யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாலியல் சுரண்டல்

இது ஒரு தனிநபர் சார்ந்த ஒழுக்கக்கேடு மட்டுமல்ல; காலம் காலமாக பல்கலைகழக அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு நடத்தப்படும் வேட்டையாடலின், நிறுவனமயப்படுத்தப்பட்ட சீரழிவின் வெளிப்பாடு இது.

மாணவிகளின் படிப்பு வீணாகிவிடும், குடும்ப மானம் போய்விடும் என்ற பயத்தைப் முதலீடாகக் கொண்டு, அதிகாரத்தில் உள்ள காம வல்லூறுகள் தங்களின் இரையைத் தேர்ந்தெடுக்கின்றன.

வறுமைக்கோட்டில் உள்ள, வீட்டில் ஆண்துணை இல்லாத, சட்டப் போராட்டம் நடத்தப் பொருளாதார வசதியற்ற அப்பாவிப் பெண்களை ஆழமான பின்னணி ஆராய்ச்சிக்குப் பிறகே இவர்கள் வலையில் வீழ்த்துகின்றனர்.

இதற்குச் சான்றாக, தற்போதைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ். XXXX மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், பாதிக்கப்பட்ட மாணவியின் நீதிக்கான நீண்டகாலப் போராட்டமும் அமைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மாணவி யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, 2020 முதல் 2021 வரை அதே துறையில் தற்காலிக விரிவுரையாளராக (Demonstrator) பணியாற்றியவர்.

தந்தையை இழந்த அந்த மாணவியிடம், பேராசிரியரான XXXX அதீத அக்கறையும் வாஞ்சையும் காட்டுவது போல் நடித்து, ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து அவரது மேற்படிப்பையும் வாழ்வையும் திட்டமிடுபவராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.

“தன்னுடைய குடும்பத்தோடு பழக விடுவது, கோயில்களுக்குத் தனது காரில் அழைத்துச் செல்வது என ‘நம்பிக்கைக்குரியவர்’ என்ற இடத்தை அவர் முதலில் பிடித்தார். ஆனால், நாளடைவில் அவரது பேச்சுக்களிலும் நடத்தையிலும் மாற்றங்கள் தெரிந்தபோது மாணவி அதிர்ந்துபோனார்.”

தான் மாணவியைக் காதலிப்பதாகவும், இது தெய்வ சங்கல்பம் என்றும் கூறி, தன் வீட்டிற்கும் மனைவிக்கும் செய்யும் துரோகத்தை “அன்பைப் பகிர்தல்” என நியாயப்படுத்தியுள்ளார்.

ஊடகத்துறையில் பயின்ற மாணவி என்பதால், தனது பாதுகாப்பைக் கருதி பேராசிரியர் தன்னிடம் பேசிய எல்லைமீறிய அந்தரங்க உரையாடல்களைப் பதிவு செய்து வைத்துள்ளார்.

பேராசிரியரின் இந்த இலாவகமான பாலியல் சுரண்டல் குரல் பதிவுகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் கசிந்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

மாணவி தனக்கு நடக்கும் அநீதியை உணர்ந்து, பல்கலைக்கழகத்திற்குள்ளும் வெளியிலும் உள்ள பல முக்கிய புள்ளிகளிடம் நீதி கேட்டு ஓடியபோது, ஒட்டுமொத்த சமூக அமைப்பும் அவரைக் கைவிட்டு, குற்றவாளியைக் காக்கவே முயன்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் முதலில் சக பெண் விரிவுரையாளர்களிடம் கூறியபோது, “இதெல்லாம் இங்கு சாதாரணம், பெரிய இடங்களைப் பற்றி முறைப்பாடு செய்யாதே, உன்னைத் பின்தொடர்ந்து அழிப்பார்கள்” என மிரட்டி, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தனர்.

அறம் பேசும் ஒரு பிரபல தமிழ்த் தேசிய NGO சட்டத்தரணியிடம் சென்றபோது, அவர் வக்காலத்து வாங்க மறுத்து நழுவியதுடன், தற்பொழுது குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியரின் தரப்புக்கே ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இறுதிப்போர்க் காலகட்டத்தில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படும் ஒரு தமிழ்தேசியம் பேசும் மூத்த பரம்பரை அரசியல்வாதியிடம் சென்றபோது, அவர் “சேற்றில் காலை மிதித்தால் கழுவிவிட்டுச் செல்வது போல் மறந்துவிடுங்கள்” என்று நச்சுத்தனமான ஆலோசனையைக் கூறியுள்ளார்.

முன்னாள் நீதவானும் பெண் நீதிபதியுமான ஒருவரிடம் மாணவி தனது குரல்ப்பதிவு ஆதாரங்களைச் சமர்ப்பித்தபோது, அதைத் தன் மடிக்கணினியில் சேமித்த அந்த நீதிபதி, பின்னர் ஆதாரங்கள் அழிந்துவிட்டதாகக் கையை விரித்துள்ளார்.

