதல், பிள்ளைகள் பாடசாலை விட்டு வீடு வந்து சேரும் வரை மடியில் பயத்துடன் காத்துக்கொண்டிருத்தல் போன்ற பதற்றங்கள், பரபரப்பு எதுவும் இன்றி நிம்மதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

எனவே, இல்லத்தரசிகள், அலுவலகம் செல்வோர், ஆசிரியை எனப் பலதரப்பட்ட பெண்கள் கொரோனா விடுமுறை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கமைய, பொருளாதார சிக்கல்கள், அதிக வேலை, பொருளாதார சிக்கல்களால் எதிர்காலத்தின் மீது கேள்விக் குறி போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், நாம் சேவை செய்வதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் தானே என்று நினைத்துக்கொண்டு அளவுக்கு மீறி உழைத்து, அதற்குள் தன்னை ஆழ்த்திக்கொண்டு சிரமம்படுவதையும் காணமுடிகிறது.

இந்தக் கொரோனா முடக்கத்தில் பெண்களுக்கு மட்டும் தான் மன அழுத்தமா? தினமும் வெளியே சென்று வரும் நாங்களும் தான் இன்று ஒரேடியாக முடக்கப்பட்டிருக்கிறோம் என ஆண்கள் தரப்பும் கூறுவதை ஆமோதிக்கும் அதேவேளை, சிறுவர்களாகிய எங்களது மன அழுத்தங்களே இன்று வீட்டைத் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது என சிறுவர்களின் அங்கலாய்ப்பும் புரிகின்றது.

எதையும் புரிந்துகொள்ள முடியாத, உணராத சிறுபிள்ளைகள் வெலியுலகத்தையே எட்டிப்பார்த்து 2 மாதங்கள் கடக்கும் நிலையில், பெரியவர்களான நாம் தான் அவர்களின் மன அழுத்தத்துக்கும் மருந்தாக மாற வேண்டும்.

ஆனாலும் தியாகத்தின் திருவுருவங்களாகத் தம்மைக் காட்சிப்படுத்தும் பெண்கள் இந்த முடக்கத்திலும் ஓய்வின்றிப் பம்பரமாய்ச் சுற்றுவதைப் பெருமையாய் கருதும் சிந்தனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சில இல்லத்தரசிகளின் கருத்துகள் மூலம் கருதத் தோன்றுகின்றது.

ஒட்டுமொத்தத்தில் ஆணோ, பெண்ணோ அவர்களை குடும்பத்தின் சுமுகமானதொரு வாழ்வோட்டத்துக்குத் தேவையானதொரு மனப்பான்மையும் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதை மனதுக்குள் இந்தக் கொரோனா கிளறிவிட்டிருப்பதை அவதானிக்கும் இதேவேளை, இந்த வழக்கத்துக்கு மாறான சூழல் வாழ்க்கையில் இதுவரை படிக்காமல் விட்ட பக்கங்களை நமக்குப் பாடம் எடுக்கின்றதோ என்று எண்ணவும் தோன்றுகின்றது.