பேசப்பட வேண்டிய கொரனாவின் மூன்றாவது அலை…

பதிவிற்கும் சீதாராம் யெச்சூரியின் கவலை பொதிந்த புத்திர சோகத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் இப்பதிவிற்காக தெரிவு செய்தேன். இதுவே ஒரு சாமான்ய இந்தியனின் தற்போதைய அடையாளமாகிக் கொண்டிருக்கும் நிலமையில் இதனைத் தெரிவு செய்தேன் இனி பதிவிற்குள் உட் செல்வோம்….

மீண்டும் பேச வேண்டிய சூழல் மரணங்களைப் பற்றியும், இழப்புகளைப் பற்றியும், அவலங்களைப் பற்றியும் அதிகம் பேச வேண்டியுள்ளதே என்ற சலிப்புகள் ஏற்பட்டாலும் சந்தோஷங்களையும் வாழ்தலைப் பற்றியும் பேசுவதற்கு பலரும் இருக்கும் இடத்து அவலங்களையும் மரணங்களையும் அதனுடன் கூடி வாழ்தலைப் பற்றி மீண்டும் பேச விளைகின்றேன்.

பெருந்தொற்று கொரனா இந்த உலகை ஆட்டிப் படைக்க ஆரம்பித்து வருடங்கள் கடந்து சில மாதங்களும் ஓடிவிட்டன. கட்டுரைகள், ஆய்வுகள், கலந்துரையாடல்கள் என்று 40 இற்கும் மேற்பட்ட செயற்பாடுகளைச் என் தரப்பில் இருந்தும் செய்தாகிவிட்டது. ஆனாலும் இதிலிருந்து விடுபட முடியாத அவலங்கள் நிலமைகள் தொடருவது வருத்தத்தை அளிக்கின்றது.

மனித குலம் இதுவரை வெற்றி கொள்ளவே இல்லை இந்த பேரிடரை என்ற அங்கலாயப்;பும் இருக்கின்றது எம்மிடையே

முதலாம் அலை அல்லது தொடக்கம் என்று ஆரம்பித்து இரண்டாம் அலை என்று விரிந்து இன்று மூன்றாவது அலையிற்குள் நாம் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றோம். சிலர் இதனை தமது இரண்டாம் அலையாக உணர்ந்தாலும் இது உண்மையில் மூன்றாம் அலைத்தான்.

இந்த ஒரு வருடம் கடந்த நாட்களை ஒவ்வொரு நாடுகளும் தமது இயலுமை, அறிவியல், அரசியல், மருத்துவ விஞ்ஞானத்திற்குள் உட்பட்டு இந்த பெரும் தொற்றை எதிர் கொண்டிருக்கின்றன.

ஆரம்பத்தில் இந்த வைரஸ் தொற்றை சதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்து போக முற்பட்ட வல்லரசுகள்… அரசுகள்.. நாடுகள்.. மக்கள்.. கூட நாட்கள் செல்ல ஆட்டம் கண்டன. யோசிக்க முற்பட்டன. ஏன் திறமையாகவும் செயற்பட முற்பட்டன.

இது சீன வைரஸ் என்று எள்ளி நகையாடிய போது அல்லது பள்ளிவாசலுக்கு சென்று வந்த கூட்டத்தால் பரப்பப்பட்டது சிங்கள இராணுவத்தினால் தமிழ் பிரதேசத்திற்கு ஏவிவிடப்பட்டது என்று பாகுபடுத்திப் பார்க்கும் அர்த்தமற்ற அறிவிலித்தனமான அரசியல் பேச்சுகள் எல்லாம் அடிப்பட்டுப் போய் இன்று எய்தவர்களுக்கே அம்பு திரும்பி சென்றதைப் போன்று நிலமை உருவாகியுள்ளது.

தற்போதைய நாள் ஒன்றிற்கு மிக அதிக் தொற்றுகள் எற்படும் இந்தியவை வைரஸ் ஐ பரப்பும் ஆபாயக் குறி நாடாகவும் அங்கிருந்து உலக நாடுகளுக்கு பயணப்படுவர்களை வித்தியாசமாக பார்க்க வேண்டும் என்ற வெறுப்பு பார்வையும் பிரச்சாரமும் ஒரு காலத்தில் சீன மக்களுக்கு ஏற்பட்டது போல் தற்போது இந்தியாவிற்கு கண்டனங்களுக்கு மத்தியிலும் ஏற்பட்டு வருகின்றது.

அன்றும் சீன வைரஸ் என்று சீனாவை ஒரு வெறுப்பான பார்வையிற்குள் உள்ளாக்கியதை தவறு என்று கண்டனம் தெரிவித்த நாங்கள் இன்றும் புதிதாக எழும்ப முற்படும் இந்தியர்களை வெறுக்கும் பார்வையை உடைய செயற்பாடுகளை எதிர்க்கின்றோம் கண்டனம் தெரிவிக்கின்றோம்.

