பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் ​சேவை

இந்த கப்பல் சேவை ஆரம்பிப்பதன் ஊடாக, இருநாட்டுக்கும் இடையிலான உறவு வலுப்பெறும். அத்துடன், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்பு இன்னும் இறுக்கமாகும்.  ​தமிழ்நாட்டுடன் இன்னும் தொப்புள் ​கொடி உறவில் இருப்போருக்கு அது வரபிரசாதமாகவே அமையும்.

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான விமானச் சேவைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்நாட்டுக்குச் சென்று திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வர்த்தகமும் தலைத்தூக்கியுள்ளன. ​அவ்வாறு சென்றுவருவோரில் வர்த்தர்களே அதிகமாகும். யாத்திரை காலங்களில் யாத்திரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

இதற்கிடையே யாழ்ப்பாணம் பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் விமானச் ​சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றையதினமே  காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையில் படகுச்சேவையை ஆரம்பிப்பதற்கான தகவல் கசிந்தது. அதன்பின்னர் அச்சேவைக்கு  இந்திய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

அதன்பின்னரே, இந்தியாவுக்கு ஒரு தடவையேனும் படகில் சென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் பெருபாலான தமிழர்களின் மனதில் உதித்தது. இதனூடாக, தங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்பது அவர்களின் கனவாகும்.

இந்நிலையில் இந்த படகுச்சேவைக்கு நிதி வழங்குபவர்களில் இன்ட்சிறி ஃபெரி சேர்விஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபனும் ஒருவர் ஆவார்.இந்த நான்கு மணித்தியால படகுச்சேவை மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள நந்தகோபன், தற்போது காரைக்கால் துறைமுகத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த துறைமுகத்தை அடானிபோர்ட்ஸ் அன்ட் எக்கனமிக் சோன் நிறுவனம் சமீபத்தில் மற்றுமொரு நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்துள்ளது.

இப்படகுச்சேவையின் தலைமை மாலுமியும் ஆறு பணியாளர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள். அத்துடன், படகுச்சேவை இந்திய கொடியுடன் இயங்கும்.சிங்கப்பூரிலிருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ள இந்த படகு சர்வதேச கடல்சார் தராதரங்களுக்கு ஏற்ப இயங்கும். 

ஒருவழி பயணத்துக்கு 50 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக அறவிடப்படும் (வரியும்). இந்த படகில் 120 முதல் 150 பேர் வரை பயணம் மேற்கொள்ள முடியும். நபரொருவர் 100 கிலோ கிராம் பொருட்களை கொண்டுசெல்ல முடியும். இந்த படகில் சிற்றுண்டிச்சாலை வசதியும் காணப்படும்.

இது, முதல் மூன்று மாதங்களுக்கு வரிகள் விதிக்கப்படாத பயணிகள் சேவையாக காணப்படும் என இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.  படகில் ஏறுவதற்கு முன்னர் தங்கி இளைப்பாறுவதற்கு அங்கே பல ஹோட்டல்கள் உள்ளன. 

இப்படகுச்சேவைக்கு முதலீடு செய்வதற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இந்த இரண்டு துறைமுகங்களுக்கும் இடையிலான படகுச்சேவைக்காக மூன்று முதலீட்டாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

படகுச்சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதி இலங்கையின் பக்கத்திலிருந்து பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இந்தியாவே இனி இதனை ஆரம்பிக்கவேண்டும் என்றார்.

இந்த படகுச்சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம்150 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. பயணிக்களுக்கான வசதிகள் மற்றும் குடிவரவு திணைக்களத்தின் பிரிவு ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விசேட சொகுசு புகையிரதமொன்றை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பௌத்த யாத்திரீகர்களும் இதில் பயணம் செய்யலாம் என கூறியுள்ளார்.

அவ்வாறான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுமாயின் வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தமுடியும். ஏனெனில், யாத்திரிகளாக செல்வோர், வடக்கில் இரண்டொரு வணக்கஸ்தலங்களுக்கு செல்லமுடியும். அத்துடன், படகுக்காக இரண்டொரு நாட்களுக்கு முன்னரே வடக்குக்குச் சென்றுவிட்டால், அவ்விரண்டு நாட்களையும் கழிப்பதற்காக வெவ்வேறு இடங்களுக்குச் செல்லவேண்டிய நிலைமை ஏற்படலாம். அது சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.

காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே படகுச்சேவையை முன்னெடுக்க நான்கு பேர் முன்வந்துள்ளபோதிலும், நந்தகோபனுக்கு மாத்திரம் காரைக்கால் துறைமுகத்திடமிருந்தும் தமிழ்நாட்டின் அமைச்சிடமிருந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதற்கான செயல்முறையை ஏற்கெனவே பூர்த்தி செய்துள்ளார்.

நந்தகோபன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஆவார். 18 வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் குடியேறியவர். இவர் ஊர்காவற்றுறைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையில் படகுச்சேவையை நடத்திய குடும்பத்தை சேர்ந்தவர்.

120 வருடங்களுக்கு முன்னர் அவரது மூதாதையர்கள் இரு நாடுகளுக்கும் இடையில் படகுச்சேவையை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் மூன்று படகுகளை வைத்திருந்தனர்.

அவர்கள் வைத்திருந்த மூன்று படகுகளில் ஒரு படகு நீரில் மூழ்கியுள்ளது. ஏனைய இரண்டு படகுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை கொண்டு, மூழ்கிய அந்த படகில் இருந்த பொருட்களை இழந்தவர்களுக்கான இழப்பீட்டை வழங்கியுள்ளனர்.

ஊர்காவற்றுறையில் உள்ள மடத்தடி என்றோர் இடத்திலிருந்து, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அவரது மூதாதையர்கள் படகுச்சேவையை நடத்தியிருந்தனர். மக்கள் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு பொருட்களை எடுத்துச் சென்று, பின்னர் தமிழ்நாட்டிலிருந்து பொருட்களை கொண்டுவந்தார்கள்.

தனது மூதாதையர்கள் படகுச்சேவையை மேற்கொண்டதாலேயே தானும் படகுச்சேவையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக  நந்தகோபன்  கூறுகிறார்.

மேலும், காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான படகுச்சேவை தொடர்பில் திட்டமிடுவதற்கு ஐந்து வருடங்கள் எடுத்தன என தெரிவிக்கும் அவர், முதலில், இந்து யாத்திரீகர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஆலய தரிசனத்துக்காக அழைத்துச்செல்வதற்கு 5 படகுச்சேவைகளை நடத்துவதற்கான திட்டத்தினை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்தோடு, சிங்கப்பூரிலிருந்து படகுச்சேவை அல்லது பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கு அதிக பணம் செலவாகும் என்பதால், நான் நிரந்தரமான படகுச்சேவையை காரைக்காலுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் நடத்த திட்டமிட்டுள்ளேன் எனவும் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் காரைக்கால் துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை ஏப்ரல் 29 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார் எனினும் அது மே மாதம் நடுப்பகுதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படவுள்ளது.  படகுச் சேவை திறக்கப்பட்டுள்ளதால், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தொழில்முனைவோரும் இந்த வாய்ப்பில் இணைந்து கொள்ள முடியும்  

இந்த கட்டுமானங்களுக்கு தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் கடன் மானிய வசதி போதுமானதாக இல்லாததால், இந்தியன் எக்சிம் வங்கியிடம் கூடுதலாக 16 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளது” என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கூறினார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (IOR) இணைச் செயலாளர் புனித் அகர்வால் மற்றும் இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை இலங்கை அமைச்சர் கோரினார், 

இது ஏற்கெனவே எட்டப்பட்ட பூர்வாங்க பணிகளுக்கான ஒப்பந்தம் என அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் படகு சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் நாடுகளுக்கிடையிலான பயணம் சாதாரண மக்களுக்கு மலிவு விலையில் அமையும் என்றும், சரக்கு போக்குவரத்து மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே இரு நாடுகளும் பயணிகள் படகு சேவையை   தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு வழங்கப்படும் சலுகைக் கடன் தொகையை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்த அமைச்சர், நிர்மாணத் துறையில் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கமே இதற்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில், இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்துவதற்கும், பிராந்திய கடல்சார் மையமாக மாறுவதற்கான நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியது.

