மொழி அப்படின்னா என்ன?

1800ல செரோக்கி அப்படிங்கிற ஒரு நாடு இருந்திச்சி. நாடுன்னதும் ரொம்ப பெருசா எல்லாம் கற்பனை பண்ணிக்க வேணாம். அது ஒரு பழங்குடியினர் இனம் வாழுற பகுதி. அவங்களுக்குன்னு ஒரு மொழி இருந்திச்சி. ஆனா அதுக்கு எழுத்து வடிவம்லா இல்ல. பேச்சு வடிவம் மட்டும்தான். அவங்களோட வரலாறு, அவங்களோட நிலம் சார்ந்த பாடல்கள், சம்பிரதாயங்கள்னு எல்லாமே வாய்வழியா தலைமுறை தலைமுறையா கடத்தப்பட்டதுதான்.

அப்பதான் அங்க வெள்ளையர்கள் வந்து அந்த பகுதியில குடியேற ஆரம்பிச்சாங்க. அவங்க எழுதுறத படிக்கிறதையும், அவங்களுக்குன்னு தனி செய்தித்தாள், புத்தகம்னு எல்லாம் இருந்ததையும் கவனிச்சாரு சிகுவயா அப்படிங்கிற ஒரு வெள்ளிப்பொருள் எல்லாம் செய்ற ஆசாரி. இவர் செரோக்கி இனத்தை சேர்ந்த ஒருத்தர். அதவிட முக்கியமான செரோக்கி மொழியில நல்ல ஆளுமை உள்ள ஒருத்தரும் கூட.

எங்கயோ ஒரு நாட்டுல நடக்குற விசயத்தை இங்கயே பேப்பர்ல படிக்கிறாங்க.. இங்க நடக்குற ஒரு நிகழ்வை எதோ ஒரு நாட்ல உள்ளவர் படிச்சி தெரிஞ்சிக்க இந்த மொழி உதவுது.

ஆனா நம்ம செரோக்கி மொழிக்கோ எழுத்தே கிடையாது. எதோ இப்ப வழிவழியா சொல்லி வளர்க்குறோம். எதாவது ஒரு தலைமுறை அப்படி சொல்லிக்கொடுக்காம போயிருச்சின்னா, அப்புறம் செரோக்கி அப்படிங்கிற ஒரு இனம் இருந்ததுக்கான அடையாளமே உலகத்துல இல்லாம போயிருமேங்கிற சிந்தனை அவருக்குள்ள வந்ததும் அவரால நிம்மதியா இருக்க முடியல. “நாமளே ஏன் நம்ம மொழிக்கு ஒரு எழுத்து வடிவம் உருவாக்க கூடாது?” அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சாரு.

இதுல முக்கியமான பிரச்னை என்னன்னா, சிகுவயாக்கு எழுத்துன்னா என்னன்னே தெரியாது. அப்படி எழுத படிக்கவே தெரியாத ஒருத்தரால எப்படி ஒரு மொழிக்கு எழுத்துரு உருவாக்க முடியும்? அந்த சவால்தான் சிகுவயாவை இன்னும் அதிகமா இத சிந்திக்க தூண்டிச்சி.

அவர் வேற வேற வடிவங்கள்ல எழுத்துகளை உருவாக்க ஆரம்பிச்சாரு. அவர் மனைவியே இத பார்த்துட்டு இந்தாளுக்கு கிறுக்கு பிடிச்சிருச்சின்னு நினைச்சிக்கிட்டாங்க. அதவிட கொடுமையா, ஆரம்பத்துல சிகுவயா மொழி உருவாக்க எழுதுன ரெகார்டை எல்லாம் தீயில போட்டு எரிக்கவும் செஞ்சாங்க அவர் மனைவி. ஆனாலும் சிகுவயா இத கைவிடல.