அமெரிக்காவின் ட்றம் நிர்வாகத்தின் கோமாளித்தனமான அரசியல் அங்கு உலகில் அதிகம் கொரனா தொற்றிற்கு உள்ளானவர்களை உருவாக்கியதைப் போல் இந்தியாவையும் இன்று உள்ளாக்கி வருகின்றது. இதற்கான முழு பொறுப்பும் ஆளும் இந்திய அரசையே சாரும்.

முதலாவது அலையில் இருந்து இரண்டாவது அலையை காணமல் மூன்றாவது அலையிற்கு ஒரேயடியாக தாவிய நிலமை போல் பேசப்படும் இன்றைய நிலமையிற்கு இடைப்பட்ட காலத்தில் எவ்வாறு வைரஸ் இன் தொற்று அங்கு முதல் அலையின் பின்பு எவ்வாறு குறைவடைந்தது என்பதை இந்தியா முறையாக ஆய்விற்கு உள்ளாக்கவில்லை.

மாறாக இந்தியர்கள் இயல்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உடையவர்கள். வெப்ப வலைய நாட்டில் வாழ்பவர்கள் எம்மை ஒன்றும் செய்யாது… மணி அடித்தல் கை தட்டல் விளக்கு ஏற்றல் போன்ற சிரிப்பிற்கிடமான நாட்டின் தலைவரின் அறைகூவல்கள் பட்டினிச் சாவாலும் இடம் பெயர்ந்து நடையாக தமது பிறந்த பூமியை நோக்கி நடந்து மரணித்த பலரைப் பற்றியும் அதிகம் அக்கறை கொள்ளாத அரசு மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையில் எவ்வாறு முதலாவது அலை படிப் படியாக குறைவடைந்து என்பதை ஆய்வு செய்யவில்லை.

மாறாக தொற்று வீதம் குறைவடைந்ததை அரசின் பெரிய வெற்றியாக மட்டும் கொண்டாடியது. தேர்தல் வெற்றிகளையும் ஆட்சிப் பிடிப்புகளிலும் அதிகம் கவனம் செலுத்தி வந்தது… வருகின்றது.

அதே வேளை ஐரோப்பிய நாடுகளின் இரண்டாம் அலை பற்றிய எச்சரிக்கையை அதிகம் அலட்டிக் கொள்ளாது கடந்து சென்று தேர்தல் திருவிழாக்களிலும் கும்பமேளா திருவிழாக்களிலும் கட்டுக்கடங்காது மக்களை கூடுவதை அனுமதித்து. புதழதாக உரு மாற்றம் பெற்று வரும் வைரஸ் பற்றிய விழிப்புணர்ச்சிகளுக்கும் தம்மை அதிகம் உள்படுத்திக் கொள்ளவில்லை. இது உலகின் வேறு பல நாடுகளுக்கும் பொருந்தியும் இருக்கின்றது.

இதன் ஊடு தனது இந்துத்துவா விசுவாசத்தை நிலைநாட்ட முற்பட்ட காவிச் செயற்பாடுகள் இன்று இந்தியா முழுவதும் ஒரு நாளில் மூன்று இலட்சத்தை கடந்து இன்னும் சில தினங்களில் ஐந்து இலட்சம் வரை தினத் தொற்றாளர்கள் உருவாவார்கள் என்பதை உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்து இந்தியர்கள் எம் நாட்டிற்குள் வருவதற்கு தடை போட வேண்டும் என்ற அளவிற்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது.

இத்தனைக்கும் தடுப்பூசியை இந்தியாவே உற்பத்தி செய்தும் நோயுற்றவர்களுக்கான ஒட்சிசனை இந்தியாவே தேவையான அளவிற்கு உற்பத்தி செய்திருந்தாலும் இந்து சமூத்திரப் பிராந்திய பெரியண்ணன் மமதையை தக்க வைக்க இவை இரண்டையும் தமது மக்களின் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு ஏற்றுமதி செய்து வருமானத்தை பார்க்க வைக்கும் தனியார் மயமாக்கலை ஊக்கிவித்து இன்று உள்ளுரிலும் சர்வ தேசத்திலும் கடும் கண்டனத்திற்கும் கேள்விகளுக்கும் உள்ளாகி நிற்கின்றது இந்திய அரசு.