இலங்கையில் இருந்து தமிழகத்தின் தனுஸ்கோடி மற்றும் ராமேஸ்வரத்திற்கு பயணிகள் படகு சேவையை தொடங்குவது பொருத்தமானது என்று அகர்வால் கூறினார்.அமைச்சரின் யோசனைக்கு இணங்கிய அவர், பயணிகள் படகு சேவைகளுடன் இலங்கை புகையிரத சேவையையும் இணைக்க முடியும் என வலியுறுத்தினார்.

மேலும் இலங்கையின் மத்தள விமான நிலையம் வரை இந்திய விமான சேவைகளை இயக்க வேண்டும் என்றும் இலங்கை அமைச்சர் கேட்டுக்கொண்டார், அதற்கு பதிலளித்த அகர்வால், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை மற்றும் விமான சேவைகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் இந்திய அரசாங்கம்  முழு ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.

இவ்வாறான நிலையில்,  இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் உத்தேச கப்பல் சேவை   ஆரம்பிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதுச்சேரி துறைமுகத்தில் பயணிகள் மற்றும் சரக்குக் கப்பலை இயக்குவதற்கும், பிற தொடர்புடைய நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் நிறுவனங்களிடமிருந்து, விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுப் பார்வை:

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாம்பன் பாலத்தின் ஊடான ரயில் பாதையில் 1914 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது.

இந்தியாவிலிருந்து தனுஷ்கோடி வரை பாம்பன் பாலத்தின் ஊடாகப் பயணித்து, பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாருக்கு வந்து அங்கிருந்து  மதவாச்சி வரை ரயில் மூலம் பயணிக்கும் போக்குவரத்து பல தசாப்த்தங்களாக நீடித்தது.

எனினும் 1964 ஆம் ஆண்டு வீசிய கடும் புயல் காரணமாக தனுஷ்கோடிப் பகுதி முற்றாக அழிந்தபோது, அங்கிருந்த ரயில் பாதையும் மறைந்து போனது.

பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதையும் முற்றாக சேதமடைந்தது.

இதன் காரணமாக ஆங்கிலேயேர்கள் ஆரம்பித்த ரயில்-கடல்-ரயில் பயணம் தடைப்பட்டது. தற்போது இந்தியாவில் ராமேஸ்வரம் வரையிலான ரயில் சேவைகள் செயல்பட்டு வருகிறன.

இந்நிலையில் தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதையை மீண்டும் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியா – இலங்கை இடையே பாம்பன் பாலம் வழியாக பல ஆண்டுகள் செயல்பட்ட ரயில்-கடல்-ரயில் சேவை இருநாடுகளுக்கும் பல நன்மைகளை வழங்கியுள்ளது.

வரலாற்றுக் குறிப்பு:-

தமிழகத்தின் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் சேவை இருந்தது என்றால் பலர் நம்பமாட்டார்கள்.

கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல வகையிலும், தமிழகத்திற்கும், இலங்கைக்கும் சிறந்த தொடர்புகள் இருந்த காலம் அது.

நூறு ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ‘போட் மெயில்’ என்று அழைக்கப்பட்ட ஒரு ரயில் இரு நாடுகளுக்கு இடையே முக்கிய இணைப்பாக இருந்துள்ளது.

சென்னைக்கும் கொழும்பிற்கும் இடையே போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் 1876இல் உருவாக்கப்பட்டது

இதன் ஒருகட்டமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1913இல் நிறைவடைந்தன.

இதனை தொடர்ந்து 1914, பெப்ரவரி 24ஆம் திகதி முதல், ‘போட் மெயில்’ ரயில் சேவை ஆரம்பமாகியது.

சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம், அதனை தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 36கிலோமீற்றர் தூர கப்பல் பயணம், பின்னர் தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம் என்று இந்த போக்குவரத்து தொடர்பு இருந்துள்ளது.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ‘போட் மெயில்’ ரயில், தனுஷ்கோடி துறைமுகத்தை சென்றடையும். அங்கிருந்து, கப்பல் மூலம், பயணிகள், தலைமன்னாருக்கு அழைத்து வரப்படுவார்கள்.