சிகுவயாவோட மிகப்பெரிய பலம் அவருக்கு செரோக்கியா மொழி முழுமையா தெரியும். அவருக்கு எல்லா வார்த்தைகளுமே மனப்பாடம். அத எங்க எப்படி யூஸ் பண்ணனும்னும் அவருக்கு தெரிஞ்சிருந்தது. ஆனாலும் இது சாதாரண வேலை இல்லயே!

முதல்ல அவர் அந்த எழுத்தை சிம்பல் வடிவத்துல அதாவது சின்னங்களா மாத்தி மொழியாக்க ட்ரை பண்ணாரு. ஆனா அதுல என்ன சிக்கல்ன்னா அதுக்கு நிறைய சிம்பல் தேவைப்பட்டது. அத ஞாபகம் வச்சிக்கிறது அவருக்கே சிரமமா இருந்தது. சரின்னு படம் மாதிரி வரையலாம்னு ட்ரை பண்ணாரு. அது சிம்பலை விட ரொம்ப சிக்கலா இருந்தது.

ஆனாலும் அவர் தன்னோட முயற்சிய கைவிடாம கிட்டத்தட்ட 12 வருசம் இந்த முயற்சியில ஈடுபட்டு கடைசியா ஓரு வழி கண்டுபிடிச்சாரு.
அதாவது வார்த்தைக்கும், கருத்துக்கும் சின்னங்கள் யூஸ் பண்றதுக்கு பதிலா, அந்த வார்த்தைய எப்படி உச்சரிக்கிறோமோ அந்த உச்சரிப்புக்கு சின்னங்கள் உருவாக்க ஆரம்பிச்சாரு.

ஆச்சர்யப்படுற விதமா 85 சின்னங்கள்ல மொத்த ஒலியையும் அடக்க முடிஞ்சது. இப்படியாக செரோக்கி மொழியோட எல்லா வார்த்தையோட உச்சரிப்பும் அடங்கிய ஒலிகளலான சின்னங்களை எழுத்து மொழியா உருவாக்கி வச்சாரு.

இத அவங்க ஊர்ப் பெரியவங்ககிட்ட காட்டுனப்ப யாருமே இத நம்பல. நம்புறதுக்கான முகாந்திரமும் இல்ல. ஏன்னா யாருக்குமே எழுத படிக்க தெரியாதே! அப்ப அவங்களை எப்படி கன்வின்ஸ் பண்றது? அதுக்கு ஒரு ப்ளான் பண்ணாரு.

தன்னோட மகளுக்கு அவர் கண்டுபிடிச்ச எழுத்துருவை கத்து தந்தாரு. அவரோட மகளை இன்னொரு அறையில உக்கார வச்சிட்டு, அந்த பெரியவங்களோட இன்னொரு ரூம்ல உக்காந்துக்கிட்டு, அந்த பெரியவங்களை ஒரு செய்தி சொல்ல சொன்னாரு.

அவங்க சொல்ல சொல்ல இவர் அத தான் கண்டுபிடிச்ச சின்னங்கள் மூலமா எழுத ஆரம்பிச்சாரு. எழுதி முடிச்சிட்டு தன்னோட மகளை கூப்ட்டு அவர் எழுதுனத வாசிக்க சொன்னாரு. அந்த பொண்ணும் அப்படியே வாசிச்சது. அந்த பெரியவங்க சொன்ன செய்திய அப்படியே அந்தப்பொண்ணு வாசிச்சதும் எல்லாருமே பிரமிச்சிப் போய்ட்டாங்க. நிஜமாவே இது பிராக்டிக்கலா சாத்தியம்தான்னு புரிஞ்சிக்கிட்டாங்க.

அடுத்த சில மாதங்கள்லயே கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள்னு செரோக்கிய மக்கள் எழுத படிக்க கத்துக்கிட்டாங்க. அப்படி கத்துக்கிட்டவங்களோட சதவீதம், அங்க குடியிருந்த ஆங்கிலம் தெரிஞ்ச வெள்ளைக்காரர்களை விட அதிகமானதா இருந்தது. 1821ல அவர் உருவாக்குன மொழியை 1825க்குள்ள பெரும்பாலான மக்கள் கத்துக்கிட்டாங்க. கடிதம் எழுத ஆரம்பிச்சாங்க.

