நவம்பர் 15ம் தேதி

இந்தச் சட்டம் இலங்கையில் பல தலைமுறையாக வாழ்ந்து வந்த இந்தியத் வம்சாவழி தமிழர்களை குறிப்பாக மலையகத்தமிழர்களை குடியுரிமை இழந்தவர்களாக மாற்றியது.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் தமிழ்நாடு பகுதியிலிருந்து இலங்கைக்கு பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொண்டு வரப்பட்டனர்.

அவர்கள் தோட்டங்களில் கடுமையாக உழைத்து, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தனர். ஆனால் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் சூழலில், அப்போதைய சிங்கள தேசியவாத அரசியல் கட்சிகள் “மலையகத் தமிழர்கள் உண்மையான இலங்கையர்கள் அல்ல” என்ற மனப்பான்மையை உருவாக்கின. இதன் விளைவாக, புதிய அரசாங்கம் குடியுரிமை வழங்கும்போது கடுமையான நிபந்தனைகளைச் சட்டமாக்கியது.

Ceylon Citizenship Act No.18 of 1948 இந்தச் சட்டம் இலங்கையின் குடிமகனாக தகுதி பெறுவதற்கான இரண்டு வழிகளை வகுத்தது,
Citizenship by Descent (வம்சாவழி மூலம் குடியுரிமை) ஒருவர் அல்லது அவரது தந்தை இலங்கையில் பிறந்தவர் என்றும், அந்த குடும்பம் குறைந்தது இரண்டு தலைமுறைகள் நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் நிரூபிக்க வேண்டிய நிபந்தனை.

Citizenship by Registration (பதிவின் மூலம் குடியுரிமை) இலங்கையில் பிறந்தவராக இருந்தாலும், மேலே கூறிய நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அரசாங்கத்திடம் தனிப்பட்ட விண்ணப்பம் செய்து, அவர்களது தீர்மானத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில், இது மிகக் கடினமான செயல்முறையாக இருந்தது.

இந்த நிபந்தனைகள் பெரும்பாலான இந்தியத் தமிழர்களால் நிரூபிக்க முடியாதவையாக இருந்தன, ஏனெனில் அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாலும், சரியான பிறப்பு அல்லது குடியிருப்பு ஆவணங்கள் இல்லாததாலும் அவர்கள் தகுதி இழந்தனர்.

இந்தச் சட்டத்தின் மூலம் சுமார் 7 இலட்சம் மலையகத் தமிழர்கள் ஒரே இரவில் நாடு அற்றவர்களாகினர் ஆனார்கள். அவர்கள் வாக்குரிமை, கல்வி, மருத்துவம், அரசு வேலை, வீட்டு வசதி போன்ற அடிப்படை உரிமைகளை இழந்தனர். பலர் “வெளிநாட்டவர்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டதால் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டனர்.
அரசியல் நோக்கில், இந்தச் சட்டம் சிங்கள பெரும்பான்மையின் வாக்குச் சக்தியை உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் பார்க்கப்பட்டது.

இந்த பிரச்சினை சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. இதன் பின்னர், 1964ல் சிரிமா–சாஸ்திரி உடன்படிக்கை, 1974ல் சிரிமா–காந்தி உடன்படிக்கையின்படி குடியுரிமை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், இந்த உடன்படிக்கைகள் செயல்படுத்தப்பட்ட விதம் மந்தமானதாக இருந்ததால், பல ஆயிரம் குடும்பங்கள் தலைமுறைகள் முழுவதும் குடியுரிமையின்றியே வாழ்ந்தனர்.

1990களின் இறுதிப் பகுதி வரை, இலங்கையில் இன்னும் பல ஆயிரம் மலையகத் தமிழர்கள் குடியுரிமையின்றி வாழ்ந்தது வரலாற்று உண்மை.
1948 நவம்பர் 15ம் தேதி இலங்கையின் சிறுபான்மையினருக்கான பல இருண்ட வரலாறுகளில் இன்னுமொரு மறக்க முடியாத துயர நாள். அந்த நாளில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், இலங்கையின் சமூக சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் ஆழமாக காயப்படுத்தியது.
தங்கள் உழைப்பால் நாட்டின் பெருந்தோட்ட தொழில்துறை மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுத்தவர்களே, அரசியலின் பெயரிலும் பேரினவாதத்தின் பெயரிலும் தங்கள் அடிப்படை உரிமைகளிலிருந்து விலக்கப்பட்டனர்.

15 நவம்பர் இலங்கை வரலாற்றில் இன்னுமொரு இருண்ட நாள்.

(Devashan Kunasingham)