பின்னர் மீண்டும், ரயிலில் பயணித்து, கொழும்பை சென்றடைவர்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே, பல ஆண்டுகளாக, வர்த்தகம் நடப்பதற்கு தனுஷ்கோடி முக்கிய துறைமுகமாக விளங்கியது. 1964 டிசம்பர், 24ஆம் திகதி இந்த பகுதியை தாக்கிய புயல் காரணமாக ஒரே இரவில் தனுஷ்கோடியை அழிவடைந்தது.

இந்த புயலில் சிக்கி 1,800 பேர், உயிரிழந்ததாகவும் இதன் பின்னர் தனுஷ்கோடி வரை நடத்தப்பட்ட ‘போட்மெயில்’ ரயில் ராமேஸ்வரத்துடன் நிறுத்தப்பட்டது.

இலங்கை – இந்திய கடல்வழி ரயில் பயணமும், அன்றோடு முடிவுக்கு வந்தது இந்த போக்குவரத்து சேவை குறித்த தமது அனுபவங்களை பலர் வழங்கியுள்ளனர்.

என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், கல்லல். என் தந்தை, கொழும்பில் வியாபாரம் செய்து வந்தார். சிறு வயதில், நான் சில குறும்புகள் செய்ததால், என்னை கொழும்புக்கு அனுப்பி, படிக்க வைத்தனர். ‘போட் மெயில்’ ரயிலில், என் முதல் பயணம், 1946இல் நிகழ்ந்தது. ரயில் பாம்பன் பாலத்திற்கு வந்ததும், ‘விசில் சிக்னல்’ கொடுக்கப்பட்டு, மெதுவாக நகரும். அப்போது கடலின் அழகையும், வளைந்து செல்லும் ரயிலின் பின் பகுதியையும் பார்த்து ரசித்தபடி தனுஷ்கோடி சென்று சேர்வோம்.

அங்கு கப்பல் கேப்டன் எங்களை வரவேற்க தயாராக இருப்பார். பழங்கள், காய்கறிகள் எடுத்து செல்ல அனுமதியில்லை. அங்கிருந்து கப்பல், தலைமன்னார் நோக்கி பயணிக்க துவங்கும். மாணவர்களுக்கு முதல் வகுப்பு கொடுப்பர். அந்த குட்டி கப்பலில், 400 பேர் பயணிக்கலாம். கடல் பயணம், மொத்தம், 22 மைல். நடுக்கடலில் கப்பலை நிறுத்தி, இந்தியா – இலங்கை கடல் பகுதிகள் சங்கமிக்கும் இடத்தை, கேப்டன் சுட்டிக் காட்டுவார். தலைமன்னாரில் இறங்கிய பின், மீண்டும் ரயிலில் ஏறி, கொழும்பு செல்ல வேண்டும்.

அன்றைய காலத்தில், கல்லலில் இருந்து கொழும்புவிற்கு ஒரே டிக்கெட்டாக செல்ல, 45 ரூபாய் தான் கட்டணம். பிளஸ் 2 வரை கொழும்பில் படித்து முடித்து, அங்குள்ள தேயிலை தோட்டத்தில் மேலாளராக பணியாற்றினேன். அதற்கு பின் இந்தியா வந்து விட்டேன்
மதுரையை சேர்ந்த என்.ஏ.என். நாராயணன், வயது 80

இலங்கை அரசில், 1946ல் ‘ஸ்பெஷல் டூட்டி வாட்ச்மேன்’ பணியில் சேர்ந்தேன்; மாதச் சம்பளம், 60 ரூபாய். 1963 இல் ஓய்வு பெற்று, தமிழக அரசு மெரைன் பொதுப்பணி துறையில் சேர்ந்தேன். சென்னையில் இருந்து புறப்படும் ‘போட் மெயில்’ ரயிலில், 12 பெட்டிகள் இருக்கும். மண்டபம் முகாம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் இறக்கப்பட்டு, டாக்டர்களால் பரிசோதனை செய்யப்படுவர்.

ரயில் டிக்கெட்டில் தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகள் அச்சிடப்பட்டிருக்கும். மண்டபம் முகாமில் இருந்து, தனுஷ்கோடி ரயில் பயணம் ஒன்றரை மணி நேரம். தனுஷ்கோடியில் இருந்து புறப்படும் கப்பல், ஒன்றரை மணி நேரம் பயணித்து தலைமன்னாரை அடையும்.