ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் நீதி கிட்டும்

இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் மட்டுமல்ல, பல்லின சமூகம் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இன, மத, கலாசார பாரம்பரிய மரபு கோட்பாடுகளுக்கு ஏற்ற வகையில், அந்தந்த மக்களை வாழவைப்பதும் அந்த நாட்டின் பாரிய பொறுப்பாகும்.

அத்துடன், வேறுபட்ட சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம், ஐக்கியத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் மூலமும் அவர்களுக்கிடையே சகவாழ்வைப் பலப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பும் உண்டு.

ஒவ்வோர் இனமும் தங்களது மத கலாசார உரிமைகளுடனான சகவாழ்வை அடையவும் வாழவும் அரசியல் தலைமைத்துவம், சிவில் சமூகம், ஊடகவியளாளர் போன்றோரின் பாரிய பொறுப்புனர்ச்சி அவசியமாகின்றது. மதிப்புடனும் சுயமரியாதையுடனும் தங்களுடைய கலை, கலாசார, பண்பாடுகளுடன் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதே ஒவ்வொரு மனிதனின் பண்பாக விளங்குகின்றது.

இந்தப் பண்பானது இன, மத காலாசாரத்துக்கு ஏற்ப வேறுபட்டுக் காணப்படும். வேறுபட்டு காணப்படும் பண்புகள், ஒருவரை ஒருவர் ஒன்றிணைப்பதோடு உரிமைப்பாதுகாப்பாகவும் அமைகின்றது.

கோவிட்-19 காலப்பகுதியில், உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கை பெரும் பேசும் பொருளாகவே பார்க்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், இலங்கை அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் உடல்களை தகனம் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாகும்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பின் பிரிவு 14 ஆனது, மற்றவர்களது கலாசாரத்தை ஊக்குவித்து, மக்கள் சுதந்திரமாக வாழ்வதையும் உறுதி செய்கின்றது. இனம் மதம் என்ற வேறுபாடின்றி, இந்தச் சுதந்திரமானது அனைத்து பிரஜைகளுக்கும் உரித்தானது என்று அரசியலமைப்பு குறிப்பிடுகின்றது.

இந்த நாட்டில், முஸ்லிம்களினதும் கிறிஸ்தவர்களினதும் நம்பிக்கைக்கு மாறான முறையில், கொரோனாவால் மரணமடையும் உடல்கள், தகனம் செய்யப்பட்டதால் மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாக்கபட்டிருந்தனர்.

மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, பல மதத்தினர் பின்பற்றும் நடைமுறையாகும். பல மனித உரிமை அமைப்புகளும் ஜக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையும் மதச்சுதந்திரம், நம்பிக்கை குறித்த அடிப்படையில் சடலங்களை அடக்கம் செய்யும் உரிமையை மதிக்குமாறும் வலியுறுத்தியிருந்தன.

பல கருத்துகள் முன்வைக்கப்பட்டும், அரசாங்கம் பல காரணங்களுக்காக தகனம் செய்யும் விடயத்தில் பிடிவாதமாக இருந்தது. பல காரணங்களை அரசாங்கம் முன்வைத்திருந்தாலும், அரசாங்கம் பக்கசார்பாகவே நடந்து கொண்டதாக பல விமர்சனங்கள் எழுந்திருந்தன.

ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் ஜனாஸா எரிப்பு பற்றிய விடயமும் பெரும் பேசுபொருளாகவே இருந்தது. இதில், கொரோனா தொற்றால் மரணிக்கும் உடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்பதில் உலக நாடுகள் அக்கறையாக இருக்கின்றன என்பதை, பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டியிருந்ததுடன் அதற்கான அனுமதி அளிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டங்களில் பேசும் நிகழ்வாக அமைந்ததுதான் வெள்ளை துணி (கபன் சீலை) போராட்டம். இந்தப் போராட்டத்தை, முதன்முதலில் ஆரம்பித்தவர் சமூக ஆர்வலர் அஞ்சுல ஹெட்டிகே ஆவார். அவர் பொரளை கனத்தை வேலியில், வெள்ளை துணி ஒன்றைக் கட்டி, தனது எதிர்ப்பை வெளியிட்டு முஸ்லிம், கத்தோலிக்க மக்களுக்காக துணை நின்றார்.