ஒட்சிசன் தட்டுப்பாட்டால் வைத்தியசலையில் அனுமதியின்றி இந்திய நகரத்தின் வீதியில் வைரஸ் தொற்றாளர் வீழ்ந்து இறந்த சம்பவங்கள் இந்தியாவில் நிலவும் மிகப் பெரிய அவலத்தை இந்திய அரசிற்கும் ஏன் உலக நாடுகளுக்கும் அடித்துக் கூறியுள்ளது.

நான் வாழும் நாடான கனடா ஜி8 நாடுகளில் ஒன்றாக உள்ள போதும் தோராயமாக இந்தியாவின் கேரள மாநிலத்து சனத் தொகையை உடைய நாடாக இருந்தும் கொரனா வைரசின் மூன்றாவது அலையிற்கு தாக்கு பிடிக்க முடியாமல் தளம்புவதை நாம் கருத்தில் எடுத்துதான் ஆக வேண்டும். அப்போ வறுமையான வளம் குறைந்த நாடுகளின் நிலமை இன்னும் அவலங்கள் நிறைந்ததாகவே இருக்கும் என்பது புரியப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்னொரு புறத்தில் அதிகம் கவனிக்கப்படாத நாடுகளாக ஆபிரிக்க நாடுகள் தடுப்பூசிகளை பெறுவதற்கோ அல்லது நோயுற்றவர்களை காப்பாற்றுவதற்குரிய வளங்கள் அற்று வசதியுள்ளவர்கள் யாரும் அதிகம் கவனிக்காத நாடுகளாக தமது மக்களை சாகக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.

பெரும் தொற்று ஆரம்பித் நாட்கள் முதல் சீனா, வியட்நாம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் சரியான திட்டமிடலுடன் செயற்பட்டு இன்று வரை சகல அலைகளையும் வெற்றிகரமாக சமாளித்துவரும் நாடுகளின் பட்டியலில் உயர்ந்து நிற்கின்றன.

வல்லசு அமெரிக்கா ஆட்சி மாற்றத்தின் பின்பு கடந்த அரசு செய்த தவறுகளை சரி செய்வதற்கு தற்போதைய புதிய அரசு நாட்களை எடுத்துக் கொள்கின்றது. பிரித்தானியா முதல் அலையில் கிடைத்த அனுவத்தையும் இரண்டாவது அலையில் முகங்கொடுத்த அவலத்தையும் பாடங்களாக எடுத்துக் கொண்டு வழமையிற்கு மாறாக அவசர அவசரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை தமது மக்களின் பெரும் பகுதியிற்கு வழங்கி அதிசயப்படக் கூடிய அளவிற்கு வைரஸ் பரவலை இன்று கட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த பெரும் தொற்று ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு கருத்தை என்னைப் போன்றவர்கள் வலியுறுத்தினோம்… உலப் போர் போன்ற பொது அவல காலங்களில் உலகமே ஒரு அணியில் திரண்டு அந்த போர்களை எதிர் கொண்டு வெற்றி கொண்டதைப் போல் இந்த பெரிடரையும் உலகின் பொதுவான அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு அதன் தலமையில் இந்த பேரிடரை எதிர் கொண்டால் மாத்திரமே இந்த மனித குலத்தை இழப்புக்களை குறைவாக்கி வெல்ல முடியும் என்று.

இது மருத்து விஞ்ஞானத்தை அடிப்படையாகவும் பொருளாதாரத்தையும் இணைத்து வளங்களை சமமாக பகிர்ந்து உலக மக்கள் யாவருக்கும் சமத்துவமாக கிடைக்கும் வகையில் செயற்பட்டாலேயே இந்த வைரசை இலகுவில் வெற்றி கொள்ள முடியும் என்று.

உலகம் உலக மயமாக்கலுக்குள் சிக்கி ‘சுருங்கி’விட்ட நிலையில் பறப்புகளும்… இடம் பெயர்வுகளும்… பண்டப் பரிமாற்றங்களும்… மிகவும் நெருங்கிவிட்ட நிலையில் வைரஸ் பரிமாற்றமும் இலகுவில் பரவிவிடும் என்ற யதார்த்தம் உணரப்பட வேண்டும்.

எனவேதான் கூறுகின்றோம் ஒரு உலகப் பொது அமைப்பு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயற்படுதலே இந்த வைரசை வெற்றி கொள்வதை உறுதிப்படுத்தி எங்கள் முகக் கவசங்களை அகற்றி இயல்பாக நடமாட அனுமதிக்கும். இதனை மனித குலம் செய்யுமா…? செய்ய வேண்டும் என்பதே மனித குலத்தின் எதிர்பார்ப்பு.

விழிப்பாக இருப்போம்… சரியாக இணைந்து செயற்படவோம்… கொரனா வைரஸ்சை எச்சரிக்கையுடன் புத்திசாலித்தனமாக எதிர் கொண்டு வெல்லுவேம்…