ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆபத்தானவை

ஒவ்வொரு வருடமும் வருகின்ற பெருநாள்களைத் தவறவிட்டால், அடுத்தடுத்த ஆண்டுகளில் கொண்டாடலாம், ஆனால், உறவினர்கள் எவராவது இறந்துவிட்டால், அதிலிருந்து ஒருவருடத்துக்கு எவ்விதமான கொண்டாட்டங்களையும் மனமுவந்து கொண்டாட முடியாத துர்ப்பாக்கிய நிலைமையொன்று ஏற்பட்டுவிடும்.

ஜனநாயக உரிமையாக வாக்குரிமையைப் பயன்படுத்தபோய், தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாண்டவம் வீறுகொண்டெழுந்து ஆடிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் உத்வேகமெடுத்தமைக்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணமாகுமென தெரிவித்திருக்கும் உயர்நீதிமன்றம், கடுமையான விசனத்தையும் வௌிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இனங்காணப்பட்டிருக்கும் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், நமது நாட்டிலும் இனங்காணப்பட்டுள்ளனர். அதன்தாக்கம் மிகவேகமானதென வல்லுநர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

முதலாவது, இரண்டாவது அலைகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸை விடவும், மிகவேகமாகப் பரவக்கூடிய புதுக்கொரோனா வைரஸ், ஒருமணிநேரம் காற்றில் வீரியத்துடன் இருக்குமென எச்சரித்துள்ளனர். ஒருவரின் தும்மலிலிருந்து அந்த வைரஸ் வெளியேறி, காற்றுடன் கலந்து ஒருமணிநேரம் வீரியத்துடனேயே இருக்குமென்பதலால், முகக்கவசத்தைத் தவறுதலாகவேனும் கழற்றாமல் இருப்பதே, உயிருக்கு உத்தரவாதமளிப்பதாய் இருக்கும்.

‘தைபிறந்தால் வழிப்பிறக்கும்’ என்பர்; ஆனால், கொரோனா வைரஸால் வலிதான் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நாடு வழமைக்குத் திரும்பியது. எனினும், தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டுடன் கொரோனா வைரஸை அள்ளிக்கொண்டு, ஒவ்வொரு கிராமங்களிலும் சேர்த்துக்கொண்டனர்.

ஆதலால், புத்தாண்டுக்குப் பின்னர், அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுகளாக, மூடப்பட்டு வருகின்றன. சுகாதார வழிகாட்டல்களை இறுகக்கடைப்பிடிக்கப்படுகின்றன.

ஆக, முதலாவது அலையின்போது, எவ்வளவுக்கு எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தோமோ, அதற்கு ஒருபடி மேல்சென்று, சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, கட்டுப்பாட்டுகளுடன் இருக்கவேண்டும்.

நாடு முழுமையாக முடக்கப்படாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்திருக்கும் அறிவிப்பு, சகலருக்கும் பெரும் திருப்தியாய் இருக்கும். ஆனால், வீட்டிலிருந்து வெளியேறி, வீட்டுக்குள் நுழையும் வரையிலும் சுகாதார வழிமுறைகளை அச்சொட்டாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதோவொரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி, மாற்றத்தை உருவாக்கி இருக்கும். நல்ல மாற்றங்களாயின் மனமுவந்து ஏற்றுக்கொண்டு, கூடாதவற்றை கழித்துவிட வேண்டுமே தவிர, மீண்டுமொரு தடவை தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இடமளித்துவிடக்கூடாது.

(Tamil Mirror)