பேராசிரியர்களான திஸ்ஸ விதாரன , மலிக் பீரிஸ் போன்ற நிபுணர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் சடலங்களை நல்லடக்கம் ​செய்வதால், நிலத்தடி நீர் மாசடையாது என விஞ்ஞான ரீதியான கருத்துகளை முன்வைத்திருந்தனர். இவர்களது இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிபுணர் குழுவுக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்திருந்தது.

2020 மார்ச் மாதம் 30ஆம் திகதி, சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், கொவிட்-19 பெருந்தொற்றால் இறப்பவர்களின் உடல்களை தகனம் மட்டுமே செய்ய முடியும் என்ற கட்டாய தகனத்தில் இருந்து, சுமார் ஒருவருட காலமாக நிறுத்தப்பட்டிருந்த நல்லடக்கம் செய்யும் உரிமை மீளவும் கிடைக்கப்பெற்றிருந்துது.

அதனடிப்படையில், 2021 பெப்ரவரி 25ஆம் திகதி, அடக்கம் செய்ய முடியும் என்ற வர்த்தமானியை சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்து. எனினும் அடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடம், சுகாதார வழிகாட்டல்கள் தயார் நிலையில் இல்லாமல் இருந்ததால், உடனடியாக நல்லடக்கம் இடம் பெறவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே, மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட காகித நகர் கிராமசேவகர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் காணி, பிரதேச சபையாலும் பள்ளிவாசல் நிர்வாகத்தாலும் அடையாளம் காணப்பட்டு, ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சுமூகமான முறையில், நல்லடக்கங்கள் இடம்பெற்று வருகின்றன. நல்லடக்கப்பட்டு வரும் உடலங்களின் பெயர் விவரங்கள், தொடர் இலக்கங்கள் என்பன முறையாகப் பதிவு செய்யப்பட்டும் வருகின்றன. இப்பணியை ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனங்கள் இணைந்து ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில், சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன.

இதனை தொடர்ந்து ஏனைய பகுதிகளிலும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களை, அடையாளம்கண்டு தருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோளும் முன்வைக்கபட்டிருக்கின்றது.

இதுவரை (22. 09. 2021)இந்த மஜ்மா நகரில், கொவிட்-19 பெருந்தொற்றால் இறந்தவர்களின் 2,963 பேரின் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த உடலங்களை தகனம் மட்டுமே செய்ய முடியும் என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திலிருந்து, சுமார் 11 மாதங்களின் பின்னர் கிடைக்கப்பெற்ற இந்தச் சுமுகமான தீர்வானது, இலங்கை வரலாற்றில் எதிர்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயமாக பார்க்கப்பட வேண்டும்.

இதிலிருந்து, ஒரு விடயம், முரண்பாடு ஏற்படும் போது, அதற்கான நியாயங்களை இரு பக்கங்களில் இருந்தும் சம அளவில் தெளிவாகப் பெற்றுக்கொள்வதுடன், சாத்தியமான காரணிகள், தரவுகளிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன், இந்த முரண்பாட்டு உரிமை போராட்டத்தில், சிறுபான்மை சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் நிறையவே உள்ளன. சிறுபான்மை சமூகங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும் போதோ, வேறு பிரச்சினைகளில் நியாயமான தீர்வைக் கேட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்படும் போதோ, இன மத பேதங்களை மறந்து, ஒருமித்து, ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால், போராடினால், உரிமை மறுப்பாயினும் வென்றெடுத்து விடலாம் என்பது அந்தப் படிப்பினைகளில் ஒன்றாகும்.

ஒரு சமூகத்துக்கு நெருக்கடி ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட சமூகம் மாத்திரமே தனித்து நின்று போராடவேண்டும் என்ற நியதியில்லை. மாறாக, நியாயமான கோரிக்கைகளை வேண்டி நிற்கும் போது, ஒன்றுபட்டு குரல் கொடுத்தால், நீதி நிலைநாட்டப்படும்.