மேலும், பொலிஸாருக்குத் தொலைபேசி எடுத்து “அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்” எனக்கூறி நீதியைக் குழிதோண்டிப் புதைத்துள்ளார்.

முன்னாள் உபவேந்தரிடமும், மாணவர் ஒன்றியத்திடமும் முறைப்பாடு செய்யப்பட்டும், இந்த விவகாரம் நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டு மூடிமறைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவியின் நேர்காணலை வெளியிடவிருந்த “அலைகள்” யூடியூப் ஊடகத்தைத் தொடர்புகொண்ட பேராசிரியரின் மனைவி, சுமார் ஒன்றரை மணிநேரம் பேசி அந்த நேர்காணலைத் தடுத்துள்ளார்.

ஊடக தர்மத்தைப் போதிக்கும் பேராசிரியரின் குடும்பமே, கருத்துச் சுதந்திரத்தின் மீதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல்வளை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

அத்துடன், பேராசிரியரைப் பாதுகாக்க “அடையாளம்” என்ற NGO அமைப்பும் மறைமுகப் பேரங்களில் ஈடுபட்டுள்ளது.

மறுபுறம், ஊடகத்துறையில் படித்துவிட்டுப் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் சக பல்கலைக்கழக நண்பர்கள் (ஐந்து மாணவர்கள் அடங்கிய குழு), கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்ட மாணவிக்கு வட்ஸ்அப் மூலம் நயமாகப் பேசி மறைமுக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றனர்.

“உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்குதானே?”, “முன்னாடி கடவுள் வந்தா என்ன வரம் கேட்பாய்?” போன்ற அற்பத்தனமான கேள்விகளைக் கேட்டு அவளைச் சோர்வடையச் செய்யும் ‘Mobbing’ பாணியிலான அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேராசிரியரின் மனைவியும், அவருக்கு ஆதரவான குழுக்களும் தற்பொழுது இந்த பாலியல் குற்றச்சாட்டிற்கு “தமிழ்த் தேசியச் சாயம்” பூசி திசைதிருப்ப முயல்கின்றனர்.

தமிழ்த் தேசியத்திற்காகத் தம் இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களினதும், போராளிகளினதும் தியாகத்தை, ஒரு பேராசிரியரின் பாலியல் வக்கிரத்தை மூடிமறைக்க ஆயுதமாகப் பயன்படுத்துவது உன்னதமான அந்தச் சித்தாந்தத்திற்கே இழுக்காகும்.

2009-ஆம் ஆண்டிற்கு முன்னர் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான அச்சமும் தண்டனையும் இருந்தது.

ஆனால், தற்போதைய சூழலில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகிவருவதுடன், துணிந்து கேள்வி கேட்கும் பெண்களை “மனநலம் குன்றியவர்கள்”, “ஒழுக்கமற்றவர்கள்” எனச் சமூக அவதூறு பரப்பி ஒடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

பேராசிரியர் XXXX தன் மீதான குற்றச்சாட்டைச் சட்டரீதியாக எதிர்கொள்ளாமல், தன் மனைவியை முன்னிறுத்தி, ஒரு பெண்ணுக்கு எதிராக இன்னொரு பெண்ணைத் திருப்பும் பாரம்பரிய ஆண் ஆதிக்கத் தந்திரத்தைக் கையாண்டு வருகிறார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி, பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கைத் தாக்கல் செய்து, ஊடகங்களின் வாயை அடைக்க முயல்வது அவரது கோழைத்தனத்தையே காட்டுகிறது.

தற்பொழுது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் யாழ் பல்கலைக்கழகம் ஆமை வேகத்தில் ஒரு தனிநபர் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியரோ எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி இன்னும் பதவியில் நீடிக்கிறார்.

“மடியில் கனமிருப்பவர்களுக்கே வழியில் பயமிருக்க வேண்டும்.”

பாதிக்கப்பட்ட மாணவி தனது பிரகாசமான எதிர்காலத்தையும், உயர்கல்வியையும் பணயம் வைத்து, இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட பாலியல் சுரண்டலை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

ஈழத் தமிழ்ச் சமூகம் இன்னும் இத்தகைய காம வல்லூறுகளுக்கு வக்காலத்து வாங்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நிற்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் முறையான, பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கப்படுவதே, எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாணவிகளுக்குப் பாதுகாப்பான இடமாக மாறுவதை உறுதிசெய்யும்.

இல்லையேல் இந்த காம வல்லூறு விரிவுரையாளர்களின் பாலியல் வேட்டைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

  • முகிந்தன் துரைராஜசிங்கம்

Leave a Reply