தங்களோட அறிவை புத்தகமா எழுதி பதிவு பண்ண ஆரம்பிச்சாங்க.
அதோட சிகுவயோ நிக்கல. 1828ல அவர் அந்த மக்களுக்குன்னு ஒரு செய்தித்தாளை உருவாக்குனாரு. செரோக்கி ஃபீனிக்ஸ் அப்படிங்கிற அந்த செய்தித்தாள்தான் பூர்விக அமெரிகக் குடிகளோட முதல் அதிகாரபூர்வ செய்த்திதாள்.

இதெல்லாம் உருவாக்குன அந்த காலகட்டத்துல பூர்வகுடிகளோட நிலை என்னவா இருந்திச்சிங்கிறதுதான் இதுல இன்னொரு முக்கியமான விசயம். அவர்களோட நிலங்களை கையகப்படுத்துறது, அவங்களுக்கான சொந்த உரிமைகளை மறுக்குறது, அவங்களை அடிமையா நடத்துறதுன்னு வெள்ளையர்கள் தங்கள் அராஜகத்தை கட்டவிழ்த்திருந்த காலகட்டம் அது.

அந்தமாதிரி ஒரு நேரத்துல இப்படி ஒரு தனிமனிதன் தன் இனத்தை காக்க, அதோட கலாச்சாரத்தை, பண்பாடை, அவங்களோட வாழ்க்கை முறையை பதிவு செய்யனும்ங்கிறதுக்காக ஒரு எழுத்துருவையே உருவாக்குனதுங்கிறது சாதாரண விசயமே இல்ல.

1838ல பூர்வகுடிகளான செரொக்கிகள் தங்களோட இடத்தை விட்டு கட்டாயமா வெளியேற்றப்பட்டப்ப, அவங்க தங்களோட வாழ்விடத்தை, தங்களோட நிலத்தை, வாழ்வுரிமைய எல்லாம் விட்டுப்போனாலும் கூட, அவங்க தங்கள் மொழியை விட்டுப்போகல. அதோட எழுத்தை விட்டுப்போகல. அத தங்களோடவே எடுத்துட்டு போனாங்க. தொடர்ந்து தங்களோட அடுத்தடுத்த தலைமுறைக்கு அத கத்து தந்தாங்க.

இப்பவும் செரொக்கி மொழி இருக்கு. அதுவும் டிஜிட்டல் வடிவுலயும் அது இருக்கு. அவங்க அத மறக்கல. மறக்க விடல அவங்களோட தலைமுறைகளை.

ஆக, மொழி என்பது வெறும் பேச்சாக இருக்கிறப்பதான் அது வெறும் கருவி. அதுவே எழுத்து வடிவத்துல மாறும்போது அது அடையாளமா மாறுது. அது இப்படி ஒரு இனம், இப்படி ஒரு குழு இங்க இருந்திச்சி, இருக்கு அப்படிங்கிறத காலம் காலமா சொல்றதுக்கான அற்புதமான கருவியா மாறி நிக்கிது.

எங்க ஒரு மனுசன் பிறந்தாலும், அவன் உலகத்துல எங்க போனாலும், தன்னோட வேரை கொண்டு போயி அங்க ஒரு மரமா வளர்க்க, அதன்மூலம் தன் இனத்தை, குழுவை, கலாச்சாரத்தை நிலைநிறுத்த அவனோடயே அந்த மொழி பயணிக்கும். அவன் புதுசா போற இடத்தில கத்துக்கிறதையும் அவன் மொழியிலயே பதிவு செய்து, உலக வரலாறை படிக்க வைக்கும். தெளிய வைக்கும்.

ஆக, மொழி என்பது எப்போதுமே வெறும் கருவியா மட்டும் இல்ல. அது அடையாளமும் கூட.

(Prabu Shanmugam)

பகிர்வு : திரு பாலகணேசன்